விலங்குகளே மாடலாக... இயற்கையே ஆடையாக...



-ஷாலினி நியூட்டன்

புலியை செல்ஃபி எடுக்கச் சென்ற வாலிபர் தவறி விழுந்து இரையானார் என்ற செய்தியே நமக்கெல்லாம் பக்கென இருக்கும். இந்நிலையில் ரஷ்ய நாட்டு பெண் புகைப்படக் கலைஞர் கேத்தரினா ப்ளோட்னிகோவா, புலியுடன் ஒரு பெண் கட்டிப்பிடித்திருக்க அதையே தனது கேமராவில் படம் பிடித்துள்ளார்!

புலி மட்டுமல்ல, கரடி, ஓநாய், பாம்பு, ஆந்தை... என பல விலங்குகளும் பறவைகளும் அழகிய மாடல்களாக இவரிடம் மண்டியிடுகின்றன! “மாஸ்கோதான் சொந்த ஊர். போட்டோகிராஃபி மேல அப்படியொரு ஆர்வம். முறைப்படி கத்துக்கிட்டேன். இன்னைக்கு யார் வேண்டுமானாலும் போட்டோகிராஃபி பண்ணலாம்.

ஸோ, அதுல கற்பனை, வெரைட்டி காட்டினாதான் நாம தனித்தன்மை பெற முடியும். ஓவியம் மாதிரி அதேசமயம் இயற்கையோடு ஒன்றியதா என் படங்கள் இருக்கணும்னு நினைச்சேன். அதனோட விளைவுதான் இந்த போட்டோஸ்...’’ என்று சொல்லும் கேத்தரினாவிடம் அதிகம் கேட்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா? ‘ஏன் சிவப்பு முடி பெண்களை அதிகமா பயன்படுத்துகிறீர்கள்?’ என்பதுதான்.

‘‘சின்ன வயசுலேந்தே சிவப்பு நிற முடி மேல எனக்கு தனி பிரியம். ஒருநாள் என் முடியை கலர் பண்ணிட்டு வந்து நின்னேன். வீட்ல இருக்கிறவங்களுக்கு செம ஷாக். ‘எப்படியோ போ’னு விட்டுட்டாங்க. இந்த க்ரஷ்தான் என் போட்டோகிராஃபில எதிரொலிக்குது. பெரும்பாலும் என் மாடல்கள் நீளமான சிவப்பு அல்லது தங்க நிற முடி, க்ளாசிக் உடைகளோட இருப்பாங்க...’’ என்று ஸ்கைஃபில் புன்னகைத்த கேத்தரினா சில சுவாரஸ்ய அனுபங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“விலங்குகளைப் பயன்படுத்த அனுமதி வாங்கவே பல நாட்களாச்சு. போட்டோஸ்ல நீங்க பார்க்கிற ஒவ்வொரு விலங்கும் சிறப்பான பயிற்சி பெற்றவை. போட்டோ ஷூட் நடந்தப்ப பயிற்சியாளர்களும் கூட இருந்தாங்க. எல்லா அனிமல்ஸும் நாங்க சொன்னதை கேட்டு நடந்தது. முக்கியமா கரடி. எனக்கு ரொம்ப பிடிச்ச புகைப்படங்கள் கரடி கூட எடுத்ததுதான். 

அவ்வளவு பெரிய கரடி இப்படி சாதுவா மாடல் தலைக்கு மடி கொடுத்து உட்காரும்னு நினைச்சுக் கூட பார்க்கலை. என்னைக் கேட்டா போட்டோகிராஃபி பயிற்சி எடுத்துக்கறது சுலபம். ஆனா, தனித்தன்மை பெறணும்னா ரொம்ப மெனக்கெடணும். கற்பனையும், வித்தியாசமான ஐடியாக்களையும் புகுத்தியே ஆகணும்...’’ என்று கண் சிமிட்டும் கேத்தரினாவுக்கு வயது 29.           

        

படங்கள்: கேத்தரினா ப்ளோட்னிகோவா (slrlounge)