மறுகுடியமர்வு...



அறிந்த இடம் அறியாத விஷயம்

-பேராச்சி கண்ணன்

‘‘நூறு சதுரஅடி வீட்டுக்குள்ள குடும்பம் நடத்த முடியுமா தம்பி?’’ அந்த 75 வயது தாத்தா இப்படியொரு கேள்வியைக் கேட்டபோது எதுவும் பேச முடியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகேயுள்ள குடிசைப் பகுதியில் வாழ்ந்தவர். இன்று புறநகரில் அனாதையாகக் கிடக்கிறார்.

அவர் மட்டுமல்ல. அவரைப்போல ஏராளமான குடிசைவாசிகள் தூங்குவதற்குக் கூட போதுமான இடவசதி இல்லாமல் கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்! பழைய மகாபலிபுரம் சாலையின் பரபரப்பான ஐடி நிறுவனங்களுக்கு இடையில் இருக்கும் புறநகர்கள் இவை. இங்கேதான் சென்னையின் குடிசைப்பகுதி வாசிகளை மறுகுடியமர்வு என்ற பெயரில் ஓரங்கட்டி இருக்கிறது தமிழக அரசு.

சென்னையிலிருந்து 26 கிமீ தூரம். சத்தியபாமா பல்கலைக்கழகத்தை ஒட்டிச் செல்லும் சிமென்ட் சாலையின் இடப்புறத்தில் வருகிறது செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு. சுனாமியின்போது பாதிக்கப்பட்ட அடையாறு, பட்டினப்பாக்கம், திருவான்மியூர் மக்களோடு, இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மற்ற குடிசைவாசிகளும் இங்கே கலந்திருக்கின்றனர்.

அகண்ட அழகான தார்ச் சாலை. முகப்பு தூண்கள் வெளித்தோற்றத்தை பிரமிக்க வைக்கின்றன. சாலையின் வழிநெடுகிலும் கடைகள் வரிசை கட்டுகின்றன. கொஞ்ச தூரத்தில், ஓரடுக்கு கொண்ட குடியிருப்புகள் இரண்டு பக்கங்களிலும் அடுத்தடுத்து நீண்டு செல்கின்றன. மாடியில் நான்கு வீடுகள், கீழே நான்கு வீடுகள் என ஒவ்வொரு குடியிருப்பிலும் எட்டு வீடுகள்.

உண்மையில் அவை புறாக்கூண்டு போல ஓர் அறை. அதற்குள்ளேயே ஒரு சின்ன தடுப்புச்சுவர் எழுப்பி சமையலறை. அதன் ஓரத்தில் கழிப்பறை. இரண்டு பேர் உள்ளே போக வேண்டுமெனில் உள்ளிருக்கும் இரண்டு பேர் வெளியே வந்தாக வேண்டும். ஆனால், இதற்குள்தான் தன்னுடைய இரண்டு குழந்தைகள், கணவர், தங்கை, தங்கையின் குழந்தை என ஆறு பேரோடு வசிக்கிறார் நாகவேணி.

‘‘தங்கச்சியும் அவ கொழந்தையும் கட்டில் மேல படுத்துப்பாங்க. நானும் கணவரும் கட்டிலுக்கு அடியில படுத்துப்போம். ரெண்டு கொழந்தைகளும் இங்க படுத்துப்பாங்க...’’ எனக் கட்டிலுக்கும் சமையலறை தடுப்புச் சுவருக்கும் இடையிலுள்ள சிறிய பகுதியைக் காட்டுகிறார் அவர்.

முதல் வீட்டின் கழிப்பறையை உள்ளே வைக்காமல் இரண்டாம் வீட்டின் வாசலில் வைத்து கட்டியிருக்கிறார்கள் அரசாங்க அறிவு ஜீவிகள். ‘‘இதனால இங்குள்ள நிறைய வீடுகள்ல அடிக்கடி சண்டை நடக்கும்...’’ என்கிறார் நாகவேணி வருத்தமாக! ஒவ்வொரு தெருவாக சுற்றி வந்தோம்.

வீட்டு வாசலிலேயே துணிகளை துவைத்துக் கொண்டும், பாத்திரங்களைக் கழுவிக்கொண்டும் இல்லத்தரசிகள் தங்களது அன்றாடப் பணிகளில் மூழ்கியிருந்தனர். சில இளைஞர்கள் கேரம் விளையாடுவதும், தாயம் ஆடுவதுமாக இருந்ததைப் பார்த்துவிட்டு பள்ளிகள் பக்கமாக ஒதுங்கினோம்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும், மேல்நிலைப் பள்ளியும் இந்தக் குடியிருப்புக்குள் இருக்கின்றன. தொடக்கப் பள்ளியில் அட்மிஷன் ஜோராக நடந்து கொண்டிருந்தது. ஒரு குழந்தைக்கு அட்மிஷன் போட்டுவிட்டு கையில் ஒரு பையுடன் வந்து கொண்டிருந்த பெண் நம்மிடம் ஒரு செட் யூனிபார்முடன், பேக் ஒன்றும், நோட் புத்தகங்களும் கொடுத்ததை பிரித்துக் காட்டினார்.

பேருந்துநிலையத்துக்குச் சென்றோம். இங்கிருந்து பிராட்வே, தி.நகர், திருவான்மியூர், கிண்டி என சென்னையின் முக்கிய இடங்களுக்கு பஸ்கள் இருப்பதாக சொன்னார் அங்கிருந்த பயணி. இந்த பேருந்துநிலைய அதிகாரிகள் அடிக்கடி மக்களோடு கலந்தாலோசித்து குறைகளைத் தீர்ப்பதாகக் குறிப்பிட்டார் அவர்.

தவிர, இங்கே அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், காவல்நிலையமும் இருக்கின்றன. முன்பை விட கொஞ்சம் முன்னேற்றம் அடைந்திருந்தாலும் தண்ணீர் வசதி மோசம் என்கிறார்கள் மக்கள். ‘‘தண்ணீர் விட்டதும் ஒரு மணி நேரத்திற்குப் பிடிக்க முடியாது. பச்சைக் கலர்ல ஒரு நாற்றத்தோடு வரும்...’’ என்ற பெண்ணிடம் தண்ணீர் கேட்டுக் குடித்தோம். குளோரின் வாடை தூக்கலாக அடித்தது.

அங்கிருந்து பெரும்பாக்கத்திற்குள் கால் வைத்தோம். ஒரு சாலைதான் செம்மஞ்சேரியையும், பெரும்பாக்கத்தையும் பிரிக்கிறது. இங்கே எல்லாம் எட்டு அடுக்கு குடியிருப்புகள். ஒவ்வொரு தளத்திலும் 24 வீடுகள். அதாவது ஓர் அடுக்கில் மட்டும் 192 வீடுகள் உள்ளன. ஏ முதல் யு வரை சாலைக்கு அந்தப் புறமும், இந்தப் புறமும் வீடுகள் இருக்கின்றன.

இதில் கோட்டூர்புரம், தேனாம்பேட்டை, சூளைமேடு, நுங்கம்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குடியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இப்போது, ‘ஹெச்’ வரை மட்டுமே மக்கள் வந்திருப்பதாக தெரிவிக்கிறார் அங்கிருந்த லிஃப்ட் ஆப்ரேட்டர். ஒரு வீட்டுக்குள் சென்று பார்த்தோம். பரவாயில்லை எனத் தோன்றியது. செம்மஞ்சேரி குடியிருப்பைவிட கூடுதலாக ஓர் அறை.

கழிப்பறையும் உள்ளே தனியாக இருக்கிறது. லிஃப்ட் வசதியும், தண்ணீர் வசதியும் பலம் சேர்க்கின்றன. ‘‘ரெண்டு வீட்டுக்கு ஒரு சின்டெக்ஸ் சார்... 500 லிட்டர் தண்ணீர் பிடிக்கும். வீட்டுக்கு 250 லிட்டர் கொடுக்குறோம்...’’ என்கிறார் அங்கிருந்த தண்ணீர் திறந்துவிடும் இளைஞர். இன்னொரு இளைஞரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

‘‘நாங்க கோட்டூர்புரம் ஆத்தங்கரையோரம் இருந்தவங்க. மழைக்குப்பிறகு இந்த இடத்துக்கு தள்ளப்பட்டோம். இங்க வசதியா இருக்கு. ஆனா, வேலைக்குப் போயிட்டு வர முடியலை. தூரம் அதிகம். பஸ்ல போய் வர நாலு மணி நேரமாகுது. நாங்க எல்லோரும் பெயின்டிங் வேலை பாக்குறோம்.

ஒரு நாளைக்கு 200 ரூபாதான் கிடைக்கும். பஸ், சாப்பாடுனு பாதி காசு இதுக்கே போயிடுச்சுன்னா எப்படி வாழ்றது?’’ என்கிறார் வேதனையுடன். ரேஷன் கடை, காய்கறி, சலூன் கடைகள் எல்லாமும் வருகின்றன. அதன்வழியாக ‘ஏஏ’ பிளாக்குள் உள்ள குடியிருப்புகள் நோக்கி நடந்தோம். பெரும்பாக்க குடிசையில் இருந்தவர்களை இந்தக் குடியிருப்புக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இந்தக் குடியிருப்பு மற்ற இரண்டு குடியிருப்புகளையும் விட ‘நச்’சென இருக்கிறது. 400 சதுரஅடியில் வீடுகள். ஒரு சிறிய அறை. பிறகு, பெட்ரூம். தனித்தனியாக பாத்ரூம், கழிப்பறை, பால்கனி. இவையும் எட்டு மாடி குடியிருப்புகள்தான். இந்தக் குடியிருப்பின் அடித்தளத்தில் தொடக்கப் பள்ளி ஒன்று செயல்படுகிறது.

காலியாக உள்ள குடியிருப்பை பள்ளியாக மாற்றியிருக்கிறார்கள். ஆனால், போதுமான இட வசதியில்லாமல் குழந்தைகள் வராண்டாவில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அங்கிருந்து கண்ணகி நகர் நோக்கி விரைந்தோம். இவை கடந்த 2000ம் ஆண்டு கட்டப்பட்ட குடியிருப்புகள். சென்னையின் மையப் பகுதியில் இருந்த குடிசைப்பகுதி மக்களை இங்கே மறுகுடியமர்வு செய்திருக்கிறார்கள்.

முதலில் ஓரடுக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. பிறகு, இரண்டு மாடி, மூன்று மாடி வரை குடியிருப்புகள் கொண்டு வந்துள்ளனர். வாசலில் ஒரு போலீஸ்காரர் உட்கார்ந்திருக்கிறார். இந்நகரைச் சுற்றிலுமே போலீஸ் பூத்கள் அமைத்திருக்கிறது காவல்துறை. அப்படியே தெருவுக்குள் ரவுண்ட் அடித்தோம். ஒரு குட்டி கிராமம் போல் காட்சியளிக்கிறது. ஆடு, மாடுகள் சுற்றி வருகின்றன.

ஆட்களும் வெளியே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் விளையாடுகின்றன. ஆனால், ‘வேலை வாய்ப்புகள் இல்லை’ என வருத்தப்படுகிறார்கள் இளைஞர்கள். ‘இன்டர்வியூ போனாலும் எங்களைச் சேர்க்க தயங்குகிறார்கள்’ என்பது இவர்களின் குமுறல். அப்போது வந்து சேர்ந்தார் இசையரசு. கண்ணகி நகரில் குடியிருந்துவிட்டு எந்த வசதியும் இல்லாததால் இங்கிருந்து வெளியேறியவர்.

‘‘கண்ணகி, எழில் நகர்ல 50 ஆயிரம் குடியிருப்புகள் இருக்கு. இப்ப, 25 ஆயிரம் வீடுகள்லதான் ஆட்கள் இருக்காங்க. போதுமான ஆஸ்பத்திரி வசதியோ, பஸ் வசதியோ, குடிநீரோ, பள்ளிக்கூடமோ இங்கில்ல. அதனாலதான் நான் வெளியேறினேன். இங்க இருக்கிற எல்லாருமே சென்னைக்குள்ள போய் பிழைக்கிற அன்றாடக் கூலிகள். ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம்தான் வீட்டுல இருப்பாங்க.

தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் உருவானப்ப சென்னைக்குள்ளதான் பல கட்டிடங்கள் கட்டுச்சு. அருகாமையிலதான் கட்டிடம் கட்டித் தரணும்னு விதியும் இருக்கு. ஆனா, உலகமயமாக்கத்துப் பிறகு உலக வங்கி சென்னைக்கு வெளிய கட்டிக் கொடுக்க சொன்னதால பூர்வகுடிகளை வெளியேற்றி மறுகுடியமர்வு செஞ்சது அரசு.

வசதிகள் எதையும் உருவாக்கித் தரலை. இப்ப, வெளியாட்கள் கண்ணகி நகர், செம்மஞ்சேரின்னாலே மோசமான மக்கள்னு நினைக்கிறாங்க. இங்கிருக்கிற பலர் ஐடி நிறுவனங்கள்ல ஹவுஸ் கீப்பிங் வேலைக்குப் போறாங்க. அங்க ஒரு ெபாருள் திருடு போனா இவங்கதான் திருடியிருப்பாங்கனு போலீஸ் தேடி வருது.

இந்தத் தப்பெண்ணம் மாறணும். போதுமான வசதிகள், வேலை வாய்ப்புகளை அரசாங்கம் உருவாக்கித் தரணும். அப்பதான் மறுகுடியமர்வு மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்...’’ என அழுத்தமாகக் குறிப்பிடும் இசையரசு, ‘‘மீடியாக்களோட தொடர் கவனத்துக்குப் பிறகுதான் இப்ப கட்டுற வீடுகளின் அளவுகள் கூட பெரிசாகி இருக்கு...’’ என்கிறார் நிறைவாக. ஏழைகள் சிரிக்கவில்லை. அதனால் இறைவனையும் காண முடியவில்லை.

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்

* குடிசை வாழ் மக்களைப் பாதுகாக்கவும், அவர்களின் வாழ்வை மேம்படுத்தவும் ‘குடிசைகள் சட்டம்’ மூலமாக கடந்த 1971ல் ‘தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்’ உருவாக்கப்பட்டது.
* இந்தியாவிலேயே குடிசைவாழ் மக்களின் மேம்பாட்டிற்கென முதல் முதலாக ஒரு வாரியம் ஆரம்பிக்கப்பட்டது தமிழகத்தில்தான்.
* 2023க்குள் குடிசைகளற்ற தமிழகத்தை உருவாக்கும் லட்சியத்தோடு செயலாற்றி வருகிறது இந்த வாரியம்.
* 2011ல் இருந்து 2016 வரை 59 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக இந்த வாரியம் குறிப்பிடுகிறது.

புள்ளி விபரங்கள்... கோரிக்கைகள்...

* செம்மஞ்சேரி 2005ல் திறக்கப்பட்டது. இங்கே 6734 வீடுகள் உள்ளன. சுமார் 26 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் மாதந்தோறும் 250 முதல் 350 ரூபாய் வரை 20 வருடங்கள் கட்டினால்தான் வீடு சொந்தமாகும்.

* இங்கே ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கூட இல்லை. இதனால், வெள்ளம் வரும் காலங்கள், மின்சாரம் தடைபட்ட நாட்களில் தண்ணீருக்கு அவதிப்படுகின்றனர்.

* பெரும்பாக்கத்தில் சுமார் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதில், 6 ஆயிரம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

* கண்ணகி நகரில் சென்னையின் மையத்திலிருந்த 76 பகுதிகளைச் சேர்ந்த குடிசைவாசிகளை மறுகுடியமர்வு செய்திருக்கின்றனர்.

* பெண்கள் சென்னைக்குள் வேலைக்குச் செல்வதால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகவே தொடர்கிறது.

* பத்தாம் வகுப்பில் 490க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற குழந்தைகள் இங்குள்ளனர். எம்.ஏ., எம்.எஸ்சி. முடித்த இளைஞர்கள் கூட அதிகம்.

* இவர்களுக்காக அரசு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தினாலும் அது போதுமானதாக இல்லை. எனவே, வாரியத்துடன் அனைத்து அரசுத் துறைகளும் இணைந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் இந்த மக்களின் வாழ்வு மேம்படும்.

- என்கிறார் மறுகுடியமர்வு மக்களின் உரிமைகளுக்காக செயல்படும் ‘தோழமை’ அமைப்பின் இயக்குநர் தேவநேயன்.