ஸ்வாச் பாரத் கிச்சன்!



-தொகுப்பு: ரோனி

காந்தியின் 150வது பிறந்தநாளில் ஸ்வாச் பாரத் அபியான் என்னும் தூய்மை திட்டத்தை 1.96 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு தொடங்கியது. வெறும் குப்பைகளை அகற்றும் தினமாக காந்தியின் பிறந்த நாளை மாற்ற முனைந்த அரசின் லட்சிய திட்டம் பல்வேறு ஒப்பந்த லஞ்ச லாவணிகளால் மக்களின் நம்பிக்கையை இழந்து தரைதட்டி நிற்பதுதான் பிராக்டிகல் நிஜம்.

மத்தியப் பிரதேசத்தில் இத்திட்டத்தில் கட்டப்பட்ட கழிவறை சமையலறையாகவும், மற்றொரு இடத்தில் காய்கறிக்கடையாகவும் செயல்பட்டு வருவதே இத்திட்டம் மக்களிடம் எப்படி சென்று சேர்ந்திருக்கிறது என்பதற்கு சின்ன சாம்பிள். மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திலுள்ள கோடன் கிராமத்தில்தான் இந்த அவலம். தினேஷ் யாதவ் என்பவரின் வீட்டில் டாய்லெட் கம்பீரமாக நிற்கிறதுதான்.

ஆனால், அதற்கான செப்டிக் டேங்கில் காண்ட்ராக்டர் அடித்த எக்கச்சக்க கமிஷனால், தினேஷ் அதனை கிச்சனாக மாற்றிவிட்டார். அரசிடமிருந்து பயனரின் கணக்குக்கு பணம் மாறியும் கழிவுநீர் தொட்டி போதுமான அளவில் கட்டப்படாததால், அதே கிராமத்தைச் சேர்ந்த லக்‌ஷ்மண் குஷ்வாகா, கழிவறையை காய்கறிக்கடையாக்கி பிஸினஸ் செய்து வருகிறார்!