COFFEE TABLE



மினியேச்சர் காலண்டர்

பிரமாண்டங்களை எல்லாம் குட்டியூண்டு மினியேச்சர்களாக பார்ப்பதிலும் ஓர் அலாதியான சுகம் இருக்கத்தான் செய்கிறது. சட்டைகளை மாட்டும் மர ஹேங்கரில் டிரெக்கிங் செல்லும் நபர்கள், மேக்கப் பாக்ஸில் சன் பாத் எடுக்கும் பிகினி கேர்ள்ஸ், ஸ்டேப்ளர் பின்னில் எக்ஸர்சைஸ் பண்ணும் ஜிம் பாய்ஸ், எலக்ட்ரானிக் சர்க்யூட்டில் கோல்ஃப் விளையாடும் ஆட்கள்...

எல்லாமே மினியேச்சர் டாய்ஸ்களாக மின்னுகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சின்னச் சின்ன பொருட்களை எல்லாம் பிரமாண்டமாக்கி, மனிதர்களை குட்டியூண்டு பொம்மைகளாக்கி அதில் கிரியேட்டிவான விஷயங்களும், கற்பனையுமாக கலக்குகின்றன இந்த மினியேச்சர் காலண்டர். ஃபேஸ்புக்கின் ‘Demilked’ என்ற பக்கத்தில் அந்த காலண்டரை ‘miniature life by miniature calendar’ என்ற தலைப்பில் மினி வீடியோவாக பதிவிட, நாற்பது லட்சம் பேர் பார்த்து வைரலாக்கியுள்ளனர்.

ப்ரியங்காவின் செல்லம்!

‘பே வாட்ச்’சுக்குப் பின் செம ஹேப்பியாக உள்ளார் ப்ரியங்கா சோப்ரா. செக் குடியரசு நாட்டில் உள்ள கலர்ஃபுல்லான சுற்றுலா நகரமான பிராக்கில் தனது தோழிகளுக்கு டின்னர் ட்ரீட் வைத்து ஹேப்பியாகியிருக்கிறது பொண்ணு. தனது செல்ல நாய்க்குட்டி டயானா, பொசுபொசு பொம்மையுடன் சைலன்ட்டாக விளையாடி மகிழ்வதை தோழிகளிடம் காட்டி மகிழ, அவர்கள் கொடுத்த அட்வைஸில் அதை இன்ஸ்டா, ஃபேஸ்புக் என பதிவிட்டிருக்கிறார். அப்புறமென்ன! குஷி மூடில் இருக்கும் டயானாவை 70 ஆயிரம் ரசிகர்கள் பார்த்தும், ஷேர் செய்தும் பரவசமாகி இருக்கிறார்கள்.

ரீடிங் கார்னர்

பயங்கரவாதி என புனையப்பட்டேன் மொகமது ஆமிர் கான் - நந்திதா ஹக்ஸர்
தமிழில்: அப்பணசாமி [எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642 002. விலை ரூ.200/- தொடர்புக்கு: 9942511302] வேடிக்கையில்லை. இதுபோனற ஒரு நிலையை நம்மால் அடைய முடிந்தால் மட்டுமே உணர முடியும். இது மொகமது ஆமிர் கானின் தன்வரலாறு.

இதில் அவரது சுகமான நினைவுகளும், சந்தோஷப் பகிர்வும் இல்லை. பலவிதமான வழக்குகளில் புனைவாக சேர்க்கப்பட்டு வதைக்கப்பட்டவர். சந்தேகமும், குறிப்பிட்ட மதமும் பொதுப்புத்தியில் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டு நிலை நிறுத்தப்படுகின்றன.
அத்தகைய நிலைக்கு ஆளாக்கப்பட்டவர் மொகமது.

அதற்காக வலியை சிரமேற்கொண்டு இப்போது வெளியேறி, அதே துயரை அனுபவித்து வருபவர்களுக்கு உதவுகிறார். மொகமது மீது செலுத்தப்பட்ட வன்முறைகள், அவர் பட்ட பாட்டை படித்துப் பார்த்தால் கல் நெஞ்சமும் கரையும். நாம் நம்பிக்கை வைத்திருக்கிற நீதித் துறைக்கும் இருண்ட பக்கம் இருக்கிறது என துல்லியமாகக் கூறுகிறது இந்நூல்.

சிறுபான்மை மக்களைப் பேணிக் காப்பாற்றும் நிைல போய் அவர்களின் வாழ்க்கை சின்னாபின்னமாகிறது; வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகள் சளைக்காமல் போராடிப் பெற்ற வாழ்வுச் சித்திரம் இது. இதில் சட்டத்தின் கூறுகள் இருக்கின்றன. அவை வேண்டுமென்றே வளைக்கப்படுகிற துயரம் இருக்கிறது. இன்னமும் மறுக்கப்படாத நீதி மிச்சமிருக்கிறது என்பதுதான் இந்தப் புத்தகத்தின் பெரும் ஆசுவாசம்; வெளிச்சம். மொழிபெயர்ப்பில் அப்பணசாமி சுமுகமாக இருக்கிறார். விழுங்கத் தயங்கும் இடர் சொல் எதுவும் இல்லை.

சைலண்ட் கார்னர்

சதுர பிரபஞ்சம் கோ.வசந்தகுமாரன்
[டிஸ்கவரி புக் பேலஸ், 6, மஹாவீர் காம்ப்ளக்ஸ், முனுசாமி சாலை, கே.கே. நகர் மேற்கு, சென்னை - 600 078. விலை ரூ.200/- தொடர்புக்கு: 8754507070] மனிதனால் படைக்கப்பட்டது மொழி; ஆனால், மனிதனிலிருந்து கவிஞனைப் படைப்பது கவிதை. மொழி கருவி. கவிதையோ படைப்பாளி. அருமையான கவிதை தளத்தின் மேலிருந்து தகித்து ஒளிர்கிறார் வசந்தகுமாரன்.

தனித்தனி அனுபவங்களின் வெளியீடு அல்ல இக் கவிதைகள். ஒரே நீண்ட அனுபவச் சங்கிலியின் வெவ்வேறு கண்ணிகள். கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டு, கருத்துகளாகவே மீந்து விடும் மேஜைக் கவிதைகளிலிருந்து வேறுபடுபவை. வசந்தகுமாரனின் மொழி ஆரவாரமற்று வெளிப்பாட்டுக்குத் தேவையான அளவு மட்டுமே கைக்கொள்ளப்படுகிறது. வெளிப்பாடு, அனுபவம் இரண்டும் தீவிரம் பெறும்போது அவரின் மொழியும் தீவிரமடைகிறது.

இசையின் மூலமாக எல்லா மனிதனையும் அறிய முடியும். மிருகங்களைக்கூட வசப்படுத்தி மோனத்தின் உயிரை சாந்தியில் கரைய வைத்துவிட முடியும். கலை எந்த கிரகத்திலிருந்து வரும் ஒளி என காண முடியவில்லை. ஆனால், வசந்தகுமாரனின் கவிதை வழி உணர்வுகளைப் பெறும்போது அப்படியொரு ஒளியை இங்கும் பெறமுடியும் எனத் தோன்றுகிறது. கேள்வி நிலைதான் கலைஞன். அப்படி ஒரு கட்டத்தில் இருக்கிறார் கவிஞர். அவரைப் புரிந்துகொள்வது கருத்துருவமாக நிலைக்கிறது. கூடவே தெளிவும்.

ஸ்மார்ட் ஜாக்கெட்!

உலகின் முன்னணி ஆடை நிறுவனமான லீவிஸ் டெக்னாலஜி காதலர்களுக்காக புது வகையான ஜாக்கெட்டுகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ‘ஸ்மார்ட் டெனிம்’ என்று பெயரிடப்பட்ட இந்த ஜாக்கெட்டுகள் ஸ்மார்ட் போனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இதற்காக ப்ளூ டூத் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

போனை பாக்கெட்டிலிருந்து வெளியே எடுக்க வேண்டாம். ஜாக்கெட்டின் கைப்பகுதியை தட்டினால் போதும். பாட்டு கேட்கலாம். கூகுள் மேப்பில் போக வேண்டிய இடத்துக்கு ரூட்டை தேடலாம். உங்களின் காதலியிடம் போனில் பேசலாம். விலை ஜஸ்ட் ரூ.22,500தான்!