ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 30

காலம் தீர்மானித்து வைத்திருக்கும் பாதைகளில் நம்முடைய கால்கள் பயணிக்கின்றனவா, இல்லை காலத்திற்கேற்ப நம்முடைய கால்கள் பயணிக்கத் தொடங்குகின்றனவா எனத் தெரியவில்லை. ஏனெனில், ஒருகாலம்வரை நாடகக் கலையிலும் சினிமாத்துறையிலும் ஈடுபாடு கொண்டிருந்த அவர், கலை இலக்கியப் பத்திரிகையின் அகத்தையும் முகத்தையும் மாற்றும் யோசனையை எங்கிருந்தோ பெற்றிருக்கிறார்.

அந்த அவர் வேறு யாருமல்ல. கோமல் சுவாமிநாதன். அதுவரை கலை இலக்கியப் பத்திரிகைகளில் நிலவி வந்த குழு மனப்பான்மை, அவர் வருகைக்குப் பின்புதான் ஓரளவு மட்டுப்பட்டது. அந்தக் காலங்களில் எழுத்துகளின் வகைகளுக்கேற்ப எழுத்தாளர்களும் தனித்தனி குழுக்களாக இயங்கி வந்தார்கள். ஒரு குழு இன்னொரு குழுவை ஏற்கவோ பின்தொடரவோ விரும்பியதில்லை.

எதார்த்த இலக்கியமென்றும் எதிர்கால இலக்கியமென்றும் ஏதேதோ பெயர்களில் இயங்கிவந்த அவர்களை, ‘சுபமங்களா’ என்னும் இலக்கியப் பத்திரிகை மூலம் ஒன்றிணைத்தவர் கோமல் சுவாமிநாதன். யாருடைய கருத்துகளும் புறந்தள்ளக் கூடியதல்ல என்பதால், அவரவர் தங்கள் கருத்துகளைப் பேசும் பொதுமேடையாக ‘சுபமங்களா’வைப் புனரமைத்த எண்ணம் அவருடையது.

இடது, வலது, மேல், கீழ், உள், வெளி என்ற பாகுபாடையெல்லாம் அவர் ஒவ்வொரு இதழிலும் உடைத்தெறிந்தார். அப்படி உடைத்தெறிய இரண்டு பக்கத்திலும் உள்ள நியாயங்கள் அவருக்குத் தெரிந்திருந்தன. எது சரி, எது தவறு என்னும் தராசில் அவர் எந்தப் படைப்பையும் படைப்பாளனையும் எடை போட விரும்பவில்லை.

காலம் செய்யவேண்டிய காரியம் அதுவென்று ஒதுங்கியே நின்றார். என்றாலும், அவருக்கென்று சில சார்புகளும் கொள்கைகளும் இருந்தன. காங்கிரஸ்காரராக வாழ்வைத் தொடங்கிய அவர், இறுதிக் காலங்களில் தன்னை ஒரு கம்யூனிஸ்டாக அறிவித்துக் கொண்டார். கோமல் சுவாமிநாதன் ஆசிரியப் பொறுப்பேற்கும் வரை ‘சுபமங்களா’வின் முகம், சனாதன, சமஸ்கிருத, பெண்கள் பத்திரிகையின் முகமாக இருந்தது.

பெரிய கவனத்தையோ அதிகமான வாசகர்களையோ கொண்டிராத அப்பத்திரிகையை, கலை இலக்கிய வரலாற்றை முன்னெடுத்த பத்திரிகையாக மாற்றிய பெருமை அவருக்கே உரியது. கலை இலக்கியத் துறையில் அவருக்கிருந்த பரிச்சயத்தைவிட, கலை இலக்கியம் கற்றுக் கொடுத்த பண்பாட்டையும் கலாசாரத்தையும் கடைசிவரை அவர் காப்பாற்றினார். யாரோடும் சுமுகமான ஸ்நேகமான அன்பையே அவர் கொண்டிருந்தார்.

தமிழ்ப் படைப்பாளர்கள் அத்தனைபேரும் ஒரு குடையின் கீழ் நின்று நிழல்பெறவும் நிலைபெறவும் அவர் விரும்பினார். கலை இலக்கியப் பத்திரிகையுலகில் அவருக்கு முன்பும் அவருக்குப் பின்பும் அப்படி ஒருவர் இருந்திருக்கிறாரா என்னும் கேள்விக்கு, அவரே ‘தீபம்’ நா. பார்த்தசாரதி இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். கோமல் சுவாமிநாதன் என்றதும் சட்டென்று நம்முடைய நினைவுக்கு வருவது அவருடைய ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம்தான்.

நாடகமென்றால் நகைச்சுவைத் துணுக்குகளின் குவியல் என்றிருந்த காலத்தில், அதை ஒரு சமூக ஆயுதமாக நிறுவிக் காட்டிய பிதாமகன் அவர். இன்றைக்கும் குடிநீர் கேட்டுப் போராடும் தாய்க்குலங்கள், காலி குடங்களை சாலையில் இருத்திப் போராடும் வடிவ உத்தியை அவர்தான் வழங்கினார். தேர்தல் புறக்கணிப்பு என்னும் சொல்லை, அதற்குமுன் எந்த ஒரு நாடகப்பிரதியும் கொண்டிருக்கவில்லை.

அரசர்களின் வரலாற்று நாடகங்களை மட்டுமே கண்டு வந்த நம்முடைய மக்களுக்கு, சமூக வரலாற்றைக் கற்பிக்கும் நாடக ஆக்கங்களை அவர் எழுதினார். போராட்டங்களைத் தூண்டுவதாக அவர் நாடகங்கள் பலமுறை காவல் துறையால் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. எழுபதுகளில் தமிழகத்தில் பரவலாக இயங்கி வந்த நக்சலைட்டுகளுக்கு ஆதரவான குரல் அவருடையது.

என்றாலும், தனி மனித பயங்கரவாதத்துக்கு அவர் ஒருபோதும் ஒத்துழைப்புக் கொடுத்ததில்லை. அவருடைய ‘அனல்காற்று’ திரைப்படம், தனி மனித பயங்கரவாதத்தை விமர்சித்தே எடுக்கப்பட்டது. மக்கள் சக்தியே விடுதலையைப் பெறும் வழியென்று மிகத் தீவிரமாக அவர் நம்பினார். அத்திரைப்படத்தில் இடம்பெறும் வசனங்கள், வடகிழக்கு மாநிலங்களில் இன்று போராடி வரும் மாவோயிஸ்ட்டுகள் மீதான விமர்சனங்களையும் உள்ளடக்கியவை.

எதற்கு போராடுகிறோம் என்பதும் எப்படி போராடுகிறோம் என்பதும் ஒரு போராளிக்குத் தெரியவில்லை என்றால், அந்தப் போராட்டமே பாழ்பட்டுவிடும் என்றுதான் அத்திரைப்படத்தில் சொல்லியிருப்பார். ஆளும் ஆதிக்க சக்திகளை முறியடிக்க, அப்பாவிகளைக் கொல்வது ஒரு புரட்சிக்காரனுக்கு எந்த விதத்திலும் பெருமை சேர்க்காது என்பதை அத்திரைப்படத்தில் மிக நேர்த்தியாக வடித்திருப்பார்.

வனாந்தரங்களிலும் மலைக்குகைகளிலும் ஒளிந்துகொண்டு மக்களுக்காகப் போராடுகிறோம் என்பவர்கள், அதே மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள் என்பதை அதைவிட காத்திரமாகச் சொன்ன படம் வேறு ஏதுமில்லை. மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களே விடுதலையைப் பெற்றுத்தரும் என்னும் தெளிவை அவருடைய நாடகங்களும் திரையாக்கங்களும் முன்மொழிந்தன ‘ஓர் இந்தியக் கனவு’ என்னும் திரைப்படத்தில் மலைவாழ் மக்களின் அவலங்களையும் அவர்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகளையும் பேசியிருப்பார்.

அத்திரைப்படத்தில் கதாநாயகி மூலம் அவர்களுக்கான உரிமைகள் பேசப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய எல்லா படைப்புகளுமே இடதுசாரி மனநிலையில் இருந்துதான் எழுதப்பட்டிருக்கின்றன. அவர் காங்கிரஸ்காரராக இருந்த காலத்திலும்கூட அவருடைய படைப்புகள், முற்போக்கு சாயத்தையே பூசிக்கொண்டன. இன்றைக்கு மத்தியில் ஆண்டுவரும் பாரதீய ஜனதா கட்சி, வெகுவிரைவில் காங்கிரஸ்காரர்களையும் சிவப்புசட்டை போட வைத்துவிடும் என்றுதான் தோன்றுகிறது.

மதவாத, இனவாத, சாதிவாத போக்குகளைக் கண்டிக்கும் திராணியுடைய எழுத்து ஆளுமையாக கோமல் சுவாமிநாதன் இருந்திருக்கிறார். அவர் படைப்புகளின் வாயிலாக மக்களிடம் விதைக்க விரும்பிய புரட்சிகர கருத்துக்கள், முளைவிட்டு கிளைவிட்டு முழு மரமாகும் சாத்தியமுடையன. முப்பதுகளில் பிறந்த கோமல் சுவாமிநாதன், தன்னுடைய பதினேழாவது வயதிலிருந்தே அரசியல் ஈடுபாடுடையவர்.

ஒன்றாயிருந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் மேடைகளில் அவர் சொற்பொழிவாளராக சிலகாலம் தோன்றியிருக்கிறார். இடி முழங்குவதுபோல் பேசிவந்த அவரை ‘கோடையிடி கோமல்’ என்றே அழைத்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் அரசியலிலிருந்து அவர் பார்வை நாடகக் கலை பக்கம் திரும்பியது. 1936ல் காங்கிரஸ் பிளவுபட்டபோது ‘இதயத்துடிப்பு’ என்னும் நாடகத்தை அரங்கேற்றிய அவர், அதன்பின் முழுநேர அரசியலில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார்.

நாடகத்துறையில் அவர் கால்பதிக்க, எஸ்.வி.சகஸ்ரநாமம், பி.எஸ்.ராமையா, முத்து ராமன், மேஜர் சுந்தர்ராஜன், கு.அழகிரிசாமி உள்ளிட்டோர் உதவியிருக்கிறார்கள். சகஸ்ரநாமம் நடத்திவந்த ‘சேவா ஸ்டேஜ்’ நாடகக்குழுவுக்கு அவர் எழுதியளித்த ‘புதியபாதை’, ‘மின்னல் காலம்’, ‘தில்லைநாயகம்’ ஆகிய நாடகங்கள், குடும்பம் சார்ந்த கதையோட்டத்தில் நுட்பமான சமூக விமர்சனங்களைக் கொண்டிருந்தவை.

மேஜர் சுந்தர்ராஜனுக்காக அவர் எழுதிய ‘அவன் பார்த்துப்பான்’, ‘டில்லி மாமியார்’, ‘அப்பாவி’ முதலிய நாடகங்களும், நடிகை மனோரமாவுக்காக அவர் எழுதிய ‘என் வீடு, என் கணவன், என் குழந்தை’ என்ற நாடகமும் பின்னர் தொலைக்காட்சித் தொடர்களாக வெளிவந்து மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றன.

‘தண்ணீர் தண்ணீர்’ நாடகத்தைப் படமாக்குவதே தன் இலட்சியம் என்று கூறிய கே.பாலச்சந்தர், அந்நாடகத்தை திரையாக்குவதில் எடுத்துக்கொண்ட சிரத்தையிலிருந்து நாடகத்திற்கும் திரைக்குமான இடைவெளியை கோமல் சுவாமிநாதன் புரிந்துகொண்டிருக்கிறார். அதற்குமுன்பே உலகப் படங்களின் பரிச்சயம் அவருக்கு இருந்தபோதும் பாலச்சந்தரின் தொடர்பு அவரை பரவலாக்கியது.

முற்போக்கு முகாம்களில் அவர் அவதார புருஷராக அறியப்பட்டார். ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படத்தைப் பொறுத்தமட்டில் அது ஏதோ குடிநீர் பஞ்சத்தை முன்வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற அளவில் இல்லாமல், சமூக தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய படமாக அத்திரைப்படம் இன்றுவரை பார்க்கப்படுகிறது. அத்திரைப்படம் வெளிவந்த சமயத்தில் எம்ஜிஆர் ஆட்சியிலிருந்தார்.

திரைத்துறையைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக இருந்தபோதிலும் அத்திரைப்படம் கடும் சிக்கலுக்கு உள்ளானது. அத்திரைப்படத்தை வெளியிடக் கூடாதென்று குரல் கொடுத்தவர்களில் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் முக்கியமானவர். அவரே திரைப்படத் தயாரிப்பாளராக இருந்தபோதும், அத்திரைப்படம் வெளிவருவதில் அவர் காட்டிய தயக்கம்தான் ‘தண்ணீர் தண்ணீர்’ பேசிய அரசியல்.

பெரியாரின் சீடர்களாக தங்களை சொல்லிக்கொண்டவர்களும் அத்திரைப்படம் பேசிய கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு எதிர்வினையாற்ற எண்ணவில்லை. மாறாக, அரசுக்கு எதிரான படம்போல அதை சித்தரித்து விடுவதில்தான் குறியாயிருந்தார்கள். அதன் விளைவாக, வெற்றிப் படமாகி யிருக்க வேண்டிய அத்திரைப்படம், பெருவெற்றிப் படமாக அமைந்தது. எதிர்ப்பினால் கோரிக்கைகளைப் பெறலாம் என்று சொல்லித்தந்த அந்தத் திரைப்படமும் எதிர்ப்பினால்தான் பெருவெற்றி பெற்றது என்பதை மாற்று சினிமாக்காரர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்