மாஸ்கோ செயற்கைக்கோள் ஒர்க் ஷாப்பில் பங்கேற்ற தமிழக அரசுப் பள்ளி மாணவன்!



-ஷாலினி நியூட்டன்

நகரத்திலேயே பெரிதான இந்தப் பள்ளியில்தான் என் குழந்தை படிக்க வேண்டும் என பெற்றோர்கள் லட்சங்களில் பணத்தை எண்ணிக் கொண்டிருக்கும் இந்த மெட்ரிக் மோக சூழலில்தான் விருதுநகர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ஜெயக்குமார் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் செயற்கைக்கோள் குறித்த பயிற்சிப் பட்டறையில் ஏழு நாட்கள் பங்கேற்றுவிட்டு திரும்பியிருக்கிறார். 

‘சாதாரண’ அரசு உயர்நிலைப்பள்ளி கணித வாத்தியார் கருணைதாஸ் கொடுத்த ஊக்கமும், உந்துதலும், துணை நிற்க ஜெயக்குமார் அடுத்து நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் கால்பதிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். ‘‘விருதுநகர்தான் சொந்த ஊர். அம்மா மட்டும்தான். சின்ன வயதில் இருந்தே அறிவியல் ஆராய்ச்சிகள் ரொம்ப பிடிக்கும். நாரணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிச்சேன். பத்தாவதில் 471 மார்க் வாங்கியிருக்கேன்.

எங்க ஊருக்குப் பக்கத்துலதான் சிவகாசி. அங்க நிறைய பட்டாசு தொழிற்சாலைகள் இருக்கு. அடிக்கடி தீ விபத்துகள் நடந்து உயிர்ச்சேதம் ஏற்படும். மனதைப் பாதிக்கிற இந்த விஷயத்தையே என் ஆராய்ச்சிக்கான முதல் படியா எடுத்துக்கிட்டேன்...’’ என்று சொல்லும் ஜெயக்குமார் அதுகுறித்து விவரித்தார். ‘‘தீ விபத்து ஏற்பட்டதும் அலாரம், லைட் மட்டுமில்லாம ஒரு கருவி மண்ணையும் சேர்த்து ஸ்பிரே பண்ணும்.

அப்படியான ஒரு தீயணைப்பு கண்டுபிடிப்புதான் நான் செய்திருக்கும் தானியங்கி தீயணைப்பான். சார் உதவியுடன் மதுரைல போய் தேவையான பொருட்கள் வாங்கினோம். விருதுநகர்ல நடந்த ஓர் அறிவியல் கண்காட்சி, ராமநாதபுரம் பள்ளியில் விஞ்ஞானி சிவசுப்ரமணியன் ஐயா முன்பு செய்முறை விளக்கம் மற்றும் பரிசு, பெங்களூரு ஃபயர் அமைப்பு கொடுத்த பரிசு... இப்படி நிறைய வாங்கினேன். என் கண்டுபிடிப்பை spacekidsindia.com வெப்சைட்ல சார் பதிவு செய்தார்.

மாஸ்கோ, நாசானு என்னென்னமோ சொன்னார். அப்ப எனக்கு எதுவும் புரியலை...’’ வெட்கத்துடன் சிரித்த ஜெயக்குமார், மலர்ச்சியுடன் தொடர்ந்தார். “இந்தியா முழுக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட புராஜெக்ட்ஸ், அதைச் செய்த மாணவர்கள்... இதுல இருந்து 500, 250, 100, 50, 25னு ஒவ்வொரு கட்டமா தேர்வானேன். கடைசில மூணு பேர் செலக்ட் ஆனோம்.

எங்களை மாஸ்கோவுக்கு அனுப்பினாங்க. ஒரு வார ஒர்க் ஷாப். செயற்கைக்கோள் செய்முறை, விஞ்ஞானிகளின் செயல்பாடுகள், உணவு,  கவுண்டிங் ரூம்... இப்படி நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். மாஸ்கோவுக்கு போக நான் தேர்வானப்ப எங்ககிட்ட அவ்வளவு பணமில்லை. பத்திரிகைகள் மூலமா பலரும் உதவ முன்வந்தாங்க. அவங்களை எல்லாம் நன்றியோட நினைச்சுக்கறேன்.

அதே மாதிரி நாரணாபுரம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், வகுப்பாசிரியை வித்யா மேடம், நண்பர்கள், குடும்பம், முழுச் செலவை ஏத்துகிட்டு என்னை மாஸ்கோவுக்கு அனுப்ப பண உதவி செய்த விஜயகுமார் சார்... இவங்க எல்லாம் இல்லைனா நான் இல்லை. குறிப்பா கருணைதாஸ் சார். இப்ப உங்க முன்னாடி நான் நிக்கறேன்னா அதுக்கு அவர் கொடுக்கும் ஊக்கம்தான் காரணம்...’’ கண்கள் கசிய நெகிழ்கிறார் ஜெயக்குமார். அரசுப் பள்ளிகள் இன்று தனியார் பள்ளிகளைக் காட்டிலும் மாணவர்கள் வளர்ச்சியில் அதீத கவனம் செலுத்துகின்றன என்பதற்கு ஜெயக்குமார் ஒரு சோறு பதம்.

படங்கள்: ஆர்.சி.எஸ்

ஏற்றம் தந்த பதில்!

‘‘ஜெயக்குமாரை முதல் தடவைபார்த்தப்ப ‘ரிசர்ச் செய்யறேன் சார்’னு சொன்னான். அந்த பதில்தான் இப்ப வரை அவனுக்கு உறுதுணையா இருக்கணும்னு என்னை நினைக்க வைக்குது. அவனோட கண்டுபிடிப்பை ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ தளத்துல பதிஞ்சேன். அவன் மாஸ்கோ போக இந்தியாவில் இருந்து மட்டுமில்ல... வெளிநாட்டு வாழ் தமிழர்களும் உதவ முன்வந்தாங்க. ஆனா, முழு செலவையும் ஏத்துக்க விஜயகுமார் முன்வந்தார்.

இதோ ஜெயக்குமார் மாஸ்கோ போயிட்டு வந்துட்டான். பெருமையா இருக்கு. அடுத்து நாசா. போட்டிகள், தேர்வுகள் எல்லாம் இருக்கு. நிச்சயம் ஜெயிப்பான். இவனை மாதிரி நிறைய பேர் அரசுப் பள்ளியில படிச்சுட்டு இருக்காங்க. அவங்க எல்லார் மீதும் வெளிச்சம் விழணும்...’’ என்கிறார் கருணைதாஸ்.