விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 12

‘‘உம் மூஞ்சு...’’ கிருஷ்ணனின் தலையில் குட்டினாள். ‘‘அதிபுத்திசாலியா இருந்த நீ... எப்ப படு மொக்கையான..?’’ ‘‘‘ஏன் இந்த திடீர் சந்தேகம் ஐஸ்?’’ கேட்டவனின் குரல் வறண்டிருந்தது. ‘‘பின்ன... ஏலியன்ஸ் அது இதுனு காதுல பூ சுத்தினா..?’’ ‘‘போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் அப்படித்தான் வரும்னு டாக்டர் சொல்றார்...’’ ‘‘அப்படீன்னா அவர் போலி டாக்டர்...’’ தீர்மானமாகச் சொன்னாள் ஐஸ்வர்யா. ‘‘வேற்றுகிரக வாசிகள் எல்லாம் எரிய மாட்டாங்க...’’ ‘‘அப்ப காத்தோடு கலந்துடுவாங்களா..?’’ ‘‘க்ருஷ்...’’ ‘ஏலியன்ஸ் எரிய மாட்டாங்கனு யார் சொன்னது?’’ அவள் பக்கம் சீரியசாக திரும்பியபடி கிருஷ்ணன் கேட்டான்.

‘‘இது டாக்டரோட சந்தேகம்தானே?’’ ஆதியின் செவியில் மாஸ்டரின் குரல் தெளிவாக ஒலித்தது. ‘‘கெஸ் பண்ணலை மாஸ்டர்... தீர்மானமா சொல்றார்...’’ ‘‘எதை வைச்சு இந்த முடிவுக்கு வந்தாராம்?’’ ‘‘மனித உயிர்களுக்கான எந்த அறிகுறியும் அந்த இரண்டு உடல்கள்லயும் இல்லையாம்...’’ சுற்றிலும் பார்த்தபடி ஆதி இயர் போனில் பதில் அளித்தான். ‘‘உயிர்னா என்ன ஆதி?’’ ‘‘மாஸ்டர்...’’ ‘‘மனித உயிர் எப்படி இருக்கும்..?’’

‘‘ஏன் அமைதியா இருக்க ஐஸ்... கமான் டெல் மீ... உயிர்னா என்ன..?’’ ‘‘ஏன்டா இப்படி படுத்தற... க்ரிப்டாலஜில ஆரம்பிச்சு ஜோதிடத்தை அலசி... இப்ப பயாலஜில வந்து நிக்கற. உன் கூட டிராவல் பண்ண ஆரம்பிச்ச கொடுமைக்கு இன்னும் எதையெல்லாம் கேட்க வேண்டி வருமோ தெரியலை...’’ டிரைவர் சீட்டில் அப்படியே சாய்ந்த ஐஸ்வர்யாவின் முகம் சலிப்பைக் காட்டியது.

‘‘பீ சீரியஸ். நாம முக்கியமான ஒரு கட்டத்துல இருக்கோம். இதை மட்டும் சரியா பயன்படுத்தலைனா அப்புறம் வரலாறு நம்மை மன்னிக்காது. சிம் கார்டு நழுவி செல்போன்ல விழறா மாதிரி எல்லாமே நமக்கு ஃபேவரா நடந்துட்டு இருக்கு. குறி பார்த்து நடந்தோம்னா இலக்கை அடையலாம்...’’ ‘‘முறுக்கு பிழியாம ஸ்டிரைட்டா விஷயத்துக்கு வா...’’

‘‘மனித உயிர் எப்படி இருக்கும்?’’ எரிந்து முடிந்த சிகரெட்டை வீசி விட்டு க்ருஷ் கேட்டான். ‘‘நோ ஐடியா. யாரும் கண்ணால பார்த்ததில்ல. பட், சுவாசிக்கலைனா செத்ததா அர்த்தம்...’’ ‘‘சுவாசம்னா என்ன?’’ எக்கி அவன் காலரைப் பிடித்தாள். ‘‘ம்ஹும். இந்த கேள்வி பதில் ஃபார்மட் வேண்டாம். எப்பவும் போல லெக்சர் கொடு...’’ ‘‘குறுக்க பேச மாட்டியே...’’ கண்களால் சிரித்தபடி அவள் கையை விலக்கிய க்ருஷ், தொடர்ந்தான்.

‘‘உயிர்ங்கறது வெறும் மூச்சு மட்டுமில்ல. ஏன்னா அணுக்களால் ஆனதுதான் உயிர். ஸோ, ஒவ்வொரு உயிருக்கும் ‘உயிர்’ங்கறது வேற வேறயா இருக்கும்...’’ ‘‘அமீபா அளவுக்கு கூட எதுவும் புரியலை. பட், கேரி ஆன்...’’ ‘‘தேர் யூ ஆர்...’’ ஐஸ்வர்யாவின் தோளில் தட்டினான். ‘‘பாயிண்டை பிடிச்சுட்ட. ‘உயிருள்ள’ இடையூறுகளா மனுஷங்க பாக்டீரியாக்களை பார்க்கறாங்க. ஆனா, நம்மை மாதிரி பாக்டீரியாஸ் சுவாசிக்கறதில்லை...’’

‘‘காம்ப்ளிகேட் ஆக்காம ‘உயிர்’னா என்ன..? ஒரே வார்த்தைல சொல்லு...’’ அவன் கேட்ட கேள்வியை அவனிடமே திருப்பினாள். ‘‘பயோ சுழற்சி...’’ ‘‘வாட்?’’ ‘‘ஜஸ்ட் பயோ சுழற்சியைத்தான் ‘உயிர்’னு சொல்றோம். சுவாசம்னா என்ன? ஒரு வாயுவை உள்ள இழுத்து இன்னொரு வாயுவை வெளியேத்தறது...’’ ‘‘ம்...’’ ‘‘ஆனா, பாக்டீரியாஸ் நம்மை மாதிரி சுவாசிக்கறதில்ல. செல்கள் மூலமா ‘உயிரோட்டத்தை’ உள்ள இழுத்துக்குது. அதாவது மீன்கள் என்ன செய்யுதோ அதே ஃபங்ஷன். தண்ணீர்லதான் மீன்கள் நீந்துது.

ஆனா, தண்ணீர்ல இருக்கிற ‘உயிரோட்டத்துக்கான’ வாயுவை மட்டும்தான் மீன்களோட செதில்கள் எடுத்துக்குது. மத்தபடி நீரை தன் உடலுக்குள்ள அனுமதிக்கறதில்லை...’’ ‘‘லைட்டா புரிய ஆரம்பிக்குது...’’ உதட்டை சுழித்தபடி ஐஸ்வர்யா சிரித்தாள். ‘‘உண்மைல ‘உயிர்’ என்கிற விஷயமே வினோதமானதுதான். தாவரங்களுக்கு உயிர் இருக்குனு சொல்றோம்.

ஆனா, நாம குறிப்பிடற ‘உயிர்’ அதுக்கு கிடையாது. இலைகள் வழியா சூரிய வெப்பத்தை வாங்கி, உள்ள இருக்கிற சர்க்கரையை கரைச்சு, கார்பன் டை ஆக்சைடை உருவாக்குது. அதுலேந்து ஆக்சிஜனை மட்டும் பிரிச்சு ‘எனக்கு இது தேவையில்லை’னு வெளியேத்துது. இது பகல்ல நடக்கிற ப்ராசஸ். நைட் ஆச்சுனா ஆக்சிஜனை வாங்கி கார்பன் டை ஆக்சைடை வெளியே விடுது. இதைத்தான் நாம ஒளிச்சேர்க்கைனு சொல்றோம்...’’

‘‘ம்...’’ ‘‘ஆனா, பகலோ இரவோ மனுஷனுக்கு ஆக்சிஜன் மட்டும்தான் தேவை...’’ ‘‘ம்...’’ ‘‘ஏலியன்ஸ் அப்படியில்ல...’’ என க்ருஷ் ஆரம்பித்ததுமே ஐஸ்வர்யா நிமிர்ந்து உட்கார்ந்தாள். ‘‘தம் அடிச்சுகிட்டே சொல்லு... அப்பதான் உன் மூளை நல்லா வேலை செய்யுது...’’ சொன்னதுடன் நிற்காமல் டேஷ் போர்டில் இருந்த பாக்கெட்டை பிரித்து ஒரு சிகரெட்டை எடுத்து அவன் உதட்டில் வைத்தாள். லைட்டரால் பற்ற வைத்தாள். ‘‘அப்படியா சொல்றீங்க?’’ ஆதியின் புருவங்கள் விரிந்தன.

‘‘ம். வெறும் தூசு, காற்றோட மாசு... இது கூட வேற்று கிரக வாசிகளுக்கு போதும். இதையே ‘உயிர்’ வாழ்வதற்கான எரிபொருளா ஏலியன்ஸ் பயன்படுத்திப்பாங்க...’’ ‘‘மாஸ்டர் ஒரு சின்ன சந்தேகம்...’’ ‘‘கேளு ஆதி...’’ ‘‘பூமி தவிர வேறு எந்தெந்த இடங்கள்ல உயிர்கள் வசிக்குது?’’ ‘‘அறிவியலை நம்பறவங்க இன்னும் அதை கண்டுபிடிக்கலை...’’ ‘‘Intelligent Design அமைப்பை சேர்ந்த நாம?’’ ‘‘ஏழு உலகங்களை நம்பறோம்...’’

‘‘அதனாலதான் ரங்கத்துல ஏழு பிராகாரங்கள் இருக்கா மாஸ்டர்..? இந்த காரணத்துனாலதான் கார்க்கோடகர் ரங்கம் கோயிலோட ப்ளூ பிரிண்டை வைச்சிருக்காரா..?’’ ‘‘மாஸ்டருக்கான எல்லா தகுதிகளும் உனக்கு வர ஆரம்பிச்சிருக்குனு நான் ஏன் சொல்றேன்னு இப்ப புரியுதா..?’’ செவியில் ஒலித்த குரலைத் தொடர்ந்து ஆதி தலை கவிழ்த்தான்.

குழப்பங்கள் நீங்கி அவன் முகத்தில் தெளிவு பிறக்க ஆரம்பித்தது. ‘‘அப்ப கரிக்கட்டையா எரிஞ்ச ரெண்டு பேரும் எந்த உலகத்தைச் சேர்ந்தவங்க மாஸ்டர்?’’ ‘‘மனிதர்களோட மூளை இப்ப அட்வான்ஸ்ட் சோலார் செல்களை செயற்கையா உருவாக்கி இருக்கு. இதுல சில கெமிக்கல் டெக்னாலஜியை புகுத்தினா போதும். ஐநூறு வருஷங்கள் கூட ‘உயிர்ப்போட’ இருக்கும்...’’ நிக்கோடினை ஆழ்ந்து உள்ளிழுத்து அதை நிதானமாக தன் நாசி வழியே க்ருஷ் வெளியேற்றினான்.

‘‘முன்னுக்குப் பின் முரணா ஏன் பேசற?’’ ‘‘அப்படியென்ன மாத்தி நான் பேசிட்டேன் ஐஸ்..?’’ ‘‘பின்னே... முதல்ல ஏலியன்ஸ்னு சொன்ன... இப்ப சோலார் செல்ஸ்னு வேற ரூட்டுக்கு போற... உண்மைல எரிஞ்சு கரிக்கட்டையா இருக்கிற ரெண்டு பேரும் யாரு? வேற்றுகிரக வாசிகளா இல்ல சோலார் செல்ஸ் பொருத்தப்பட்ட உடல்களா..?’’ ‘‘டாக்டரோட சந்தேகப்படி அவங்க ஏலியன்ஸ். மனிதர்களால உருவாக்கப்பட்ட சோலார் செல்ஸ் உடம்பா அது ஏன் இருக்கக் கூடாதுங்கறது என்னுடைய தனிப்பட்ட கேள்வி.

ஏன்னா வேற்றுகிரக வாசிகள் எப்படி இருப்பாங்கனு இமாஜினேஷன் இருக்கோ அப்படித்தான் சோலார் செல்ஸ் பொருத்தப்பட்ட உடம்பும் காட்சியளிக்கும். ஏன்னா, வேற்றுகிரக வாசி என்கிற கற்பனைக்குதான் சோலார் செல்ஸ் வழியா ‘உயிர்’ கொடுக்கறோம்...’’ ‘‘ஐ ஸீ... அப்ப எந்த முடிவுக்கு நாம வர்றது..?’’ ‘‘கண்டுபிடிப்போம். நிச்சயம் க்ளூ கிடைக்காம போகாது. பட், ஒன் திங்... அடிப்படைல உடல் என்பது வெறும் எந்திரம்தான். இதை இயக்கக் கூடிய என்ஜினும் எரிபொருளும்தான் ‘உயிர்’.

இந்த என்ஜினும் எரிபொருளும் காலம், தொழில்நுட்பம், சூழல் சார்ந்து எதுவா வேணும்னாலும் இருக்கலாம். நாமே நீராவி என்ஜின்ல ஆரம்பிச்சு இப்ப எலக்டிரிக் டிரெயின் வரை வந்துடலையா... அப்படி இயற்கையும் பரிணாம வளர்ச்சில மெல்ல மெல்ல அட்வான்ஸ்டா தன்னைத்தானே மாத்திக்கும்...’’ ‘‘இதனாலதான் பிரபஞ்சம் ஒரு புரியாத புதிர்னு சொல்றாங்களா?’’ ‘‘யெஸ் ஐஸ். டார்க் எனர்ஜியாலதான் பிரபஞ்சம் நிரம்பியிருக்கு.

இன்னொரு பெரும் பகுதி மனுஷங்களால உணர்ந்து கொள்ள முடியாத கனிமங்களால மூடியிருக்கு. இதை டார்க் மேட்டர்ஸ்னு சயின்ஸ் வரையறுக்குது. இந்த டார்க் மேட்டர்ஸ்ல ஹைட்ரஜன் 25%மும், ஹீலியம் 4%மும், 0.3% நியூட்ரினோவும் இருக்கலாம்னு சயின்டிஸ்ட் சொல்றாங்க...’’ ‘‘இதுக்கும் எரிஞ்ச ரெண்டு உடல்களுக்கும் தொடர்பிருக்கா?’’ ‘‘இருக்கு ஆதி... கார்ல ரெண்டு பேர் எரிஞ்சது விழுப்புரம் பைபாஸ்ல. அதாவது தமிழ்நாட்டுல. அதனால நியூட்ரினோவை சுவாசிக்கிற வேற்றுகிரக வாசிகளா அவங்க இருக்கலாம்...’’

மாஸ்டர் சொன்னதைக் கேட்ட ஆதிக்கு ஆச்சர்யம் வந்தது. ‘‘வெறும் 0.3%தானே மாஸ்டர் நியூட்ரினோ இருக்குனு சொன்னீங்க..?’’ ‘‘ஆமா ஆதி... கேலக்ஸில 0.3% என்பது நம்ம பூமியை விட பல மடங்கு பெருசு!’’ ‘‘மை காட்... ஹைட்ரஜனை சுவாசிக்கிற ரெண்டு உடம்புகள்தான் கரிக்கட்டையா மார்ச்சுவரில இருக்குனு சொல்றியா க்ருஷ்?’’ ‘‘ஹைட்ரஜன் ஆர் நியூட்ரினோ. இந்த ரெண்டுல ஒரு வாயுவை சுவாசிக்கிற உடம்புனு சொல்றேன்...’’ ‘‘எந்த கிரகத்தை சேர்ந்தவங்களா இருப்பாங்க?’’ ஐஸ்வர்யாவின் இமைகள் படபடத்தன.

‘‘நோ ஐடியா. அவ்வளவு ஏன்... Shape Shifting ஆகவும் இருக்கலாம்...’’ ‘‘ஷேப் ஷிப்டிங்?’’ ‘‘பச்சோந்தி மாதிரி சூழலுக்கு தகுந்தா மாதிரி பூமியில் வாழற ‘உயிர்கள்’. தோற்றம் மனுஷங்க மாதிரி இருக்கும். ஆனா, உள்ளுக்குள்ள மனித உடலுக்கான உறுப்புகள் எதுவும் இருக்காது. போஸ்ட் மார்ட்டம் செய்யறப்பதான் இது தெரியும். டாக்டர் இதைப் பார்த்துதான் மிரண்டிருக்கார்.

ஏலியன்ஸா இருக்கலாம்னு அவர் முடிவுக்கு வந்ததும் இதனாலதான்...’’ சட்டென்று ரங்கம் கோயில் பிரகாசமானது. மேகங்கள் இல்லாமல் சூரியன் பளிச்சென்று தன் கதிர்களை வீசினான். ‘‘என்னா வெயில்...’’ என்றபடி பக்தர்கள் நிழலைத் தேடி ஒதுங்கினார்கள். ரங்கம் கோயிலை நோக்கி வருவது சூரிய வெளிச்சமல்ல... ஸ்பேஸ் ஷிப் (Space Ship) என்பதை ஒருவரும் அறியவில்லை.

(தொடரும்)  

ஓவியம்: ஸ்யாம்