முள்ளும் மலரும் மகேந்திரன் சார் அசிஸ்டென்ட் நான்..!



அறிமுக இயக்குநரின் பகடி ஆட்டம்

-மை.பாரதிராஜா

‘‘‘முள்ளும் மலரும்’ மகேந்திரன் சாரோட உதவியாளர் நான். அவரோட ‘சாசனம்’ல ஒர்க் பண்ணியிருக்கேன். அவரோட அசோஷியட் லேனா மூவேந்தர் இயக்கின படத்திலும் ஒர்க் பண்ணியிருக்கேன். லேனாவும் நானும் டைரக்டரானால் மகேந்திரன் சாரையும், இளையராஜா சாரையும் மறுபடியும் கொண்டு வரணும்... அந்த ஹிட் காம்பினேஷனை மறுபடியும் கொடுக்கணும்னு விரும்பினோம்.

அதுக்கான கதையையும் ரெடி பண்ணியாச்சு. சில சூழல்களால் அந்த முயற்சி கைகூடல. அதுக்கப்புறமா ரெடியானதுதான் இந்த படம்...’’ நிதானமாக பேசுகிறார் ராம் கே.சந்திரன். ‘துருவங்கள் பதினாறு’க்குப் பிறகு மீண்டும் போலீஸ் அதிகாரியாக ரகுமான் நடிக்கும் ‘பகடி ஆட்டம்’ படத்தின் அறிமுக இயக்குநர் ப்ளஸ் தயாரிப்பாளர்களில் ஒருவர்.

‘‘ஒரிஜினல் பெயர் ராம்ராஜ். அண்ணன் மூணாறு டீ எஸ்டேட்ல வேலை பார்க்குறார். அவர்தான் என்னை சட்டம் படிக்க வச்சார். அவர் காட்டின பாசத்துக்காகத்தான் அவர் பெயரையும் சேர்த்து வச்சிருக்கேன். சென்னை உயர்நீதிமன்றத்துல ரெண்டு வருஷம் அட்வகேட்டா பிராக்டீஸ் பண்ணியிருக்கேன். லா காலேஜ்ல படிக்கும் போதே, சைடுல சினிமாவுக்கு முயற்சிகள் தொடர்ந்தேன். ‘முயற்சி செய்யறதுக்கு முன்னாடியே அது முடியாதுனு சொல்லக்கூடாது.

முதல்ல களத்துல இறங்கு. மத்தது தானா தேடி வரும்’னு மகேந்திரன் சார் அடிக்கடி சொல்லுவார். அந்த வார்த்தை கொடுத்த தெம்புல ‘வாராயோ வெண்ணிலவே’, ‘துணிந்து செல்’ படங்களுக்கு எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசரானேன். எனக்கு தயாரிப்பு அனுபவம் இருந்ததால், ‘உன்னோட படத்தை நாங்களும் சேர்ந்து தயாரிக்கறோம்’னு நண்பர்கள்குமார் டி.எஸ்., டி.சுபாஷ்சந்திரபோஸ், ஏ.குணசேகர்னு மூணு பேரும் கை கொடுத்தாங்க.

வழக்கமா முதல் படம் இயக்குறவங்க நிலை ரொம்ப பரிதாபமா இருக்கும். ஸ்கிரிப்ட்டை செதுக்கறோம்ங்கற பெயர்ல சில தயாரிப்பாளர்கள் அந்த இயக்குநர்களை வறுத்தெடுப்பாங்க. எனக்கு அப்படி எந்த அசம்பாவிதமும் நடக்கலை. உண்மையை சொன்னால் ‘பகடி ஆட்டம்’ ரிலீஸுக்கு ரெடியாகிடுச்சு. ஆனா, இன்னிக்கு வரை என் புரொட்யூசர்களுக்கு இந்தப் படத்தோட கதையே தெரியாது. அந்தளவுக்கு என்மேல நம்பிக்கை வச்சிருக்காங்க...’’ நெகிழ்கிறார் ராம் கே சந்திரன்.

‘பகடி ஆட்டம்’ பத்தி பேசலாமே..?
நிறைய பேசலாம் பாஸ். எல்லார் கையிலும் ஆண்ட்ராய்டு போன் வந்தபிறகு இந்த உலகமே நிறைய மாறிடுச்சு. நல்லது கெட்டது எல்லாத்தையும் நம்ம சாய்ஸ்ல விட்டுடுது. டீன் ஏஜ் பசங்களைப் பெத்தவங்க, தங்கள் பிள்ளைங்களிடம் சில விஷயங்களை நேரடியா சொல்லத் தயங்குவாங்க. அந்த பெற்றோர்களின் பொறுப்பை நாங்க கையில் எடுத்திருக்கோம்.

அப்படி ஒரு விஷயம் படத்துல இருக்கு. சென்னை மாதிரி நகரங்கள்ல இரண்டு விதமான வாழ்க்கைதான் இருக்கு. வீட்டுல நாலைஞ்சு கார் வச்சிட்டு, வீதியில வாக்கிங் போறவங்க ஒரு ரகம்னா... இன்னொரு ரகம் இதுக்கு நேர் எதிர். பிளாட்ஃபாரமே அவங்க வீடா இருக்கு. இந்த ஏற்றத் தாழ்வுகள் உள்ள சென்னையில் நடக்கற ஒரு சம்பவத்தை விறுவிறுப்பா சொல்லியிருக்கேன்.

அசிஸ்டென்ட் போலீஸ் கமிஷனரா ரகுமான், ஆட்டோ ஓட்டுநராக கௌரி நந்தா, நிழல்கள் ரவி, ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ, ‘வால்மீகி’ அகில், சுரேந்தர், மோனிகானு கேரக்டர்களா தெரியற நட்சத்திரங்கள் அமைஞ்சிருக்காங்க. கார்த்திக்ராஜா இசையமைக்கிறார். படத்துல அவரோட பின்னணி இசை பேசப்படும். ‘வேதாளம்’ல இரண்டாவது கேமராமேனாக இருந்த கிருஷ்ணசாமி இதுல ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். இந்தப்படம் திட்டமிட்டபடி முடிக்க காரணம் தயாரிப்பு நிர்வாகி விஸ்வநாதனும் ரகுமான் மேனேஜர் சாதிக்கும்தான்.

கௌரி நந்தாவை எங்கோ பார்த்த ஞாபகம் வருதே?
கரெக்ட். ‘நிமிர்ந்து நில்’ல நடிச்சிருப்பாங்க. மலையாளத்துல மோகன்லாலுடன் சில படங்கள் பண்ணினவங்க. இதுல ஆட்டோ ஓட்டி குடும்பத்தை கவனிக்கற பொறுப்பான மிடில் கிளாஸ் பொண்ணு. இந்த படத்துக்காக அவங்க ஆட்டோ ஓட்ட கத்துக்கிட்டாங்க. முதல் நாள் ஆலந்தூரில் ஷூட்டிங் நடந்தப்போ, அவங்க ஆட்டோ மேல ஒரு கண்டெயினர் லாரி மோதப் பாத்துச்சு. ரெண்டாவது நாள் ஷூட்டிங்ல மின்சாரக் கம்பம் அவங்க ஆட்டோ மேல விழப் பாத்துச்சு. இப்படி நிறைய ரிஸ்க் இருந்தாலும் ரொம்ப தைரியமான பொண்ணு. சென்னை ட்ராஃபிக்கில் கொஞ்சமும் பயப்படாம ஆட்டோ ஓட்டினது படத்திலும் பேசப்படும்.

‘மறுபடியும் போலீஸ் அதிகாரியா’ன்னு ரகுமான் ஜெர்க் ஆகலையா?
அவர்கிட்ட சின்னதா ஒரு தயக்கம் இருந்துச்சு. கான்சப்ட்டை கேட்டுட்டு ‘அட நல்ல ஸ்கிரிப்ட்’னு நடிக்க முன்வந்தார். ‘துருவங்கள் பதினாறு’ம் இதுவும் ஒரே நேரத்தில் ஷூட்டிங் போயிட்டிருந்தது. கிளைமாக்ஸ் ஷூட்டிங் அப்போ, ஹீரோயின் கௌரி நந்தா பக்கம்பக்கமா வசனம் பேசணும். ரகுமானை விட கொஞ்சம் ஸ்கோப் அதிகம். ரகுமான் சார் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கதைதான் ஹீரோன்னு சொல்லி நடிச்சுக் கொடுத்தார்.l

Behind the scenes

* மொத்த படப்பிடிப்பையும் 44 நாட்களில் முடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் ஷூட்டிங் நடந்திருக்கிறது.
* கிண்டியில் கமிஷனர் அலுவலகத்தை செட் போட்டு படமாக்கியுள்ளனர்.
* முதல்நாள் ஷூட்டிங்கின் போது சில சீன்களை படமாக்கியவர்கள்... அடுத்த நாளே கிளைமாக்ஸை ஷூட் செய்து ரகுமானை மிரள வைத்துவிட்டார்கள்.
* பின்னணி இசைக்கு ஸ்கோப் உள்ள கதை என்பதால் இதனை ஒப்புக் கொண்டிருக்கிறார் கார்த்திக் ராஜா. மற்ற படங்களின் பின்னணி இசைக்கு அதிகபட்சம் மூன்று நாட்கள் எடுத்துக் கொள்பவர், இப்படத்துக்காக பத்து நாட்களுக்கு மேல் மெனக்கெட்டிருக்கிறார்.
* படத்தில் காமெடி கிடையாது. இடம்பெறும் இரண்டு பாடல்களும் சில வரிகளே உள்ள பிட் பாடல்கள்தான். முதல் பாதி முழுக்க விஷுவலும், இரண்டாவது பாதி முழுக்க எமோஷன்ஸும் இருக்குமாம்.