கோயம்பேடு காய்கறி மார்க்கெட்



அறிந்த இடம் அறியாத விஷயம்

-பேராச்சி கண்ணன்

‘ஓரம்போ, ஓரம்போ... சைடு, சைடு... வழி வுடு அண்ணாத்தே... ஒதுங்கு, ஒதுங்கு, ஒதுங்குப்பா, ணோ...’ எட்டு திசையிலிருந்தும் வரும் வெவ்வேறு குரல்களுக்கு வழிவிட்டே நடக்கிறோம். அதிகாலை மூன்று மணி. உலகமே ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் அந்த நேரத்தில்தான் சுறுசுறுப்பின் உச்சத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது கோயம்பேடு பெரியார் காய்கறி மார்க்கெட்! 

சாரை சாரையாக வண்டிகள்... கட்டுக் கட்டாக சரக்கு மூடைகள்... ஏற்றியபடியும், இறக்கியபடியும் ஓடிக் கொண்டிருக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்கள்... கணக்குப் பார்க்கும் முதலாளிகள்... அந்த வைகறைப் பொழுதே பரபரத்துக் கிடக்கிறது. வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வீடுகள் போல காட்சியளிக்கும் கடைகள் பழைய கோட்டைகளை ஞாபகப்படுத்துகின்றன. பளீரென பளிச்சிடும் சோடியம் விளக்குகளின் வெளிச்சத்தைப் பார்த்தபடியே முதல் ப்ளாக்கினுள் நுழைகிறோம்.

நீண்டு செல்லும் பாதையின் இருபுறங்களிலும் வரிசை கட்டுகின்றன கடைகள். மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும் காய்கறிகள் பல்புகளின் ஒளியில் பளபளக்கின்றன. ‘‘‘ணோ, எந்தப் பத்திரிகை? எங்களையும் போட்டோ எடுத்துப் போடுண்ணா...’’  கேமராவை பார்த்ததும் நம் போட்டோகிராபரிடம் கேட்கிறார் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர். அதற்கு பக்கத்திலிருந்த இன்னொரு தொழிலாளி, ‘‘அவங்க பணக்காரங்களையும், பைத்தியத்தையும்தான் போட்டோ எடுப்பாங்க...’’ என்கிறார் சிரித்துக் கொண்டே!

பெல்லாரி வெங்காயத்தை நன்கு புடைத்து தூசி நீக்கி, எந்த அழுகலும் இல்லாத நல்ல வெங்காயங்களை மூட்டைகளில் அடைத்துக் கொண்டு இருந்தனர் ஒரு கடையில். ‘கிலோ எவ்வளவு?’ ‘15 ரூபாய்’ என்றார்கள். நமக்கு கண்ணீர் பொங்கியது. காரணம், வெளிக்கடைகளில் இதைவிட இரண்டு மடங்கு விலை அதிகம்! சூப்பர் மார்க்கெட்களில் அதை விடவும் கூடுதல். அடுத்தடுத்த கடைகளில் மூன்று கிலோ 40 ரூபாய், 5 கிலோ அறுபது ரூபாய் என வெங்காய விலைகளை சிலேட்டுகளில் எழுதி தொங்க விட்டிருக்கின்றனர்.

வழியில் வெட்டப்பட்ட முட்டைக்கோஸ் இலைகளும், வாழை இலைகளும் குவியலாக கிடக்கின்றன. ஒருவர் வாழையிலை விற்பதற்கு தோதாக வெட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொருவர் அதை அழகாக அடுக்கி கட்டி வைக்கிறார். அதற்கு எதிரில் முட்டைக்கோஸ் வியாபாரி. அந்தக் கடையின் முனையில் பச்சை பட்டாணியை மண்ணெண்ணெய் விளக்கில் சின்ன பாக்கெட்டில் அடைத்துக் கொண்டிருக்கிறார் ஒருவர். ‘கீர, கீர...’ என மெல்லிய குரலில் கீரை விற்றபடி இருக்கும் பெண்மணியைக் கடக்கிறோம்.

‘எவ்வளவும்மா?’ கீரையை முப்பரிமாணத்தில் பார்த்தபடியே கேட்கிறார் ஒருவர். ‘கட்டு அஞ்சு ரூபா... இது பருப்பு கீர... இது தண்டு கீர... இது பாலைக்கீர... உங்களுக்கு எது வேணும்’ இங்கேயும் ஆச்சரியம் தாங்கவில்லை. காரணம், சென்னையின் பெரும்பாலான கடைகளில் கீரைக் கட்டுகள் பதினைந்து ரூபாய்க்கு குறைவதில்லை. ‘கேரட், உருளைக்கிழங்கு, அவரைக்காய் கிலோ 20 ரூபாய்’ என்ற போர்டு கண்களில் தட்டுப்பட்டது. ‘சார்... எங்களையும் போட்டோ எடுத்துப் போடுங்க...’ என்ற குரல் அங்கிருந்தும் வருகின்றன. சில கடைகளில் ‘பேடிஎம் அக்சப்டட்’ போர்டு தொங்குகிறது.

ஒரு தேங்காய் கடையின் முன் நின்றோம். அதனை வரிசையாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்த கடைக்காரர், ‘‘மழை இல்லாததால விளைச்சல் கம்மி சார்... அதனால, தேங்காய் விலையும் ஏறிடுச்சு. 20, 25 ரூபாய்னு சைசுக்கு ஏத்தபடி ரேட் வச்சிருக்கோம். வாங்குறீங்களா?’’ என்றார் புன்னகைத்தபடி. சிலர், மொத்தக் கடைகளில் சரக்குகளை வாங்கி, அங்கேயே தரையில் கோணிப் பைகளை விரித்து கூறுபோட்டு விற்பனை செய்கின்றனர். ‘‘கோஸ் பத்து ரூபா... காலி ஃபிளவர் பத்து ரூபா...’’ என்கிற சத்தம் காதில் சர்ரென பாய்கிறது. தக்காளிக் கடை ஒன்றில் பேரம் பேசிக் கொண்டிருந்தார் ஒருவர்.
 
‘‘இன்னா விலை?’’ - இது பேரக்காரர். ‘‘25 ரூபா. உள்ள போனே 30. வா, வா... வாங்கிக்க... சீக்கிரம்...’’ என்றார் கடைக்காரர். கையைப் பிடித்து இழுக்காத குறைதான். அடுத்த கடையில் கேரட் மட்டும் மொத்தமாகக் கொட்டி வைத்திருந்தார்கள். அதில், சின்னதாக இருப்பவற்றை தனியாகப் பிரித்து ஒரு ரேட்டும், கொஞ்சம் சைஸில் பெரிதாக இருப்பதற்கு இன்னொரு ரேட்டும் என வகைப்படுத்தி இருந்தனர். ‘‘எவ்வளவுப்பா?’’ வாடிக்கையாளர் கேட்டார்.

‘‘கிலோ 25...’’ என்றார் கடைக்காரர். ‘‘அந்தப் பக்கம் 20 ரூபானு சொல்றதை பார்த்தேனே...’’ வாடிக்கையாளர் இழுக்கிறார். ‘‘போய் அங்கேயே வாங்கிக்க..!’’ சட்டென முகத்தைக் காட்டினார் கடைக்காரர். ‘‘மொச்சை 30 ரூபாய்... பச்சை பட்டாணி 20 ரூபாய்...’’ எனக் கோணிப்பைகளில் அடுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்தார் ஒரு வியாபாரி. அவருக்கு அடுத்ததாக கத்திரிக்காய் கிலோ 20 ரூபாய் என விற்றபடி இன்னொருவர்.

ெதாடர்ந்து பச்சை, மஞ்சள், சிகப்பு என கலர்களில் வெரைட்டி காட்டும் குடை மிளகாய்களையும், கத்திரி கலரில் இருக்கும் முட்டைக்கோஸ்களையும் விற்க கூவிக் கொண்டிருந்தார் ஒருவர். ‘ஹைபிரிட்’ ஐட்டங்கள் மட்டும் வைத்திருப்பார் போல! அந்த பிளாக்கின் ஒரு முனையில் இருந்த டீக்கடையில் அத்தனை கூட்டம். எட்டிப் பார்த்தோம். சூடாக சமோசாவை எண்ணெயில் புரட்டிக் கொண்டிருந்தார் ஒருவர். ‘ஒரு கடி... ஒரு குடி...’ என டீயையும் சமோசாவையும் சுவைத்துக் கொண்டிருந்தனர் வியாபாரிகள்.

வரமுடியாதவர்களைக் குறி வைத்து சிலர் ஃப்ளாஸ்க்கில் ‘டீ’யுடன் வலம் வருவதையும் பார்த்தோம். அதற்கு எதிர்ப்புறம் உள்ள கடையில் புரோட்டாவை துவைத்துக் கொண்டிருந்தார் ஒருவர். அங்கேயும் ஒரு கூட்டம் காலை சாப்பாட்டிற்காக நின்றிருந்தது. ‘‘நாலு கட்டு பத்து ரூபா... நாலு கட்டு பத்து ரூபா...’’ கொத்தமல்லியை ஏலம் விட்டுக் கொண்டிருந்த கடைக்காரரை நோக்கினோம். அதே பிளாக்கின் இன்னொரு பகுதியில் இந்த கொத்தமல்லியை ஐந்து கட்டுகள் பத்து ரூபாய் என விற்றது ஞாபகம் வந்தது.

சின்னச் சின்னதாக ஏற்ற இறக்கம் இருந்தாலும் ஒரு கிலோ காய்கறியின் விலை நாற்பது ரூபாயைத் தாண்டவில்லை என்பதுதான் கோயம்பேடு மார்க்கெட்டின் ஹைலைட்! மட்டுமல்ல... ஒரு கிலோ வாங்கும் காய்கறிகள் எல்லாம் ஒன்றரை கிலோ அளவில் அள்ளிப் போட்டு வாடிக்கையாளர்களின் பைகளை சந்தோஷமாக நிரப்பியே அனுப்புகிறார்கள். இன்னொரு பிளாக்கிற்கு தாவினோம். வழியில் நிறைய லாரிகள். மொத்தக் கடைகளின் குடோன்களில் சரக்குகளை இறக்க நிற்கின்றன.

சுற்றிவிட்டு வெளியே வந்தோம். வரிசை கட்டும் கூழ்கடைகளுக்கு முன்பு சுமை தூக்கும் தொழிலாளர்கள். கேப்பைக் கூழினை வெங்காயம், மாங்காய் ஊறுகாய், மோர் மிளகாய் போன்றவற்றை தொட்டுக் கொண்டு சுவைத்துக் கொண்டிருந்தனர். திரும்பிப் பார்க்கிறோம். மார்க்கெட்டிலிருந்து மதுரவாயல் ரோட்டை இணைக்கும் சாலை வரை சரக்கு வாங்கிச் செல்லும் வண்டிகள். டிராபிக் ஜாம் ஆகி இருந்தது அந்தக் காலைப் பொழுது!      

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

41 லட்சம் மெட்ரிக் டன்

2014-15ன் கணக்குப்படி காய்கறி உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2ம் இடத்தில் இருக்கிறது. சுமார் 169 மில்லியன் மெட்ரிக் டன் காய்கறிகளை உற்பத்தி செய்கிறது நம் நாடு. இதில், தமிழகத்தின் பங்கு 41 லட்சம் மெட்ரிக் டன். வெரைட்டியான காலநிலையே இதற்கு காரணம்.

கழுகுப் பார்வை

* ஆசியாவிலே பெரிய மார்க்கெட் எனப் பெயர் கொண்ட கோயம்பேடு 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், காய்கறி, கனி, மலர், உணவு தானியம், டெக்ஸ்டைல் என ஐந்து மார்க்கெட் உருவாக்கும் திட்டம் ஆரம்பத்தில் இருந்தது.
* 1996ல் 67 ஏக்கர் பரப்பில் காய்கறி, கனி, மலர் மார்க்கெட் மட்டும் கொண்டு வரப்பட்டது. உணவு தானிய மார்க்கெட் 15 ஏக்கரில் கடந்த ஆண்டுதான் உருவானது. ஆனால், டெக்ஸ்டைல் மார்க்கெட் அரசின் கொள்கைகளுக்கு சரிப்பட்டு வராததால் அதற்காக ஒதுக்கப்பட்ட 150 ஏக்கரை மெட்ரோ எடுத்துக் கொண்டது என்கின்றனர்.
* காய்கறி மார்க்கெட்டில் மட்டும் மொத்தம் 1800 கடைகள் இருக்கின்றன. இதில், 184 மொத்தக் கடைகள். மற்றவை பாதி மொத்தமாகவும் சில்லரை வியாபாரமும் செய்கின்றன.
* இங்குள்ள கடைகளில் இரண்டு மூன்று வியாபாரிகள் சேர்ந்து செயல்படுகின்றனர். இதனால், டிரேடர்ஸ் மட்டும் ஐயாயிரம் பேர். இது தவிர, கடைக்கு பத்து பேர் வேலை பார்க்கின்றனர். இவர்களோடு சுமை தூக்கும் தொழிலாளர்கள், மற்ற தொழிலாளர்கள் என பத்தாயிரம்பேர் பணியாற்றுகின்றனர். 
* காய்கறி விலை ஏற்ற இறக்கமாக இருப்பதால் வருமானத்தை அறுதியிட்டுக் கூறமுடியாது என்கிறது வியாபாரிகள் சங்கம். ஒரு நாளைக்கு பல கோடி ரூபாய் வருமானம் வரும் என்பதால் ஆண்டுக்கு ஆயிரம் கோடிக்கும் மேல் புழங்குமாம்.
* சாதாரண நாட்களில் 400 வண்டிகள் வந்திறங்குகிறது. விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை கூடும். 
* ஒரு நாளைக்கு 50 வண்டிகள் தக்காளியும், 60 வண்டிகள் வெங்காயமும் வருகின்றன. தக்காளி ஒரு வண்டிக்கு 7 முதல் 10 டன் என 450 டன்கள் இறங்குகிறது. வெங்காயம் பெரிய வண்டிகளில் 15 டன் என குறைந்தது ஒரு நாளைக்கு 900 டன்கள் வருகின்றன. காய்கறிகள் தினமும் விற்றுவிடுவதால் சேமிப்பு கிடங்கு தேவைப்படவில்லையாம்.
* விழுப்புரம், பாண்டிச்சேரி, திருப்பதி, ஆற்காடு என சுமார் 150 கிமீ சுற்றளவில் இருக்கும் ஊர்களுக்கு இங்கிருந்தே காய்கறிகளை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.
* மே 5ம் தேதி வியாபாரிகள் தினம் என்பதால் அன்று மட்டும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கட்டாய விடுமுறை. தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு அவர்களே விடுமுறை அறிவித்து விடுகிறார்கள்.
* ஒரு நாளைக்கு குறைந்தது 50 ஆயிரம் பேர் வரை வந்து செல்கிறார்கள்.
* சுமை தூக்கும் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 700 முதல் 800 ரூபாய் சம்பாதிக்கின்றனர். அதற்காக அவர்கள் படும்பாடு சொல்லிமாளாது.

என்ன பிரச்னை?

‘‘சுமார் இருநூறு வருஷமா கொத்தவால் சாவடியில இருந்த மார்க்கெட்டை மக்கள்ெ தாகை அதிகரிப்பு, போக்குவரத்து ெநருக்கடி, சுற்றுச்சூழல் பிரச்னைனு இங்க கொண்டு வந்தாங்க. ஆனா, இங்க 50 சதவீத அடிப்படை வசதிதான் செஞ்சு கொடுத்திருக்காங்க. மாநகராட்சியில இருந்து தண்ணீரோ, துப்புரவு பணிகளோ, ரோடு பராமரிப்போ, தெரு விளக்கோ எதுவும் செய்து கொடுக்கலை.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்னு சொல்ற சி.எம்.டி.ஏ.தான் மார்க்கெட் மேனேஜ்மெண்ட் கமிட்டியை உருவாக்கி மார்க்கெட்டை பராமரிக்குது. அவங்க நுழைவு கட்டணம், கடை வாடகை வழியா மேனேஜ் பண்றாங்க. கடந்த வருஷம் நுழைவு கட்டணம் கான்ட்ராக்ட் வழியா 7 கோடியே 10 லட்சம் ரூபாய் வந்தது. இதுதவிர ஒவ்வொரு கடைக்கும் சதுர அடிக்கு ஒரு ரூபாய்னு அதன்வழியா அஞ்சு லட்சம் ரூபாய் கிடைச்சிருக்கு. அப்புறம், மூன்று வருஷத்து லைசென்ஸ் புதுப்பிக்க ஒரு தொகை கட்டுறோம்.

இதுதவிர, பொங்கல், தீபாவளி பண்டிகையையொட்டி சின்னச் சின்ன கான்ட்ராக்ட் விடுவாங்க. அதன்வழியா வருஷத்துக்கு 20 லட்சம் வரை கிடைக்குது. இந்தப் பணத்தை வச்சுதான் மார்க்கெட் பராமரிப்பு. ஆனா, இன்னும் சரியான துப்புரவோ, குடிநீர் வசதியோ இல்லாமதான் இருக்கோம். டிராபிக்கை கூட சீர்படுத்த முடியலை. இதோடு, மாநகராட்சியும் ஒரு சொத்து வச்சிருந்தா வரி கட்டணும்னு வசூல் பண்றாங்க.

குடிநீருக்கும் ஒரு வரி வசூலிக்கிறாங்க. நாங்க, வசதிகள் செய்து கொடுங்க. சி.எம்.டி.ஏ.வுக்கு கட்டுறதை விட்டுட்டு உங்களுக்கு வரி கட்டுறோம்னு சொல்லிட்டு வர்றோம்...’’ எனப் பிரச்சனைகளை அடுக்குகிறார், ‘கோயம்பேடு பெரியார் மார்க்கெட் எம்.எம்.சி உரிமம் பெற்ற வியாபாரிகள் சங்க’த் தலைவர் சந்திரன். அவரிடம், எங்கிருந்தெல்லாம் சரக்குகள் வருகின்றன எனக் கேட்ேடாம்.

‘‘நம்ம மார்க்கெட்டுக்கு அதிகமான காய்கறிகள் கர்நாடகாவுல இருந்து வருது. குறிப்பா, இங்கிலீஷ் காய்கறிகள்னு சொல்ற கேரட், குடைமிளகாய், பீன்ஸ், வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு எல்லாம் அங்கிருந்துதான். அடுத்ததா ஆந்திரா. பிறகுதான் தமிழ்நாடு. குஜராத்துல இருந்து உருளைக்கிழங்கும், நாசிக்ல இருந்து வெங்காயமும், கேரளாவுல இருந்து இஞ்சியும் அதிகமா வரும். டிசம்பர், ஜனவரி மாசங்கள்ல முருங்கைக்காய் எங்கேயும் கிடைக்காது. இந்த சீசன்ல மும்பை மற்றும் அதைச் சுற்றி இருக்கிற இடங்கள்ல இருந்து வர வச்சிருவோம்.

வர்தா புயல் வந்தப்போ காய்கறி தட்டுப்பாடு ஏற்பட்டுச்சு. அப்போ, கொல்கத்தா, பீகார், ஒரிசாவுல இருந்து கத்திரிக்காய், தக்காளி, வெங்காயம், சுரைக்காய், வெண்டைக்காய்னு நிறைய காய்கறிகள் வர வைச்சோம். இந்த மாதிரி எல்லா மாநிலத்துல இருந்தும் காய்கறிகள வர வச்சி தட்டுப்பாடு இல்லாம பார்த்துகிறதாலதான் ஆசியாவுலயே பெரிய மார்க்கெட்டா நாம நிற்கிறோம்’’ என்கிறார் அவர்.