Coffee table



-குங்குமம் டீம்

ப்ரியங்காவின் ஃ ப்ளையிங் கிஸ்!

பாலிவுட் பால்கோவா ப்ரியங்கா சோப்ரா நடித்த ‘பேவாட்ச்’ சீரியல் மே மாதத்தில் வெளியாகிறது. ‘சம்மர் வருதுனு கவலைப்பட வேண்டாம். சில் ப்ரியங்கா வருகிறார்’ என ப்ரொமோஷன் தொடங்கியிருக்கிறார்கள். பனி மழையில் ப்ளூ காஸ்ட்யூமில் தோன்றும் ப்ரியங்கா, ஃப்ளையிங் கிஸ் அடித்து உசுப்பேற்றும் வீடியோவை 4 லட்சத்து 77 பேர் பார்த்து வாயைப் பிளந்துள்ளனர். ‘Omg she looks hot can’t wait to see this...’ என கமென்ட்களும் சூடு பறக்கின்றன.

ரீடிங் கார்னர்

ேமதைகளின் குரல்கள்
உலகின் சிறந்த திரைப்பட இயக்குநர்களின் நேர்காணல்கள் தமிழில்: ஜா.தீபா (டிஸ்கவரி புக் பேலஸ், 6, மகாவீர் காம்ப்ளக்ஸ், முனுசாமி சாலை, கே.கே. நகர் மேற்கு, சென்னை - 600 078. விலை ரூ.170/- தொடர்புக்கு: 87545 07070) ஒன்று தெளிவாகப் புலப்படுகிறது. படைப்பாளியின் உரையாடல்களிலேயே அவர்களின் செயல்திறன், நோக்கம், பயன்பாடு எல்லாமே வெளிவந்து விடுகிறது.

மிகச் சிறந்த சினிமா ஆளுமைகளின் உரையாடலில் நுழையும்போது ஆச்சர்யங்கள் மேலிடுகின்றன. சதாசர்வ காலமும் படைத்தலில் இருக்கும் அவர்களின் மனது வியப்பளிக்கின்றது. தாய்க்கு பிரசவ வேதனை எவ்வளவோ அவ்வளவு குழந்தைக்கும்தானே! அகிரா குரோசவாவில் ஆரம்பித்து ஈரானின் அஸ்கர் ஃபர்ஹடி வரை 20 ஆளுமைகளின் உரையாடல்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு ஆளுமையின் பக்குவமும், கலை மீதான பங்களிப்பும் நம்மீது ஏற்றி வைக்கப்படுகிறது.

ஜா.தீபாவின் மனதுக்கு இசைந்த மொழிபெயர்ப்பில் பக்குவம் தெறிக்கிறது. இடறாத மொழி, வார்த்தைகளுக்குள் போய் சிக்கிவிடாமல் முடிந்தவரை ஆளுமைகளின் படைப்பாற்றலை முன் ைவப்பது என மொழிபெயர்ப்பாளர் களைகட்டுகிறார். சினிமாவில் இருக்கிறவர்களுக்கு மட்டுமில்லை, சினிமாவை அறிந்தவர்களுக்கும், புரியத்துடிப்பவர்களுக்கும் அருமையான நுழைவாயில் இந்தப் புத்தகம்.

கமலின் ஆசை

‘‘இன்று வெப்சைட்டின் பலத்தையும், இணைய உலகின் வலிமையையும் தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. நான், என்னைவிட வயது குறைந்தவர்களிடம் கூட பாடம் கற்றுக் கொண்டிருக்கிறேன். ‘ஐ.வி.சசி எப்படி ஷாட் வெச்சார்’ என்று பாலசந்தர் என்னிடம் கேட்பார். குழந்தை முதல் இந்த விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நடிப்பை விட டெக்னீஷியன் ஆக வேண்டும் என்றுதான் எனக்கு விருப்பம்...’’

கமல் இப்படி பேசிய இடம், தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்க தமிழ் இணையதள தொடக்க விழா. வெப்சைட்டை கவிப்பேரரசு வைரமுத்து தொடங்கி வைத்தார். சங்கத்தின் தலைவர் பி.சி.ராம், பொதுச்செயலாளர் பி.கண்ணன், ராஜிவ்மேனன், பாரதிராஜா உட்பட சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியை இளவரசு தொகுத்து வழங்கினார். http://www.thesica.in/ என்ற முகவரியில் ஆங்கில இணையதளம் ஏற்கனவே உள்ளது. இப்போது தமிழிலும் http://thesica.in/tamil/ தொடங்கியிருக்கிறார்கள்.

சைலன்ட் கார்னர்

எனது கணவனும் ஏனைய விலங்குகளும்
ஜானகி லெனின்
தமிழில்: கே.ஆர். லெனின் (பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018. விலை ரூ.250/- தொடர்புக்கு : 044 - 24332424) புகழ்பெற்ற ஊர்வனவியல் நிபுணர் ரோமுலஸ் விட்டேகரின் மனைவி ஜானகி எழுதிய நூல் இது. சென்னையில் பாம்புப் பண்ணை, முதலைப் பண்ணைகளை நிறுவி உயிர்களைக் கொண்டாடியவர் விட்டேகர். அவரோடு இணைந்த மணவாழ்க்கை, நாய்கள், வாத்துகள், ஈமு கோழிகள் என சூழ்ந்த வனாந்தரமான வீட்டில் வாழ்ந்து வருகின்ற சூழலை எழுதியிருக்கிறார்.

காடுகளில் பயணித்தபோது எதிர்வந்த கரடிகள், யானைகள், சிறுத்தைகளைச் சமாளித்து, உயிர் பிழைத்தது எப்படி... அவைகளோடு சினேகபூர்வமாய் பழகுவது எப்படி என தகவல்களின் பரப்பு நீள்கிறது. மலபார், புனுகுப் பூனையின் மர்மம், பாம்புகளின் குணங்கள், சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு நீர் முதலைக்குட்டி...

இதையெல்லாம் நீங்கள் பார்ப்பது போல உணர முடியும். விலங்குகள் ஏன் எப்பொழுதும் விளையாடிக் கொண்டிருக்கின்றன..? ஜானகியிடம் சுவாரஸ்யமான பதில் இருக்கிறது. படிக்கும்போதே, உள் நுழைந்த அடுத்தடுத்த பக்கங்களில் இது வேறு உலகம், இவர்கள் வேறு மனிதர்கள் என உணர்ந்துவிடுவீர்கள். மகளின் ஆங்கிலத்தை அப்பாவே மொழிபெயர்த்திருக்கிறார். எப்போதும் மகளின் கனவை அழகுபடுத்துவதுதானே அப்பாக்களின் கடமை!

குழந்தைகளுக்கு தாய்ப்பால் இல்லை?

இந்தியாவில் வருடந்தோறும் சுமார் 2.6 கோடி குழந்தைகள் பிறக்கின்றனர். அதில் ‘40 சதவீத குழந்தைகள்தான் தாய்ப்பாலைச் சுவைக்கிறார்கள்’ என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியிருக்கிறது. ‘‘பெரும்பாலும் இப்போதைய தாய்மார்கள் செயற்கையான பால்பொருட்களைத்தான் தங்களின் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள்...’’ என்று சொல்கிற ஆய்வு, ‘‘பால் வியாபாரம் செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்த சைக்கிள் கேப்பில் கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிப்பதோடு இந்திய தாய்மார்கள், குழந்தைகளின் உடல் நலத்துக்கும் கேடுவிளைவிக்கிறார்கள்...’’ என்றும் எச்சரிக்கிறது.