ஹோட்டல்களில் சாப்பிடுவது ஆபத்து



தமிழர் உணவுகளின் உன்னத சுவை - உயிரமுது

ராஜமுருகன் - 14

சொந்த ஊரைப் பிரிந்து வேலைக்காக மாநகரங்களில் வசிக்கும் இளசுகளின் பெருந்துயரம் அன்றாட உணவுதான். எவ்வளவு காசு கொடுத்தாலும் உடலுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதில்லை என்பதே பலரின் குற்றச்சாட்டு. பரபரப்பான சூழலில் வீட்டில் சமைத்து சாப்பிடவும் அவர்களுக்கு நேரமில்லை. பட்ஜெட் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் கையேந்தி பவன்களைத்தான் நாடிச் செல்கின்றனர்.

தொடர்ந்து இங்கே சாப்பிடும்போது ஆரோக்கியம் சீர்குலைந்து பலவகை நோய்களுக்கு ஆளாகின்றார்கள். இதில் விதிவிலக்காக சில தூய்மையான ஆரோக்கியமான உணவுகளைக் கொடுக்கின்ற கடைகளும் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. நறுக்கிய காய்கறிகளை மூடி வைப்பது, தண்ணீரை கைபடாமல் எடுத்து பயன்படுத்துவது, மசாலா, பொடி வகைகளை மூடி வைப்பது, உணவு செய்யும் இடத்தை ஈரம் குறைவாக பார்த்துக் கொள்வது போன்ற செயல்களின் மூலம் எந்த இடத்தில் வேண்டுமானாலும் உணவை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

இதில் கவனம் செலுத்தினாலே தரமான தூய்மையான உணவை சாலையோரக் கடைகளால் விநியோகிக்க முடியும். ஒரு சில சாலையோர உணவகங்கள் சுவையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மற்ற விஷயங்களில் கோட்டை விட்டுவிடுகிறார்கள். பழைய காய்கறியைப் பயன்படுத்துவது, விலை குறைவான எண்ணெயை உபயோகிப்பது, தரம் குறைவான எண்ணெய்களை கலந்து பொரிப்பதற்கு பயன்படுத்துவது போன்றவை உணவின் சுவையை கூட்டலாமே தவிர, உணவின் தரத்தை கூட்டாது.

அது மட்டுமல்லாமல் தொடர்ந்து அந்த எண்ணெய் அதிகப்படியான சூட்டிலே இருப்பதால் நச்சுத்தன்மை உடையதாக மாறிவிடுகிறது. இதில் சமைக்கப்படும் உணவு சாதாரண வயிற்று வலியிலிருந்து கேன்சர் வரைக்கும் நம்மை கூட்டிச் செல்கிறது. எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர மசாலா உணவுகள், திறந்த நிலையில் வேக வைத்த சுண்டல் வகைகள், பல வண்ணங்களில் விதவிதமாக விற்கப்படும் குளிர்பானங்கள், நொறுக்குத்தீனி வகைகள் அனைத்தையும் சற்று கவனமுடன் உண்ண வேண்டும்.

ஒரு முறை சாப்பிட்ட உணவைத் தேடி மீண்டும் ஓடினால் நிச்சயம் அந்த உணவில் அளவுக்கு அதிகமாக வேதி உப்புகள் இருப்பதாக அர்த்தம். அந்த உப்புகளுக்கு, அது தரும் சுவைக்கு உங்கள் நாக்கு அடிமையாகிவிட்டது. தொடர்ந்து இந்த வேதி உப்புகளை உண்பதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி இரத்தத்தில் கழிவு அதிகமாகும். அது அரிப்பை ஏற்படுத்தும், உடல் சூட்டை அதிகப்படுத்தும்.

எப்போது நாம் உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சுவைக்காக உண்கிறோமோ அந்த நிலையில் கெடுதலான உணவு உண்ண வாய்ப்பு அதிகமாகி உடல்நிலை பாதிக்கப்படும். பெரும்பாலும் இம்மாதிரியான சாலையோரக் கடைகளில் சிறுநீரகத்தால் பிரித்தெடுக்க முடியாத மோனோ சோடியம், குளூக்கமேட், சோடா உப்பு, குளூட்டன், சாக்கரீன், பதப்படுத்தப்பட்ட பால் பவுடர் போன்றவை சுவைக்காக அதிக அளவில் சேர்க்கப்படுகிறது.
 
இந்த மாதிரியான இயற்கையில்லாத பொருட்களை உணவுடன் சேர்த்து சமைக்கப்படும் போதும், அதை சாப்பிடும்போதும் உடலில் நிறைய வேதி மாற்றம் உருவாகி அதன்மூலம் நோய் உருவாகிறது. கடலை மாவில் செய்த பஜ்ஜி, போண்டா, வடை போன்றவைகளை உண்ணும்போது உடல் சூடு அதிகரிக்கும். இந்த மாதிரியான அரைகுறை வேக்காடான பஜ்ஜியும், போண்டாவும் ஜீரணத்தை பாதிக்கும். பின் வேலை செய்வதில் சிரமம் ஏற்படும். இதற்கெல்லாம் ஒரே தீர்வு ஹோட்டல்களில் சாப்பிடுவதை தவிர்ப்பதே. முடிந்த அளவு நேரம் ஒதுக்கி நாமே சமைத்து சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளவும். உணவே மருந்து.

(முற்றும்)
தொகுப்பு: திலீபன் புகழ்

சுண்டைக்காய் குழம்பு

தேவையானவை:

சுண்டைக்காய் - 1 கைப்பிடி
புளி - கோலி குண்டளவு
சீரகம் - ½ ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் - சிறிதளவு
மல்லி விதை - 1 ஸ்பூன்
வெந்தயம் - ¼ ஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - சிறிதளவு
பெருங்காயம் - ¼ ஸ்பூன்

செய்முறை:

சுண்டைக்காயை ஒன்றும் இரண்டுமாக தட்டி தண்ணீரில் அலசிக் கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி, கடுகையும், பெருங்காயத்தையும் பொரிய விட்டு, சுண்டைக்காயை சிவக்க வதக்கவும். புளியைத் தவிர மற்றவைகளை தண்ணீர் சேர்த்து அரைத்து சுண்டைக்காயுடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.பின் புளியை கரைத்து, குழம்புடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். சுவையான சுண்டைக்காய் குழம்பு ரெடி.