ரெமி விருது பெற்றிருக்கும் முதல் தமிழ்ப் படம் இதுதான்!



-நா. கதிர்வேலன்

‘‘உலகத்திலேயே உச்சபட்ச வலி பிரசவம்தான். உச்சபட்ச சந்தோஷமும் அதுதான். எனக்கும் ‘கனவு வாரியம்’ அப்படித்தான். ரொம்ப நல்ல படம் பண்ணியிருக்கேன்னு வேறு யாரும் சொல்றதுக்கு முன்னாடி எனக்கே தெரியுது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஆங் லீ மாதிரியான பெரிய பெரிய டைரக்டர்கள்தான் இதற்கு முன்னாடி ரெமி விருது வாங்கியிருக்காங்க. அதில் நானும் முதல் தமிழனா, முதல் இந்தியனா இணைந்தது நான் பெற்ற பேறு.

அதற்கும் மேலாக என் படத்தை 93 ஆண்டு பெருமை பெற்ற ‘வார்னர் பிரதர்ஸ்’ வெளியிடுவது என் வாழ்நாள் கொடை...’’ மனதை வார்த்தைகளில் நிறுத்திப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் அருண் சிதம்பரம். முதல் படத்திலேயே உச்சம் தொட்ட படைப்பாளி. உலகப்புகழ் பெற்ற இரண்டு ரெமி விருதுகளை வென்ற முதல் இந்தியத் திரைப்படம் ‘கனவு வாரியம்’.

‘‘தமிழ்நாட்டின் மின்வெட்டைப் பற்றின கதைதான். ஸ்கூல் டிராப்அவுட் ஆன இளைஞன், மின்வெட்டில் பாதிக்கப்படுகிறான். அதற்கு அவன் என்ன செய்கிறான் என்பதுதான் படம். படத்தில் அடிதடி திருப்பங்களோ, சில்லிட வைக்கும் மர்மங்களோ கிடையாது. பார்க்கும் அனைவரையும் உணர்வுபூர்வமாக தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ அவசியம் படம் பாதிக்கும்.

இத்தனை விருதுகள் வாங்கியிருப்பதால் இது அவார்டு படம் கிடையாது. பக்கா கமர்ஷியல் படம். எடுக்கப்பட்டதும் அவ்விதமே. ஒரு கமர்ஷியல் படத்துக்கு இவ்வளவு விருதுகள் கிடைத்திருப்பதுதான் சந்தோஷம். படத்தில் காமெடி, காதல், சென்டிமென்ட், அறிவியல் என எல்லாமும் இருக்கிறது. படம் ஒரு நம்பிக்கையைத் தரும். ஒரு சின்னப் பையனாப் பார்த்தால் வாழ்க்கையில் கண்டிப்பாக எதையாவது சாதிக்கணும்னு தோணும். ஒரு இளைஞன் பார்த்தால் நம் கனவை இன்னும் வேகமாக துரத்திப் பிடிக்கணும்னு படும். பெரியவர்கள் பார்த்தால் தன் மகளோ, மகனோ இந்தப் படத்தைப் பார்த்தே ஆகணும்னு சொல்ல வைக்கும்...’’ என்றபடி புன்னகைக்கிறார் அருண்.

எம்.எஸ். படித்துவிட்டு திடீரென சினிமாவில் களமிறங்கியது எப்படி?
கம்ப்யூட்டர் எஞ்சினியராக எட்டு வருடங்களுக்கு மேல் வேலை பார்த்தேன். சினிமா எனக்கு ரகசிய கனவாக இல்லை. மொத்த நினைவுமே அதுதான். மாதம் பத்து லட்சம் வருவாய் வரக்கூடிய வேலையை நான் சாதாரணமாக நினைக்கவில்லை. ஆனால், திரைப்பட நினைவை விட்டுத்தர முடியவில்லை. எல்லோருக்கும் வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகளை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான இடம் இருக்கும். இப்படியும் போகலாம்... அப்படியும் போகலாம்.

இவ்வளவு பெரிய வேலையை விட்டதை பைத்தியக்காரத்தனம் என்றார்கள். நம் நம்பிக்கையை பரிகசிக்கிற அவர்களுக்கு காரசாரமான பதில் சொல்வது ஒரு வழி. அல்லது புன்னகைத்துவிட்டு நம்மை மெய்ப்பித்துக் காட்டுவது இன்னொரு வழி. நான் இரண்டாவது வழியை தெரிவு செய்தேன். இந்த வாழ்வு மிகவும் தற்காலிகமானது. அதற்குள் நம் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதே சிறந்தது.

இந்த ‘வேர்ல்டு ஃபெஸ்ட்’ திரைப்பட விழா மூலமாகவே ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ரிட்லி ஸ்காட், ஜார்ஜ் லூகாஸ், ஆங் லீ, ஃபிரான்சிஸ் போர்ட் கப்போலா போன்றவர்கள் கண்டுபிடிக்கப்பட்டார்கள். அவர்களைப் பின்பற்றி நான் வர கொடுத்து வைத்திருக்க வேண்டும். என் அப்பா ஆணழகன் டாக்டர் சிதம்பரமும், சகோதரன் கார்த்திக்கும் கைகொடுக்காவிட்டால் இது எதுவுமே சாத்தியமில்லை.

மின்வெட்டை காரண காரியமாக வைத்து படம் செய்ய முடியுமா?
ஒரு ரெகுலர் சினிமா செய்ய இங்கே ஏராளமானவர்கள் இருக்காங்க. அதையே அமெரிக்காவிலிருந்து திரும்பி நானும் ெசய்ய வேண்டியதில்லை. தமிழ் சினிமாவின் எல்லா அம்சங்களோடு, விஞ்ஞானத்தின் புதுமையையும் அறியும் பொருட்டு ஒரு படம் செய்ய நினைத்தேன். அப்படிப் பார்த்தாலும் இது மக்களுக்கான சினிமா.

இன்னொரு விஷயத்தையும் இந்தப் படம் பேசும். இப்பக்கூட எல்லோரும் கலாசாரத்தை மீட்டெடுக்கிற விஷயங்களை பேசிக்கிட்டே இருக்கோம். ேகாக், பெப்ஸியை விற்கக் கூடாது என்கிற அளவுக்கே அது வந்திடுச்சு. அதில் இந்தப் படமும் நிறையப் பேசும். நமக்கானதை நாமே தேடிக்கலாம். யார் பின்னேயும் வரிசை கட்டி நிற்க வேண்டியது அவசியமே இல்லைன்னு சொல்லியிருக்கேன்.

மரத்திலிருந்து ஆப்பிள் விழுது. எல்லோரும் அதை எடுத்து சாப்பிடுறாங்க. ஒருத்தர் மட்டும் அது ஏன் கீழே விழுந்ததுன்னு கேள்வி கேட்கிறார். பழத்தை சாப்பிட்டவங்களை காலம் சாப்பிட்டுவிட்டது. கேள்வி கேட்ட நியூட்டனை இன்னும் நினைக்கிறோம். காலம் நம்ைம சாப்பிடணுமா, காலம் கடந்து நிக்கணுமாங்கிறதை நாம்தான் முடிவு பண்ணணும்.

சினிமாவை வெறும் செய்தியாகச் சொன்னால் யாருக்கும் பிடிக்காது. எனக்கும் பிடிக்காது. அதையே காரணகாரியமா, பொழுதுபோக்காக சொன்னால் நல்லாயிருக்கும். ‘உங்க படம் கமர்ஷியலாகவும், கிரிடிக்கலாகவும் நல்லா இருக்கு. அதனால்தான் வாங்கியிருக்கோம்’ என்றார்கள் வார்னர் பிரதர்ஸ். எனக்கு உத்வேகம் அளித்த வார்த்தைகள் இவை

யார் நடித்திருக்கிறார்கள்?
நானே கதையின் நாயகனாகவும், இயக்குநராகவும் வந்திருக்கேன். ஜியா, அறிமுக நாயகி. இளவரசு, கு. ஞானசம்பந்தன், ப்ளாக் பாண்டி கதையில் முக்கியமானவர்களாக வருகிறார்கள். இந்த சினிமாவில் இடம் பெறுகிற ‘கல்லா மண்ணா...’ பாடல் ‘பேர்போன்ஸ்’ சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெறத் தேர்வாகியிருக்கு.

தமிழ்நாட்டில் மறைந்து போன, மறந்துபோன அல்லது நினைவில் இல்லாது போன 51 விளையாட்டுகளை அதன் செய்முறையோடு, சாட்சிகளோடு விளக்குகிறது. எனக்கு படம் பார்த்து படம் எடுக்கக்கூடாதுன்னு தெரியும். இங்கே சினிமாவில் ஆர்வமும், கணிப்பும், ரசனையும் இருந்தால் யாரும் எதுவும் செய்யலாம். எனக்கு சினிமாவை மக்களுக்கு பயனுள்ளதா செய்ய ஆசை.     

Behind the Scenes

* ஏழு சர்வதேச விருதுகளும், 15 சர்வதேச கௌரவங்களும், அங்கீகாரங்களும் பெற்ற முதல் தமிழர் அருண்.
* தென் கொரியா திரைப்படவிழாவில் ஓபனிங் சினிமாவாக ‘கனவு வாரியம்’ கௌரவம் ெபற்றிருக்கிறது.
* அப்பா சிதம்பரம், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு உடற்பயிற்சி ஆலோசகராக இருந்தவர்.
* எந்தவிதமான சினிமாப் பயிற்சியும் பெறாதவர். யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்ததில்ைல.