பசுமைப் பெண்!



ஒரு ‘தீவிரவாதி’யின் கதை!

-ச. அன்பரசு

ஜனவரி 11, 2015 அன்று இரவு தில்லியிலிருந்து லண்டன் செல்லும் விமானத்துக்காக காத்திருந்த அந்த பெண்மணிக்கு இனி, தான் எப்போதுமே வெளிநாடு செல்ல முடியாது என்ற உண்மை நிச்சயம் தெரிந்திருக்காது. இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கும் திட்டத்துடன் இருக்கையில் அமர்ந்திருந்த அப்பெண்மணி, விமானத்தில் ஏறப்போகும்போது - அதிகாரிகளால் தடுக்கப்பட்டார். ‘தேச விரோத நபர்களின் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதால் வெளிநாடு செல்ல அனுமதியில்லை’ என்றனர்.

முதலில் அதிர்ச்சியடைந்தாலும் இதனை முன்னமே எதிர்பார்த்த அப்பெண்மணி மனம் தளரவில்லை. யார் அவர்? தீவிரவாதியா? அப்படி என்ன தேச விரோத செயல்பாடுகளில் அவர் ஈடுபட்டார்? மத்திய பிரதேச மாநிலத்தின் மஹன் வனப்பகுதியிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை காக்க போராடியதுதான் அப்பெண்மணியின் தேசவிரோதக் குற்றம். க்ரீன்பீஸ் அமைப்பின் செயல்பாட்டாளரான அப்பெண்மணியின் பெயர், பிரியா பிள்ளை. 

‘‘எங்கள் அமைப்பின் செயல்பாட்டாளர்கள் பலர் மீதும் இதுபோன்ற ஏராளமான போலி குற்றச்சாட்டுகளை இந்திய அரசு திட்டமிட்டு பரப்பி வருகிறது. வழக்குகளையும் பதிவு செய்கிறது. விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டபோதே என் மீதும் அரசு தாக்குதல் தொடங்கிவிட்டது என்பதைப் புரிந்துகொண்டேன்...’’ என உற்சாகம் மாறாமல் பேசுகிறார் இந்த க்ரீன்பீஸ் சூழல்போராளி.

அடுத்து வந்த மாதங்களில் க்ரீன்பீஸின் வங்கி கணக்குகளை முடக்கியதுடன் வெளிநாட்டு நிதி தொடர்புகளையும் மூர்க்கமாக மத்திய அரசு அறுத்தெறிந்தது. இந்தியாவில் மக்கள் அளிக்கும் நிதி மட்டுமே க்ரீன்பீஸ் அமைப்புக்கு ஆக்சிஜன். இப்போது ஊழியர்களிடையே பிளவு ஏற்படுத்த பாலியல் புகார்கள் உட்பட பலமுனை நெருக்கடிகளை அரசு கொடுத்து வருகிறது. 

க்ரீன்பீஸ் அமைப்பு என்னென்ன செயல்பாடுகளை செய்கிறது என்பதை அறிய அதன் தில்லி அலுவலகம் சென்றோம். உள்ளே நுழைந்தபோது, பாந்தமான உடையில் மலர்ச்சியான முகத்துடன் கைகொடுத்து அமரச் சொல்லும் பிரியாவை பார்த்தால், அரசு ஏன் இவரைப் பார்த்து இப்படி பயப்படுகிறது என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது.

2010ம் ஆண்டு க்ரீன்பீஸ் அமைப்பில் இணைந்த பிரியா, அதற்கு முன்பு ஆக்ஸ்ஃபேம், ஆக்‌ஷன்எய்டு அமைப்புகளில் பணிபுரிந்திருக்கிறார். ‘‘மற்ற நிறுவனங்களைப் போல அரசிடமோ அல்லது தனியார் நிறுவனங்களிடமோ க்ரீன்பீஸ் அமைப்பு நிதி பெறுவதில்லை. எனவே, இயற்கையை சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்களை சமரசமற்று கேள்வி கேட்கும் தைரியம் அதற்குண்டு...’’ புன்னகையோடு பிரியா பேசினாலும் அதில் உண்மையின் சூடு தெறிக்கிறது.

‘‘மஹன் வனப்பகுதியில் பன்னாட்டு நிறுவனங்கள் குவிந்துள்ளன. மக்களின் நிலங்களைப் பறித்து அவர்கள் சுரங்கங்களை தோண்டுகிறார்கள். இதை எதிர்த்து மக்களுக்காக குரல் கொடுத்ததால்தான் தேசவிரோத நபர்களின் பட்டியலில் எங்களை சேர்த்திருக்கிறார்கள். இங்கிலாந்து சுரங்க நிறுவனத்தின் விதிமீறல்கள் குறித்து அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களோடு பேச முடிவு செய்தேன். அதற்காக இங்கிலாந்துக்குச் செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டேன்.

இந்தியாவின் மறுபக்கத்தை - அதாவது நிஜமான பக்கத்தை உலகம் தெரிந்து விடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக நிற்கிறது. நிலக்கரி சுரங்கங்களுக்காக ஐந்து லட்சம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. பூவுலகின் நுரையீரலான வனங்களை அழித்து நிலக்கரி வணிகத்தில் கொட்டும் தொகை நம் நல்வாழ்வுக்கு ஈடாகுமா? சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் இது மறுக்க முடியாத பேரழிவு...’’ சுடும் உண்மைகளை சுதி மாறாமல் பேசுகிறார் பிரியா.

மஹன் பகுதி மக்களோடு தங்கி, சுரங்கத்தினால் ஏற்படும் விளைவுகளை அறிந்து, அவர்களுக்காக பிரியா போராடத் தொடங்கியது புதிய நம்பிக்கையின் தொடக்கம். இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் மத்தியப்பிரதேசத்தின் பங்கு 10%. ஆனால், மஹன் பகுதியிலுள்ள 62 கிராமங்களிலும் அதிகாலை 3 மணிக்கு எழுந்தால் மட்டுமே மின்சாரத்தை கண்ணால் பார்க்க முடியும்.

‘‘குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பும் வருமானமும் கிடைப்பதற்காகத்தானே தொழிற்சாலை? ஆனால், இங்கே சுரங்கங்களுக்கு நிலத்தை கொடுத்துவிட்டு வாழ வழியற்று, நகரங்களுக்கு கூலி வேலைக்கு சென்ற மக்கள்தான் அதிகம்...’’ என தழுதழுக்கும் பிரியாவின் குரலில் மாசற்ற மழையின் ஈரம். மஹனில் மருத்துவ தாவரங்களை சேகரித்து விற்று வந்த பைகா இனக்குழுவைச் சேர்ந்த ஜீத்லால், சுரங்கம் உருவாக்க வாழிடம் பறிபோன நிலையில் அருகிலுள்ள வைதான் நகரில் வருமானத்துக்காக போராடி வருகிறார். இதுபோன்ற எளிய மனிதர்களின் கதைகள் அரசின் காதில்தான் என்றுமே விழாதே!

‘‘வளர்ச்சியின் ஒருபுறத்திலுள்ள பளபளப்பையே... அதன் பயன்களைப் பெறும் குறிப்பிட்ட மக்கள் குழுவினரின் வாழ்வையே... அரசு கவனிக்கிறது. இதற்காகவே வனத்தை தம் வாழ்வாக கொண்டுள்ளவர்களை நட்டாற்றில் விடுகிறது. தேச வளர்ச்சி என்ற ஒற்றைச் சொல்லில் நகருக்கு துரத்தப்படும் இந்த எளிய வனவாசிகள் பிழைக்க என்ன செய்வார்கள்?’’ என்ற பிரியாவின் அறம் செறிந்த பேச்சு கேட்பவர்களின் மனதைத் தொடுகிறது. வனமழிக்கும் நிலக்கரிச் சுரங்கம் கடந்து அணுசக்தியையும் எதிர்ப்பதோடு அதற்கு மாற்றாக புதுப்பிக்கப்படும் ஆற்றல் முறைகளை ஊக்கப்படுத்தியும் க்ரீன்பீஸ் அமைப்பு பிரசாரம் செய்து வருகிறது.                             

க்ரீன்பீஸ் ஹிஸ்டரி!   
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமே க்ரீன்பீஸ் அமைப்பின் தாயகம். 1971ம் ஆண்டு கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பால் கோட், இர்விங் ஸ்டோவ், ஜிம் போஹ்லன் ஆகியோரால் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு உலகம் முழுவதும் மொத்தம் 40 நாடுகளில் ஊக்கமாக செயல்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் 3.3 மில்லியன் நிதியளிக்கும் தன்னார்வலர்களோடும், செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் 36 ஆயிரம் தன்னார்வலர்களோடும், தொண்டு நிறுவனங்களிலேயே அதிக வெளிப்படைத் தன்மையோடு செயல்பட்டு வரும் க்ரீன்பீஸ் - தன் செயல்பாடுகளுக்கு நம்புவது 100% தனிநபர் நன்கொடைகளையே. 2001ம் ஆண்டு இந்தியாவில் தனது பணிகளைத் தடதடவென தொடங்கிய இவ்வமைப்பு, சூழல் மாறுபாடு, கடல்நீர், காற்று மாசுபாடு, அணுசக்திக்கு மாற்றான புதுப்பிக்கும் ஆற்றல், மரபணு மாற்றுக்கு எதிரான இயற்கை விவசாய முயற்சிகள் என பல்வேறு ஆக்கபூர்வ செயல்பாடுகளைச் செய்ய 60% நிதியை மக்களிடமிருந்தும், 38% நிதியை தனது தலைமையகத்திடமிருந்தும், 1% நிதியை அமெரிக்க சூழல் அமைப்புகளிடமிருந்தும் பெறுகிறது.

கலப்பட உருளைக்கிழங்கு சிப்ஸ் தொடங்கி, மரபணுமாற்ற குழந்தை உணவுகள், மரபணு மாற்ற கடுகு, பிடி பருத்தி, அணுசக்தி இழப்பீட்டு மசோதா ஆகிய பிரச்னைகளை பிரசாரம் செய்து மக்களைத் திரட்டியது க்ரீன்பீஸின் மீது அழுத்தமாக இந்திய அரசின் கவனம் குவியக் காரணம். அதன் விளைவாக வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட நிலையிலும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.