வெள்ளை மாளிகையில் ஒலித்த சமஸ்கிருத சுலோகம்



அமெரிக்காவிலிருந்து வேதா கோபாலன்

இந்தப் படத்தில் உள்ள அர்ச்சகரை சமீபத்தில் பல முறை பார்த்திருப்பீர்கள். காரணம், டிரம்ப். கடந்த வியாழனன்று ஒரே நாளில் பத்துப் பேரிடமிருந்து அந்த வாட்ஸப் பதிவு வந்துவிட்டது. டொனால்ட் ட்ரம்ப் 45வது அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றபோது அங்கே வெள்ளை மாளிகையில் ஸ்ரீ நாராயணாச்சார் என்ற அர்ச்சகர் இந்து முறைப்படி பூஜைகள் செய்ததாகவும், இனி இவர் வெள்ளை மாளிகையில் ஆஸ்தானமாக இருக்கப் போவதாகவும் அச்செய்தி தெரிவித்தது.

அதிபர் முக்கியத் தீர்மானங்கள் எடுக்கப் போகும் சமயத்திலும் கையெழுத்திடும் போதும் இவர்தான் ராகுகாலம், எமகண்டம் பார்த்துச் சொல்வார் என்றும் பதிவு சொன்னது. ட்ரம்ப் குடும்பத்தின் மொத்த ஜாதகமும் இவர் கணித்து வைத்துக் கொண்டு இந்து தர்ம சாத்திரப்படி அந்தந்த தசைகளுக்குத் தகுந்தாற்போல் பரிகாரங்களைப் பரிந்துரைப்பார் என்றும் அதில் கண்டிருந்தது.

கடைசி வரிதான் கண்ணைப் பறித்தது. இதற்காக அவருக்கு வரிவிலக்களிக்கப்பட்ட சம்பளமாக ஒரு தொகை குறிப்பிடப்பட்டிருந்தது! ஜென்மத்துக்கும் நாம் ஊதியமாக பெற முடியாத தொகை அது! இது போல் ஃபார்வேர்ட் ஆகி வரும் மெசேஜ்களின் நம்பகத்தன்மை குறித்து எப்போதும் சந்தேகம் உண்டு. எனவே பதவிப் பிரமாண வீடியோவை திரும்ப ஒருமுறை நிதானமாகப் பார்த்தேன்.

அவரைத் தனியாக... இவரைத் தனியாக... வீடியோ எடுத்து சேர்த்திருப்பார்களோ என்ற சந்தேகமெல்லாம் அநியாயத்துக்கு எழுந்தது, உண்மையில் நடந்தது என்ன? ஏபிசி; சிஎன்என் மீடியாக்களை உன்னிப்பாக அலசிப் பார்த்தபோது குப்பென்று ஒரு மகிழ்ச்சி எழுந்தது. டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றதற்கு அடுத்த நாள் அவர் அலுவலக வேலையை ஏற்றபோது National Prayer Service - அதாவது தேசிய அளவிலான ஒரு மத நல்லிணக்கப் பிரார்த்தனை - நடத்தப்பட்டது.

இதற்காக அங்கு வருகை தந்து மிகப் பெருமிதமளிக்கும் அந்தப் பிரார்த்தனையை இந்து மத வழக்கப்படி செய்து ட்ரம்ப்பை ஆசீர்வதித்த பெரியவரின் பெயர் நாராயணாச்சார் எல். திகலகோடா (Narayanachar L. Digalakota). அமெரிக்காவின் மேரிலாண்டைச் சேர்ந்த லான்ஹாமில் உள்ள ஸ்ரீசிவாவிஷ்ணு கோயிலில் அர்ச்சகராக இவர் பணிபுரிகிறார். இந்நிகழ்ச்சி வாஷிங்டன் கதீட்ரலில் கோலாகலமாக நடந்தது. ட்ரம்ப் குத்துவிளக்கேற்றியது கண்கொள்ளாக் காட்சி.

இவரைத் தவிர இந்திய வம்சாவளியில் வந்த அமெரிக்கர் ஜெஸ்ஸி சிங், ஒரு சீக்கியர், தவிர மூன்று மதத்தலைவர்கள் இந்தப் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். பிஷப் ஹாரி ஜாக்ஸன் போன்ற சர்ச் போதகர்களும் பங்கேற்றனர். ஆட்சியாளர்கள் அனைத்து நலன்களும் பெற்று நீடூழி வாழவும் அவர்களும் நாடும்  சிறக்கவும் இந்தப் பிரார்த்தனை வாசகங்களை நம் நாட்டைச் சேர்ந்த அர்ச்சகர்  சமஸ்கிருதத்தில் கம்பீரமாகப் படித்தார்.

1933ம் ஆண்டு ஜார்ஜ் வாஷிங்டன் பதவி ஏற்றதிலிருந்து இதுவரை இந்து மதத்தைச் சேர்ந்த யாரும் இதில் பங்கேற்றதாகத் தெரியவில்லை. பிரார்த்தனை வாசகங்களை ட்ரம்ப் பொறுமையாக அமர்ந்து உன்னிப்பாக கவனித்தது ஹைலைட். பிரார்த்தனை முடிந்தபிறகு ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவருக்கும் அதிபர் கைகுலுக்கி நன்றி சொன்னார். ‘‘இந்தியர்களுக்கும் இந்துக்களுக்கும் ஒரு வார்த்தை. இங்கே வெள்ளை மாளிகையில் ஓர் உண்மையான நண்பனாக நான் இருக்கிறேன்...” என்றார் திரு. ட்ரம்ப்.

இந்தியாவுடனான நல்லுறவை பலப்படுத்துவதில் கவனமாக இருப்பதாகவும்; மோடிக்கும் ஒபாமாவுக்கும் இடையே மலர்ந்த நட்புறவை, தான் தொடரப் போவதாகவும்; மோடியின் ஆட்சி பாராட்டத்தக்க வகையில் அமைந்திருப்பதாகவும் ட்ரம்ப் கூறினார். மற்றபடி ராகுகாலம், எமகண்டம் பற்றிய குறிப்போ குடும்ப ஜாதகம் பற்றியோ சம்பளம் பற்றியோ விவரங்கள் எதுவும் உறுதிபடக் கிடைக்கவில்லை. ஸோ வாட்? இந்த நிகழ்வுக்காக இந்தியர்கள் பெருமிதம் கொள்ளலாம்!