பர்த்டேக்கு 5 மில்லியன் பரிசு!



-ரோனி

பர்த்டேக்கு பழையசோறு கிடைத்தாலே பாயசம் கிடைத்த கொண்டாட்டம். இதில் கோடி ரூபாய் கொட்டினால்..? நியூயார்க்கில் வசிக்கும் பேட்ரிக் கிளார்க்கின் 20வது பிறந்தநாளில்தான் 5 மில்லியன் டாலர் மாநில அரசின் லாட்டரியில் கொட்டியுள்ளது. ரூ.681 கொடுத்து வாங்கிய லாட்டரியில்தான் இந்த கிராண்ட் மஸ்தி குதூகலம். ‘‘என் பர்த்டேக்கு அம்மா பணம் கொடுத்து வாழ்த்தினார். அதில் வாங்கிய லாட்டரி என் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது!’’ எமோஷனலாகிறார் பேட்ரிக்.

வாங்கிய உடனே காதலியின் வீட்டுக்குப் போய் உட்கார்ந்து ஆற அமர லாட்டரியை சுரண்டியிருக்கிறார். நம்பரும் கீழேயிருந்த லைஃப் என்ற எழுத்தும் பர்கரும் சிக்கனுமாக சேர காதலியின் கரம் கோர்த்து துள்ளிக்குதித்து சோபாவையே கிழித்திருக்கிறார். ‘‘லாட்டரி அடிச்சதுக்கு கடவுளின் ஆசீர்வாதம்தான் காரணம். இதனால் என் கவலைகள் பறந்துவிட்டன என்று சொல்லமுடியாது. ஆனால். பணம் குறித்த கவலை இனியில்லை!’’ என காதலியை அணைத்துப்பிடித்து புன்னகைக்கிறார். இனி பேட்டை பிஸ்தா பருப்பு நீங்கதான்!