அருங்காட்சியகப் புகைப்படங்கள்



-பிருந்தா சாரதி

பசுந்தளிர்கள் முளைத்துத்
தலை நீட்டிக் கொண்டிருக்கின்றன
கண்களிலிருந்தும்
காது மடல்கள் வழியாகவும்...
சில மலர்கள் பூத்துள்ளன
கூந்தல் நுனிக் காம்புகளில்.

ஓவியப் பெண்ணே
உன் உதடுகளில் நெளியும்
தண்ணீர்ப் பாம்புகளின்
பளபளப்பு
உன் புராதனக் காதலை
வெளிப்படுத்துகையில்
நான் கண்ணாடிக்குளம்
ஒன்றை வெட்டி
அதற்குள் குதித்து
உன் காலத்தை நோக்கி
நீந்தி வருகிறேன்.
கரைகாணாக்
கடலாக விரிகிறது குளம்
நீல வான் மேகங்களை
வாயில் போட்டுக் குதப்பியபடி.
காலத்துடன் கரைந்து நீந்துகிறேன் 
அலையேதுமற்ற அக்கடலில்.
என் உருக்கொண்ட
இன்னும் பலர்
அதில் முன்பே
நீந்திக் கொண்டிருக்க
மேலும் மேலும் பல
நான்கள் தொடர்ந்து குதித்தபடி.
கண்ணாடித் துண்டுகளாய்
உடைந்து நொறுங்கிய சூரியன்
தண்ணீரில் எதிரொளிக்கிறது
நனைந்த தீக்கங்குகளாய்.
எப்போதோ
ஓர் ஆழிப்பேரலையில்
மூழ்கிய ஒரு மணிக்கூண்டு
நீர் ஆழத்தில்
வளைந்து நெளிந்து
காலமற்றதொரு காலத்தைக்
காட்டி மிதக்கிறது.
காதல் கடலில்
ஒருவரோடு ஒருவர்
போட்டி போட்டபடி
நீந்துபவர்களாயிருந்த
என் போட்டியாளர்களின் உடல்கள்
கரும் பச்சை
வெளிர் நீலம்
அடர் சிகப்பு என
ஒவ்வொரு கணமும்
நிறம் மாற
வினோதமாக உணர்ந்த நான்
குனிந்து என் உடலைப் பார்க்க 
அவ்விதமே நானும்
நிறம் மாறிக்கொண்டிருப்பதை
அறிகிறேன்.
ஓவியப் பெண்ணே 
நீயும் பறந்து வருகிறாய்
அந்தர வெளியில்
எங்கள் போட்டியை
ரசித்துக்கொண்டு
ஏதேதோ மாயப்
பறவைகள் புடை சூழ.
உன்னிடமிருந்து
சிதறி விழும் முத்தங்கள்
பறவைகளாய்ப் பறந்து
மீன்களாய் உருமாறி
நீர்மட்டம் வந்து
தண்ணீரைத் தொட்டதும்
கடல் உறைந்து
கண்ணாடிச் சட்டத்தில்
அகப்பட்ட குளமாகிறது.
அருங்காட்சியகத்தில்
எதிர் எதிரே
இரு புகைப்படங்களாய்
நீயும் நானும்.
காலங்கடந்த காதலின் ஒளி
ஒன்றில் ஒன்று
எதிரொளிக்கிறது
இரண்டு
கண்ணாடிச் சட்டங்களிலும்
மாறி மாறி.