யாரும் யாரையும் விட்டு போக முடியாது!



யாராலும் நம்ப முடியவில்லை. நா.முத்துக்குமாரின் மறைவு அவ்விதமே நிகழ்ந்தது. சமீப காலத் தமிழ்த் திரையிசைப் பாடல்களில் அவரே  நல்ல வரிகளின் செல்வந்தராக இருந்தார். அனேக பாடல்களில் அழகும், நுட்பமும், தாள லயமும், அக்னியும், உக்கிரமும், இசை கூடி  நிரம்பி வழிந்தன. அதையும் விடுத்து சிறந்த மனிதனாக அவர் இருந்ததே பெரும் சிறப்பு!

கடைசியாக ‘குங்குமம்’ இதழில் வெளிவந்த ‘நினைவோ ஒரு பறவை’யின் சில அத்தியாயங்கள் அவரின் பிரியமானவர்களின் இறப்பை  நினைவுபடுத்துகின்றன. அவரது கல்யாணம் மாமா பற்றி அவர் எழுதியது... ‘‘ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு ஒலி உண்டு. அந்த ஒலிதான்  அந்த சொல்லிற்குரிய வண்ணங்களையும், எண்ணங்களையும் மனதில் உண்டாக்குகிறது. சாதல் என்பதை ‘இறந்து போனார்’ என்றால்  நெஞ்சுக்குள் ஒரு திடுக்கிடல்... ‘மரணமடைந்தார்’ என்றால் முரட்டுத்தனமான ஒரு பயம்... ‘இறைவனடி சேர்ந்தார்’ என்றால் பின்னணியில்  ஊதுபத்தி வாசம்... ‘இயற்கை எய்தினார்’ என்பதில் பறித்த பூவை அது பூத்த இடத்திலேயே திரும்ப வைப்பது ேபான்ற பிம்பம்... ‘செத்துப்  போனார்’ என்பதில் ஒரு சாமான்யத்தனம் கலந்து, செத்துப் போனவர் எளிமையும் யதார்த்தமுமாக மனத்திற்கு நெருக்கமாகிறார்.

மனிதர்கள் ஏன் செத்துப் போகிறார்கள்? பேருந்தின் ஜன்னலோரக் காற்றின் லயத்தில் கொஞ்சம் கண் அசந்து, சட்டென்று விழித்துப் பார்த்தால்  பக்கத்தில் இருந்தவர் இறங்கிவிட்டதைப் போல, காலத்தின் காற்றில் தெரிந்தவர்களில் ஒவ்வொருவராகத் தொலைந்துபோகிறார்கள்...’’  இதுகூட நீங்கள் எழுதின வரிதான்... கல்யாணம் மாமாவும் நீங்களும் வேறு வேறில்லை முத்து!

அப்புறம் உங்கள் அப்பா உங்களைப் பற்றி எழுதியதாக நீங்களே எழுதிய அசல் கடிதம். அதுவும்கூட இழப்பைப் பற்றியே பேசுகிறதே!  ‘செத்துப் போனவன் எப்படி இந்தத் தொடரை படிக்க முடியும்னு நினைக்கிறீர்களா! அப்படி எல்லாம் இந்த உலகத்துல யாரும், யாரையும்  விட்டுட்டு எங்கேயும் போக முடியாது. இவன் சுவாசிக்கிற காத்துல, இவன் உடம்புல ஓடுற அணுக்கள்ல, ேபசுற விதத்துல, நானும்  வாழ்ந்துகிட்டுத்தான் இருக்கேன்.

இன்னும் எளிமையா சொல்லணும்னா, ஒரு மேஜையை நீங்க தொடும்போது அந்த மேஜையும் உங்களைத் தொடுது. அந்த மேஜையை  எரிச்சாதான் நீங்கள் சாக முடியும். அப்பகூட மேஜை கரித்துண்டாகவும், கரித்தூளாகவும் மாறுமே ஒழிய அழியாது!’ - இது உங்கள் மகன்  ஆதவன் எழுதிப் பார்ப்பது போலில்லை! துக்கம் நிறைந்த கனவைப் போல, மரணம் தன் கருணையற்ற சுபாவத்தையும் முகத்தையும்  வெளிப்படையாகக் காட்டிவிட்டது. முத்துக்குமாரின் நெருங்கிய நண்பரான இயக்குநர் வெற்றிமாறன், நண்பனின் நினைவலைகளில் மீண்டு  வந்தார்.

‘‘ஒரு விதத்தில் நான் சினிமாவுக்கு வந்ததற்குக்கூட முத்துக்குமார்தான் மறைமுகக் காரணமாக இருந்திருக்கக் கூடும். ஒரு கல்லூரிக்கு கவிதைப்  போட்டிக்குப் போயிருந்தேன். பச்சையப்பன் கல்லூரியிலிருந்து வந்த மாணவர் ஒருவர் அனாயாசமாக கவிதை பாடிவிட்டு, முதல் பரிசை  தட்டிச் சென்றார். அப்போது வெளியே வந்தவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர்தான் நா.முத்துக்குமார். எம்.ஃபில்.  படித்துக்கொண்டு பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிகிறார் எனக் கூடுதல் தகவல்கள் தெரிந்தன. ‘சினிமாவிற்கு வரலாமா’  என விசாரித்ததற்கு, ‘வரலாம், ஒன்றும் தப்பில்லை’ என உற்சாகப்படுத்திப் பேசினார்.

நாங்கள் இருவரும் சேர்ந்து பாலு சாரிடம் பணியாற்றிய காலங்கள் மறக்க முடியாதவை. 100 ரூபாய் கிடைத்தால் கூட அவரைப் பார்க்க  வருகிற நண்பர்களுக்காக 50 ரூபாயை செலவழிக்கிற மனசு அவருடையது. ஒரு நாள் திடீரென பாலு சாரிடம், ‘நான் பாடல் எழுதப்  போலாமா? நான் இயக்குநரா வரமுடியும்னு தோணலை’ என்றார். அதற்கு ‘இது தெளிவான முடிவு. நானும் அதே நினைப்பில் இருந்தேன்’  என்றார் பாலு சார். அவ்வளவுதான், முத்துக்குமார் பாடல் எழுத புறப்பட்டுவிட்டார்.

சீமான் முதல் வாய்ப்பு கொடுத்தார். அப்புறம் நிறைய எழுதிவிட்டார். அவர் நண்பர்கள் யாரையும் மறக்கவில்லை. இவ்வளவு உயரத்திற்குப்  போன பிறகும், காணக் கிடைக்கிற அரிய இயல்பு அது. மாதாமாதம் ஒரு பெரிய தொகையை நண்பர்களுக்காகவும், உதவி  வேண்டுபவர்களுக்காகவும் எடுத்து வைத்து விடுகிற மனசு அவருடையது. ‘முத்து, கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது. இவ்வளவு வேணும்’  எனத் தொகையைச் சொன்ன கணத்திலேயே அடுத்த கேள்வி, ‘எங்கே இருக்கீங்க’ எனக் ேகட்டுவிட்டு வந்துவிடுவார்.

பணத்தை வரச் சொல்லி தராமல், அவர்கள் இருக்கிற இடத்திற்கே போய்க் கொடுக்கிற பெருந்தன்மை. அந்தத் தொகையை வாங்கும்போது  அவர்கள் படுகிற கூச்சத்தைத் தட்டிக் கொடுத்து உறவை நிலை நிறுத்திவிடுவார். கடந்த நான்கு வருடங்களாக அதிகப் பாடல்கள் எழுதுகிற  இடத்தில் இருந்தார். கடுமையான உழைப்பின் விளைவு அது. நிறைய எழுதுகிறபோதும், பாடல்களின் தரத்தை விட்டுக் கொடுக்காத அழகு  அவருடையது.

மரணம் பற்றிய விசாரணைகளை என்னால் தொடர முடியவில்லை. எனக்கு வேண்டியவர்களின் இழப்பைப் பார்க்கும்போது என்னில் ஒரு  பகுதியை இழப்பது போல எனக்கு உணர்வு. அதுவும் முத்து மாதிரியான நண்பர்களைப் பிரிவதெல்லாம் எனது துர்ப்பாக்கியமே. நாற்பது  வயதில் முத்து விட்டுப் போவது சொட்டுக் கண்ணீரும் திரளாமல் என்னைப் பேரதிர்ச்சியில் கொண்டுபோய் நிறுத்திவிட்டது. என்னுடைய  சேகரிப்பில் அவரது நினைவுகள் நிறைய கைவசம் இருக்கின்றன.

இன்னும் அப்பாவின் இழப்பை சரியாக உணராத மகன் ஆதவன்... சின்னஞ்சிறிய அந்தப் பெண் குழந்தை... அந்த சகோதரி... போதும்! இந்த  இழப்பின் விசாரணைகளை இனிமேலும் என்னால் தொடர முடியாது. அவ்வளவுதான்!’’

- நா.கதிர்வேலன் 
படம்: புதூர் சரவணன்