மொபைல் நிறுவனங்களின் தினசரி வருமானம் 250 கோடி ரூபாய்!



ஆப்பு வைக்க வந்தாச்சு அம்பானி போன்

அதிகமில்லை... ரெண்டு மாதங்களுக்கு முன்புதான் சுப்ரீம் கோர்ட்டில் ‘கால் டிராப்புக்கு எல்லாம் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் இழப்பீடு  தர முடியாது’ என்று சாதித்தன இந்திய மொபைல் சேவை நிறுவனங்கள். ஆனால் இப்போது, ஒவ்வொரு கால் டிராப்புக்கும் 10 நிமிட டாக்  டைம் தந்திருக்கிறது வோடஃபோன். வரலாற்றில் இல்லாத வகையில் 1199 ரூபாய்க்கு அன்லிமிடெட் ப்ளான் அறிவிக்கிறது ஏர்டெல்.

தன் டேட்டா ரீசார்ஜ்களுக்கு 65 சதவீதம் சலுகை அறிவித்திருக்கிறது ஐடியா செல்லுலார். அட, நம்ம பி.எஸ்.என்.எல்... இந்த சுதந்திர தினம்  துவங்கி இனி எல்லா சண்டேவும் தொலைபேசி அழைப்புகள் இலவசம் என இறங்கி வந்திருக்கிறது. அத்தனைக்கும் காரணம்... இன்று  இந்தியாவையே கலக்கிக்கொண்டிருக்கும் இரு மந்திரச் சொற்கள்... ‘ரிலையன்ஸ் ஜியோ’!

செல்போன் விலை 15000 ரூபாய், அதில் இன்கம்மிங் 2 ரூபாய், அவுட்கோயிங் 4 ரூபாய் என நாம் கதறக் கதற கப்பம்  கட்டிக்கொண்டிருந்தபோது, ‘500 ரூபாய்க்கு போன்... அதில் காலம் முழுக்க இன்கமிங் இலவசம்’ என மார்க்கெட்டைப் புரட்டியது  ரிலையன்ஸ்தான். அப்போது புரட்டியதை விடவும் அதிவேகமாக, அசுரத்தனமாக இன்றிருக்கும் இந்தியத் தொலைத்தொடர்புத் துறையைப்  புரட்டிப் போடும் ஆபரேஷன்தான் ரிலையன்ஸ் ஜியோ. இந்த முறை ரிலையன்ஸ் கையில் எடுத்திருப்பது இன்டர்நெட். ஈடு இணையற்ற  அதன் வேகம்.

இன்னும் 3ஜி வசதியே சரிவர உட்புகாத நகரங்களில் 4ஜியைக் கொண்டு வந்திருக்கிறது ஜியோ. கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து  மண்டலங்களிலும் 4ஜி லைசென்ஸை அவர்கள் மொத்தக் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள். சாதாரணமாய் நாம் செல்போனில் ஒருவருக்கு  ஒருவர் பேசிக்கொள்ளும் அழைப்பு களுக்கு மாற்றாக VoLTE என்ற புதிய தொழில்நுட்பத்தையும் புகுத்தியிருக்கிறார்கள். இதன்படி மிகமிகக்  குறைந்த செலவில் செல்போன் அழைப்புகள் சாத்தியம்.

எதிரி இத்தனை பலத்துடன் தயாராகி வரும்போதே இதர மொபைல் ஆபரேட்டர்களுக்கு ஈரக்குலை நடுங்கியிருக்க வேண்டும். கடந்த ஜூலை  மாதம் முதல் ரிலையன்ஸ் ஜியோ தன் சோதனை சேவையை பொதுமக்களுக்கும் திறந்து விட்டுவிட்டது. இவர்களின் 4ஜியைப் பயன்படுத்த  VoLTE வசதி உள்ள போன் தேவையாச்சே! அதனால் ரிலையன்ஸே ‘லைஃப்’ என்ற பெயரில் மொபைல் தயாரித்து, அதன் விலையை  அடிமாடு ரேஞ்சுக்குக் குறைத்துவிட்டது. அந்த போன் வாங்கினால் ஒரு ரிலையன்ஸ் ஜியோ சிம் இலவசம். அடுத்த மூன்று மாதங்களுக்கு  அதன் வழியே அழைப்புகள், 4ஜி இன்டர்நெட் எல்லாமே இலவசம்.

‘சும்மா சோதனை ஓட்டம்தானே’ எனப் பார்த்தால், அதற்குள் இந்தியா முழுக்க 15 லட்சம் பேர் இந்த போனையும் சிம் கார்டையும் வாங்கிப்  பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். மற்ற ஆபரேட்டர்களின் வருமானத்தில் இதனால் எக்கச்சக்க டிராப். அதனால் வரிசை கட்டி  வந்தவைதான் மேற்கண்ட சலுகை அறிவிப்புகள். வரும் டிசம்பருக்குப் பிறகு மாதம் ‘வெறும் 300 ரூபாய்க்கு அன்லிமிடெட் அழைப்பு  மற்றும் இன்டர்நெட்’டை ஜியோ வழங்க இருப்பதாக செய்திகள் பரவுகின்றன. இப்போதே இவ்வளவு போட்டி என்றால் டிசம்பருக்குப்  பிறகு..?

அந்த பயத்தில்தான் ரிலையன்ஸ் Vs மற்ற ஆபரேட்டர்கள் என ஒரு புகார் போரே தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்தியத்  தொலைத்தொடர்பு ஆணையமான ட்ராய், மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா, இதர மொபைல் சேவை  நிறுவனங்கள் என மும்முனை மல்யுத்தம் அது!

இந்திய மொபைல் சேவைத்துறையில் புதிதாக வருகிற விருந்தாளி ஐ.யு.சி எனும் கப்பத்தை ஏற்கனவே இருக்கும் பெரும் நிறுவனங்களுக்குக்  கொடுத்தாக வேண்டும். அதாவது, புது நிறுவனத்தின் போன் மூலம் செய்யப்படும் கால், மற்ற நிறுவனங்களின்  நம்பர்களைத்  தொடர்புகொள்வதற்காக செலுத்தும் inter-connection usage  charges. இதை ரத்து செய்துவிடலாமே என சமீபத்தில் ட்ராய் சொன்னதுதான்  ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட அனைவரையும் கோபம் கொள்ள வைத்திருக்கிறது. இதனால் ட்ராய் மீது அவர்கள் மத்திய  தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹாவிடம் புகார் கொடுத்தனர்.

அடுத்த நாளே ரிலையன்ஸ் தரப்பில் இருந்து இந்தியத் தொலைத்தொடர்பு ஆணையத்துக்கு ஒரு புகார் மனு... தங்கள் இணைப்பில் இருந்து  மற்ற மொபைல் இணைப்புகளுக்கு கால் செய்யும்போது அது வேண்டுமென்றே ஆபரேட்டர்களால் கட் செய்யப்படுவதாக அதில் குற்றம்  சாட்டியிருந்தார்கள். இதைவிடவும் பெரிய பிரச்னை, குடுமிபிடி-குழாயடி சண்டை எல்லாம் எதிர்பார்க்கப்படுகின்றன. காரணம், ரிலையன்ஸ்  ஜியோ வெறும் மொபைல் போன் சேவையை மட்டும் அசைத்துப் பார்க்கவில்லை.

வயர் மூலமாக வீட்டுக்கு வரும் பிராட்பேண்ட் இணைப்பே 2 எம்.பி.பி.எஸ் வேகத்துக்கு முக்கும்போது செல்போனில் 20 எம்.பி.பி.எஸ்  வேகத்தைத் தருகிறது ரிலையன்ஸ் ஜியோ. போனை யூ.எஸ்.பி வழியே கம்ப்யூட்டரில் இணைத்தால் வீட்டு இன்டர்நெட் தேவை முடிந்தது.  ஆக, இனி டாட்டா, ஃபைபர்நெட், டிகோனா உள்ளிட்டவர்களும் ரிலையன்ஸுக்கு எதிர் கோஷ்டியில் கைகோர்ப்பார்கள்.

யார் யார் பக்கம் சேர்ந்தால் என்ன. ‘போடா... ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்’ என்பது தான் ரிலையன்ஸ் பாணி. ஆண்டவன் என்பது  இந்த இடத்தில் ஆள்பவர்களைக் குறிக்கும். பொதுவாகவே அரசு இயந்திரத்தை தனக்கு ஆதரவாக்கி லாபி செய்வது அம்பானியின் ஹாபி.  அதனால்தான் தற்போது ட்ராய் எடுக்கும் முடிவுகள் எல்லாம் ரிலையன்ஸுக்கு சாதகமாகவே இருக்கின்றன என்கிறார்கள். ஆனால், ட்ராய்  பக்கமும் நியாயம் இல்லாமல் இல்லை.

‘‘இந்தியாவில் தினம் 250 கோடி ரூபாய் வருமானம் பார்க்கும் செல்போன் நிறுவனங்கள் அதை முதலீடு செய்வதில்லை. வாடிக்கையாளர்களின்  கட்டணத்தையும் குறைப்பதில்லை!’’ என்பது ட்ராய் அமைப்பின் நெடுநாள் குற்றச்சாட்டு. இதனை சுப்ரீம் கோர்ட்டிலேயே சொல்லியிருக்கிறது  ட்ராய். ஆக, ரிலையன்ஸ் போட்டியால் அந்த 250 கோடி ரூபாய் வருமானம் அவர்களுக்குக் குறையலாம். அது நம் பிராட்பேண்ட்,  செல்போன் கட்டணத்தை மிச்சப்படுத்தினால் மகிழ்ச்சிதானே!

லாபம்தான்!
ரிலையன்ஸ் நிறுவனம் இதுவரை ஜியோ ஆபரேஷனில் சுமார் 1.6 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறது. இன்னும் ஒன்றரை  லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறது. இது பெரிய நஷ்டத்தில் போய் முடியுமோ என்ற பயம் ஒவ்வொரு ரிலையன்ஸ்  பங்குதாரரையும் கவ்வியிருக்கிறது. ஆனால், கணக்குப் போட்டுப் பார்த்தால் எல்லாமே பாஸிட்டிவ்.

ஆயிரம், ரெண்டாயிரம் என பில் போட்டாலும் சராசரி கணக்குப் பார்த்தால் நம்மூரில் ஒரு செல்போன் பயன்பாட்டாளர் சேவை  நிறுவனத்துக்குத் தரும் வருமானம் மாதம் 122 ரூபாய்தான். ரிலையன்ஸ் இப்போது ‘எல்லாமே இலவசம்... ஆனால் 300 ரூபாய் மாதம்  கொடுத்து விடு’ என கட்டணம் நிர்ணயிக்கப் போவதாகச் சொல்கிறார்கள். Average Revenue Per User எனப்படும் சராசரி வருமானம்  கிட்டத்தட்ட இரண்டரை மடங்காக உயர்த்தப்படுவதால் இதில் வாடிக்கையாளருக்கும் நஷ்டமில்லை, ரிலையன்ஸுக்கும் நஷ்டமில்லை!

வருங்காலம் என்னாகும்?
ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே சராசரி இணைய வேகம் 11 எம்.பி.பி.எஸ்தான். இந்தியாவில் அதைவிட இருமடங்கு அதிக வேகத்தை  ரிலையன்ஸ் ஜியோ தருகிறது. இது என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரும்? சில கணக்கீடுகள்..
* இந்தியாவின் மொபைல் போன் பயன்பாட்டாளர்கள் 95 கோடிப் பேர். ஆனால், ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்கள் 16 கோடிதான். இது  நிச்சயம் அதிகரிக்கும்!
* ஸ்மார்ட் டி.வி வழியே ஸ்கைப் காலிங், யூ டியூப், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்றவற்றின் பயன்பாடு அதிகரிக்கும்.
* இணையம் வழியே டி.வி பார்க்கும் பழக்கம் அதிகரிக்கும். இல்லத்தரசிகளும் அதில் இணைவார்கள். டிஜிட்டல் பாப்புலேஷன் எனும்  இணையப் பயன்பாட்டாளர்கள் உயர்வார்கள்.
* இன்டர்நெட் எப்போதும் அன்லிமிடெட் என்பதால் திரைப்படங்களையும் பாடல்களையும் டவுன்லோடு செய்து சேமித்து வைக்கும்  பழக்கம் ஒழியும். ஆன்லைன் ஸ்ட்ரீமிங் பண்பாடு வளரும்.
* வாட்ஸ் அப் அளவுக்கு நம்மூரில் வைபர், ஸ்கைப், ஐ.எம்.ஓ உள்ளிட்ட வீடியோ காலிங் ஆப்கள் பிரபலம் இல்லை. வாட்ஸ்அப்பை
முந்தும் அளவுக்கு இவை வளரும்.
* ஒவ்வொரு அலுவலகத்திலும் சர்வர் வைத்துக்கொண்டிருக்காமல் கிளவுட் ஸ்டோரேஜ் மூலம் இணையவழி சேமிப்பு அதிகரிக்கும்.

பிராட்பேண்ட் இணைப்பே 2 எம்.பி.பி.எஸ் வேகத்துக்கு முக்கும்போது செல்போனில் 20 எம்.பி.பி.எஸ் வேகத்தைத் தருகிறது ரிலையன்ஸ்  ஜியோ

- நவநீதன்