குட்டிச்சுவர் சிந்தனைகள்



-ஆல்தோட்ட பூபதி

நண்பர்களுக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கு.  நட்பு வேற, பழக்கம் வேற. நட்பில்லாத பழக்க  வழக்கங்கள் நண்பர்கள் அல்ல, செல்போனில் வெறும்  நம்பர்கள்தான். இப்பல்லாம் நெருங்கிய நண்பர்கள்னு சொல்லக்கூடிய பாதி பேரு,  நக்கல் பண்ணியே நம்ம நீள அகல நெஞ்சத்தை நொறுங்கிய நெஞ்சமாக்குற நண்பர்கள்தான்.

இப்ப ஈஸியா புரிய வைக்கிறோம் இருங்க...
* யாரைப் பார்க்கப் போறப்ப, பாக்கெட்டுல எவ்வளவு பணமிருக்குனு தெரியாம கூட போறோமோ, அவங்க நண்பர்கள்; யாரைப்  பார்க்கப் போறப்ப பர்ஸ்ல இருக்கிற பணத்தை அங்கங்க பேன்ட்ல ஒளிச்சு வச்சுட்டு போறோமோ, அவங்கதான் நம்ம க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்.
* சாட்டர்டேவை வாட்டர்டேவா கொண்டாடிய பிறகு நம்மளை வீட்டுல கொண்டு போய் விடுறவன் நண்பன்; ஆனா விடியற்காலை நாலு  மணிக்கு வாக்காளப் பெருமக்கள் வீதில வாக்கிங் போற வரை நம்மளை வீட்டுக்குப் போக விடாம அராத்து போடுறவன் நெருங்கிய  நண்பன். 
* நாம லவ் பண்ற மேட்டரை நாம லவ் பண்ற பொண்ணுக்கு போய்ச் சொல்றவன் நண்பன்; நாம லவ் பண்ற மேட்டரை  நாம லவ்  பண்ணுற பொண்ணைத் தவிர எல்லோருக்கும், முக்கியமா நம்ம வீட்டுல போய் சொல்றவன்தான் நெருங்கிய நண்பன். 
* தியேட்டர்லயோ, தெருவுலயோ நடக்குற பிரச்னைல நமக்காக இறங்குறவன் நண்பன்; ஆனா இதுல எல்லாம் நம்மள இழுத்து  விட்டுட்டுப் போறவன்தான் நெருங்கிய நண்பன்.
* அவன் வீட்டுல நம்மளால திட்டு வாங்குறவன் நண்பன்னா, நம்ம வீட்டுல நமக்காக திட்டு வாங்குறவன் நெஞ்சுக்கு நெருங்கிய நண்பன்.
* இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்,  நமக்காக விட்டுக் கொடுக்கிறவன் நண்பன்; நம்மளை என்னைக்குமே விட்டுக் கொடுக்காதவன்  நெருங்கிய நண்பன்.

மேகம் உடைந்து மழையாய்க் கொட்டும்போது சத்தம் வருகிறது. கைகள் பட்டு தவறி கண்ணாடி உடையும்போது சத்தம் வருகிறது. காதலின்  மயக்கத்தில் காதலி கைப் பிடித்து விளையாடும்போது உடையும் வளையல்கள் தருகின்றன சந்தோஷ சப்தங்கள். கட்டிடங்களும்  கற்பாறைகளும் உடையும்போது பெரும் சப்தம் உண்டு. ஓடும் தண்ணீரில் நீர்க்குமிழ்கள் உடையும்போதும் சத்தமுண்டு. கோழிக் குஞ்சுகள்  சுதந்திரமடைய முட்டை உடையும்போதும் சத்தம் வருகிறது. மொட்டுக்கள் உடைந்து பூக்களாய் மலரும்போது கூட மெல்லியதொரு சப்தம்  உண்டாம். உலகில் ஒவ்வொன்றும் ஏதேனும் அதிர்வினால் உடையும்போதும் ஒரு சப்தம் உண்டு. மனசு உடையும்போது மட்டும்  சப்தமில்லை. ஆனா, இதுதான் மற்ற எல்லாவற்றையும் விடப் பெரும் அதிர்வைத் தருகின்றது!

நாட்டுக்கு நல்லது செய்வாங்கன்னு நம்பி நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் அனுப்பி வச்சா, இவங்க பாராளுமன்றத்தை பாட்டு  மன்றமாவும் சட்டமன்றத்தை ‘சுமார் சிங்கர்’ மேடையாகவும் மாத்திக்கிட்டு இருக்காங்க. குதிரைக்கு றெக்கை இருக்குனு சொன்னாக்கூட  பரவாயில்லை... ஆனா அந்த இறக்கையும் ரெண்டு மீட்டர் உயரத்துக்கு உயர்த்தப்பட்டு இருக்குனு சொன்னவங்களை பார்லிமென்ட்  அனுப்பினா, ‘காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர், காஷ்மீர் வொண்டர்புல் காஷ்மீர்’னு  guide வேலைதான் பார்ப்பாங்க.

எனக்கு என்ன சந்தேகம்னா, குண்டு வெடிப்புக்கும்  துப்பாக்கி தோட்டாக்களுக்கும் நடுவுல நிம்மதிய தேடும் காஷ்மீர் மக்களின் பிரச்னையப்  பத்தி பேசறப்பவே குங்குமப்பூவ புகழ்ந்து பேசறாப்லன்னா, காவிரி பிரச்னையப் பத்தி பேசறப்ப நிச்சயம் குஷ்பூவ புகழ்ந்து  பேசியிருப்பாரோனுதான்! சரி, டெல்லி மேட்டர டிலே பண்ணி பார்த்துக்கலாம்னு விட்டா, சட்டமன்றத்துல நடக்குது ‘சுமார் சிங்கர் சீசன் 2’.  எல்லாம் எங்க இருந்துய்யா கிளம்பி வர்றீங்க? பாடுனதைக் கூட பொறுத்துக்கலாம்... ஆனா சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் பாட்டுக்கு  ஏற்ற மாதிரி டெம்போ குறையாம  தட்டுனாங்க பாருங்க... அதைத்தான் தாங்க முடியல. மக்கள் பிரச்னைகளைத் தட்டிக் கேட்பாங்கன்னு  நாம நினைச்சா, இவங்க மேஜையைத் தட்டி பாட்டு கேட்டுக்கிட்டு இருக்காங்க!

இந்திய ஒலிம்பிக் கமிட்டி மேலயும் இந்திய மக்கள் மேலயும்தான் தவறே தவிர, இந்தியாவுல இருந்து ஒலிம்பிக்ல கலந்துக்கிட்ட தங்கங்கள்  மேல தவறே இல்லை. சும்மா பார்க்கிற நேரத்திலெல்லாம் பரீட்சைக்கு ‘படி... படி...’ன்னு சொல்லிட்டு, இப்ப ஒலிம்பிக்ல பதக்கத்தை  ‘குவி... குவி...’ன்னா எப்படிக்  குவிப்பாங்க? பரீட்சைல ஏன் சென்டம் வாங்கலனு கேட்கிறவனுக்கெல்லாம், ‘ஒலிம்பிக்ல ஏன் தங்கம்  வாங்கல’னு கேட்கிற உரிமையில்ல. என் பையன் இன்ஜினியர் ஆகணும், என் பொண்ணு டாக்டராகணும்னு சொல்றோமே தவிர, யாராவது  ‘எங்க குழந்தைங்க ஒலிம்பிக்ல சாம்பியனாகணும்’னு நினைக்கிறோமா?

நமக்கு நம்ம குழந்தைங்க வாழ்க்கைல சாம்பியன் ஆகணுமே தவிர, விளையாட்டுல ஆகக்கூடாது. மிச்சம் சொச்சம் பேரு விளையாட்டுல  தங்கள் குழந்தைகளை விடுறதே, ‘படிப்பு வரல... ஸ்போர்ட்ஸ் கோட்டாவுலயாவது சென்ட்ரல் இல்லாட்டி ஸ்டேட் கவர்மென்ட் வேலைக்கு  அனுப்பிடலாம்’னுதான். தப்பித் தவறி உண்மையாலுமே விளையாட்டு மேல அக்கறையில எவனாவது வந்தாலும், அவங்களை மேல   முன்னேற விடாம லாபில அடக்கி விட்டுடுறோம். ஒண்ணு டென்னிஸ், பேட்மின்டன்னு பணக்காரங்க விளையாட்டை விளையாடுறோம்...  இல்ல, கிரிக்கெட் விளையாடி பணக்காரனா நம்ம குழந்தைங்க வரணும்னு ஆசைப்படுறோம்.  நாமளே சரியில்லாதப்ப, அப்புறம் நாலு  வருஷத்துக்கு ஒரு தடவை நாக்கை தொங்கப் போட்டுக்கிட்டுத்தான் தங்கத்தை எதிர்பார்க்கணும். மொத நாம மாறணும்... இல்லன்னா கடைசி  வரை ஜலபுலஜங், கப்லிங்ஸ், ஸ்பூன்லிங்ஸ், டிக்கிலோனானுதான் விளையாடணும்.         

ஓவியங்கள்: அரஸ்