சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கூட்டுக் கிரகங்கள் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள்

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்


வேகமாக வரக்கூடிய பந்து சிக்ஸருக்கும் பறக்கலாம். க்ளீன் போல்டாகி ஸ்டம்பையும் சிதைக்கலாம். இதுபோலத்தான் கூட்டுக் கிரகங்களின்  தன்மை வேலை செய்கிறது. ஏதேனும் மூன்று கிரகங்கள் ஒரே இடத்தில் இணையும் கூட்டுக் கிரக அமைப்பில், இந்த கிரகங்கள் தங்களுக்குள்  பகை பெற்றிருந்தால் ஜாதகரின் வாழ்க்கையை சோதனைக்கு உள்ளாக்குகிறது. தொடர்பற்ற விஷயங்களில் கொண்டு போய் சேர்க்கிறது.  படிப்பு வேறு, வேலை வேறு என்று பிரித்துப் போடுகிறது.

இந்த கூட்டுக் கிரகங்கள் இணைந்து செய்யும் மாயம், ஒருவரை அதீத கற்பனைவாதியாக மாற்றும். எதைச் செய்தாலும் அதில் இன்னும்  இன்னும் நுணுக்கமாகச் செய்ய வைக்கும். சிறிய விஷயத்தைச் செய்தாலும் ஒரே சிந்தனையில் இருக்க வைக்கும். எனவே, கூட்டுக் கிரகங்கள்  தீவிரத் தன்மையைக் கொடுக்கும் பணியையே அதிகம் செய்கின்றன. மேலும், கூட்டுக் கிரகங்களின் சேர்க்கைகளில் தங்களுக்குள் பகை பெற்று  கிரக யுத்தமும் ஏற்படும்.

அந்த கிரகத்தின் தசா காலத்தில் ஜாதகரின் வாழ்க்கையையே தலைகீழாகவும் மாற்றும். எனவே, தனி மற்றும் இரட்டை கிரகச் சேர்க்கையை  விடவே கூட்டுக் கிரகங்கள் மாபெரும் வாழ்வியல் மாற்றத்தை நிகழ்த்துகின்றன. இப்படி கூட்டுக் கிரகங்கள் இணையும் அமைப்பு பெற்ற  பிரபலங்கள் சிலரின் ஜாதகங்களை வைத்து, சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கூட்டுக் கிரக சேர்க்கை என்ன பலன்கள் தரும் என்று  பார்க்கலாம்.

மாமன்னர் அக்பர் சிம்ம லக்னத்தில் பிறந்தவராவார். லக்னத்திலேயே ஞானகாரகனான கேது அமர்ந்திருப்பதால் நல்ல ஆன்மிக  முதிர்ச்சியுள்ளவராக அவரால் இருக்க முடிந்தது. எல்லா மதங்களிலுமுள்ள நல்ல விஷயங்களை ஒன்று சேர்த்து ‘தீன் இலாஹி’ என்று மத  நல்லிணக்கத்தை, புதிய மதத்தை உருவாக்கினார். கற்பனை மற்றும் இலக்கியத்திற்கு உரிய சந்திரன் உச்சமானதாலும், இசை, நாட்டியம்,  கவிதைகளுக்குரிய சுக்கிரன் ஆட்சி பெற்று சமசப்தமாக பார்த்துக் கொண்டிருந்ததாலும்தான் நல்ல கலாரசனை மிக்கவராக அமைந்து,  கலைகளை ஊக்கப்படுத்தும் சிறந்த அரசராகவும் விளங்கினார்.

குரு, சுக்கிரன், சனி போன்ற முக்கூட்டு கிரகங்கள் சிம்ம லக்னத்திற்கு மூன்றாமிடத்தில் அமர்ந்ததாலும், அதில் நடுநிலைக் கிரகமான சனி  உச்சமாகி இருந்ததுடன் யோகாதிபதி செவ்வாய் உச்சமானதாலும் நீதி நெறி தவறாமல் நாட்டை ஆண்டதுடன் எளியோரின் உணர்வுகளையும்  மதித்து நடந்தார். யாராலும் வீழ்த்த முடியாத மன்னனாகவும் திகழ்ந்தார்.

மகான் அரவிந்தரின் ஜாதகத்தில் சிம்ம லக்னத்தில், லக்னத்திலேயே ஆத்மகாரகனான சூரியனோடு புதன், சுக்கிரன் போன்றோரின் சேர்க்கை  அமைந்தது பெரிய யோகத்தை அளித்தது. சூரியன் இங்கு ஆட்சி பெற்றும், நவாம்சத்தில் நன்கு பலமாகவும் அமர்ந்ததால்தான் பெரிய  யோகியாக அவர் விளங்கினார். ஐந்தாம் இடமான தனுசில் சந்திரனும், சனியும் அமர்ந்து, ஐந்துக்குரியவனான குரு 12ம் இடமான மோட்ச  ஸ்தானத்தில் உச்சமடைந்ததால் முக்காலத்தையும் உணரக் கூடிய ஞானம் கிடைத்தது.

சிம்ம லக்னத்திற்கு பிரபல யோகாதிபதியாக இருக்கும் செவ்வாய் 12ம் இடத்தில் நீசமாகிவிட்டதால், சுகபோக வாழ்க்கைக்குள் போகாமல்  சொத்து சுகத்தையெல்லாம் தியாகம் செய்துவிட்டு நாட்டின் விடுதலைக்காக முழுமையாகப் போராடினார். நான்காம் இடமான விருச்சிகத்தில்  - அதாவது தேள் வீட்டில் பாம்பு கிரகமான கேது அமர்ந்ததால் மாபெரும் தத்துவஞானியாகவும் பிரகாசித்தார். சூரியனோடு லௌகீக  கிரகமான சுக்கிரன் சேர்ந்து, புதனும் உடன் இருந்ததால், மாபெரும் படைப்பாளியாக ஞானம் பெற்று, காவியங்களை இயற்றும்  வல்லமையும் பெற்றிருந்தார்.

பத்தாம் வீட்டில் ராகுவானவர் சந்திரனின் நட்சத்திரமான ரோகிணியிலும், ரிஷப ராசியிலும் அமர்ந்ததால் எப்போதும் போராட்ட  குணத்தோடு திகழ்ந்தார். அன்னை இந்திராகாந்தி அவர்களுடைய ஜாதக அமைப்பு முழுக்க முழுக்க சூரியனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாக  அமைந்துள்ளது. சூரியனுடைய லக்னம், சூரியனின் நட்சத்திரமான உத்திராடத்தில் பிறந்திருக்கிறார். சிம்ம லக்னத்தின் பிரபல  யோகாதிபதியான செவ்வாய் இவர் ஜாதகத்தில் லக்னத்திலேயே அமர்ந்திருக்கிறார்.

இதனால்தான் பிறப்பிலேயே மாபெரும் செல்வந்த குடும்பத்தில் அவதரித்தார். இதைத் தவிர லக்னாதிபதியான சூரியன் புதனோடு சேர்ந்து  கேந்திர பலம் பெற்றுள்ளார். சூரியன் பூர்வ புண்ணியாதிபதியான குருவை சமசப்தமாக பார்க்கிறார். ஒரு கேந்திரத்திற்குரிய சூரியனை பூர்வ  புண்ணிய ஸ்தானமான 5ம் இடத்திற்குரிய கோணாதிபதி பார்வையிட்டதால்தான் அரசியலில் கொடி கட்டிப் பறக்க முடிந்தது. நாட்டையே  ஆள முடிந்தது. இரும்புப் பெண்மணியாக இருக்க முடிந்தது.

சனியும் சந்திரனும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள். சனி சந்திரனின் வீட்டில் மறைந்திருக்கிறார். இங்கு நாம் அறிந்துகொள்ள வேண்டிய  விஷயம் ஒன்று இருக்கிறது. சனி நீல நிறத்திற்கு உரியவர், சந்திரன் நட்சத்திரத்தை உணர்த்தும் கிரகமாகும். இருவரும் இணைந்திருப்பதால்  ப்ளூ ஸ்டார் ஆக்‌ஷன் எடுத்து உலகத் தலைவர்களின் புருவங்களையெல்லாம் உயர்த்தினார். அசுர குருவான சுக்கிரனும், அசுர கிரகமான  ராகுவும் 5ம் வீட்டில் அமர்ந்து ஐந்துக்குரிய குரு வக்ரமானதால்தான் மிசா போன்ற அவசரகாலச் சட்டத்தை கொண்டு வர வேண்டியிருந்தது.

புத்தி ஸ்தானத்தில் ராஜ கிரகங்கள் பரிவர்த்தனை பெற்றிருக்கின்றன. அதாவது குரு வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் குருவும்  அமர்ந்திருக்கிறார்கள். சனி 12ல் மறைந்து கேதுவுக்கும் செவ்வாய்க்கும் நடுவே இருப்பதாலேயே அகால மரணம் ஏற்பட்டது. சூரியனும்  குருவும் நேருக்கு நேராக பார்த்துக் கொண்டதாலேயே தொலைநோக்குச் சிந்தனையோடு திட்டங்கள் தீட்டினார். இருபது அம்சத் திட்டம்  போன்ற பலவற்றை உண்டாக்கி நிறைவேற்ற இவரால் முடிந்தது.

ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் கூட சிம்ம லக்னக்காரர்தான். இவர் ஜாதகத்தில் லக்னாதிபதியான சூரியன்  ஏழாம் இடத்தில் அமர்ந்து, தன் வீட்டைத் தானே பார்க்கிறார். இதனால்தான் யாருக்கும் தோன்றாத நுணுக்கமான சிந்தனையெல்லாம்  இவருக்குத் தோன்றியது. பிரபல யோகாதிபதியான குரு தன் சொந்த நட்சத்திரத்தில் உட்கார்ந்ததுடன், லாப ஸ்தானத்திலும் இடம்  பெற்றதால்தான் பெரும் செல்வந்தராக இருக்க முடிந்தது. எலக்ட்ரானிக்ஸ் கிரகங்களான சனியும், ராகுவும் இவர் ஜாதகத்தில் அசாத்தியமான  பலம் பெற்றதால்தான் எலக்ட்ரானிக்ஸ் துறையில் சாதனையாளராகத் திகழ முடிந்தது.

கனிகளுக்குரிய கிரகமான சனி உச்சம் பெற்று அமர்ந்து குரு பார்வை பெற்றதால், ‘ஆப்பிள்’ என்று நிறுவனத்துக்குப் பெயர் வைத்து வெற்றி  பெற்றார். அலைக்கற்றைகளை கைபேசியில் அள்ளித்தரும் கிரகமான சுக்கிரனை குரு பார்த்ததாலும், சுக்கிரனுடன் ராகு  சம்பந்தப்பட்டதாலும்தான் துல்லியமான, துரிதமான சேவையில் குறுகிய காலத்தில் உலகையே தன் பக்கம் திருப்ப முடிந்தது. உடலாதிபதி  சந்திரன் சனியின் நட்சத்திரத்தில் அமர்ந்ததாலும், வயிற்றுப் பகுதியை குறிக்கும் லக்னத்தின் ஐந்தாம் வீடான தனுசில் சுக்கிரனும் ராகுவும்  அமர்ந்து சனியைப் பார்த்ததாலும், சந்திரன் எட்டில் அமர்ந்து சந்திர தசை தொடங்கிய காலத்தில் வயிற்றுப் பகுதியில் புற்றுநோய் வந்து  காலமானார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிம்ம லக்னத்தில்தான் பிறந்திருக்கிறார். இவர் சந்திர மங்கள யோகத்தில் பிறந்ததாலேயே வீடு, சொத்து,  புகழ் போன்றவை தானாக வந்தன. செவ்வாய் உச்சமாகி, லக்னாதிபதி கேந்திரம் பெற்றிருப்பதாலேயே சாதாரண நிலையிலிருந்து மாபெரும்  புகழின் உச்சிக்கு வந்திருக்கிறார். வாக்கு ஸ்தானத்தில் சனியும் கேதுவும் இருப்பதால் ஆரம்பத்தில் கல்வித் தடை ஏற்பட்டிருக்கிறது.  லக்னத்தை குரு பார்ப்பதால், படிப்பு இல்லாவிட்டாலும் பட்டறிவும் அனுபவ அறிவும் பெருகி வந்திருக்கிறது.

வாக்கு ஸ்தானத்தில் சனியும் கேதுவும் இருந்து வாக்காதிபதி புதன் சுக்கிரனோடு சேர்ந்திருப்பதால் இவருடைய பஞ்ச் டயலாக்  எல்லோரையும் கவரச் செய்கிறது. கடையனுக்கும் கடையனாக இருக்கும் கிரகமே சனி ஆகும். இப்போது சனியின் தசை நடைபெற்று  வருவதாலும், சனியின் ராசியில் பிறந்ததாலும் எளிய மக்களுக்கான வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றார். உதாரணமாக பால்காரர்,  ஆட்டோக்காரர், உழைப்பாளி என்றெல்லாம்... அடுத்து வரும் புதன் தசையில் இவர் தனது ஆரோக்யத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது  நல்லது.

இவரின் ஜாதகத்தில் கும்பத்தில் அமர்ந்து குருவே இவரை மிக முக்கியமானவராக உயரச் செய்திருக்கிறது. கூட்டுக் கிரகங்கள் வாழ்வை  சிகரத்தில் அமர்த்தவும்  செய்யும். பாதாளத்தை நோக்கி சரியவும் வைக்கும். தங்களுக்குள் பகை பெறாத கிரகங்கள் ஒன்றாக இருக்கும்போது  சாதனையாளர்களாக மாற்றும். பகை கிரகங்கள் இணையும்போது வேதனையே மிஞ்சும். சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் கூட்டுக் கிரகங்களால்  ஏற்படும் பாதிப்பை போக்கிக் கொள்ளவும், எதிர்மறையான பலன்கள் ஏற்படாமல் தப்பித்துக் கொள்ளவும் மிக நிச்சயமாய் சென்னை மற்றும்  திருவள்ளூருக்கு அருகேயுள்ள திருவாலங்காடு வடவாரண்யேஸ்வரரையும், அங்குள்ள ஊர்த்துவ தாண்டவ நடராஜரையும், காளி தேவியையும்  காரைக்கால் அம்மையாரையும் அவ்வப்போது தரிசித்து வர வேண்டும். அடுத்த இதழிலிருந்து கன்னி லக்னம் குறித்துப் பார்க்கலாம்.

ஓவியம்: மணியம் செல்வன்

(கிரகங்கள் சுழலும்...)