ஒரு கேள்வி... ஒரு பதில்!



பிரபலங்களிடம் எக்கச்சக்க கேள்விகள் கேட்டும் கிடைக்காத சுவாரஸ்யங்கள் சில சமயம் ஒரே ஒரு கேள்வியில் தானாக வந்துவிழும். அப்படி  ரசிக்க வைத்த சூப்பர் ஓவர் பதில்கள் இங்கே...

விஜய் சாரை பிடிக்கும்! - சமந்தா

‘‘தமிழ், தெலுங்கு... இந்த ரெண்டு மொழிகள்ல எங்கே உங்களுக்குப் போட்டி அதிகம்?’’ ‘‘நயன்தாரா, நித்யா மேனன், காஜல் அகர்வால்னு  இங்கே நடிக்கறவங்கதான் தெலுங்கிலும் இருக்காங்க.  நயன்தாரா ஸ்ட்ராங்கான ரோல்கள் செலக்ட் பண்றாங்க. நித்யா, காஜல்னு   ஒவ்வொருத்தருக்கும் ஒரு ப்ளஸ் இருக்கு. ரெண்டு மொழியை கம்பேர் பண்றப்போ, கிட்டத்தட்ட போட்டி சமம்தான். விஜய், சூர்யா,  மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர், பவன் கல்யாண்னு ஹீரோக்கள் எல்லாருமே என்னைப் பொறுத்தவரை சப்போர்ட்டிவ்வாதான்   இருக்காங்க.

‘தெறி’யில் விஜய் சாரை சுட்டதும், மாடியில் உயிருக்குப்  போராடுற குழந்தையை நான் காப்பாத்துற மாதிரி ஒரு சீன்... வேற எந்த ஒரு   ஹீரோவா இருந்தாலும் அப்படி ஒரு சீனுக்கு சம்மதிச்சிருக்கவே மாட்டாங்க. மாஸ் ஹீரோ கதைன்னாலும் ஹீரோயினுக்கும் முக்கியத்துவம்  கொடுத்து என்கரேஜ் பண்ணுவார்  விஜய் சார்!’’  

எதிர்பார்ப்பே இல்லை! - கோவை சரளா

‘‘இதுவரை 700 படங்கள் பண்ணிட்டீங்க. நீங்க பண்ணாத கேரக்டர்... இதை பண்ணியே ஆகணும்னு ஆசை எதுவும் இருக்கா?’’ ‘‘அப்படி  எதுவும் இல்லைங்க! படத்தோட கேரக்டர் எப்படி வரணும்னு ஒரு இயக்குநர் சொல்றதை முதல்ல கவனிப்பேன். அந்தக் கேரக்டரை  இன்னும் சிறப்பா பண்ணணும்னு கிரியேட்டிவ்வா ஏதாவது யோசிப்பேன். மத்தபடி, ‘இந்தக் கேரக்டரை பண்ண முடியாமப் போச்சே’னு  ஆதங்கப்பட்டது இல்லை. அப்படி கற்பனையும் பண்ணினதில்ல. சுருக்கமா சொன்னா, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை.  எதிர்பார்த்து  ஏமாறவும் தயாரா இல்லை. அப்படி எதிர்பார்த்திருந்தால், இன்னிக்கு ஒரு காமெடி நடிகையா வந்திருக்க மாட்டேன். எது கிடைக்குதோ  அதை சந்தோஷமா ஏத்துக்கற மனப்பக்குவத்தை வளர்த்துக்கிட்டேன்!’’

முதல் பாடல் அனுபவம்! - சுந்தர்.சி

‘‘ஒரு படத்துல சொந்தக் குரல்ல பாடியிருந்தீங்க. அப்படியே சிங்கர் ஆகலையே... ஏன்?’’ ‘‘என் முதல் பாடல் அனுபவம்... அது ஒரு பெரிய  கொடுமைங்க! ‘சண்டை’ படத்துல நான் ஹீரோ. இசையமைப்பாளர் தீனா, ‘ஒரு பாடலை நீங்க பாடிடுங்களேன்’னார். வாழ்க்கையில பல  விஷயங்கள்ல சத்யராஜ் சாரைத்தான் குருநாதரா நினைப்பேன். எதையுமே ‘முடியாது’ன்னு சொல்ல மாட்டார். டைரக்டர் அவர்கிட்ட, ‘இந்த  சீனை பண்ணிடுவீங்களா?’னு கேட்டால் கூட, ‘பிச்சு உதறிடலாம்’னு உடனே ரெடியாகிடுவார். ‘அது உங்களுக்கு செட் ஆகுமா?’னு யாராவது  அவர்கிட்ட கேட்டால் கூட, ‘நல்லா இருந்தா அதை பயன்படுத்திக்கப் போறாங்க.

இல்லைனா, வேற மாத்திக்கப் போறாங்க. முடியாதுனு ஏன் சொல்லணும். ட்ரை பண்ணித்தான் பார்ப்போமே’னு தன்னம்பிக்கையா  சொல்லுவார். தீனா என்னை பாடச் சொல்லிக் கேட்டப்போ, சத்யராஜ் சாரைத்தான் நினைச்சு பாட சம்மதிச்சேன். ‘வாடி என் கப்ப  கிழங்கே’னு ஒரு பாடல். ரெக்கார்டிங் ஆரம்பிச்சது. பாடும்போதும் இடையிடையே ‘சார், அந்த டெம்போவை கொஞ்சம் பாத்துக்குங்க...  ஸ்ருதி டவுன் ஆகுது. அதையும் சரி பண்ணிக்குங்க’னு சொல்லிக்கிட்டே இருந்தார்.

ஒரு வழியா பாடி முடிச்சேன். ‘பாட்டு சூப்பர் சார். நல்லா வந்திருக்கு’னு சந்தோஷமா சொன்னார். நிதானமா அவர்கிட்ட, ‘இப்பவாவது  சொல்லுங்க சார்! டெம்போன்னா என்ன? ஸ்ருதின்னா என்ன?’னு கேட்டேன். ‘ஐயையோ...’னு ஷாக் ஆகிட்டார். ஆனா இதுல ஆச்சரியமான  விஷயம்... அந்தப் படமும் ஹிட். நான் பாடின பாட்டும் ஹிட். அதுக்கப்புறம் அந்த ரிஸ்க் பக்கம் போறதே இல்லை!’’ 

அனுஷ்கா என் ஃப்ரெண்ட்! - இயக்குநர் விஜய்

‘‘உங்க ஆஸ்தான அனுஷ்காவைத்தான் ‘தேவி’யில் எல்லாரும் எதிர்பார்த்தாங்க. எப்படி மிஸ் ஆச்சு?’’ ‘‘என்னோட நட்பு வட்டம் ரொம்பவே  குறைவு. ஜி.வி.பிரகாஷ், ஆர்யா மாதிரி என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்ல அனுஷ்காவும் ஒருத்தர். ரொம்பவும் சிலர்கிட்டதான் சினிமாவைத்  தாண்டியும் பேச முடியும். அதுல அனுஷ்காவும் என் லிஸ்ட்ல இருக்காங்க. அவங்க அம்மா, அப்பானு ஃபேமிலியே எனக்கு ரொம்ப  நெருக்கம். அனுஷ்கா அப்பா ரொம்ப நல்ல மனிதர்.

குடும்பத்தோட சென்னை வந்தா, எல்லாருமே எங்க வீட்டுக்கு விசிட் அடிப்பாங்க. எங்க அம்மா சமையல் அனுஷ்காவுக்குப் பிடிக்கும்.  இப்போ இயக்கியிருக்கற ‘தேவி’ படத்தோட கதை முழுசா அவங்களுக்குத் தெரியும். ‘பாகுபலி 2’ தவிர, இப்ப அவங்க தெலுங்கில் பெரிய  ப்ராஜெக்ட்ஸ் நிறைய பண்றாங்க. அதனால அவங்க ‘தேவி’யில நடிக்க முடியாமப் போச்சு!’’

- மை.பாரதிராஜா