டூடுல் ஆர்ட்டில் நம்ம சென்னை!



ஒரு ஓவியப் புதுமை

‘‘ரசிச்சது, பார்த்தது, பாதிச்சதுனு எல்லாத்தையும் சிலர் தினமும் டைரியிலும் சோஷியல் மீடியாவிலும் எழுதுறது மாதிரி என்னை பாதிச்ச  விஷயங்களை சின்னச் சின்ன கார்ட்டூன்களா வரைய ஆரம்பிச்சேன். ஓவியக்கல்லூரியில் சேர்ந்த பிறகு கார்ட்டூன்கள் ‘டூடுல்’ பெயின்டிங்ஸ்  ஹாபியா மாறிடுச்சு!’’ - ரசனையும் ரம்யமுமாகப் பேசுகிறார் ராம் சந்தோஷ். ‘கள்ளப்பட’த்தில் ஒளிப்பதிவாளர் கம் நடிகராகக்  களமிறங்கியவர். பி.சி.ராமின் அணுக்க சீடர். தற்போது ஓவியங்களுக்காகவே ‘டூடுல் மங்க்’ நிறுவனம் தொடங்கி சென்னையின் பாரம்பரிய  இடங்களை ‘நம்ம சென்னை’ என்ற பெயரில் ஓவியங்களாக்கியிருக்கிறார்.

‘‘அதென்ன ‘டூடுல் மங்க்’?’’
‘‘சரியான அனாடமியோ, ஒரு குறிக்கோளோ, மெச்சூரிட்டியோ, எல்லைகளோ எதுவும் இல்லாமல் வரையற ஓவியத்தை டூடுல் ஓவியங்கள்னு  சொல்லலாம். பௌத்த துறவிகளை ‘மங்க்’னு சொல்வாங்க. ஒரு துறவிகிட்ட இருக்க வேண்டிய நிதானம், அமைதி... அதனோடு கூடிய  அதகளமான டூடுல். இதுதான் நம்ம கான்செப்ட்! உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தப்போ, கிரிக்கெட் வீரர்களை வச்சு ‘வேர்ல்டு  கப் டூடுல்’ பண்ணியிருந்தேன். அப்புறம் ‘கபாலி’ ஃபீவர் அப்போ ‘கபாலி டூடுல்’கள் வரைஞ்சேன். இப்ப, நம்ம சென்னை!’’

‘‘உங்க இன்ட்ரோ ப்ளீஸ்...’’
‘‘சொந்த ஊர் கோவை. நான் சென்னை, கும்பகோணம் ஓவியக் கல்லூரிகளின் உருவாக்கம். ஓவியம் போலவே போட்டோகிராபியிலும்  ஆர்வம். காலேஜ் படிக்கும்போதே விகடன்ல மாணவ புகைப்படக்காரரா செலக்ட் ஆனேன். படிப்பை முடிச்சதும் பி.சி.ராம் சார்கிட்ட  சேர்ந்தேன். மூணு மொழிகள்ல 20 படங்களுக்கும் மேல வொர்க் பண்ணிட்டு, ‘கள்ளப்படம்’ மூலம் ஒளிப்பதிவாளரா அறிமுகமானேன்.  இப்போ புதுமுகங்கள் நடிக்கும் ‘வருணா’ படத்துக்கு கேமரா பண்ணிட்டிருக்கேன். கேமராவும் பெயின்டிங்கும் என் இரு கண்கள்!’’

‘‘இந்த கான்செப்ட் எப்படி தோணுச்சு?’’
‘‘இப்ப சென்னைன்னாலே அடைமழை, பேரிடர் வந்தது பத்தி நினைக்க ஆரம்பிச்சிட்டோம். அதை மறக்கடிக்கற விதமா பாசிட்டிவ்  விஷயங்களைச் சொல்லணும்னு நினைச்சேன். சென்னையின் அடையாளங்கள்னு பட்டியலிட்டால் லிஸ்ட் பெரிசா நீளும். சென்ட்ரல்  ஸ்டேஷன், பெசன்ட் நகர் பீச், கபாலீஸ்வரர் கோயில்னு அதில் 20 இடங்களைத் தேர்ந்தெடுத்தேன். இந்த இடங்களை டூடுல்களாக்கினேன்.  மேலோட்டமா பார்த்தால் சூரியக்கதிர்கள் ஒளி வீசுறது மாதிரி தெரியும்.

ஆனா, அதில் நம்மளோட டிரெடிஷனல் விஷயங்களான ஃபில்டர் காபி, ஆவி பறக்கற இட்லி, திருஷ்டிபூசணி, கெத்து பேசும் மீசைனு  நுட்பமா வரைஞ்சிருக்கேன்.  சமீபத்துல கூட அமெரிக்காவில் உள்ள ரோகன் யுனிவர்சிட்டியில் என்னோட டூடுல் கண்காட்சி வச்சிருந்தேன்.  நினைச்சதை விட செம ரெஸ்பான்ஸ். அனுப்பின எல்லாப் பொருட்களும் வித்துடுச்சு!’’

‘‘என்ன சொல்றார் பி.சி.ஸ்ரீராம்?’’
‘‘அவர்கிட்ட அசிஸ்டென்ட்டா  சேர்ந்தப்போ, கிடைக்கற டைம்ல எதாவது வரைவேன். ‘நல்லா இருக்குமோ, இருக்காதோ’ங்கற தயக்கத்துல  யார்கிட்டயும் காட்டாம மறைச்சு மறைச்சு வரைவேன். ஆனா பி.சி.சார் அதைப் பார்த்துடுவார். ‘ரொம்ப நல்லா இருக்கு’னு பாராட்டி,  தொடர்ந்து வரைய வச்சு அழகு பார்ப்பார். கேமராமேன் ஆனாலும் இன்னமும் ஓவியத்தின் மேல் தீராத காதல் இருக்கறதுக்கு சாரும் ஒரு  காரணம்.

என்னோட லைட்டிங், மேக்கிங் எல்லாம் சாருக்குப் பிடிக்கும். நான் ஒளிப்பதிவாளரா அறிமுகமான ‘கள்ளப்படம்’ பத்தி சமீபத்தில் கூட ஒரு  பேட்டியில் பாராட்டினார். ‘அவன் ஒரு ஓவியன். ஸோ, ஃப்ரேம் எங்கே வைக்கறதுனு நல்லாவே தெரியும்’னு நிறைய பேர்கிட்ட  சொல்லியிருக்கார். என் ஓவியக் கண்காட்சி சென்னையில் நடந்தப்போ சார்தான் வந்து ஆசீர்வதிச்சார்!’’

‘‘அடுத்து...’’
‘‘இப்போ எல்லாருமே பழசை நோக்கித் திரும்பிட்டிருக்காங்க. லேடீஸ் ஜாக்கெட்ல பஃப் கை வருது. இயற்கை உணவுகள் பக்கம் கவனம்  செலுத்துறாங்க. போட்டோகிராபியில் கூட பழைய காலத்து வின்டேஜ் டோனை விரும்புறாங்க. திருக்குறள், ஆத்திச்சூடினு நல்ல கருத்துக்கள்  இங்கே எக்கச்சக்கமா கொட்டிக் கிடக்கு. அதையெல்லாம் டீன் ஏஜ் ரசிக்கற மாதிரி டூடுல் பண்ணப் போறேன்.

அமெரிக்காவில் 3 இடங்கள்ல டூடுல்ஸ் கண்காட்சி இந்த ஆண்டு நடத்தத் திட்டமிட்டிருக்கேன். உ.வே.சாமிநாதய்யர், வ.உ.சி., காமராஜர்,  அப்துல் கலாம், எம் எஸ்.சுப்புலட்சுமி, நம்மாழ்வார்னு நம்ம ஆளுமைகளை வச்சு டூடுல்ஸ்ல ஒரு காலண்டர் டிசைன் பண்ணியிருக்கேன்.  இந்த வருஷக் கடைசியில் அதை ரிலீஸ் பண்றதா ப்ளான்!’’

- மை.பாரதிராஜா