உறவெனும் திரைக்கதை



ஈரோடு கதிர்

ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி

மரணமெனும் தூது வரும்போது, அது யாருக்கும் துன்பம் தராததாக அமைந்துவிட வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக இருக்கிறது. அது வாய்க்கப் பெறுகிறதா என்பதை வாழ்க்கை அனுபவங்களோடு பேசும் கட்டுரை இது!



இறுதிக் கணங்களின் வழியனுப்பல்! அவர் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவரென அவரின் மத்திம வயதுக் காலத்திலிருந்தே அறிவேன். ஊர் உலகத்தில் செலுத்த முடியாத அதிகாரத்தை தன் குடும்பத்திற்குள் எல்லாவற்றிலும் செலுத்தியபடியே இருப்பார். மகனுக்கு திருமணமாகி, பேரப் பிள்ளை தம் தோளுக்கு நிகராக வளர்ந்த நிலையிலும் தன் அதிகாரத்திற்குள் குடும்பத்தை வைத்திருந்தார்.

காலம் அவரின் அதிகாரத்தை வெளுத்தது. முதுமையின் உச்சத்திற்கு நகர்ந்தபோது, அதுவரை அவர் செலுத்திய அதிகாரம், அவர்மீதே வகை வகையாய் திருப்பி வீசப்பட்டது. அவரின் மரணப் படுக்கைக் காலத்தில் பார்க்கச் சென்றிருந்தேன். விவசாய நிலத்தின் முனையில் இருக்கும் வீடருகே தனியாக இருந்த மாட்டுக் கொட்டகைக்கு அழைத்துச் சென்றனர். நைந்த கயிற்றுக் கட்டிலில் பழைய துணிகளின்மீது கிடத்தப்பட்டிருந்தார். இடுப்பு வரை சாக்குப் பை போர்த்தப்பட்டிருந்தது.

இயற்கை உபாதைகளைக் கட்டுப்படுத்தும் திராணியற்றவராய் ஆகிவிட்டதால் அந்தப் பை. நாற்றங்களுக்கிடையே பரிதவித்தபடி முனகிக் கொண்டிருந்தார் அவர். நினைவு தப்பிப் போகாதது பெரும் தண்டனையாகத் தோன்றியது. இடுப்பு வரை போர்த்தப்பட்டிருந்த சாக்குப் பையில் அமர்ந்திருந்த ஈக்கள் அவரின் அதிகாரத்தை தம் கால்களில் கைப்பற்றியபடி பறந்து செல்வதாக நினைத்துக்கொண்டேன்.



மர வேலைப்பாடுகள் நிறைந்த அந்த ஆயிரம் சதுர அடி வீட்டில் இருவர் மட்டுமே வசிக்கிறார்கள். அரசுத்துறையில் மிகப்பெரிய வேலை பார்த்து ஓய்வு பெற்றபிறகு, அதுவரை சம்பாதித்த பணத்தில் எழுப்பிய மாளிகையென்றே சொல்லலாம். அதுபோக நகரின் எல்லாத் திசைகளிலும் வீடுகள் கட்டி வாடகை வருமானம் உண்டு. ஒரே பிள்ளை திருமணமாகி பணக்கார தேசத்தில் இருக்கிறார்.

ஒருநாள் மூங்கில்களும், தென்னங்கீற்றுகளும் அந்த வீட்டிற்கு வந்திறங்கின. வீட்டின் பக்கவாட்டுப் பின்புறத்தில் சரிவான குடிசையொன்று வேயப்பட்டது. ஓரிரு நாட்களில் குடும்பத் தலைவனின் முதிர்ந்த தாயார், கிராமத்திலிருந்து அழைத்து வரப்பட்டு குடிசையில் குடி வைக்கப்பட்டார். நன்றாக நடந்து வந்தவர், அக்கம்பக்கம் இருப்பவர்களிடம் பேசவும்கூட செய்தார்.

நாட்கள் செல்லச் செல்ல... ‘‘பசிக்குது... சாப்பிட ஏதாவது கொண்டாங்க!’’ என்ற முனகல்கள் குடிசையிலிருந்து எழும்பத் தொடங்கின. படுக்கையிலேயே எல்லாம் என ஆகிவிட்டதாகவும், அதனால் உணவைக் குறைத்ததாகவும், மருமகள் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார். அவரைக் கழுவி விட ஏதுவாக பக்கவாட்டில் கீற்றுகள் ஓரடி தூரம் உயர்த்தியே கட்டப்பட்டிருந்தன. கீழே இருந்த இடைவெளியில் தயக்கமின்றி மார்கழிக் குளிர் புழங்கியது. குறை உணவு, குத்தும் குளிர்... நான்கே வாரங்களில் அந்த மூதாட்டியை முற்றிலும் சீர்குலைத்தது. அவர் மரணப் படுக்கைக்கு நிலை மாற்றப்பட்டிருந்தார்.

திரைப்படத்தின் நிறைவுக்காட்சி போல் ஒருநாள் இரவு 10 மணியளவில் வீடு பரபரப்படைந்தது. 11 மணிக்கு குளிர் சவப்பெட்டி வந்திறங்கியது. பாட்டியின் உடல் வீட்டிற்குள் படியேறி, வரவேற்பறையில் வீற்றிருந்த குளிர்சாதனப் பெட்டிக்குள் படுத்தது. பாட்டி புன்னகைத்தபடி இருக்கும் பழைய படம் ஒன்று பெட்டியின் தலைமாட்டில் வைக்கப்பட்டு பூக்கள் தூவப்பட்டன. வருவோர் அஞ்சலி செலுத்துவதற்காக அருகில் பெரிய தாம்பாளத்தில் உதிரிப்பூக்கள் சிரித்துக் கொண்டிருந்தன.

டைகோவுக்கு ஆறு வயது இருக்கும்போது அவனுடைய தந்தை வேறொரு பெண்ணோடு சென்றுவிட,  தாயின் நிழலில் வளர்கிறான். அவன் ஒரு ஜப்பானிய செல்லோ இசைக் கலைஞன். இரண்டு வருடங்களுக்கு முன்பு தாய் இறந்துபோகிறார். தந்தையைப் பற்றிய அவன் நினைவு ஒரே ஒரு உரையாடல்தான். ‘‘மொழி பழக்கமில்லாத காலகட்டத்தில் மென்மையான கூழாங்கல்லை மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், கரடுமுரடான கல்லை கவலையை வெளிப்படுத்தவும் மக்கள் பயன்படுத்தினர்’’ என்பது அவன் தந்தை சொன்னது.

கால மாற்றத்தில் இசைக் கச்சேரிகளுக்கு ஆதரவு குறைந்ததால், அவன் இணைந்திருந்த இசைக்குழு கலைக்கப்படுகிறது, அவனது வேலை பறி போகிறது. மனைவியுடன் தன் கிராமத்திற்கே திரும்பி வேலை தேடுகிறான். ‘Departures’ என்ற வார்த்தையை மையப்படுத்தி ஒரு நிறுவனத்தில் வேலைக்கு ஆள் தேவை எனும் விளம்பரம் வருகிறது. பயணங்களை ஏற்பாடு செய்யும் நிறுவனம் என நினைத்து வேலை தேடிச் செல்ல, அது ‘இறந்த உடல்களை சுத்தம் செய்து அலங்கரித்து வழியனுப்பும் வேலையைச் செய்யும் நிறுவனம்’ என்பது புரிவதற்குள் வேலையும், முதல் நாளே ஒரு தொகையும் சம்பளமாக வழங்கப்படுகிறது. பணத் தேவை அவனை அங்கு உதவியாளனாக இருக்க இசைய வைக்கிறது.

முதல் நாளே கவலை ஏற்படுத்துவதாக அமைகிறது... இறந்து இரண்டு வாரங்களாகி அழுகிப் போன ஒரு உடலை சுத்தம் செய்யும் பணியில் உதவியாளனாக இருக்கவேண்டி வருகிறது. துர்நாற்றம் தாங்காமல் அங்கேயே வாந்தியெடுக்கிறான். வீடு திரும்பும் வழியில் பேருந்தில் அவன் மீது கெட்ட வாடை வீசுவதாகச் சொல்கிறார்கள். இடையிலேயே இறங்கிக் குளித்து பின் வீடு திரும்புகிறான். வீட்டில் நறுக்கி வைத்திருக்கும் கோழிக்கறியைக் கண்டு வாந்தி எடுக்கிறான்.

அடுத்தடுத்து பலவிதமான மரணங்கள் சம்பவித்திருக்கும் வீடுகளுக்கு உதவியாளனாகச் செல்கிறான். முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். இவனுடைய வேலை குறித்து அறிந்த மனைவி இவனை விட்டுப் பிரிந்து செல்கிறாள். ஜப்பானில் இறந்த உடலின் நவ துவாரங்களையும் சுத்தம் செய்து, உடல் முழுக்க வாசனைத் திரவியங்களால் துடைத்து, இறந்தபோது இருக்கும் முகத்தை, வாழ்ந்த காலத்தில் இருந்த இனிமையான தருணத்தின் முகமாய் மாற்றுவது சம்பிரதாயம்.

இறந்தவரின் வாழ்க்கைத் தருணத்தில் தங்களுக்குப் பிடித்த புகைப்படங்களைக் காட்டி அதேபோல் ஒப்பனைகள் செய்து, அலங்கரித்து அடக்கம் செய்ய அனுப்புகிறார்கள் அவரின் உறவுகள். டைகோ மிக நேர்த்தியாக அதைச் செய்கிறான். அவன் செய்யும் ஒப்பனைகளைக் காண்கையில், அதற்காகவே மரணித்துப் போகும் ஆசை வருவதொன்றும் மிகையில்லை. ஒரு கட்டத்தில் மனைவி மனம் மாறி திரும்பி வருகிறாள். அவன் குடும்பத்திற்கு நெருக்கமான, அங்கு குளியற்கூடம் நடத்தி வரும் பெண் இறந்துபோக, அந்த உடலை சுத்தம் செய்து ஒப்பனை செய்கிறான். அதை நேரில் காணும் அவன் மனைவி நெகிழ்கிறாள்.

மரணங்களின் தன்மைகளுக்கேற்ப அங்கு நிலவும் மனநிலைகள் அவனை மேலும் பக்குவப்படுத்துகின்றன. தன் பணியில் முழு நேர்த்தியை அடைந்திருக்கும் நிலையில் ஒருநாள் அவன் அலுவலகத்தில் இருக்கும் சமயத்தில் மனைவி அழைக்கிறாள். அவனுடைய தந்தை இறந்துபோனதாகவும், அவனுடைய வருகைக்காக உடல் காத்திருப்பில் உள்ளதாகவும் சொல்கிறாள். தன்னையும் தாயையும் விட்டுப் போன, முகமே மறந்துபோன  தந்தையின் மரணத்திற்குச் செல்ல மறுக்கிறான். அலுவலகத்தில் பணியிலிருக்கும் பெண் தன் கதையைச் சொல்லி, டைகோ சென்றே ஆகவேண்டுமென வற்புறுத்துகிறாள்.

அரை மனதோடு தந்தையின் உடல் இருக்கும் ஊருக்குப் பயணிக்கிறான். அவன் வருகைக்காகக் காத்திருந்தவர்கள், அவன் வந்து உடலைக் கண்டதும், அடக்கம் செய்ய முனைகின்றனர். அவர்களை ஒதுக்கி விட்டு தந்தையின் உடலைச் சுத்தம் செய்து ஒப்பனை செய்யத் துவங்குகிறான். மூடி வைத்திருக்கும் அவர் கையை விரிக்கும்போது, உள்ளங்கையில் ஒரு அழகிய சிறிய கூழாங்கல் இருக்கிறது.

2008ம் ஆண்டு வெளியான ‘டிபார்ச்சர்ஸ்’ ஜப்பானியப் படத்தில், மரணமடைந்தபின் உடலை சுத்தம் செய்து ஒப்பனை செய்யும் கலையைப் பார்த்தவுடன் எனக்கு கிராமங்களில் முதிர்ந்து உதிரும் மரணங்களில் செய்யும் சடங்குகள் நினைவிற்கு வந்தன. எண்ணெய், அரப்பு தேய்த்துக் குளிப்பாட்டுதல், முகச்சவரம் செய்தல், கோடித் துணி போர்த்துதல் உட்பட ஒவ்வொரு சமூகமும் தங்கள் பழக்கத்திற்கேற்ப செய்து வழியனுப்புகின்றன.

அதே நேரம் ‘டிபார்ச்சர்ஸ்’ படம் ஜப்பானிய பழக்கத்தை மட்டுமே ஆவணப்படுத்துவதுபோல் காட்டாமல், சூழல் ஒரு மனிதனை எங்கெல்லாம் இடம் மாற்றி வைக்கிறது, அந்த இடங்களுக்கேற்ப மனிதன் தன்னை வெகு இயல்பாக எப்படித் தகவமைத்துக்கொள்கிறான் என்பதையும் டைகோ மூலம் பேசுகிறது.

திண்ணைகளில் அமர்ந்தபடி மரணதேவனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கிராமத்து முதியவர்களிடம் ‘‘என்ன ஆசை வச்சிருக்கீங்க?’’ எனக் கேட்டால், இன்னும் இத்தனை வருடம் வாழ வேண்டுமெனச் சொல்வதைவிட, ‘‘நல்ல சாவு வரணும்!’’ என்பார்கள். ‘மரணத்திற்குப் பின்னால் என்ன?’ என்ற சூன்யமே மரணம் குறித்த பயத்தை விதைக்கிறது. போலவே, முதுமையில் மரணத்தை நோக்கிய பயணத்தில் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் துன்பமேதும் தராமல் சென்றிட வேண்டும் என்பதுதான் பெரிய பயமாக முன்நிற்கிறது.

அந்த அதிகாரம் செலுத்தியவரோ, அந்த தாயாரோ, டைகோவின் தந்தையோ... உலகம் முழுதும் மரணம் யாருக்கும் பொதுவானதுதான். பிள்ளைகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு தவறுகளை அவர்களும்கூட இழைத்திருக்கலாம். அந்த வலிகளை, வடுக்களை ஒற்றை வரி சமாதானத்தில் துடைக்க முடியாமல் போக நேரலாம். ஆனால் மரணமென்பது அவர்களுக்கு மட்டுமேயான ஒரு சாபம் அல்ல. அது ஒரு பொது விதி. பொது வரம். பொதுச் சாபம். எந்த நொடியில் எவருக்கு வேண்டுமானாலும் அது வரலாம்.

வாழ்பவர்கள் செய்யவேண்டிய முக்கியமானதொரு கடமை... வாழ்ந்து முடிப்பவர்களின் இறுதிக் கணங்களில் மன்னிக்க வேண்டியிருப்பின் மன்னிப்பதுவும், நம்மால் இயன்றதை நேர்மையாகச் செய்வதும்தான். காரணம், ‘இறுதிக் கணங்கள் எப்படி அமையும்’ என்பதை அவ்வளவு எளிதில் யாரும் தீர்மானித்துவிட முடியாது. ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பது அவர்களுக்கும் பொருந்தும், நமக்கும் பொருந்தும், நாளை வருவோருக்கும் பொருந்தும்

இறந்தவரை சுத்தம் செய்து, இறந்தபோது இருக்கும் முகத்தை, வாழ்ந்த காலத்தின் இனிமையான முகமாய் மாற்றுவது சம்பிரதாயம்.

முதுமையில் மரணத்தை நோக்கிய பயணத்தில் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் துன்பமேதும் தராமல் சென்றிட வேண்டும் என்பதுதான் பெரிய பயமாக முன்நிற்கிறது.

(இடைவேளை...)