குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி

ஓவியங்கள்: அரஸ்

கிழிக்கப்படாத காலண்டர் சொல்லும், மனைவி ஊருக்குப் போன சரியான தினத்தை. இப்படிப்பட்ட காலண்டர்கள் கிழிக்கப்படாத நாட்களில், சமையலறை என்பதும் ‘சென்னைக்கு மிக அருகில்’ தூரம்தான். நம்ம வீட்டு சமையலறையில் பெருச்சாளி ஒண்ணு தன் பொண்டாட்டிக்கு பிரசவம் பார்த்து பத்து புள்ளை குட்டியோடு குடும்பம் நடத்தினாலும் நமக்குத் தெரியாது. அடையாளத்துக்காக அடுப்பு மேல அஞ்சு ரூபா காசை மனைவி வைத்துவிட்டுப் போயிருந்தாலும், அது அங்குலம் கூட நகர்ந்திருக்காது. காபி போட சர்க்கரை டப்பா எடுக்கக்கூட எறும்புகள் உதவிகள் செய்தால்தான் உண்டு.



மனைவி வீட்டில் இல்லாத பல நாட்களில் அதிகபட்சமாக ரெண்டு முறை சமையலறைக்கு நாம் செல்வதே அதிசயம்தான். மனைவி இருக்கும் நாளில் மட்டும் நாம் எத்தனை தடவை சமையலறை பக்கம் செல்கிறோம்? வேடிக்கையான உண்மை என்னவெனில், நமது வீட்டுக் குளியலறையில் நாம் இருந்த நேரத்தை விட, நமது வீட்டு சமையலறையில் இருந்த நேரம் வெகு குறைவாகவே இருக்கும். சில சமயங்களில் பல சமையலறைப் பொருட்கள் ஆண்களைப் பொறுத்தவரை அருங்காட்சியகப் பொருட்கள்தான்.

சமையலறைதான் பல பெண்களுக்கு பணம் வைக்கும் பீரோ, சமையலறைதான் பல பெண்களுக்கு பூஜையறை, சமையலறைதான் பல பெண்களுக்கு ரகசியங்கள் பரிமாறிக்கொள்ளும் இடம். சமையலறைக்குள்ளேயே ஒரு சாம்ராஜ்ஜியம் நடத்தி முடித்துவிட முடிகிறது பெண்களால். அவர்களின் முணுமுணுப்பும் மூச்சுக்காற்றும் அந்த பத்துக்கு பத்து அறைகளிலேயே பிறந்தும் இறந்தும் போகிறது.  நாம் எப்போதாவது நேரம் செலவிடும் இப்படிப்பட்ட சமையலறைகளில்தான் நமது அம்மா, மனைவியென பல பெண்களுடைய வாழ்வின் பெரும்பகுதிகள் வாழப்படாமலோ, இல்லை நமக்காக வாழப்பட்டோ முடிந்து போகின்றன.

குடும்பச் சண்டைகள் தெருவுக்கு வந்தாலே அசிங்கம்னு நினைச்ச தமிழ்ச் சமூகம், இப்ப குடும்பச் சண்டைகளை டி.வி ஷோவுக்கே கொண்டு வருது. நமக்கும் நம்ம பொண்டாட்டிக்கும் நடுவுல இருக்கிற பிரச்னைகள் நமக்குத் தெரியுதோ, இல்லையோ... இந்த மாதிரி பஞ்சாயத்து பண்ற நிகழ்ச்சிக்காரனுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு. பெத்த அம்மாவை, ‘ஏய் ஓய்’னு சொல்றவன், கட்டுன புருஷனை ‘டா’ போட்டு பேசற பொண்ணுங்க கூட, நிகழ்ச்சி நடத்தறவங்களை வார்த்தைக்கு வார்த்தை ‘மேம்’ போட்டு பேசுதுங்க.

படிச்சவனுக்கு படிப்புக்கான கவுன்சலிங் இருக்கு, குடிக்கிறவனுக்கு அவனை திருத்தறதுக்கு கவுன்சலிங் இருக்கு. ஆனா இவனுங்க இந்த மாதிரி பஞ்சாயத்து நிகழ்ச்சில பண்ணுறானுங்க பாருங்க கவுன்சலிங்கு, அதுதான் கிங் ஆஃப் கவுன்சலிங். வீட்டு ஒத்தாசைக்கு ஆளுங்களப் புடிக்க முடியல, தமிழக பி.ஜே.பியால தொண்டர் படைக்கு ஆளுங்களப் புடிக்க முடியல, மதிமுகவுக்கு ஓட்டு போட ஒரு ஆளை புடிக்க முடியல, ஆனா இந்த பஞ்சாயத்து நிகழ்ச்சிக்காரங்க மட்டும் எப்படித்தான் ஒவ்வொரு எபிசோடுக்கும் ஆளுங்களை இழுத்துட்டு வர்றாங்களோ? என் இனிய தமிழ் மக்களே, இனிமேலாவது வீட்டுல ஒரு பிரச்னைன்னா, உங்களுக்குள்ள பேசித் தீர்த்துக்கங்க! அதை விட்டுட்டு அடுத்தவனை பேச விட்டு தீர்க்க நினைக்காதீங்க!

அழுக்காக இருக்கும் பலவற்றைக் கைகளால் தொடாத நாம, எவ்வளவு அழுக்குன்னாலும் கைல சந்தோஷமா ஏந்திக்கிற ஒரே விஷயம் ரூபாய் நோட்டுகள்தான். பாய்சன்  குடிச்சா கூட பொழைச்சுக்கலாம்... ஆனா, நாட்டுக்குள்ள புழங்குற பத்து ரூபா நோட்டை வாய்ல வச்சா செத்துடுவோம்னு நினைக்கிறேன். ஊருல இருக்கிற அம்புட்டு அழுக்கும் தினம் நாம் புழங்குற கரன்சி நோட்டுகளில்தான் இருக்கு. ரூபாய் நோட்டுக்களில் இருக்கும் அழுக்குகளை பார்த்தா, நம்மாளுங்க கரன்சியை கைல புழங்குறாங்களா... இல்லை, குப்பைக்  கூடைல வச்சுப் புழங்குறாங்களானு சந்தேகம் வருது.

பத்து ரூபா தோசை பிஞ்சிருந்தா ஏத்துக்காதவன், அம்பது ரூபா நோட்டு கிழிஞ்சிருந்தா கூட ஏத்துக்குவான். அவ்வளவு மதிப்புமிக்க ரூபாய் நோட்டுக்களில் எப்படிய்யா இப்படி டன் கணக்குல அழுக்கு பண்றீங்க? உழைக்கிற ஜாதிகள்கிட்ட பணம் அதிகமா புழங்குனாக்கூட அவங்க அழுக்கு பண்றாங்கனு சொல்லலாம். வியர்வையினால கை சுத்தமா இருந்தாலும், அவங்ககிட்ட சுத்தமா பணப்புழக்கம் இல்ல. சரி, பணம் பல கைக்கு மாறிப் போகுற லாஜிக் பார்த்தாலும், நாட்டுல பணக்காரன்கிட்ட போற  பணம் வெளிய வர்றதே இல்ல. அப்புறம் எப்படி பணமெல்லாம் அழுக்காகுது?

ஒருவேளை நம்ம பாக்கெட்டுக்குப் பின்னால இருக்கும் நெஞ்சோட அழுக்குதான் அதுல ஒட்டிக்குதோ? ஆகறது ஆகட்டும், அடுத்து நோட்டு அடிக்கிறப்ப, காந்தி தாத்தாவுக்கு டஸ்ட் அலர்ஜி வராத மாதிரி, மூக்குல கிளவுஸ் மாட்டி பிரின்ட் அடிங்க! பாவம், பணம் எத்தனை அழுக்கானாலும் பொக்கை வாய திறந்து பொழுதுக்கும் சிரிச்சுக்கிட்டு இருக்காரு!

* பணக்காரனைப் பார்த்து கூட பொறாமையா இல்ல, பணத்தை செலவு பண்றவனைப் பார்த்தாதான்.
* ஏழையைப் பார்த்து கூட பரிதாபமா இல்ல, கஞ்சனை பார்த்துதான்.
* டாக்டர்களைக் கண்டு பயமில்லை, பெரும் ஹாஸ்பிடல்களைக் கண்டால்தான்.
* நல்லவங்களைப் பார்த்து கூட மரியாதை வரல, நேர்மையானவங்கள பார்த்துதான்.
* நோயாளிகளை நினைச்சுக் கூட பாவமா இல்ல, ஏமாளிகளை நினைச்சுத்தான்.
* மொக்கை காமெடி பண்றவங்களைப் பார்த்து கூட கோவம் வர்றதில்ல, அதையும் காமெடினு நம்பி சிரிக்கிறவங்களப் பார்த்தாதான்.
* விலை அதிகமா விற்கும் வியாபாரிகளைப் பார்த்து கூட கவலையா இல்ல, வந்த விலைக்கு விற்கும் விவசாயிகளைப் பார்த்துதான்.
* அரசியல்வாதிகளைப் பார்த்து கூட பயமா இல்லை, அதிகாரிகளைப் பார்த்துதான்!