நியூஸ் வே



* சமீபத்தில் வெளியான ‘ஃபைண்டிங் டோரி’ படத்தை சிறுவர்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள். அதில் ‘கஜினி’ மாதிரி ஷார்ட் டைம் மெமரி லாஸ் கேரக்டரில் வரும் டோரி மீனுக்கு ரசிகர்கள் பெருகிவிட்டார்கள். நிஜத்தில் இது ‘ப்ளூ டேங்’ எனும் வகையைச் சேர்ந்த மீன். அதனை தங்கள் வீட்டில் வளர்க்க ஆசைப்பட்டு சிறுவர்களும் பெற்றோரும் கடைகளை மொய்க்கிறார்கள்.



இந்தியச் சூழலில் வளராத அந்த வகை மீன்களை இறக்குமதி செய்து ரூ.2500 முதல் ரூ.5000 வரை விற்கிறார்கள். ‘‘இப்படி வாங்கிச் செல்லும் மீன்களும் அதிக நாட்கள் வாழப் போவதில்லை. இந்த வகை மீன்கள் பவளப்பாறை படுகைகளில் மட்டுமே வாழும். கண்ணாடிப் பெட்டிக்குள் இனப்பெருக்கம் செய்ய வைப்பதும் கஷ்டம். எனவே, உலகம் முழுதும் இந்த மீன்களுக்கு ஏற்பட்டுள்ள கிராக்கியால் இவை மொத்தமாக கடலில் இருந்து வேட்டையாடப்பட வாய்ப்பு அதிகம்!’’ என்கிறார்கள் வளர்ப்பு மீன் கடை நடத்தும் நல்லவர்கள்!

* குடும்பக் கட்டுப்பாட்டை தீவிரமாக வலியுறுத்தும் தேசத்தில், அதிக குழந்தைகள் பெற்றதற்காக பெண்களுக்கு பரிசு கொடுப்பது விநோதமாகத்தானே இருக்கும்! மணிப்பூரின் பழங்குடி அமைப்பான ‘இரம்டாம் கன்பா அபுன்பா லுப்’, அதிக குழந்தைகள் பெற்று, அவர்களுக்கு நல்ல கல்வியும் தரும் தாய்மார்களுக்கு ஆண்டுதோறும் பரிசுகள் வழங்குகிறது. இந்த ஆண்டு முதல் பரிசு பெற்றவர், 15 குழந்தைகளின் அம்மா. 11 குழந்தைகள் பெற்றவருக்கு இரண்டாம் பரிசு. 9 குழந்தைகள் பெற்ற இரண்டு பெண்கள் மூன்றாம் பரிசு பெற்றனர். பூர்வகுடிகளின் எண்ணிக்கையை உயர்த்தவே இப்படியான முயற்சிகளாம்!



* 34வருடங்களுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபியில் இரண்டாம் இடம் பெற்று பதக்கம் வென்று சாதித்திருக்கிறது இந்திய ஹாக்கி அணி! 1978ல் ஆரம்பிக்கப்பட்ட சாம்பியன்ஸ் டிராபியில், இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியது இதுதான் முதல் முறை! ஆஸ்திரேலியாவுடனான இந்தப் போட்டி டிரா ஆனதால், பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இதில், நடுவர்களின் சர்ச்சையான தீர்ப்பு இந்திய வீரர்களை எரிச்சலடையச் செய்ய, முடிவு அறிவிக்க தாமதமானது. இறுதியில் இந்திய அணி இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது!

* கூட்டங்களில் பங்கேற்கும்போது பிரதமர் நரேந்திர மோடி குடிக்கும் மினரல் வாட்டர் பிராண்ட், டாடா தயாரிப்பான ‘ஹிமாலயன்’.

* மயக்க ஊசி போட்டு பிடிபட்ட ‘மதுக்கரை மகாராஜா’ யானை இறந்தது, கண்ணீர் அஞ்சலி ஃப்ளக்ஸ் போர்டு வைத்து போஸ்டர் ஒட்டும் அளவுக்கு கோவைவாசிகளை சோகத்தில் ஆழ்த்திவிட்டது. ‘கட்டையன் என்கிற மதுக்கரை மகாராஜ்... நீ இந்தக் காட்டை விட்டுப் போவாய் என்று நினைத்தோம். ஆனால், உலகை விட்டுப் பிரிவாய் என்று நினைக்கவில்லை’ என உருகுகிறார்கள் அவர்கள்.

வனத்துறையினர் அதிக அளவில் மயக்க மருந்து செலுத்தியதே யானையின் இறப்புக்குக் காரணம் எனக் கடும் சர்ச்சையும் எழுந்துள்ளது. ‘‘யானைக்கு மயக்க மருந்து கொடுத்த அதே டாக்டர்தான் போஸ்ட்மார்ட்டமும் செய்திருக்கிறார். இதனால், யானை இறந்த காரணம் தெரியாமல் போகலாம். பொறுப்புணர்வுள்ள மருத்துவரைக் கொண்டு போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும். யானையின் வழித்தடங்கள் எல்லாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதையும் அரசு சரி செய்ய வேண்டும்!’’ என்கிறார் பசுமைப் போராளியான யோகநாதன்.



* ஒரே நேரத்தில் 20 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ! பி.எஸ்.எல்.வி சி-34 ராக்கெட் வழியாக செலுத்தப்பட்ட இவற்றில் 17 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள். தமிழகத்தின் சத்தியபாமா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய ஒன்றரை கிலோ செயற்கைக்கோளும் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இருபத்தி ஆறே நிமிடங்களில் மொத்த பணிகளையும் கச்சிதமாக முடித்தது ராக்கெட். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ராக்கெட்டில் 37 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது ரஷ்யா. அதை இஸ்‌ரோ முறியடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

* ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனர் பில் கேட்ஸ் தனது அறக்கட்டளை மூலம், ஏழை நாடுகளில் இருக்கும் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் கோழிகள் வழங்க முடிவெடுத்தார். ஆனால் பொலிவியா, ‘‘உங்கள் உதவியே எங்களுக்கு வேண்டாம்’’ என முகத்தில் அடித்தது போல சொல்லியிருக்கிறது. ‘‘எங்களின் பாரம்பரியம் தெரியாமல் அவர் பேசுகிறார். புரிந்ததும் எங்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்பார்’ என்கிறார் பொலிவிய ஊரக மேம்பாட்டு அமைச்சர் சீஸர் கொஸாரிகோ.

ஆண்டுக்கு 20 கோடி கோழிகளை உற்பத்தி செய்யும் பொலிவியா, அதில் பெருமளவை ஏற்றுமதி செய்கிறது. ‘தென் அமெரிக்காவின் வலுவான பொருளாதாரம் என மதிப்பிடப்படும் பொலிவியாவை ஏழை நாடாக பில் கேட்ஸ் எப்படிச் சொல்லலாம்’ என்பதே அவர்களின் கோபம். 

* மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை காமிக்ஸ் வடிவில் கொண்டு வர இருக்கிறது, அவர் உருவாக்கிய நவஜீவன் டிரஸ்ட்! முதல்கட்டமாக இதனை ஆங்கிலம் மற்றும் குஜராத்தி மொழிகளில் காந்தி ஜெயந்தி அன்று வெளியிட இருக்கிறார்கள்.