நினைவோ ஒரு பறவை



நா.முத்துக்குமார்
ஓவியங்கள்: மனோகர்


த for தமிழன்டா!
கூழாங்கல்லில் தெரிகிறது
நீரின் கூர்மை!
- இயக்குநர் லிங்குசாமி



அடுத்த நாள் காலையில் உலக அதிசயங்களில் ஒன்றான நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்க்க கிளம்பினோம். ‘மனசு பதைபதைக்கிறது யாராவது அருவியை நீர்வீழ்ச்சி என்றழைத்தால்’ என்கிற  கவிஞர் விக்ரமாதித்யனின் கவிதை ஞாபகம் வந்தது. ஆம், நீர் என்றைக்கும் வீழ்ச்சியடைவதில்லை. அது வீழ்வது எல்லாம் எழுவதற்கே! ஆகையால், நாங்கள் நயாகரா அருவியைப் பார்க்க கிளம்பினோம்.

நாங்கள் என்றால் நான், ஹரி, ஹரியின் மனைவி உமா, அவர்களின் இரண்டு மகன்கள், சுதாகர், சுதாகரின் மனைவி சுகுணா, அவர்களின் இரண்டு மகள்கள் ஆக மொத்தம் ஒன்பது பேரும் ஒரு பெரிய காரில் நியூஜெர்ஸியின் மெட்டாசினில் இருந்து நியூயார்க்கின் கடைக்கோடியில் இருக்கும் நயாகராவை நோக்கிப் பயணப்பட்டோம்.

எட்டு முதல் பத்து மணி நேர பயண தூரம். போகும் வழியெல்லாம் அடர்ந்த காடுகளும், மலைப் பாதைகளும், வானத்தின் இரண்டு பக்கமும் வண்ணத் தோரணங்கள் போல் எங்களுடன் பயணித்து வந்த நூற்றுக்கணக்கான வானவில்களுமாய் என் வாழ்வின் மறக்க முடியாத பயணம் அது. நடுநடுவே அமெரிக்காவின் குக்கிராமங்கள் குறுக்கிட்டன. இன்னமும் பாரம்பரியம் கெடாமல் பழைய கட்டிடங்களையும், வீடுகளையும் பாதுகாத்து வரும் அமெரிக்கர்களை நினைத்து வியப்படைந்தேன்.



அமெரிக்காவில் மக்கள்தொகை குறைவு. ஆதலால், இங்கொன்றும் அங்கொன்றுமாய் காடுகளிலும், மலைகளிலும் தனித்தனி வீடுகளைப் பார்த்ததில் பரவசம் கொண்டேன். ‘வாழ்வின் எஞ்சிய நாட்களை இப்படித்தான் தன்னந்தனிமையில் கழிக்க வேண்டும்’ என்று எண்ணிக் கொண்டேன். ஆனால், இந்திய இரைச்சலுக்கும், சொந்த பந்தங்களின் கூச்சல்களுக்கும் பழகிப் போன என் மனதிற்கு அதிகபட்சம் ஐந்து நாட்களுக்கு மேல் இந்த அமைதி தாங்காது என்பதும் புரிந்தது.

காலை பத்து மணிக்குக் கிளம்பி இரவு எட்டு மணிக்கு நயாகரா வந்தடைந்தோம். ‘‘இரவு விளக்கொளியில்  நயாகராவைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சி’’ என்று சுதாகர் சொன்னதால், அதற்கு ஏற்றதுபோல பயணத்தை அமைத்துக்கொண்டோம். வண்ண வண்ண விளக்குகளின் பின்னணியில் நயாகரா தன் தண்ணீர் தோகையை விரித்து விரித்து ஆடிக் கொண்டிருந்தது. அங்கிருந்து கிளம்ப மனமில்லாமல், நேரமானதால் தங்கும் விடுதிக்கு கிளம்பினோம்.

மறுநாள் காலையில் பார்த்த நயாகரா வேறு மாதிரி இருந்தது. எங்கு திரும்பினாலும் இந்தியர்கள். ஒரு பக்கம் ‘ஜருகண்டி... ஜருகண்டி...’ எனும் சுந்தரத் தெலுங்கர்கள்... இன்னொரு பக்கம் பான் பராக் போட்டு பிளாட்பார்மில் துப்பும் வட இந்தியர்கள்... நடுநடுவே திருவல்லிக்கேணியில் இருந்தோ, ஸ்ரீரங்கத்தில் இருந்தோ விடுமுறைக்கு வந்திருக்கும் உறவினர்களுக்கு அமெரிக்கப் பெருமைகளை விளக்கியபடி சேஷாத்ரிகளும், பத்ரிநாத்களும் என நயாகரா நம்மூர் குற்றாலத்தைப் போல கதிகலங்கிக் கொண்டிருந்தது.

ஏனைய அருவிகளைப் போல நயாகராவில் குளிக்க முடியாதென்பதால் சோப்பும், சீயக்காயும், குற்றாலத் துண்டும் விற்பனைக்கு வரவில்லை. மற்றபடி நயாகராவின் வாசலிலேயே ஒரு தாத்தா, கையேந்தி பவன் நடத்திக் கொண்டிருந்தார். சுடச்சுட இட்லி, சப்பாத்தி, பூரி, சட்னி, சாம்பார் என நம் பாண்டி பஜார் கையேந்தி பவனைப் போலவே விற்பனை அமோகமாக இருந்தது. ‘தமிழன்டா! நிலாவுலேயே வடை சுட்டவன்டா’ என்று பெருமிதமாக மனசுக்குள் நினைத்துக் கொண்டு என் பங்கிற்கு நானும் நான்கு இட்லிகளை உள்ளே தள்ளினேன்.

நயாகராவின் அருகே செல்லும் படகிற்கான நீண்ட வரிசையில் காத்திருந்தோம். படகில் ஏறும் முன் மழைக்கோட்டைப் போல உடல் முழுதும் நனையாமல் இருக்க ஒரு பிளாஸ்டிக் கோட் கொடுக்கிறார்கள். நயாகராவின் அருகே நெருங்க நெருங்க, அதன் கரையோரங்களில், பாறை இடுக்குகளில் ஆயிரக்கணக்கான பெலிக்கன் பறவைகளும், நாரைகளும், கொக்குகளுமாய் அந்த சூழலை ரம்மியமாக்குகின்றன. அமெரிக்காவையும், கனடாவையும் பிரிப்பது நயாகரா அருவியே.

அருவிக்கு மேல் கட்டப்பட்டுள்ள ஒரு நீண்ட பாலம்தான் இரண்டு நாட்டிற்குமான எல்லை. பாலத்திற்கு அந்தப் பக்கம் கனடா, இந்தப் பக்கம் அமெரிக்கா. ‘‘கனடாவில் இருந்து பார்க்கையில் நயாகரா இன்னும் அழகாகத் தெரியும்’’ என்று ஹரி சொல்லிக் கொண்டிருக்க, எங்கள் படகு நயாகராவை நெருங்கிக் கொண்டிருந்தது.

 வெள்ளிப் பனி மலையை உடைத்தது போல், வெள்ளை திரை விரித்து நீராவி தன் கனவை எல்லாம் கொட்டித் தீர்ப்பது போல், ஆங்கோர் பால் நிறத்து தேவதை தன் ஆயிரமாயிரம் கைகளை விரித்து, ‘உன் அகந்தையெல்லாம் அழிந்து போகட்டும்’ என்று தலையில் தட்டி திருப்பி அனுப்புவது போல் வெவ்வேறு வடிவமும், வெவ்வேறு வேகமும் காட்டி நயாகரா தன் சாரல்களால் எங்களை நனைத்தது. தாயின் பனிக்குடத்திற்குள் திரும்பவும் நுழைந்து மீண்டு வந்ததைப் போல் படகு எங்களைக் கரையில் சேர்த்தது.

படகுத்துறையின் வாசலுக்கு வந்ததும், சுதாகர் அதற்கு எதிர்த் திசையிலிருந்த நீண்ட வரிசையைக் காட்டி, ‘‘இந்த வரிசையில போனா நயாகராவுல குளிக்கலாம்டா’’ என்றான். ‘‘குளிக்கலாமா?’’ என்றேன் ஆச்சர்யத்துடன். ‘‘நம்ம ஊரு மாதிரியில்ல. சங்கிலி கட்டியிருப்பாங்க. அதப் பிடிச்சிக்கிட்டு நின்னா நம்ம மேல சாரல் அடிக்கும்’’ என்றான் சுதாகர். ‘‘நான் வரலைடா... நீங்க வேணா போயிட்டு வாங்க. நான் குற்றாலத்துலேயே குளிச்சிக்கறேன்’’ என்றதும் ஹரியும், சுதாகரும் என்னை முறைத்தார்கள்.

‘‘நாங்க வர்ற வரைக்கும் என்னடா பண்ணுவ?’’ என்று சுதாகர் கேட்க, எதிரில் இருந்த புல்வெளியையும், வெளிர் நீலத்தில் பூக்கள் உதிர்த்துக் கொண்டிருந்த செர்ரி ப்ளாஸம் மரத்தையும், அதற்குக் கீழே போடப்பட்டிருந்த சிமென்ட் பெஞ்ச்சையும் காட்டி, ‘‘இங்கே வெயிட் பண்றேன்’’ என்றேன். சுதாகரும், ஹரியும் குடும்பத்துடன் கிளம்பிச் செல்ல, நான் சிமென்ட் பெஞ்ச்சில் அமர்ந்தபடி எதிரே நிமிர்ந்து பார்த்தேன். தூரத்தில் கேஸினோ எனப்படும் சூதாட்ட விடுதி.

‘இந்தியனே வா! உன் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வா!’ என்று அழைத்துக்கொண்டே இருந்தது. என்னிடம் காசும், காலமும் இல்லையாதலால் இந்தியா பணக்கார நாடாகும் வாய்ப்பை இழந்தது. ஏனைய அருவிகளைப் போல நயாகராவில் குளிக்க முடியாதென்பதால் சோப்பும், சீயக்காயும், குற்றாலத் துண்டும் விற்பனைக்கு வரவில்லை.

(பறக்கலாம்...)