ரஜினிக்கு சந்திரமுகி... பிரபுதேவாவுக்கு தேவி !



Impressed!

‘‘ஒவ்வொரு நாளும் நிறைய திறமைசாலிங்க வந்துட்டிருக்காங்க. குறும்படங்கள் எடுத்து கலக்குறாங்க. எனக்கு அடுத்து வந்த இயக்குநர்கள்கிட்ட இருந்தும் நான் நிறைய கத்துக்கிட்டிருக்கேன். 2012ல உருவான ஹாரர் கதை இது. ஒவ்வொரு வருஷமும் அப்டேட் ஆகி, இப்போதான் படமா அமைஞ்சிருக்கு. பன்னிரண்டு வருஷங்களுக்குப் பிறகு தமிழ்ல நடிகரா ரீ-என்ட்ரி ஆகுற பிரபுதேவா சாருக்கு பொருத்தமான கதையாவும் ‘தேவி’ அமைஞ்சிருக்கறது இன்னும் அழகு!’’ - முதல் பட இயக்குநர் போல மெலிதான புன்னகையுடன் தன்னடக்கமாய்ப் பேசுகிறார் இயக்குநர் விஜய்.  



‘‘படத்தோட பெயர் ‘தேவி’யா? ‘டெவில்’லா?’’
‘‘ ‘தேவி’தான். கொஞ்சம் த்ரில்லர், கொஞ்சம் ஹாரர் டிராமானு கலவையா வந்திருக்கு. தமிழ், இந்தி, தெலுங்குனு ஒரே டைம்ல 3 மொழிகள்ல ரெடியாகுது. பிரபுதேவா, தமன்னா, சோனு சூட்னு எல்லாருக்குமே 3 மொழிகளும் தெரியும். அதனாலதான் இவ்வளவு குறுகிய காலத்தில் முடிஞ்சிருக்கு. மும்பைவாழ் தமிழர் கிருஷ்ணா கேரக்டர்ல பிரபுதேவா. வாழ்க்கையில ஒரு மாடர்ன் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்னு லட்சியத்தோட தேடற அவருக்கு மனைவியா வர்றாங்க, புடவை கட்டி பாந்தமா இருக்கற தமன்னா. மும்பையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தைக் கதையாக்கியிருக்கோம்.

சென்னை, மும்பை, புனேனு ஷூட்டிங்  முடிச்சிட்டு வந்துட்டோம். கிருஷ்ணா கேரக்டர்ல  பிரபுதேவா வாழ்ந்திருக்கார்னு நீங்களே சொல்லப்  போறீங்க. சோனு சூட் இந்தியில் பெரிய நடிகர். அவர் இந்தப் படத்தோட இந்தி வெர்ஷனை வாங்கியிருக்கார். தெலுங்கு வெர்ஷனை கோனா வெங்கட் வாங்கியிருக்கார். ஒரு படத்தில் நடிக்கிறவங்களே அதை நம்பிக்கையா வாங்குறாங்கன்னா, படம் எப்படி வந்திருக்கும்னு பார்த்துக்கங்க. ஆர்.ஜே.பாலாஜி என் முக்கியமான நண்பன்.



இதுல காமெடியன். தமிழ்நாட்டுல இருந்து மும்பைக்கு போய், ஷாரூக் கான் படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ற மனுஷ்நந்தன் இதுல ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். படத்துல அவரோட விஷுவல்ஸ் பிரமிக்க வைக்கும். எடிட்டர் ஆன்டனி, நா.முத்துக்குமார்னு என்னோட வழக்கமான டீமும் படத்துல உண்டு. நண்பன் ஜி.வி.பிரகாஷ் இப்போ ஹீரோவா பிஸியா இருக்கறதால சாஜித்- வாஜித் இசையமைக்கறாங்க. இந்தியில் சல்மான்கான் படங்களோட இசையமைப்பாளர்கள் அவங்க.  ஜி.வி அவ்வளவு பிஸியிலும் எனக்கு ஒரு பாடல் இசையமைச்சுக் கொடுத்திருக்கார்!’’

‘‘என்ன சொல்றார் பிரபுதேவா?’’
‘‘ரொம்ப எளிமையானவர். குழந்தை மனசுக்காரர். ஒரு ஷாட் நல்லா வந்தா, கை தட்டி குதூகலிக்கறார். அவரோட ‘டேக் இட் ஈஸி ஊர்வசி’, ‘முக்காப்லா’ பார்த்து  வளர்ந்தவங்கள்ல நானும் ஒருத்தன். இந்தப் படத்தோட கதையைத் தயாரிப்பாளர்  டாக்டர் கணேஷ்கிட்ட சொன்னப்போ, ‘என்னோட  நண்பர் பிரபுதேவா நடிச்சா  பொருத்தமா இருக்கும்’னு சொன்னார். கதாநாயகிக்கு  முக்கியத்துவம் உள்ள  கதையில் நடிக்க அவர் சம்மதிப்பாராங்கற தயக்கம்  எனக்கும் இருந்துச்சு. ஆனா,  பிரபுதேவா கதையைக் கேட்டதுமே ஓகே சொன்னார். ‘சூப்பர் ஸ்டார் ரஜினி  சாரே ‘சந்திரமுகி’யில்  நடிக்கலையா? கதைதான் முக்கியம்’னார்.

அதுமட்டுமில்ல... இது தன்னோட படமா அறியப்படறதை விட, இயக்குநர் விஜய் படமா இருக்கணும்னு அவர் சொன்னார். ஸ்கிரிப்ட்ல எழுதின விஷயங்களை விட, ரொம்ப சிறப்பா பர்ஃபார்ம் பண்றார். டான்ஸ்ல அவர் ‘இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்’தான். ஆனாலும் ஒரு பாடலுக்கு 8 நாட்கள் டான்ஸ் ரிகர்சல் பண்ணினார். ‘நான் 12 வருஷம் கழிச்சு வர்றேன். எல்லாரோட எதிர்பார்ப்பையும் தாண்டுற விதமா படம் கொடுக்கணும்’னு சொல்லி உழைச்சார்!’’



‘‘தமன்னா..?’’
‘‘ ‘தேவி’ அவங்கதான். கிராமத்துப் பொண்ணா நடிச்சிருக்காங்க. அவங்க கெட்டப்புக்கு தினமும் ஒன்றரை மணி நேரம் மேக்கப் போட வேண்டியிருந்தது. ஷூட்டிங் போன அன்னிக்கே, அவங்க பெரிய நடிகைனு உணர்ந்துட்டேன். ஒரு சின்ன ஷாட்... அது எடுத்து ரெண்டு நாளைக்கு அப்புறம், ‘அந்த ஷாட் சரியா வந்திருக்குதா? அதை இன்னும் பெட்டரா பண்ணலாமா?’னு தமன்னா கேட்டாங்க. ஹீரோக்கள் இப்படிக் கேட்டு பார்த்திருக்கேன். ஆனா, முதல் தடவையா ஒரு ஹீரோயின் அப்படிக் கேட்டது எனக்கு ஆச்சரியமாகிச்சு. ஹேட்ஸ் ஆஃப் தமன்னா!’’ 

‘‘எப்படி இருக்காங்க அமலாபால்?’’
‘‘நல்லா இருக்காங்க. நல்ல நல்ல படங்கள் அவங்களுக்கு அமையுது. அமலா நல்ல பர்ஃபார்மர்னு நிரூபிச்சிருக்காங்க. செலக்ட்டிவாதான் படங்கள் பண்றாங்க. அவங்களை என்கரேஜ் பண்ண வேண்டியது என் கடமை. அவங்க பட விஷயம் எதிலும் நான் தலையிடுறதில்ல. கதை கேட்டு முடிவு பண்றதும் அவங்கதான். சமீபத்துல கூட ‘அம்மா கணக்கு’... அது அமலா கேரியர்ல முக்கியமான படமா இருக்கும்!’’

‘‘அடுத்து இயக்கப் போறது ஜெயம் ரவி படமா? மாதவன் படமா?’’
‘‘ஜெயம் ரவி  படம்தான் தொடங்கப் போறோம். ப்ரியதர்ஷன் சார் மாதிரியே எடிட்டர் மோகன்  சாரும் என்னோட குரு. என் ஸ்கிரிப்ட் எல்லாத்தையும் மோகன் சார்கிட்ட சொல்லித்தான், ஆலோசனை கேட்பேன். அவரும் மோகன்ராஜா சாரும் மிகக் கடின உழைப்பாளிகள்.  நைட் ஒரு மணிக்குக்கூட சீன் டிஸ்கஸ் பண்ணிட்டிருப்பாங்க. நானும் அவங்க கூட சேர்ந்து விடிய விடிய சினிமா பத்தி பேசியிருக்கேன். நான் அசிஸ்டென்ட்டா வெளியே வந்த டைம்ல ரவி சாருக்கு ‘ஜெயம்’ படம் வந்துச்சு.

அப்பவே ரவி சாருக்கு படம் பண்ண பேச்சு ஆரம்பிச்சோம். அவ்வளவு பெரிய ட்ராவல். என்னோட கேரியரிலும், அவரோட கேரியரிலும் இது மிகமிக முக்கியமான படமா இருக்கும்.  ரவியோட கேரக்டரை எக்ஸிகியூட் பண்றதே சேலஞ்சிங்கான விஷயம். ரவி என்னோட பிரதர்  மாதிரி. ராஜா சாருக்கு எவ்வளவு பொறுப்பு இருக்குதோ, அப்படி ஒரு பொறுப்பு எனக்கும் இருக்கறதா உணர்றேன். ஆகஸ்ட் முதல் வாரம் ஷூட்டிங் போறோம். சென்னையிலும் அந்தமானிலும் படப்பிடிப்பு. பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய  திட்டமிட்டிருக்கோம்!’’

‘‘ஹாலிவுட் கதாசிரியர் பால் ஆரோன் இந்தப் படத்தோட கதையில் உதவியிருக்காராமே?’’
‘‘ஆமாங்க. ‘சைவம்’ படத்தோட சவுண்ட் மிக்ஸிங்குக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் போயிருந்தப்போ அங்கே பால் ஆரோனை சந்திச்சேன். ‘இன் டூ டீப்’ படத்தோட கதாசிரியர் அவர். ‘சைவம்’ படத்தை அவர் பார்த்ததும் நாங்க இன்னும் நட்பாகிட்டோம். மும்பையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் பத்தி அவர்கிட்ட பகிர்ந்துக்கும்போதுதான் இந்தப் படத்தின் முழுக்கதை உருவாச்சு. அப்புறம் சென்னைக்கும் அமெரிக்காவுக்கும் கதை, விவாதங்கள் மெயில்ல பரிமாறிக்கிட்டோம். எங்க உழைப்பிற்கு கிடைச்ச பலனா  ‘தேவி’ ரெடியாகியிருக்கு!’’

- மை.பாரதிராஜா