சிலை கடத்தல்



A to Z நெட்வொர்க்

பழங்காலச் சிலை ஒன்றின் விலை எப்படித் தீர்மானிக்கப்படுகிறது? தொன்மை, கலைநுட்பம், வரலாறு, எடை  அடிப்படையில் தீர்மானிக்கப்படும். ஐம்பொன் சிலை என்றால், ‘படினா’வைப் பொறுத்து விலை நிர்ணயிக்கப்படும். படினா என்பது சிலையின் மேல் படிந்திருக்கும் பச்சை நிறத்தாலான பொருள். இரும்பில் துரு ஏறுவது போல ஐம்பொன் சிலையில் ‘படினா’ படியும்.



புதைக்கப்பட்ட சிற்பத்தில் அதிக அளவு படினா இருக்கும். அதுமாதிரி சிலைக்கு அதிக விலை கிடைக்கும். சோழர் கால நடராஜர் சிலைக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. தேவி, சோமாஸ்கந்தர் சிற்பங்களுக்கும் நல்ல விலை கிடைக்கிறது. பொதுவாக, சர்வதேச மார்க்கெட்டில் 12ம்  நூற்றாண்டு சிலைகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

அதனால், சிலை திருடர்களின்  பார்வை, தஞ்சை, மதுரை, காஞ்சிபுரம், திருவாரூர் மாவட்டங்களின் மேலேயே  நிலைகுத்தி இருக்கிறது. முதல் நிலை திருடர்களிடம் இருந்து சுமார் 10 ஆயிரம்  ரூபாய்க்குப் பெறப்படும் ஒரு சிலை, சர்வதேச சந்தையில் இறுதிநிலை  விற்பனையில் 50 லட்சம் முதல் 1 கோடி வரை விலை போகும் என்கிறார்கள்.

‘‘சிலைகள் போலவே நடுகற்களுக்கும் நல்ல விலை கிடைக்கிறது. பழங்கால ஓவியங்களுக்கு ஏக கிராக்கி  உண்டு. பழங்காலத் தேர் கிடைத்தால் இவர்களுக்குக் கொண்டாட்டம். ஒரு தேரில் இருந்து 80 உதிரிப் பாகங்கள் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் நல்ல விலை பெறுகிறார்கள்...’’ என்கிறார் சிற்ப ஆராய்ச்சியாளர் விஜய். ஒரு சிற்பத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால் அதற்கு பல நடைமுறைகள் உண்டு. 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான எந்தக் கலைப்பொருளையும் ஏற்றுமதி செய்ய முடியாது.



முதலில் சிற்பத்தை சென்னை கோட்டையில் காட்சிப்படுத்த வேண்டும். அதை ஆய்வு செய்து, ‘இது புது சிலை, பழமையானது அல்ல’ என்று தொல்பொருள் அதிகாரிகள் சான்று அளிப்பார்கள். பிறகு சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு கன்டெய்னர்களில் பேக் செய்து அனுப்ப வேண்டும். பேக்கிங்கில் அந்த சிற்பத்தின் படத்தை ஒட்ட வேண்டும். ஆனால், ‘இது புதிய சிலை’ என்ற ெபயரில் அனுப்பப்படும் பெரும்பாலான சிற்பங்கள் பழமையானவைதான் என்கிறார்கள்.

ஃபர்னிச்சர் என்ற பெயரிலும் சிலைகள் அனுப்பப்படுகின்றன. அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் இது நடக்க முடியாது! தென்கிழக்கு ஆசியாவைப் பொறுத்தவரை, ஹாங்காங்கே கடத்தல் பொருட்களின் தலைநகரம். ஐரோப்பாவில் ஜூரிச், பிரஸ்ஸல்ஸ், லண்டன் நகரங்களில் கலைப்பொருட்களுக்கான பெரிய பிளாக் மார்க்கெட் உண்டு. அமெரிக்காவைப் பொறுத்தவரை நியூயார்க். தஞ்சையில் ஒரு சிற்பம் திருடப்படுகிறது என்றால் சில நாட்களில் அதன் புகைப்படம் இந்த மார்க்கெட்டுகளை வலம் வந்து விடுமாம். துபாயும் இத்தொழிலில் இப்போது வளர்ந்து வருகிறது என்கிறார்கள்.

‘‘ஒரு கிராம் நகை காணாமல் போனால்கூட பதறி அடித்துக்கொண்டு புகார் கொடுக்கிற மக்கள், கோயிலில் சிலை திருடு போனால் கவலைப்படுவதில்லை. காவல்துறையும் உரிய அக்கறை காட்டுவதில்லை. ஒரு பழங்கோயில் இருக்கிறதென்றால் அங்கிருக்கும் சிற்பங்களைப் புகைப்படம் எடுத்து வைத்திருக்க வேண்டும். அரசு அதைப் பதிவு செய்து பாதுகாக்க வேண்டும். திருட்டு நடக்கும்போது, அனைத்து தரப்பும் முடுக்கி விடப்பட வேண்டும். இன்டர்போல் காவல்துறையில் சிலைத் திருட்டு பற்றி புகார் கொடுக்க ஒரு விங் இருக்கிறது. அங்கெல்லாம் புகார்களைப் பதிவு செய்து தேடலாம்.

ஆனால் நம் காவல்துறையினர் சிலைகளின் பெயரைக்கூட சரியாகப் பதிவு செய்வதில்லை. எல்லா நாடுகளிலுமே பழங்காலப் பொருட்களை விற்பனை செய்ய நிறைய நடைமுறைகள் வைத்துள்ளன. சுபாஷ் கபூர் போன்ற மலை விழுங்கிகள், அந்த நடைமுறைகளை சர்வசாதாரணமாகக் கடந்துவிடுகிறார்கள். வெளிப்படையாக கண்காட்சிகள் நடத்தியும், கேலரிகளில் வைத்து விளம்பரம் செய்தும் விற்கிறார்கள். www.sothebys.com, www.christies.com, www.bonhams.com போன்ற புகழ்பெற்ற இணையதளங்கள் வழியாக ஏலம் விட்டு விற்பனை செய்வதும் உண்டு.

இந்தக் கடத்தல்காரர்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளும், பிடித்தால் தண்டனை பெற்றுத் தரும் நடவடிக்கைகளும் இந்தியாவில் மிக மந்தமாகவே நடக்கிறது. கடத்தப்பட்ட சிலைகளைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளிலும் வேகம் இல்லை. பல நூறு சிலைகள் கொள்ளை போய்விட்ட நிலையில், 1947க்குப் பிறகு 2000 வரை வெறும் 18 சிலைகள் மட்டுமே இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்டிருக்கிறது. 2000 முதல் 2012 வரை 1 சிலை கூட மீட்டுக் கொண்டு வரப்படவில்லை. தற்போதுதான் இதில் வேகம் இருக்கிறது.

கடத்தல் சிலைகள் குறித்து நாங்கள் தகவல்களை வழங்கியும் நடவடிக்கையில் வேகம் இல்லை. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகளைக் கடத்தியதாக ராஜஸ்தானில் வாமன் ஜியா என்பவரை கைது செய்தார்கள். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 400 பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால் அப்பீல் வழக்கில் உரிய தீவிரம் காட்டாததால் 2013ல் அவர் வெளியே வந்து விட்டார். இந்த அளவில்தான் நடவடிக்கைகள் இருக்கின்றன’’ என்கிறார் விஜய்.

உலகெங்கும் இருக்கும் பல மியூசியங்களில், திருட்டுத்தனமாகக் கொண்டு செல்லப்பட்ட இந்தியக் கலைப் பொக்கிஷங்கள் நிறைந்திருக்கின்றன. மியூசியங்கள் அமைக்கப்பட்டதன் நோக்கமே, பழஞ்சிறப்புகளையும் சரித்திரத்தையும் அடுத்த தலைமுறைக்கு கற்பிப்பதுதான். ஒரு பள்ளியைப் போல செயல்பட வேண்டிய மியூசியங்கள், திருட்டுப் பொருட்களை வாங்கி காட்சிப்படுத்தி அறம் மீறுகின்றன.

மிச்சமிருக்கும் சிற்பங்கள், கலைப் பொக்கிஷங்களையாவது காப்பாற்ற வேண்டும். அவற்றை தரமான கேமராக்களில் புகைப்படங்கள் எடுத்து அரசு ஒரு தொகுப்பை உருவாக்கிப் பாதுகாக்க வேண்டும். தேசிய அளவில் கலைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கென்று ஒரு தனி காவல் பிரிவைத் தொடங்க வேண்டும்.

சர்வதேச அளவில் இந்தியக் கலைப்பொருட்களை வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு அச்சத்தை உருவாக்க வேண்டும். கிராமப்புறங்களில் கருவறையில் இருக்கும் சாமிகளைப் புகைப்படம் எடுத்தால் ‘‘பவர் போயிடும்’’ என்று எதிர்ப்பார்கள். அவர்களிடம் சொல்லுங்கள்... புகைப்படம் எடுக்காவிட்டால் சாமியே போய்விடும்!

தண்டனைப் பணியிடம்!

கலைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் பல நாடுகள் விழித்துக்கொண்டு விட்டன. இத்தாலி, கலைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கென்றே ‘Carabinieri Art Squad’ என்ற தனிப்படையை அமைத்திருக்கிறது. காவலர்கள் மட்டுமின்றி தொல்பொருள் ஆய்வாளர்கள், வழக்கறிஞர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்களும் இப்படையில் இருக்கிறார்கள். எகிப்து, இத்தாலி, கம்போடியா போன்ற நாடுகளிலும் இப்படியான படைகள் உண்டு.

ஏராளமான கோயில்களும், ஐம்பொன், கற்சிலைகளும் மிகுந்த தமிழகத்தில் பொருளாதாரக் குற்றப்பிரிவின் கீழ் சிறு பிரிவாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு செயல்படுகிறது. சுமார் 25 அதிகாரிகளே உள்ள இப்பிரிவில், தொல்பொருள் நிபுணர்களோ, கடத்தல் பொருளை மீட்டு வருவதற்குரிய பிற துறை வல்லுனர்களோ இல்லை. பெரும்பாலும் தண்டனைப் பணியிடமாகவே இப்பிரிவு இருந்து வருகிறது.

ஒரே சான்று!

பல்லவர்கள், சோழர்கள், முத்தரையர்கள், விஜயநகரப் பேரரசர்கள் என தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான மன்னர்கள் ஏராளமான கலைப் பொக்கிஷங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள். பெரும் பணமதிப்பும், சரித்திர மதிப்பும் கொண்ட அப்பொருட்கள் பற்றி எந்தவிதமான பதிவேடுகளும் இங்கு உருவாக்கப்படவில்லை. இவற்றுக்கு ஒரே சான்றாக இருப்பது, 1916ம் ஆண்டில் ஹெச்.கிருஷ்ண சாஸ்திரி என்கிற அப்போதைய தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் எழுதியுள்ள ‘South-indian images of gods and goddesses’ என்ற நூல்.

அக்காலத்தில், கிருஷ்ண சாஸ்திரி கோயில் கோயிலாகச் சென்று செப்புத் திருமேனிகளை படம் எடுத்து அவற்றின் தன்மைகளை விளக்கி இந்த நூலை எழுதியுள்ளார். இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பல கோயில்களில் இப்போது சிற்பங்கள் இல்லை. கோயில் நிர்வாகிகளும் அதுபற்றி தங்களுக்குத் தெரியாது என்கிறார்கள். உதாரணத்துக்கு, பெரும்புதூர் அருகில் உள்ள சிவன்கூடல் கிராமத்தில் உள்ள கோயிலில் சோமாஸ்கந்தரின் உலோகச் சிலை ஒன்று இருப்பதாக புகைப்படத்தோடு அந்நூல் குறிப்பிடுகிறது.

ஆனால் இந்த ஊர் மக்கள், ‘அப்படியொரு சிலையே இங்கு இல்லை’ என்கிறார்கள். ஆனால் இந்த நூலில் இடம்பெற்றுள்ள அச்சிலையின் படத்தை வைத்து, சிங்கப்பூரில் உள்ள மியூசியத்தில் அது இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார் சிற்ப ஆராய்ச்சியாளர் விஜய். கடந்த இதழில் ‘கோயில் நிர்வாகிகளாக இருந்த சிலரே சிலைகளை அபகரித்து விட்டார்கள்’ என்று பொருள்படும் விதத்தில் என் கருத்தின் தொனி அமைந்திருந்தது சிலரை வருத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

எங்கோ ஒரு சிலர் செய்யும் தவறுகளை மட்டுமே நான் சுட்டிக் காட்ட முனைந்தேன். பெரும்பாலான கோயில் நிர்வாகிகள் கோயில் வளர்ச்சியில் அரும் பங்காற்றியுள்ளார்கள். பாழடைந்த பல கோயில்கள், நிர்வாகிகளின் சீரிய முயற்சியால் இன்று பொலிவு பெற்றுள்ளதை மறுக்க முடியாது. அதைப் போலவே, ‘புதிய சிற்பங்களைச் செய்து வண்ணம் பூசி கோயிலில் வைத்து விடுகிறார்கள்’ என்று நான் சொல்வதாக வந்துள்ள செய்தியும் சற்று தொனி மாறியிருக்கிறது.

- மோகன்ராஜ் ஸ்தபதி, ஐம்பொன் சிற்பக்கலைஞர் மற்றும் ஆராய்ச்சியாளர்

- வெ.நீலகண்டன்