முகங்களின் தேசம்



ஜெயமோகன்

ஓவியம்: ராஜா

பூடான் என்ற மகிழ்ச்சி தேசத்தின் மக்களையும் மரபுகளையும் நமக்கு அறிமுகம் செய்கிறார் ஜெயமோகன்

பயணி

பூடான் ஒரு விசித்திரமான தேசம். ‘மிக பிரமாண்டமான ஒரு சினிமா செட்’ என்று அதைச் சொல்லலாம். அங்கு மன்னராட்சி இருப்பதால் மக்களின் வாழ்க்கையை முழுமையாகவே அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது. அரசு ஊழியர்கள் அனைவரும் பூடானிய உடைதான் அணிய வேண்டும்.



அது ஜப்பானிய கிமோனோ போல தொளதொளப்பாக இருக்கும் கெட்டியான கம்பளி உடை. கருஞ்சிவப்பு மற்றும் தவிட்டு நிறம். ஆகவே எந்தப் பக்கமும் கராத்தே சண்டைக்குத் தயாரானவர்கள் போல ஜாக்கி சான்கள் சென்று கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சீருடைகூட கிமோனோதான். இதுவே நாம் ஏதோ வரலாற்றுக் காலத்துக்குள் வந்த உணர்வை அளிக்கிறது.

அத்துடன் பூடானின் அத்தனை கட்டிடங்களும் பூடானிய கட்டிடக்கலை வடிவையே வெளிப்பக்கத்தில் கொண்டிருக்கவேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அது பூடானிய பௌத்த மடாலயங்களின் பாணியில் அமைந்தது. சரிவான கூரைக்கு அடியில் வளைவான எரவாணங்கள். அதற்குக் கீழே கட்டம் கட்டமான உத்தரங்களின் விளிம்புகள். அது ‘மொத்த பூடானே ஒரு பிரமாண்டமான மடாலயங்களின் தொகுப்பு’ என்ற சித்திரத்தை உருவாக்குகிறது.

இந்தக் கட்டுப்பாடுகள் ஒரு வகையில் சுமை போலத் தோன்றினாலும் கூட, பூடானின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாத் துறையைச் சார்ந்தது என்பதால், இந்த விசித்திரமான - ஆனால் அழகிய வெளிப்பக்கம் என்பது சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரக் கூடியதாக இருக்கிறது. பூடானின் சுற்றுலாத்துறை உச்சத்தில் இருப்பது டிசம்பர் முதல் பிப்ரவரி வரைக்கும்தான். உறைபனிக்காலம் அது. பூடானின் பெரும்பகுதி பனியால் மூடப்பட்டு விடும்.



உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் பனிச்சறுக்குவதற்காகவும், பனியில் மலையேறுவதற்காகவும், அவ்வப்போது புதைந்து ஹெலிகாப்டர்களால் மீட்கப்படுவதற்காகவும் வருகிறார்கள். அவர்களிமிருந்துதான் பூடானின் வருமானம் வருகிறது. அதற்கு அடுத்த
படியாக வருமானம் அளிப்பது, லாட்டரி. இந்தியா முழுக்க செயல்படும் பூடானிய லாட்டரி வழியாகத்தான் நாம் பூடான் என்ற நாட்டை அறிந்திருக்கிறோம்.

இந்த லாட்டரிச் சீட்டை பூடான் நடத்துவதில்லை. உண்மையில் பூடானின் பெயரால் லாட்டரி சீட்டு நடத்திக் கொள்வதற்கான உரிமையை இரண்டாம் குத்தகைக்கு விடுகிறார்கள். கேரளத்திற்காக ஒருவர் அதை ஏலத்தில் எடுத்துக் கொண்டிருந்தால், குறிப்பிட்ட எண்களில் அவர் லாட்டரிச்சீட்டை அடித்து விற்றுக் கொள்ளலாம். எண்கள் மட்டுமே பூடானுக்கு போகும். குலுக்கல் அங்கு நிகழ்கிறது. இதில் பல வகையான மோசடிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் லாட்டரி வழியாக பூடான் ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கான ரூபாயை ஈட்டிக் கொண்டிருக்கிறது.

2011 மே மாதம் நான் நண்பர்களுடன் சென்ற பூடான் பயணம், முழுமையாக ஒரு வெளிநாட்டுக்கு வந்த உணர்வை அளித்தது. சீனாவின் நகரங்களைப் படங்களில் பார்த்திருக்கிறேன். அதற்கு நிகரான ஒரு ஊர். பல ஊர்களின் பெயர்கள் விதவிதமான நினைவுகளைச் சொடுக்குகின்றன. பூடானின் தலைநகராகிய திம்பு தமிழர்களுக்கு ‘திம்பு பேச்சுவார்த்தை’ என்ற சொல் வழியாக அறிமுகம் ஆகியிருக்கும். அங்குதான் விடுதலைப்புலிகளுக்கும் ராஜீவ் காந்திக்கும் ஜெயவர்த்தனேவுக்கும் இடையே பேச்சுவார்த்தையும் உடன்படிக்கையும் ஏற்பட்டது.

திம்பு பேச்சு வார்த்தையைப் பற்றி தமிழர்கள் ஒரு ஐந்தாண்டு காலம் பேசிச் சலித்திருக்கிறார்கள். அந்த பேச்சுவார்த்தை நடந்த கட்டிடத் தொகுப்பைப் பார்த்தோம். பூடானின் பெரும்பாலான விடுதிகளை பெண்களே நடத்துகிறார்கள். சுற்றுலாப் பயணிகளுக்கான தொழிலில் கூடுமான வரை பெண்களை ஈடுபடுத்தவேண்டும் என்பது அரசாங்க ஆணை. விடுதிகளில் வரவேற்பாளர்கள் முதல் சுத்தம் செய்யும் பணி வரை அனைத்தையும் பெண்களே செய்கிறார்கள். பூடானிய பெண்கள் மங்கோலிய சாயல் கொண்ட அழகிகள்.

மிகச்சிறிய கண்களும் சிவந்த உதடுகளும் பளிச்சிடும் புன்னகையும் கொண்டவர்கள். அத்துடன் இந்தியர்களாகிய நமக்கு அவர்களுடைய நாணமும், தணிந்த குரலிலான பேச்சும், விழிகளைத் தாழ்த்தி சற்றே உடல் வளைத்துப் பேசும் அழகும் கவரக் கூடியவை. ஆனால் தாய்லாந்து போன்ற சுற்றுலா நாடுகளுடன் பூடானை இணைத்துப் பார்க்கக்கூடாது. பூடானில் விபசாரமும் போதைப்பொருட்களும் கடுமையாகத் தடை செய்யப்பட்டவை.

இந்திய ரூபாய் பூடானில் மதிப்புள்ளதாகையால் அதிகச் செலவின்றி சென்று தங்கி வரக்கூடிய மையமாக பூடான் இருக்கிறது. ஆயினும் இங்கிருந்து பூடானுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை குறைவுதான். பூடானின் தெருக்கள் வழியாகச் சுற்றிக் கொண்டிருந்தபோது தமிழர்களையோ தென்னிந்தியர்களையோ பார்ப்பது மிகவும் அரிதாக இருந்தது. அங்கே ஒரு திரையரங்கில் இந்திப் படம் ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்க்கலாமா என்று யோசித்தபோது எங்களுக்குப் பின்னால் கரிய குள்ளமான மனிதர் ஒருவர் வந்து தொட்டார். ‘‘நீங்கள் தமிழகமா?’’ என்றார். ‘‘ஆம்’’ என்றேன்.

கையில் மதுரை ஹாஜி மூசா கடையின் மஞ்சள் பை ஒன்றை வைத்திருந்தார். “மஞ்சள் பையுடன் இருக்கிறீர்கள்?” என்று நான் சிரித்தபடி கேட்டேன். “தமிழர்கள் யாராவது என்னைக் கூப்பிட்டுப் பேசவேண்டும் என்பதற்காகத்தான் சார்” என்றார் அவர். “இது ஒரு அடையாளமல்லவா தமிழனென்று...” நாங்கள் சிரித்துக் கொண்டோம்.

“எங்களை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?” என்றேன். “நீங்கள் தமிழில் பேசியது காதில் விழுந்தது. உங்களைப் பிடிப்பதற்காக நான் பின்னால் விரைந்து வந்தேன்” என்றார். சக்திவேல் எனும் அவர், ஓய்வுபெற்ற தபால் அதிகாரி. “ஓய்வு பெற்றபிறகு இப்படி ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறேன் சார். ஊரில் பிள்ளைகள் இருக்கிறார்கள்; மனைவி இருக்கிறார். பிள்ளைகள் இப்போது வேலைக்குச் சென்றுவிட்டார்கள். எனக்கு பென்ஷன் வருகிறது. மிகக்குறைவான செலவில் ஒவ்வொரு ஊராகச் சென்று தங்குவேன்.

எனக்குத் தெரிந்தவர்கள் பல ஊர்களில் இருக்கிறார்கள். அவர்கள் என்னை உபசரிப்பார்கள்” என்றார். தமிழகத்திலிருந்து வெளியே கிளம்பி அவர் சென்ற ஊர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அனேகமாக இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் அவர் சென்றிருக்கிறார். ஒவ்வொரு ஊரில் இருக்கும் வாழ்க்கை முறை, சாப்பாட்டுப் பழக்க வழக்கங்கள் பற்றி அவர் பேசினார். ஆனால் அந்தந்த ஊரில் நாங்கள் விரும்பிப் பார்க்கும் எந்த இடத்தைப் பற்றியும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

உதாரணமாக, மதுராவுக்கு அவர் பத்து முறை சென்றிருந்தாலும் கூட, மதுரா அருங்காட்சியகத்தை பார்த்திருக்கவில்லை. அவர் கயா சென்றிருக்கிறார். ஆனால் அதன் அருகே இருக்கக்கூடிய ராஜகிருகத்திற்கோ நாளந்தாவுக்கோ சென்றதில்லை. வரலாற்று அறிவோ, தொல்லியல் ஞானமோ அவருக்கு முற்றிலும் இருக்கவில்லை. அவர் ஒரு வேடிக்கை பார்க்கும் பயணி மட்டும்தான். அவருடைய ஆர்வம் முதன்மையாக ஒவ்வொரு ஊரிலிருக்கும் சினிமாப் பழக்கங்களைப் பற்றியதாக இருந்தது. எல்லா மொழி சினிமாக்களையும் திரையரங்கிலே சென்று பார்க்கும் வழக்கம் அவருக்கு இருந்தது. வந்து ஐந்து நாட்கள் ஆகியிருந்தபோதும் கூட பூடானின் சினிமா உலகைப் பற்றி மிக விரிவாகப் பேசினார்.

“இங்கே வருஷத்துக்கு பத்து படங்கள்தான் எடுக்கறாங்க சார். அத்தனை படங்களுக்கும் அரசாங்கத்தின் நிதி உதவி இருக்கு. ஒரு கோடி ரூபாய்க்குள் படங்களை எடுத்துடறாங்க” என்றார். அந்தப் படங்களை பூடானில் இருக்கும் பதினைந்து திரையரங்குகளில் மட்டும்தான் ஓட்ட முடியும். டி.வி.டி விற்பனையும் உண்டு. இந்த பதினைந்து திரையரங்குகளின் வழியாக அவை பெரும்பாலும் அந்தப் பணத்தை திரும்ப எடுத்துவிடுகின்றன என்று அவற்றின் வணிகத்தையும் விளக்கினார்.

பூடானிய நடிகர்கள், நடிகைகளுடைய பெயர்களைச் சொல்லி, ‘‘இவர்களை நம் ஊரில் துணை நடிகைகளாகக் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த ஊரில் இவர்களைப் பெரிதாக வழிபடுகிறார்கள்” என்றார். ‘‘இவர்களுக்கும் தங்களுடைய நாட்டு முகத்தைத் திரையில் பார்க்கும் ஆர்வம் இருக்குமல்லவா?” என்று நான் சொன்னேன் ‘‘ஆமாம் சார். குறிப்பாக இங்குள்ள பெண்களைத்தான் இவர்கள் விரும்புகிறார்கள். இந்திப் படங்களைப் பார்க்கும்போது கூட மாதுரி தீட்சித்தை ‘நீள முகம்’ என்று சொல்லி கிண்டலடிக்கிறார்கள்’’ என்றார். ‘‘அது இயல்புதானே? இவர்கள் ஊரின் பெண் தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடிக்க முடியுமா? நாம் ஏற்றுக் கொள்வோமா?” என்று சொன்னேன்.

சக்திவேலின் அடுத்த ஆர்வம், வெவ்வேறு வகையான உணவுகள். ‘‘பூடானின் உணவு என்பது அதிகமும் மாட்டுக்கறிதான். ஆனால் அங்கே மாட்டைக் கொல்வதற்கு தடையுள்ளது. ஏனெனில் பௌத்த நாடு. ஆகவே இந்தியாவுக்கு மாடுகளை அனுப்பி அங்கே வெட்டி இறைச்சியாக ஆக்கி பூடானுக்குக் கொண்டு வருகிறார்கள். பன்றி இறைச்சியை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். உலர வைத்த பன்றியின் தோலைப் பொரித்து சிப்ஸ் போன்று சாப்பிடுகிறார்கள். இங்குள்ள முக்கியமான நொறுக்குத் தீனி அதுதான்” என்றார். ‘‘மாட்டுத் தோலையே கூட சிறிய சிறிய வில்லைகளாக்கி எண்ணெயில் வறுத்து சாப்பிடும் வழக்கம் பூடானியர்களிடம் உண்டு’’ என்று ஆர்வம் பொங்க சொன்னார்.

“நீங்கள் சாப்பிடுவீர்களா?” என்று கேட்டேன். ‘‘பன்றியும் மாடும் சாப்பிடுவதில்லை. ஆனால் எங்கு போனாலும் கோழியும் ஆடும் சாப்பிடுவதுண்டு. சைவம் மட்டும் சாப்பிட்டு வாழ்ந்து எங்கேயும் பயணம் செய்ய முடியாது’’ என்றார். “எங்க நைனா ‘சைவம் சாப்பிடறியா? சவம் சாப்பிடறியா?’ன்னு கேப்பார். அவர் சுத்த சைவம். நான் அப்படி இல்லை” என்றார். வட இந்தியாவில் பெரும்பாலான ஊர்களில் அசைவ உணவு அரிதாக இருப்பதையும், பல ஊர்களில் சைவ உணவு மட்டுமே கிடைப்பதையும் சக்திவேல் சொன்னார்.

‘‘அசைவ உணவை அவர்கள் சாப்பிட மாட்டார்கள் என்றில்லை சார்! அசைவ உணவு அவர்களுக்குக் கிடைப்பதில்லை” என்றார் சக்திவேல். அவருடைய பேச்சு ஒரு மழை போல பெய்துகொண்டே இருந்தது. அவருடைய பயணங்களில் அவருடைய அனுபவங்கள் அனைத்தையும் நீர்த்தேக்கம் போல தேக்கி வைத்திருந்தார். குழாய் திறந்து விட்டது போல அது பெருகிக் கீழே வழிந்து கொண்டிருந்தது. முதலில் மிகப்பெரிய ஆர்வத்தை உருவாக்கிய இந்தப் பேச்சு, மெல்ல மெல்ல சலிப்பூட்ட ஆரம்பித்தது. ஏனெனில் அவர் எதையும் கேட்கத் தயாராக இல்லை. அவரிடம் சொல்வதற்குத்தான் தகவல்கள் இருந்தன.

“இங்கே எங்கு தங்கியிருக்கிறீர்கள்?” என்று நான் கேட்டேன். ‘‘அருகேதான்” என்றார். ‘‘நாளை உங்களை வந்து பார்க்கிறேன்” என்றார். ‘‘நீங்கள் சொல்லுங்கள், நாங்கள் அங்கே வருகிறோம்’’ என்றேன். ‘‘இல்லை. அது மிகச்சிறிய இடம். அங்கே நீங்கள் வரமுடியாது” என்றார். ‘‘நாங்கள் அந்தச் சிறிய இடத்தை பார்க்க விரும்புகிறோமே” என்றோம். ‘‘நானே கூப்பிடுகிறேன் சார். உங்களை அழைத்துச் செல்கிறேன். நாளை காலை வந்து அழைத்துச் செல்கிறேன்” என்று அவர் விடைபெற்றுச் சென்றார்.

‘‘அவர் நாளைக்குக் காலையில் வந்து நம்மை அழைத்துச் செல்வார்” என்றார் நண்பர் கிருஷ்ணன். ‘‘இல்லை, அவர் வரமாட்டார்” என்று நான் சொன்னேன். அதைப்போலவே அவர் வரவே இல்லை. ‘‘ஏன் வரவில்லை?” என்று நண்பர் கேட்டார். ‘‘அவர் நம்மிடம் சொன்னது எல்லாம் உண்மையானவை. பொய் கிடையாது. ஆனால் மிக முக்கியமான உண்மை ஒன்றை அவர் சொல்லாமல் விட்டுவிட்டார்’’ என்றேன். ‘‘என்ன?’’ என்றார். ‘‘அவர் எதற்காக இவ்வாறு சுற்றிக்கொண்டு இருக்கிறார் என்பதை’’ என்றேன்.

பூடானிய பெண்கள் மங்கோலிய சாயல் கொண்ட அழகிகள். மிகச்சிறிய கண்களும் சிவந்த உதடுகளும் பளிச்சிடும் புன்னகையும் கொண்டவர்கள்.

‘‘இங்குள்ள பெண்களைத்தான் திரையில் பார்க்க இவர்கள் விரும்புகிறார்கள். இந்திப் படங்களைப்  பார்க்கும்போது கூட மாதுரி தீட்சித்தை ‘நீள முகம்’ என்று சொல்லி  கிண்டலடிக்கிறார்கள்!’’

“எங்க நைனா ‘சைவம் சாப்பிடறியா? சவம் சாப்பிடறியா?’ன்னு கேப்பார். அவர் சுத்த சைவம். நான் அப்படி இல்லை” என்றார்.

(தரிசிக்கலாம்...)