உள்ள(த்)தைச் சொல்கிறோம்



``லோக குருவும் கருணை கடலும்’’ என்னும் காஞ்சி மகாபெரியவாள் நடத்திய அற்புதக் கட்டுரையை படித்து மெய்சிலிர்த்தோம். பெரியவாளை நினைந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தோம்.
  - பகவதி பிரவின் சங்கர், சென்னை.

உள்ளத்தால் ஆத்மார்த்தமான சந்தோஷத்தையும், ஞானத்தையும் அடையும் பொருட்டு  வருவதே, பண்டிகைகள் நமக்கு உணர்த்தும் செய்தியாகும் என்பதை தெளிவுபட  தலையங்கத்தில் பொறுப்பாசிரியர் விளக்கம் தந்திருப்பது மிகச் சிறப்பு.
 - எஸ்.பரமேஸ்வரன், திருவானைக்கோவில்.

தீபாவளியை பொருளுணர்ந்து ஆத்மார்த்தமாக கொண்டாடி மகிழ கைடுபோல உதவியது, முத்துக்கள் முப்பது. தீபாவளியை முன்னிட்டு காசிக்கு சென்று வந்த ஆத்ம  திருப்தியை தந்தது, ``தீப ஒளியில் மின்னும் காசி’’ படக் கட்டுரை. குடவாயில் பாலசுப்பிரமணியன், மதுஜெகதீஷ் கட்டுரைகளின் பிரம்மாண்ட வண்ணப் படங்கள், அத்தலத்திற்கே நேரில் சென்று தரிசித்து, ரசித்த
பிரமிப்பையும், பரவசத்தையும் கொடுத்தன.
 - அ.யாழினிபர்வதம், சென்னை.

தீபாவளியின் தத்துவத்தை மிக அருமையாக விளக்கியுள்ளார், எழுத்தாளர். முதலில், தீபாவளி உருவான கதை எதில் உள்ளது? என்கின்ற பகுதி படிக்கபடிக்க ஆவலாக இருந்தது. பகுதி இரண்டினை படிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.
 - கோபிகா, நாகை.

நம் மனதையாளும் கோபம், பேராசை, குரோதம் போன்ற நரகாசுரன்களை வதம் செய்து, அங்கே ஆத்மஞான ஜோதியை ஏற்றுக் கொண்டாடுவதே நிஜ தீபாவளி. ஆன்மிகத்தின்  விளிம்பில் நின்று பண்டிகைகளை கொண்டாடும் நாம், ஆழ்ந்த பக்தி, பூஜை, யோகம் போன்ற மார்க்கத்தில் மையம் நோக்கி நுழைய தொடங்கினாலே போதும். தெளிவும் அதன் மூலம் தன்னை அறிதலும் வசமாகும் என்று பொறுப்பாசிரியர் வழங்கிய தீபாவளி வாழ்த்துக்கு நன்றி பூங்கொத்து.
 - அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

மது ஜெகதீஷ் அவர்களின் புகைப்பட கை  வண்ணத்தில், ``அவனியின் அழகிய ஆலயங்கள்’’ என்னும் கட்டுரை, அற்புதத்தின் உச்சம். புகைப்படங்கள் அனைத்தும் நேரில் கண்டவை போல இருந்தது. அதேபோல், டி.எம்.ரத்தினவேல் எழுதிய ``தீப ஒளியில் மின்னும் காசி’’ கட்டுரை நம்மை காசிக்கே அழைத்துச் சென்றது.
 - லட்சுமி சங்கர், வேலூர்.

கோதண்டராமன் எழுதிய ``சீதா கல்யாண வைபோகமே’’ என்னும் தொகுப்பு, ஒரு திருவிழாவைப்போல ராமன், சீதையை முதல் முதலில் காணச் சென்றதை மிக அழகாக காட்சிப்படுத்திய விதம் பாராட்டுக்கூறியவை. அதேபோல், ``கசனின் குருபக்தி’’ என்னும் தொகுப்பும் காண கிடைக்காத அறிய
கட்டுரை.
 - வி.சாந்தி ராஜன், பெங்களூரு.

‘‘தெளிவு பெறுவோம்’’ பகுதி ஆன்மிகம் வாசகர்களுக்கான வரப்பிரசாதம். அன்றாடம் வாழ்வில் அறிய வேண்டிய விவரங்களும், விளக்கங்களும் ஆத்மாவில் ராகம்  இசைக்கின்றன!
 - மருதூர் மணிமாறன், திருநெல்வேலி.

இணைப்பிதழாகத் தரப்பட்ட ஐப்பசி மாத ராசி பலன்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி.
 - வைஷ்ணவி, அடையாறு.

திருவாலி பெருமாள், ஸ்வப்ன வராஹி ஆகிய தகவல்கள் அடங்கிய கட்டுரையை கண்டு ஆனந்தம் கொண்டேன். அதில், ஸ்வப்ன வராஹியின் மந்திரங்களும், அவளின் வழிபாடு முறைகளை பற்றியும் தெரிந்து கொண்டேன்.
 - மாருதி, உறையூர் - திருச்சி.