திருவோணத்தில் பூமிதேவியை மணந்த திருவிண்ணகரப் பெருமாள்



ஐப்பசி திருவோணம் - ஒப்பிலியப்பன் கோயிலில்
திருக்கல்யாண உற்சவம் - 8.11.2024


பகவானை உகப்பிக்க ஒரே ஒரு துளசிப் பத்திரம் அதாவது துளசி இலை போதும். அந்த துளசி இலையை உள்ளன்போடு அவனுக்குச் சமர்ப்பித்தால், அவன் அதை ஏக மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கின்றான். துளசிக்கு அப்படி என்ன ஏற்றம்? என்று கேட்கலாம். இதற்கு பிரம்மாண்ட புராணத்தில் ஒரு அற்புதமான வரலாறு கூறப் பட்டிருக்கிறது.

எப்பொழுதும் பகவானின் மார்பில் அகலாமல் இருக்கும் மகாலட்சுமித் தாயாரைவிட ஒரு படி மேம்பட்ட சிறப்பு துளசி தேவிக்கு உண்டு என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. அதனால்தான் துளசி வளர்ப்பவர்கள் வீட்டில் எந்த தோஷமும் ஏற்படுவது கிடையாது. துளசி மாலையை ஏற்றுக் கொண்ட பிறகுதான், பகவானே மகாலட்சுமியை தனது துணைவியாக ஏற்றுக் கொள்கின்றார். 
ஆண்டாள் நாச்சியார், பகவானோடு உள்ள காதலை வெளிப்படுத்தும் பொழுது, “எனக்குக் காட்சி கொடுக்காமல் இருக்கின்றானே பகவான், என்னால் முடியவில்லை, நான் உயிர் தரிக்க ஒரு வழி, அவன் அணிந்து கொண்டிருக்கின்ற துளசி மாலையைக் கொண்டு வந்து எனக்கு வீசிவிடுங்கள்” என்று சொல்வதில் இருந்து துளசியின் ஏற்றம் புரியும்.

பகவான் நந்தவனத்தில் மகாலட்சுமியோடு உலவும் பொழுது, எத்தனையோ விதவிதமான வண்ண மலர்களை எல்லாம் பரிவோடும் மகிழ்வோடும் பார்த்துக் கொண்டே செல்வானாம். ஆனால், ஒரு துளசி செடி இருந்துவிட்டால் அதற்கு பிறகு அவன் அதே இடத்தில் நிற்பானாம். அவ்வளவு ஈடுபாடு பகவானுக்கு.

கண்ணன் வந்தானா?

திருப்பாவையில் ஒரு கட்டம்

உள்ளே படுத்திருக்கக் கூடிய பெண்ணிடம் வெளியே திருப்பாவை நோன்புக்கு அழைக்க வந்த பெண்பிள்ளைகள் ``நீ ஏன் இன்னும் எழுந்து வரவில்லை. ஓஹோ, கண்ணன் உன்  வீட்டுக்கு வந்திருப்பான் போலிருக்கிறது நீ அவனோடு கலந்து பரிமாறி இருப்பாய் போலிருக்கிறது, அதனால்தான் ஆனந்தத்தோடு படுத்துக் கொண்டிருக்கிறாய் நாங்கள் எழுப்பினாலும் நீ வெளியே வந்து கதவை திறக்காமல் இருக்கிறாய்’’ என்று சொல்கிறார்கள். உள்ளே இருக்கக்கூடிய பெண் ``அதெல்லாம் ஒன்றுமில்லை.

கண்ணனாவது இங்கே வருவதாவது.. அது சரி, இவ்வளவு உறுதியோடு கண்ணன் வந்ததாகச் சொல்கிறீர்களே, எதை வைத்துக் கொண்டு கண்ணன் இங்கே வந்திருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்?’’ என்று கேட்கும் போது, வெளியே இருக்கக்கூடிய பெண்கள் சொல்கின்றார்கள், ``அதுதான் துளசி மாலையின் மணம் நாசியைத் துளைக்கிறதே! துளசி எந்த இடத்திலே இருக்கிறதோ, அந்த இடத்திலே பகவான் இருப்பான் என்பது எங்களுக்குத் தெரியாதா’’ என்கிறார்கள். ஆக, துளசி இருக்கும் இடத்தில் பகவான் இருப்பான்.

துளசிக்கு ஏற்றம் தந்த தலம்

அதற்குக் காரணம் உண்டு. ஒரு முறை துளசி தேவி பகவானிடம், ``நீங்கள் மகாலட்சுமியை மட்டும் மார்பில் தாங்குகின்றீர்கள், அதைப் போன்ற சிறப்பு அடையாளங்கள் அடியாளுக்கும் கொடுக்க வேண்டும்’’ என்று கேட்க, திருமால் அதை ஏற்றுக் கொண்டு வரம் தருகின்றார். விரைவில் பூமியில் மகாலட்சுமி அவதரிக்கப் போகின்றாள். அதற்கு முன்னால் நீ அந்தத் தலத்தில் ஒரு துளசி செடியாக அவதாரம் செய். உன்னுடைய மடியில்தான் மகாலட்சுமியே (பூமாதேவி அம்சமாக) அவதாரம் செய்ய போகின்றாள்  என்பதால், மகாலட்சுமியைவிட உனக்கு ஏற்றம் அதிகம்.

அவளுக்கு முன் நீ அவதரித்தவளாக ஆகிவிடுகின்றாய். எனவே, உன்னுடைய மாலையை ஏற்றுக் கொண்ட பிறகுதான் நான் மகாலட்சுமியை ஏற்றுக் கொள்வேன்’’ என்று வரம்தர, துளசிதேவி, அப்படியே பூலோகத்தில் ஒரு துளசிச் செடியாக அவதரிக்க, அந்தச் செடியின் மடியில் மகாலட்சுமி தேவி, சிறு குழந்தையாக அவதரித்ததாக தலபுராணம் கூறும்.

அந்த அற்புதமான தலம்தான் ``திருவிண்நகர்’’ அன்று சொல்லப்படுகின்ற ஒப்பிலியப்பன் கோயில், தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.

உப்பில்லாத உணவே போதும்

இந்தத் தலத்தில் மார்க்கண்டேய மகரிஷி, மகாலட்சுமித் தாயார் தனக்குக் குழந்தையாக அவதரிக்க வேண்டும் என்று திருமாலைக் குறித்து தவம் இயற்றினார். அவர் தவத்தை பெருமாள் ஏற்றுக் கொண்டார். ஒரு நாள் அவர் நந்தவனத்தில் பெருமாளுக்கு மாலை சூட்டுவதற்காக, மலர்களைச் சேகரிக்கச் சென்ற பொழுது, துளசி செடியின் அடியிலே அழகான பெண் குழந்தையைக் கண்டு மகாலட்சுமி அவதரிக்கிறாள் என்பதை உணர்ந்து, அந்தக் குழந்தையை வளர்த்து வந்தார். 

முனிவரின் ஆசிரமத்தில் மகாலட்சுமி தாயார், நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தார். மிகவும் செல்லமாக அந்தப் பெண் குழந்தையை முனிவர் வளர்த்து வந்ததால், சமைப்பதோ, வீட்டு வேலையோ எதுவுமே அவளுக்குத் தெரியவில்லை.

இந்தச் சூழலில் ஓர் பங்குனி மாதம் திருவோண நட்சத்திரம் ஏகாதசி திருநாளில், ஓர் முதியவர் மார்க்கண்டேய முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து, அவருடைய பூஜைகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு, தனக்கு அவருடைய பெண்ணைக் கட்டித் தரும்படி கேட்டவுடனே, மார்க்கண்டேய மகரிஷி அதிர்ச்சி அடைந்தார்.``நீங்கள் வயதானவர். கிழவர். 

நீங்கள் இப்படி ஒரு சிறு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும்படியாகக் கேட்பது முறையா?’’ என்று கேட்க, ``அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. நான் முதியவன் அல்ல எனக்கு அவசியம் உன்னுடைய பெண்ணைத் திருமணம் செய்துதர வேண்டும்’’ என்று வற்புறுத்த, அப்பொழுது ``இது என்ன சோதனை’’ என்று முனிவர் தியானத்தில் அமர்கின்றார். அப்பொழுது சாட்சாத் அந்த எம்பெருமானே முதியவராக வந்திருப்பது அவருடைய உள் உணர்வுக்குத்  தெரிகிறது. வியப்போடு;

``பகவானே’’ என்று அழைத்தபடி வெளியே வந்த பொழுது, சங்கு சக்கரங்களைத் தரித்துக்கொண்டு, கோடி சூரியப் பிரகாசத்தோடு முனிவருக்குப் பெருமாள் காட்சி தருகின்றார்.
இந்தக் காட்சியைப் பெறுவதற்காகத் தானே 1000 ஆண்டு காலம் தவமிருந்தேன் என்று சொல்லி, தனது மகளை பெருமாளுக்குக் கன்னிகாதானம் செய்து கொடுத்த பெருமையை அடைந்தார், முனிவர். அப்பொழுது அவர் சொன்னார்;

``பகவானே, என்னுடைய பெண்ணை நான் செல்லமாக வளர்த்து விட்டேன். அவளுக்கு உணவு சமைக்கத் தெரியாது. அப்படியே சமைத்தாலும் அதில் உப்பு போன்ற சுவைகளைச் சேர்க்கத் தெரியாது. நீங்கள் இந்தக் குறைகளை எல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

குறைகளை நிறையாகக் கருதுகின்ற பகவான்;
``முனிவரே, நீர் கவலைப்பட வேண்டாம். உன் பெண் எப்படிச் சமைத்தாலும் எனக்கு அது அமுதமாகவே இருக்கும். உப்பு போடத் தெரியாது என்று தானே சொல்லுகின்றீர்கள். இனி நான் உப்புள்ள பண்டத்தையே சாப்பிடுவதாக இல்லை, மகிழ்ச்சிதானே’’ என்றார். ஆம்! முனிவர், தாயாரை பெருமாளுக்குத் திருமணம் செய்து கொடுத்த இந்தத் தலத்தில் எப்பொழுதும் பிரசாதத்தில் உப்பு சேர்ப்பதில்லை.

உப்பிலியப்பனா? ஒப்பிலியப்பனா?

அதனால், பெருமாளுக்கு ``உப்பில்லாத பெருமாள்’’, ``உப்பிலியப்பப் பெருமாள்’’ என்று ஒரு திருநாமம் வந்தது. ஆனால், இது அவருடைய முறையான திருநாமம் அல்ல. அவருடைய திருநாமம், ``ஒப்பில்லாத பெருமாள்’’ என்பதுதான். அதாவது, ஒப்பற்றவன் என்றுதான் அவருடைய திருநாமம். திருமலை அப்பனைப் போலவே நீண்ட நெடிய தோற்றத்தோடு நின்ற கோலத்தில் சங்கு சக்கர கதாதாரியாக ஒரு கரத்தில் ``கவலைப்படாதே (மா சுச:)’’ என்று காட்சி தந்து கொண்டு இருக்கிறார். உற்சவருக்கும் தாயாருக்கும் ஒரே பெயர்கள்.

இனி கோயிலை வலம் வருவோம்

சுமார் 50 அடி உயரம் 5 நிலைகளுடன் கிழக்கு நோக்கி கம்பீரமாக காட்சி தரும் ராஜகோபுரம். ராஜகோபுரத்தைக் கடந்தால் வலது புறத்தில் துலாபாரம் செலுத்தும் இடம். வெளி பிராகாரத்தின் வடக்கில் ஆழ்வார்கள் சந்நதி. அடுத்து கண்ணன் மற்றும் ஸ்ரீராமன் சந்நதிகள். தென்புறத்தில் ஸ்ரீராமானுஜர் சந்நதி. மூலஸ்தானத்தை நோக்கிய கருடன் சந்நதி. வீதியில் இருந்து ஆலயத்திற்குள் புகும்போது சிறிய கண்ணன் சந்நதியும், நாம் தரிசிக்கலாம்.

ஐந்துவிதமாகக் காட்சி தந்த பெருமான்

நம்மாழ்வார் இத்தலத்துப் பெருமானை ``என்னப்பன்’’, ``பொன்னப்பன்’’, ``மணியப்பன்’’, ``முத்தப்பன்’’ என்று பெயர்களை அடுக்கி அடுக்கிப்பாடுகிறார். அழகான பாசுரம்;
``என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப்பொன் மதிள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள் நிழலே’’.

பிரகாரத்தில் மணியப்பனும், என்னப்பனும் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி அளிக்கின்றனர். மணியப்பனது பீடத்தின் இருபுறமும் சங்கு சக்கரம் அமைந்துள்ளது. என்னப்பன் சந்நதிக்கு முன்பு, புஷ்கரணியின் மேற்கில் பூமிநாச்சியாரின் அவதார இடம் உள்ளது. இங்கு முத்தப்பனுக்கு மட்டும் சந்நதி இல்லை. ஒப்பிலியப்பன் சந்நதியில் பொன்னப்பரும், முத்தப்பரும் உற்சவர்களாகச் சேவை தருகிறார்கள்.

கருவறைக்கு வெளியே சுவாமி தேசிகன் சந்நதி உள்ளது. வெளிமண்டபத்தின் தென்புறத்தில் அனுமார் சந்நதி உள்ளது.வடபுறத்தில் ஆழ்வார்கள் சந்நதியை ஒட்டி ஊஞ்சல் மண்டபம், அற்புதமாக அமைந்திருக்கிறது. அதற்கு அருகாமையில் திருப்பள்ளியறை உள்ளது. புரட்டாசி பங்குனி பிரம்மோற்சவங்களின் போது, திவ்ய தம்பதிகள் திருக்கைத் தலம் புறப்பட்டு, பள்ளி அறையில் எழுந்தருள்வார்கள். அதன் பின்புறம் யாகசாலை உள்ளது.

கோயிலுக்குள் உள்ள புஷ்கரணிக் கரையில் எட்டு கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் பெருமாள் கனுப் பொங்கல் அன்றும், தீர்த்தவாரி தினங்களிலும் எழுந்தருளுவார். கருடன் சந்நதிக்குத்   தென்புறம் விசாலமான அழகிய கோடி மண்டபம் உள்ளது. ஐப்பசி திருவோண தினத்தன்று எம்பெருமான் திருக்கல்யாண உற்சவம் மற்றும் பிரார்த்தனை திருக்கல்யாணங்கள் இங்கு நடைபெறும். 

வேலை கிடைக்கவும், கடன்கள் நீங்கவும், பகை விலகவும் பெருமாளுக்கு துளசி அர்ச்சனை செய்யலாம். இங்குள்ள சந்தான கிருஷ்ணனை மடியில் எழுந்தருளச் செய்துக் கொண்டால், புத்திரதோஷம் நீங்கி சந்தானப் பிராப்தி கிடைக்கும்.

தங்க ரதமும் சிரவண தீபமும்

வைணவ கோயில்களில் இங்குதான் முதல் முதலாக தங்கரதம் அமைக்கப்பட்டது. தங்கரதம் செல்வதற்காக கோயில் உட்புறம் அமைக்கப்படும் ஓடுபாதை 108 திவ்ய தேச பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த திவ்யதேச பாசுரமும், பெருமானின் திருவுருவப் படமும் வைக்கப்படும் ஒருவர் தங்கரதத்தோடு வலம் வந்தால், 108 திவ்யதேசப் பெருமாளையும் சேவித்த மனநிறைவு ஏற்படும். இங்கு நடைபெறும் சிரவண தீப விசேஷமானது. மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று நடைபெறும். 

பக்தர்கள் இங்கு உள்ள திருக்குளத்தில் நீராடி, பகல் 11 மணிக்கு மூவகை தீபம் கொண்ட சிரவண தீபத்தை தரிசிக்கின்றனர். ஆச்சாரத்துடன் நீராடி, ஈர உடையுடன் அகண்ட தீபத்தை கையில் வைத்துக் கொண்டு பெரிய பிராகாரத்தை இதற்கென்று பரம்பரை உரிமை பெற்றவர் வலம் வருவார்.

அப்போது அவர்கள் அருள்வாக்கு சொல்வதும் உண்டு. ஐப்பசி திருமணத்தன்று திருக்கல்யாண உற்சவம் தொடங்கி, 12 நாட்கள் திருவிழா நடைபெறும். சனிக் கிழமை புரட்டாசி திருமலை போலவே இங்கும் விசேஷம். ஆவணி மாதத்தில் 5 நாள் பவித்ரோத்சவ விழா நடைபெறும். ஆவணி கேட்டை நட்சத்திரத்தில் தொடங்கும் விழா திருவோண நட்சத்திரத்தன்று (ஓணம் பண்டிகை முடிவடையும் அன்று) சூரிய உதயத்தின் போது கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்வார். 

இதற்கு ``உதய கருட சேவை’’ என்று பெயர். பங்குனி மாதம் இங்கு நடக்கும் பிரம்மோற்சவத்தை அடுத்து ஸ்ரீராமநவமி 10 நாட்கள் நடைபெறும். ஆடி மாதத்தில் ஜேஷ்டாபிஷேகம் நான்கு நாட்கள் நடைபெறும். நான்காம் நாள் மாலை, ``தொட்டி திருமஞ்சனம்’’ மிகச் சிறப்பாக இருக்கும்.

பொதுவாகவே திருத்தலங்களில் உள்ள நீர் நிலைகளில் குறிப்பிட்ட காலத்தில் மட்டும்தான் நீராட வேண்டும். ஆனால், இங்கே இருக்கக் கூடிய ``அகோராத்திர புஷ்கரணி’’ (பகலிராத் தீர்த்தம்) என்ற தீர்த்தத்தில் 24 மணி நேரமும் நீராடலாம். இது தவிர இங்கே சார்ங்க புஷ்கரணி, சூரிய தீர்த்தம், இந்திர தீர்த்தம் முதலிய தீர்த்தங்கள் உண்டு. 

தனுஷ்கோடி தீர்த்தத்தைவிட கோடி மடங்கு பெருமை உடையது இந்தக் கோயிலின் தென்மேற்கில் உள்ள சார்ங்க தீர்த்தம். இதை மனதால் நினைத்தாலே மோட்சம் கிடைக்கும் என்பார்கள். இங்குள்ள சூரியத் தீர்த்தத்தில், சூரியன் நீராடி தனது பாவத்தை நீக்கிக் கொண்டார். பொன் ஒளியைப் பெற்றார் என்பது தல வரலாறு...

இத்தலத்தையும், பெருமாளையும், நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடி மங்களம் செய்திருக்கின்றார். திருமங்கையாழ்வார் 34 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்திருக்கின்றார்.
மார்க்கண்டேய திருத்தலமான இத்தலம், வைகுண்டத்திற்கு இணையாகச் சொல்லப்படுகின்றது. அதனால் இதனை ``ஆகாசநகரி’’ என்று குறிப்பிடுகின்றார்கள். அங்கே ஓடுகின்ற வ்ரஜாநதியே இங்கே நாட்டார் கங்கை என்கிற பெயரோடு ஓடுவதாகச் சொல்லுகின்றார்கள்.மூலவர், ஒப்பிலியப்பன் ஸ்ரீநிவாசன். 

நாச்சியாருக்கு தனிக்கோயில் இல்லை. பூமிநாச்சியார், பெருமாளுக்கு வலது புறம் கீழே மண்டியிட்டு வணங்கும் கோலத்தில் காட்சி தருகின்றார். அற்புதமான இந்தத் தலத்தை, ஐப்பசி திருவோணத்தில் சேவிப்போம் வாரீர்!

1. கும்பகோணத்திற்கு அருகாமையில் உள்ள திருத்தலம், கும்பகோணத்தில் இருந்து இந்தத் தலத்திற்கு ஏராளமான பேருந்து வசதிகள் இருக்கின்றன.

2. இத்தலம் செண்பகவனம், ஆகாசநகரம், திருவிண்ணகர், மார்க் கண்டேய க்ஷேத்திரம், ஒப்பிலியப்பன் கோயில், தென் திருப்பதி என்ற பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு. திருப்பதிக்குச் செல்ல இயலாதவர்கள் இங்கேயே தங்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்ளலாம். இவர் திருப்பதி னிவாச பெருமாளுக்கு தமையனார் என்றும் ஒரு செய்தி உண்டு.

3. இந்தக் கோயில், தளிகைகளில் உப்பு சேர்ப்பது கிடையாது. உப்பு சேர்த்த உணவை உள்ளே எடுத்துச் செல்வதோ, சாப்பிடுவதோ கூடாது. அது நரகவாசத்தைத் தரும் என்று சாத்திரம் சொல்லுகின்றது.

4. காலை 5.45 மணிக்கு சுப்ரபாதம் பாடப் பெற்று, 6.00 மணிக்கு பசுவுடன் கூடிய விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. காலை 7.30 மணிக்கு திருவனந்தல் (திருப்பாவை) காலை 8.00 மணிக்கு திருவாராதனம் (காலசந்தி) பூஜையும் நடைபெறுகிறது. நடைதிறப்பு நேரம்:- காலை 6.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல், இரவு 9.00 மணி வரை. ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரம் இங்கு விசேஷமாக நடைபெறும். அன்றைக்கு சிரவணதீபம் எடுத்துச் செல்வது வழக்கம்.

5. பங்குனியில் பிரம்மோற்சவம், ஐப்பசி மாதம் திருக்கல்யாணம் உற்சவமும் குறிப்பிடத்தக்க உற்சவங்கள்.

6. இந்தத் தலத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் திருநாகேஸ்வரம் என்ற சைவத்தலம் (ராகு தலம்) உண்டு.

7. திருப்பதி பெருமாளுக்கு சுப்ரபாதம் இருப்பது போலவே இவருக்கும் தனிச் சுப்ரபாதம் உண்டு. அதை இயற்றியவர் ஸ்ரீராம தேசிகாச்சாரிய சுவாமிகள். தினமும் இந்தச்  சுப்ரபாதம் இங்கே ஓதப்படுகிறது.

8. பொதுவாக பெருமாளுக்கு இடதுபுறம் பூதேவி இருப்பார். ஆனால், இங்கு பூதேவியை பெருமாள் மணம் புரிந்து கொண்டதால், மணப்பெண்ணுக்குரிய இடமான வலப்புறத்தில் இடம் பெற்று இருக்கிறார்.

9. கருடன் சந்நதிக்கு முன், அமைந்துள்ள பெருமாள் திருவடிகளில் மிளகு கலந்த உப்பைக் கொட்டி வழிபட்டால், தோல் வியாதிகள் நீங்கும் என்கிற நம்பிக்கை உண்டு.

முனைவர் ஸ்ரீராம்