தெளிவு பெறு ஓம்
ஏன் தட்சிணாமூர்த்தி கோயில்களில் தெற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார்? - விஷ்ணு, மதுரை.
ஆன்மாக்கள் வடக்கு நோக்கி செல்வது சரண யாத்திரை என்பார்கள். தெற்கு நோக்கி செல்வது மரண யாத்திரை என்பார்கள். ஆன்மாக்கள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி, அதாவது தன்னை நோக்கி வருவதற்காக தட்சிணாமூர்த்தி தென்திசையில் தெற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். இதில் இன்னொரு முக்கியமான விஷயம் பாருங்கள், சைவத்தில் கோயில் என்றால் சிதம்பரத்தைக் குறிக்கும். வைணவத்தில் கோயில் என்றால் ஸ்ரீரங்கத்தைக் குறிக்கும். ஸ்ரீரங்கத்தில் பெருமாளும், சிதம்பரத்தில் நடராஜரும் தெற்கு நோக்கித்தான் எழுந்தருளி இருக்கிறார்கள். காரணம், ஆன்மாக்களுக்கு சரணம் தருவதற்காக. ?வைராக்கியம் என்றால் என்ன? - சிவக்குமார், திருத்துறைப்பூண்டி.
மன உறுதிதான் வைராக்கியம். ஆன்மிகத்தில் வைராக்கியம் மிகவும் முக்கியம். ராமானுஜரின் சீடர்களில் ஒருவர் அனந்தான் பிள்ளை. அவர் திருமலையில் நந்தவன கைங்கரியம் செய்து கொண்டிருக்கிறார். இப்பொழுது போல அவர் காலத்தில் திருமலை வசதியான ஒரு தலமாக இல்லை. அடர்ந்த மலைக்காடு, தாங்க முடியாத குளிர், விஷ ஜந்துக்கள், மனித நடமாட்டம் என வசிப்பதற்கே சிரமமான இடமாக இருந்தது. ஆனால், இயற்கை அழகும், அருவிகளும், பூக்களும் கொட்டிக்கிடந்தன. அப்படிப்பட்ட காலத்தில் திருமலை அப்பனுக்கு நந்தவனம் அமைத்து புஷ்பங்களைப் பறித்து மாலையாகக் கட்டித் தினசரி சமர்ப்பித்து வந்தார். அதுதான் ஆச்சாரியன் அவருக்கு இட்ட கட்டளை.
அப்படி ஒரு நாள் நந்தவனத்தில் பூக்களை பறித்துக் கொண்டிருக்கின்ற பொழுது, ஒரு பாம்பு அவரைத் தீண்டியது. ஆனாலும், அவர் அதைப் பற்றிக் கவலைப்படாமல் சுவாமிக்கு பூஜைக்கு நேரமாகிவிடும் என்று மாலையைக் கட்டிக்கொண்டு பெருமாளை சேவிக்க வந்தார். பெருமாள் இவருடைய நிலையை உணர்த்து, ``என்ன, இப்படி செய்துவிட்டீர்? பாம்பு கடித்துவிட்டது.
அதற்கு வைத்தியம் பார்க்க வேண்டாமா! அது விஷமுள்ள பாம்பாக இருந்து உம்மைத் தீண்டி இருந்தால் உம்முடைய நிலை என்ன?’’ என்று அர்ச்சகர் மூலம் பெருமாள் கேட்கும் பொழுது, அனந்தான் பிள்ளை கவலைப் படாமல் பதில் சொன்னாராம்; ``அதனால் என்ன! உன்னை கோனேரி தீர்த்தத்தில் நீராடி இங்கே சேவிப்பதற்கு பதிலாக, விரஜையில் நீராடி அந்த வைகுண்டத்திலேயே சேவித்திருப்பேனே என்றாராம். இதற்குப் பெயர்தான் வைராக்கியம் என்பது. ?மனிதப் பிறவிதான் உயர்ந்ததா? - கோ.பாலசிவகாமி, ராசிபுரம்.
அதில் என்ன சந்தேகம்? அரிது அரிது மனிதப் பிறவி அரிது என்று தானே சொல்லி இருக்கிறார்கள். ஒரு சின்ன உதாரணம் சொன்னால் புரியும். ஒருவர் பகவானிடம் சென்று பிரார்த்தனை செய்தார்.“கடவுளே, உன்னைப் போன பிறவியில் நான் இப்படிக் கோயிலுக்கு வந்து வணங்கவில்லை. அடுத்த பிறவியிலும் வணங்க முடியாது போலிருக்கிறது’’ என்று வருத்தப்பட்டார்.
சென்ற பிறவி, அடுத்து வரும் பிறவியைப் பற்றி கவலைப்பட்டாரே தவிர, இந்தப் பிறவியைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லையே, என்ன காரணம் என்று சொன்னால், அதற்கு ஒரு அருமையான விளக்கத்தைப் பெரியவர்கள் சொல்லுகின்றார்கள். சென்ற பிறவியில் கோயிலுக்குச் சென்று பக்தி செலுத்த முடியாததால், மோட்சம் அடைய முடியாமல் அடுத்தொரு பிறவியாக மனிதப் பிறவி அடைந்துவிட்டார்.
இந்தப் பிறவியிலே ஏதோ ஒரு விதத்தில் பக்தி செலுத்த முடிகிறது, கோயிலுக்குச் செல்ல முடிகிறது, ஆகையினால் அடுத்த ஒரு பிறவி வருவதற்கு வழி இல்லை. அப்படி அடுத்து ஒரு பிறவி வராமல் இருந்துவிட்டால், இந்த மனிதப் பிறவியின் மூலமாக கோயில்களுக்குச் சென்று, பாசுரங்கள் பாடுகின்ற ஒரு வாய்ப்பை இழந்து விடுகின்றோம். எனவேதான் அப்படிக் கூறி வருத்தப்பட்டார்.
அப்படியானால் சிறந்த பிறவி மனித பிறவி என்றல்லவா ஆகிறது! அதனால் தானே ``இச்சுவை தவிர இந்திரலோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன்’’ என்று தொண்டரடிப் பொடியாழ்வார் பாடினார். நடராஜரை தரிசிக்க முடியுமானால் ``மனித பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’’ என்று நாயன்மார்களும் வேண்டினார்கள். அப்படியானால், மனித பிறவி உயர்ந்தது. அப்படிப்பட்ட உயர்ந்த மனித பிறவியில், நாம் பிறந்திருக்கிறோம் என்று நினைத்து பக்தி செலுத்த வேண்டும் என்பதுதான் இதிலே உள்ள கருத்து.
?எத்தனையோ விரதங்கள் இருந்தாலும், ஏகாதசி விரதத்திற்கு மட்டும் என்ன சிறப்பு? - ஸ்ரீஹரிபிரசாத், திருவல்லிக்கேணி.
விரதங்களில் தலைசிறந்த விரதம், எல்லோரும் கடைபிடிக்கக் கூடிய விரதம் ஏகாதசி விரதம். `ஏகாந்தத்தில் பேச்சின்றி ஏகாதசியில் வசி; ஏகாம்பர அருளமுதம் புசி’ என்பது ஆன்றோர்களின் அருள்வாக்கு. தாயிற் சிறந்த உறவு இல்லை, காசியில் சிறந்த திருத்தலம் இல்லை. கங்கையில் சிறந்த நதி இல்லை. ஏகாதசியில் சிறந்த விரதம் இல்லை என்பது பெரியோர்கள் வாக்கு. திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது.
அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால், மனித மனத்தின் மும்மலங்களான கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். இப்பிறவியில் நாம் செய்த பாவங்கள் விலகி, ஏற்றம் தரும் வகையிலான இனிய வாழ்க்கை அமையும். ?ஹரிவாசரம் ஏகாதசியில் வருகிறது அதற்கு என்ன பொருள்? - வ.சுபாஷ், நெல்லூர்.
ஏகாதசியின் கடைசி கால் பகுதிக்கும், துவாதசியின் முதல் கால் பகுதிக்கும் ஹரிவாசரம் என்பார்கள். சில பேர் துவாதசியின் முதல் கால் பகுதியை ஹரிவாசரம் என்று சொல்வதும் உண்டு. இந்த ஹரிவாசரத்தில் தண்ணீர்கூட குடிக்காமல் உபவாசம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஏகாதசியின் முழுமையான பலன் கிடைக்கும் என்பார்கள்.
துவாதசி பாரணை என்பது சூரிய உதயம் ஆரம்பித்து ஆறு நாழிகை நேரத்திற்குள் செய்ய வேண்டும், என்கிற விதி இருக்கிறது. இந்த நேரத்தில், ஹரிவாசரம் வந்துவிட்டால் பாரணை செய்ய முடியாது. அதனால்தான் ஏகாதசி விரதம் துவாதசியில் சில நேரங்களில் வருகிறது. இதனை ``வைஷ்ணவ ஏகாதசி’’ என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் கடைப் பிடிக்கிறார்கள். ?ஒளஷதகிரி என்று திருத்தலம் இருக்கிறதா? - மா.பிரியதர்ஷன், பரங்கிப்பேட்டை.
இருக்கிறது கடலூருக்கு அருகில் திருவஹிந்திரபுரம் என்று ஒரு திருத்தலம். அங்கே மருந்துமலை என்று ஒரு மலை இருக்கிறது. அந்த மலைக்கு மேலே ஹயக்ரீவர் இருக்கிறார். வேதாந்த தேசிகர் இந்தத் தலத்தில், 40 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் கட்டிய திருமாளிகை, கிணறு எல்லாம் இன்னும் இருக்கிறது. மாணவர்கள் தங்கள் கல்வி வளர்ச்சிக்கு இங்குள்ள ஹயக்ரீவரை வணங்கி நலம் பெறுகிறார்கள்.
?ஏழரைச் சனியிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்? - பி.மலையப்பஸ்வாமி,கோவில்பட்டி.
ஏழரைச் சனியாக இருக்கட்டும், கண்டச் சனியாக இருக்கட்டும், அர்த்தாஷ்டமச் சனியாக இருக்கட்டும், அல்லது சனி திசை புத்தி நடக்கட்டும். எல்லாவற்றுக்கும் கீழ்க் கண்ட பரிகாரங்கள் செய்யலாம்.
1. சனிக்கிழமை நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி வரலாம். 2. நீலோற்பவம் மலரால் சனி பகவானை வணங்கலாம். 3. சனிக்கிழமை ஒருபொழுது விரதம் இருக்கலாம். 4. பால் அபிஷேகம் செய்யலாம். 5. கருப்பு வஸ்திர தானம் செய்யலாம். 6. முதியவர்கள் உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம். 7. ஆஞ்சநேயரை சனிக்கிழமை வணங்கலாம். 8. பிரதோஷ விரதம் இருக்கலாம். 9. நீலக்கல் மோதிரம் அணியலாம். 10. ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்யலாம். 11. நல்ல புகழ் பெற்ற திருத்தலங்களுக்கு யாத்திரை செல்லலாம். இவைகள் எல்லாம் சனியின் தீவிரத்தைக் குறைக்கும் பரிகாரங்களாகும்.
?வாழ்க்கைக்கு வீரம் அவசியமா? - கணபதி சுந்தர், பொய்கைநல்லூர்.
கட்டாயம் வேண்டும். அதற்குத்தான் துர்கா பூஜை. வீரமும் வேண்டும், மனதில் ஈரமும் வேண்டும், அதைவிட முக்கியம் ஒழுக்கம். வீரமில்லாத ஒழுக்கம் கோழைத் தனத்தைத் தரும். ஒழுக்கம் இல்லாத வீரம் முரட்டுத்தனத்தைத் தரும். இந்த ரெண்டும் வாழ்க்கைக்கு உதவாது.
?இசையோடு ஒன்றியதா மனித வாழ்க்கை? - ஜி.பிரபாவதி,
சந்தேகம் என்ன? பூபாளத்தில் விடியும் பொழுது நீலாம்பரியில் முடிகிறது அதற்கு இடையில்தான் ஆனந்த பைரவி, அடானா மோஹனம் கல்யாணி காம்போதி போன்ற ராகங்கள் எல்லாம் பட்டினத்தார் ஒரு அற்புதமான பாடலைப் பாடி இருக்கின்றார். மனித வாழ்க்கை என்பது மூன்று இசையோடு முடிகிறது என்பது அந்தப் பாடலின் கருத்து. முதல் இசை குழந்தை பிறக்கும் போது சங்கினால் பால் கொடுக்கின்றார்கள்.
அந்த சங்கு அமுது ஊட்டும். இரண்டாவது இசை திருமணத்தின்போது ஊதப்படும் சங்கு. இன்றைக்கும் நகரத்தார் திருமணங்களில் சங்கு ஊதும் வழக்கம் உண்டு. மூன்றாவது இசை என்பது ஒருவன் மரணத்தின் போது ஊதப்படுவது இந்த மூன்றும் இசைகள் தான். இதோ பட்டினத்தார் பாடல்;
``முதற்சங்கு அமுதூட்டும், மெய்குழலார் ஆசை நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் - கடைச்சங்கம் ஆம்போ ததுஊதும், அம்மட்டோ? இம்மட்டோ? நாம்பூமி வாழ்ந்த நலம்!’’ எனவே இசையோடுதான் வாழ்க்கை இயங்குகிறது.
?பொதுவாக கோயில்கள் பகலில் மட்டும்தான் திறந்திருக்குமா? - மு.வைரவேல், புதுச்சேரி.
ஆம்! அப்படித்தான். ஆனால், இரவில் திறந்திருக்கும் கோயிலும் ஒன்று உண்டு. மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பாதையில், எம்.சுப்பலாபுரம் என்று ஒரு ஊர் இருக்கிறது. அந்த ஊருக்கு பக்கத்தில் சிலார் பட்டி என்ற கிராமம் இருக்கிறது. அங்கே ஒரு அம்மன் கோயில் இருக்கிறது.
கால தேவி அம்மன் கோயில் என்று அந்த கோயிலைச் சொல்லுகின்றார்கள். அம்மனுடைய திருவாசியின் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், ஒன்பது கிரகங்கள் இருக்கின்றன. ராத்திரி நேரம் என்பது காலதேவியைக் குறிக்கும். கால தோஷம் (ஜாதக கிரக தோஷம்) உள்ளவர்கள், இந்த கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருகின்றார்கள். பௌர்ணமி, அமாவாசையில் விசேஷமான பூஜை நடக்கிறது. ?சுந்தரன் என்று யாருக்குப் பெயர்? - கிருஷ்ணவேணி, தர்மபுரி.
இறைவனுக்கு சுந்தரன் என்று பெயர். மதுரை கள்ளழகருக்கு சுந்தர்ராஜன் என்ற திருநாமம் திருநாகையில் இருக்கக்கூடிய பெருமாளுக்கு சௌந்தர்ராஜன் என்ற திருநாமம். தேவார மூவரில் ஒருவருக்கு சுந்தரர் என்று பெயர். ராமாயணத்தில் அனுமனுக்கு சுந்தரன் என்ற திருநாமம். அவருடைய பெயரில்தான் ஒரு காண்டமே இருக்கிறது அனுமனின் பெருமையைச் சொல்லும் அந்த காண்டத்திற்கு சுந்தரகாண்டம் என்று பெயர்.
?நம்பிக்கைக்கும் வெற்றிக்கும் தொடர்பு உண்டா? - வேலாயுதம், மதுரை.
நம்பிக்கை இல்லாவிட்டால் முயற்சி ஏது? அதனால் வரும் வெற்றி ஏது? எனவே நம்பிக்கை என்பது வெற்றியோடுதான் வரும். ஆனால், நம்பிக்கை உள்ளவர் களுக்குதான் வெற்றியே வரும்.
?உலகில் புனிதமான இடங்கள் எது? - ப.பரணி, புதுக்கோட்டை.
உலகில் புனிதமான இடங்கள் இரண்டு உண்டு. ஒன்று தாயின் கருவறை. இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை. ஒன்றில் உயிர் பிறக்கிறது. இன்னொன்றில் உயிர் சிறக்கிறது.(அதாவது அறிவு பிறக்கிறது)
தேஜஸ்வி
|