தீபாவளியின் தத்துவ விளக்கம்
பகுதி 2
புராண காலத்தில் நடந்த நரகாசுரன் கதைக்கும் இப்போது நம் வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளுக்கும் ஒற்றுமை இருக்கிறதே என்று தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறோம்.
இதென்ன வாழ்க்கை. நான் எங்கு சிக்கிக் கொண்டேன். எப்படி வெளியேறுவது. ஏதோ சுகம் வருகின்றது என்று உட்கார்ந்திருந்தால்… அடுத்த நான்கு நாட்களில் பிரச்னை வருகின்றதே… என்ன வாழ்க்கை இது குழப்பம் அதிகமாகின்றதே என்று ஒன்றும் புரியாத நிலையில் சரணாகதி நிலை வரும்போது அங்கு ஜீவன் முக்தரான குரு வந்து விடுகின்றார். அந்த ஜீவன் முக்தரே இங்கு கிருஷ்ணராக இந்திரனுக்கு வருகின்றார். நரகாசுரன் எனும் மாயா அவித்யையோடு சண்டை போடுகின்றார். இங்கு இந்திரன் புத்திசாலி. நாம் தவற விடும் இடத்தை அவன் சுட்டிக் காட்டுகின்றான் பாருங்கள். இந்த மாயை அவித்யாவான நரகாசுரனோடு சண்டை போடுவது என்னால் இயலாது அது அந்த ஜீவன் முக்தனான கிருஷ்ணனால் மட்டுமே ஆகக் கூடிய விஷயமென்று அமைதியாக இருக்கின்றான். ஜீவன் முக்தரான கிருஷ்ணரும், சத்யபாமையும் ஐப்பசி மாதம், கிருஷ்ண பட்சம் பிரதமை முதல் சதுர்த்தசி வரை யுத்தம் செய்து நரகாசுரனை வதம் செய்தனர். இந்திரனை பட்டத்தில் அமர வைத்தனர்.
இன்னும் கொஞ்சம் கூர்மையாக பார்ப்போம் ஆத்மாதான் நாம் என்பதை மறந்து விட்டு ஜீவனே நான் என குறுக்கிக் கொண்டிருந்தோம். ஜனன மனன, புண்ணிய பாவத்தில் உழன்று சுக துக்கம் என்கிற இரட்டைகளில் திண்டாடிக் கிடந்தோம். உபாசனை என்கிற பக்தி மார்க்கத்தில் சென்று கிருஷ்ணரையே உபாசித்து பிறகு கருணையினால் அந்த ஜீவன் மீண்டும் ஆத்மா தான் என சச்சிதானந்த நிலையை அடைகின்றான். இவ்வளவுதான் இதன் தாத்பரியம்.
இப்போது கதையில் ஐப்பசி மாதம் என்று சொல்லியிருக்கிறார்களே அதென்ன? அதெப்படி ஐப்பசி மாதம்தான் வதம் செய்ய வேண்டுமா என்ன? வேறு மாதத்தில் வதம் செய்யக் கூடாதா என்று கேள்வி வரலாம். தமிழில் உள்ள மாதங்கள், பட்சங்கள் என்று சொல்லப்படுகின்ற திதிகள் அனைத்துமே தத்துவ நோக்கோடு சொல்லப்பட்டு பின்பு நம்முடைய சாதாரண தளங்களில் கொண்டு வந்து வைக்கப்பட்டவை. யார் இதை ஆய்வு செய்கிறார்களோ அவர்களுக்கு அதன் தத்துவ அர்த்தத்தை புரிய வைப்பவை.
ஐப்பசி என்பது மாதங்களில் ஏழாவதாகும். இந்த ஏழு மாதங்கள் என்பது நம் பார்வையில் சாதாரண மாதங்கள். ஆனால், ரிஷிகள் இந்த மாதங்கள் ஒரு ஜீவனுடைய ஏழு விதமான ஞான பூமிகளை குறிப்பிடு வதாகும். இந்த ஏழு மாதங்களும் ஆன்மிக ஞானத் தேடல் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும்.
சித்திரை என்பதன் குறியீட்டை சுபேச்சை என்று சொல்கிறார்கள். இப்போது ஜீவன் மாட்டிக் கொண்டு விட்டான் அல்லவா எனவே, அவன் தனக்கு நன்மை எது என்று விரும்பச் சொல்கிறது அதுவே சுபேச்சை. இரண்டாவது மாதமான வைகாசி என்பதை விசாரணை என்கிறது. அதாவது வாழ்வு குறித்த தத்துவ விசாரணையில் இறங்குதல்.
மூன்றாவது மாதமான ஆனியை தனுமானசி என்கிறது. அதாவது, தொடர்ந்து தத்துவ விசாரணையில் இறங்கியவனின் மனம் சூட்சுமத் தன்மையை அடைகின்றது. தனு என்றால் வில்லின் கூர்மை போன்றது.
மானசி எனில் மனம். அதி சூட்சுமத் தன்மையை அடையும் மனம். நான்காவதான ஆடி மாதத்தை சத்வாபத்தி என்கிறது. அதாவது மனம் சூட்சுமமாகி விட்டபிறகு அடடே… உடலைப் பிடித்துக் கொண்டிருக்கும் மனம் மறையத் தொடங்கும்போது தேகம் தான் என்கிற தன்மை விலகி ஆத்மாவின் மெல்லிய கதிரை ஜீவன் அறியத் தொடங்குதல்.
ஐந்தாவது மாதமான ஆவணியை அஸம்ஸத்தி என்கின்றது. அதாவது ஜீவனுக்கு இப்போது உடலும் நானல்ல மனமும் நானல்ல என்று தேகத்தோடு சம்பந்தமேயில்லாமல் ஆத்ம ஆனந்தத்தையே பருகிக் கொண்டிருக்கும் நிலை. ஆறாவதான மாதமான புரட்டாசியை பதார்த்தா பாவனை என்கின்றது.
அதாவது இதுவரை தன் எதிரே இருந்த பதார்த்தம் போன்று தெரிந்து கொண்டிருந்த உலகம் மறைந்து விடுவது. தன்னை மனம் ஏமாற்றிக் கொண்டிருந்த நிலைபோய் எங்கும் ஆத்ம தரிசனத்தை காணுதல்.
உணர்தல். ஏழாவது மாதமான ஐப்பசியை துரீயம் என்கிறது. அவ்வளவுதான் எவ்வித சங்கல் பமும் விகல்பமும் இல்லாத, தானும் அந்த பிரம்மமும் ஒன்றேயான ஏகமான நிலை. இதுவே ஏழு ஞான பூமிகைகள். இதையே இங்கு ஏழு மாதங்களாக இங்கு குறிப்பிட்டிருக்கிறார்கள். அடுத்து சதுர்த்தசி என்பது பதினான்கு ஞான சாதனைகளாகும்
1. நித்யா நித்ய வஸ்து விவேகம் என்று வேதாந்தம் கூறுகின்றது. எது உண்மை - எது பொய் என்று அறிவது.
2. இகாமுத்ரார்த்த பலபோக விராகம் - ஜீவன் கிடந்து உழலும் மாயையின் அம்சங்கள் குறித்து அறிவில் தெளிவு பெறுதல்.
3. சமம் - எல்லாரையும் சமமாக பார்க்கும் அபிப்ராயங்களை உருவாக்கியபடி இருக்கும் மனதை பக்குவ படுத்துதல்.
4. தமம் - இந்திரியங்களை அதன் போக்குக்கு விடாமல் வசப்படுத்தி வைத்திருத்தல்.
5. உபரதி - மனம் நின்று போகும் நிலை இது.
6. திதிக்ஷை - பொறுமை. உங்கள் பொறுமை என் பொறுமை அல்ல. மகா பொறுமை.
7. சிரத்தை - குருவின் வாக்கியத்தில் திடமாக அமர்ந்து தொடர்ந்து செல்லுதல்.
8. சமாதானம் - ஆத்மா எனும் லட்சியத்தில் சொருகிச் சென்று அமர்ந்து விடுவதே இங்கு சமாதானம்.
9. முமுக்ஷுத்துவம் - இனி அடைய வேண்டியது பகவானையே… ஆத்மாவையே என்று திடமாக பயணப்படுதல்.
10. ஸ்ரவணம் - இனி குருவின் வாக்கியத்தை அப்படியே கேட்டல்.
11. மனனம் - இனி குருவின் திருவாக்கால் கேட்டதை அப்படியே மனதில் நிறுத்துதல்.
12. நிதித்யாசனம் - மெல்ல அந்த ஆத்மாவில் தன்னைத்தானே பார்த்தல். தரிசனம் கிட்டும் இடம் இது.
13. சவிகற்ப சமாதி - ஜீவன் தன் அகங்காரத்தை களைந்து விட்டு ஆத்மா என்கிற அந்த பேரானந்த கடலில் நீந்துவது.
14. நிர்விகற்ப சமாதி - கடைசியாக இனி அந்த ஜீவன் இன்னொரு பிறவி எடுக்காது ஆதியந்தமற்ற அந்த பிரம்மத்தோடு ஒன்றியிருத்தல்.
(இந்தப் பதினான்கு சாதனைகளுக்குமான விளக்கங்களை காஞ்சி மகா பெரியவர் தெய்வத்தின் குரல் ஆறாவது பகுதியில் அளித்திருக்கின்றார்.)இப்போது இந்திரன் எனும் ஜீவன் இழந்த பதவியான அந்த பிரம்ம பதவியில் அமர்தல். நரகாசுரனை முற்றிலும் அழித்து விட்ட நிலை இது. ஏன் கிருஷ்ணர் நரகாசுரனை கொல்லவில்லை தெரியுமா? அவர் ஜீவன் முக்தர்.
அவருக்கு இன்னொருவர் என்பதே தெரியாது. இதனை சாஸ்திரங்கள் அபரோக்ஷ குரு என்கின்றன. அப்போது சத்யபாமை பரோக்ஷ குரு என்கின்றன. பரோக்ஷ என்றால் கட்டுப்பாடுகளோடு கூடியது. எல்லைகளோடு கூடியது. அபரோக்ஷ என்றால் எல்லையற்ற கட்டுப்பாடுகளே இல்லாத என்று பொருள். இப்போது பரோக்ஷ என்கிற சத்யபாமா குருவே மனித உருவில் வந்து அந்த எல்லையற்ற பரமாத்மாவான கிருஷ்ண பகவானான அபரோக்ஷ குருவின் எல்லையற்ற கருணையினால் நிர்விகற்ப சமாதி என்கிற 14வது அம்பை எய்து ஜீவனை ஜீவன் முக்தனாக மாற்றுகின்றது. நரகாசுரன் அழிந்தான் என்பதற்கு அர்த்தம் அவனும் எல்லையற்ற பிரம்ம வஸ்துவாக மாறினான். அங்கு இனி இருட்டு இல்லை. தீபங்கள் எப்படி வரிசையாக இடைவெளியில்லாமல் ஆவளியாக அதாவது உலகெங்கும் அகண்டமாக பிரகாசிக்குமோ அதுபோல ஜீவன் ஆனந்தமாக ஜோதியாக பிரகாசிக்கின்றான்.
தீபங்களின் விளக்கு வரிசை பிரகாசமானது அகண்டமாக ஒரே தாரையாக இருப்பதுபோல தன்னுடைய சொரூபமும் தடையற்று இருப்பதையே தீபாவளி என்று கூறுகின்றனர். இவ்வளவு பெரிய தத்துவத்தையே நம்முடைய ரிஷிகள் சூட்சுமமான தத்துவங்களாகச் சொல்லி, காலக்கிரமத்தில் புரியும் என்றும் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் தீபாவளியை இந்துமதம் மாபெரும் பண்டிகையாக எல்லோரும் கொண்டாடுங்கள் என்று வைத்திருக்கிறது. இப்போது புரிகிறதா தீபாவளி ஏன் மிகப் பெரிய பண்டிகை என்று.
ஹரீஷ் ராம்குமார்
|