மொழிக்கும் நினைவிற்கும் எட்டாத நின் திருமூர்த்தி
அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்
``மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத நின்திரு மூர்த்தி, எந்தன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்; விழியால் மதனை அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை, அண்டமெல்லாம் பழிக்கும்படி, ஒருபாகம் கொண்டாளும் பராபரையே!’’ - எண்பத்து ஏழாவது அந்தாதி“ஆதியாக” சக்தி தத்துவத்தின் ரகசியத்தை இப்பாடல் விளக்குகிறது.
இரண்டு முரண்பாடு களின் சமன்பாடே சக்தி என்கிறது ஆகமம். அதற்கான சான்றுகளை அபிராமிபட்டர் பல இடங்களில் அறிவித்துள்ளார். ஒரு பொருள் ஒரே தன்மையைத்தான் பெற்றிருக்கும். இரண்டு முரண்பட்ட தன்மைகளைப் பெற்றிருக்காது என்பது உலகியல் உண்மை. உமையம்மைக்கு அதுதான் சிறப்பு. ஒரு உதாரணத்தினால்தான் இதை புரிந்து கொள்ளமுடியும். தீ, மேல்நோக்கி செல்லுமே அன்றி ஒரு காலத்திலும் கீழ்நோக்கி வராது.
தண்ணீர் கீழ்நோக்கிச் செல்லுமே அன்றி தன் இயல்பாய் மேல் நோக்கி செல்லாது. காற்று நான்கு பக்கமும் நகருமே அன்றி குறுகாது. பூமி குறுகுமே அன்றி பரவாது என்கிறது தர்க்கம். அந்த வகையில் ஒரே ஒரு தன்மையுடைய இவை யாவும் ஒன்றுக்கு மேற்பட்ட தன்மையை பெறுமே அன்றி, முரண்பட்ட தன்மையை பெறாது. உமையம்மையோ இவை நான்கிலுமே இருக்கும் பண்பை பெற்றவள். முரண்பாடான இந்த நான்கு பூதங்களிலுமே இவள் இருக்கிறாள். முரண்பாடுகளின் சமன்பாடாக இருப்பவள் உமையம்மை என்பதை விளக்குவதே இப்பாடல். இனி பாடலுக்குள் நுழைவோம்.
“அந்தாதி பொருட்சொல் வரிசை”
* மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத * நின் திருமூர்த்தி * எந்தன் விழிக்கும் வினைக்கும் வெளி நின்றதால் * விழியால் மதனை அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை * அண்டமெல்லாம் பழிக்கும் படி * ஒரு பாகம் கொண்டாளும் பராபரையே
இவ்வரிசையின் வழி பாடலின் விளக்கத்தை இனி காண்போம்.
``மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத’’ ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு சொல்லால் வரையறை செய்து மனதிற்குள் நிலைநிறுத்தி நினைவுகளாக ஆக்குவதற்கு மொழி என்றும், ``நினைவு’’ என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற புலன்களின் வழி பெறப்பட்ட பதிவுகளை வகுத்தும் தொகுத்தும் அழியாமல் காத்து தேவையானபோது, தேவையான அளவு, தேவையான செய்தியை மட்டும் புத்திக்கு தரும் தகவல்தான் நினைவு. இது மனதின் செயலாகும்.
மனதானது ஐந்து புலன்களையும் ஒருமித்து ஒரு பொருளை பற்றிய தகவலை கண்டு, கேட்டு, உணர்ந்து, பதிவு செய்து கொள்ளும். இந்த வகையிலே ``மொழி’’ என்பது காதால் கேட்கப்படுவது, அது சூட்டும் பொருள் என்பது மனதால் நினைக்கப்படுவது. இதைக் கொண்டுதான் மனிதர்கள் அனைவரும் ஒரு பொருளை பற்றி அறிந்துகொள்ள முடியும், உணர்ந்து கொள்ள முடியும்.
இதையே ``மொழிக்கும் நினைவுக்கும்’’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். ``எட்டாத’’ என்பதனால் உமையம்மையின் உண்மைக் குணங்களை இந்த வகையில் மனதில் நினைவாகவோ, மொழியின் ஒலியாகவோ உணர்ந்து கொள்ள முடியாது என்பதையே ``எட்டாத’’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். இவ்விரண்டையுமே ``மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத’’ என்கிறார்.
``நின் திருமூர்த்தி’’
``நின்’’ என்பதனால் அபிராமி என்ற தேவதையையும், ``திரு’’ என்பதனால் குணங்களையும், ``மூர்த்தி’’ என்பதனால் வடிவத்தையும் குறிப்பிடுகின்றார். ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் அர்ச்சாவதார மூர்த்தி என்ற கருங்கல்லினாலே அமைக்கப்பட்டிருக்கும் மூலஸ்தானம் என வழக்கில் சொல்லப்படும் திரு உருவத்தையே ``நின்’’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்.
அந்த திரு வடிவத்திற்கு செய்யப்படும் அபிஷேகம், அலங்காரம், உடை, மற்றும் ஒப்பனை இவை அனைத்தையும் அபிராமி என்ற தேவதைக்கு செய்யப்பட்டதாக குறிப்பிடுகிறார். இதுதான் ``மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத திருமேனி’’ ஆகும். அபிராமி பட்டரோ, அதே சந்நதியின் முன்நின்று அவளை பார்த்து ``மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத திருமூர்த்தி’’ என்று கூறுவதனால், அந்த உமையம்மை பேசுவதை அவர் காதுகளால் கேட்கிறார். மற்றவர்களுக்கு கேட்காத அவளது குரலை ``மொழி’’ என்கிறார். அந்த உமையம்மை என்ன நினைக்கிறாள் என்று தன் உள்ளத்துள் உணர்கிறார். அந்த உள்ளுணர்வு சாமானியர்களுக்கு எட்டாத நிலையில் உமையம்மையின் அருளைப் பெற்றவர்களுக்கு எட்டும் வகையில் அது உள்ளது. உதாரணமாய் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் இவர்கள் எல்லாம் தன் தாய், தந்தை, சுற்றம் இவர்களை எல்லாம் விட்டுவிட்டு சிவபெருமானையும், உமையம்மையையும் காண கோயில் கோயிலாக செல்லும் போது அவர்களுக்கு தோன்றும் உள் உணர்வையே நினைவு என்பது போல உணர வேண்டும். அந்த உணர்வையே மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத ‘`நின் திருமூர்த்தி’’ என்கிறார்.
``எந்தன் விழிக்கும் வினைக்கும் வெளி நின்றதால்’’ உலகிலுள்ளோர்க்கு கோயிலில் உள்ள மூலஸ்தான மூர்த்தியானது அசைவது தெரியாது. அபிராமிபட்டருக்கோ உமையம்மையானவள் தன் அசைவைக் காட்டுகிறாள். உலகிலுள்ளோர் கருங்கல் திருமேனியாக பார்க்கும் அதே திருஉருவம்தான் அபிராமிபட்டருக்கு, மானிடப் பெண்ணுக்கு அபிராமி என்று பெயர் இருந்ததால் அவளுடன் நாம் எப்படி பழகுவோமோ அதுபோல் அசையும் உருவமாய் காட்சி தருகிறது. இதையே ``எந்தன் விழிக்கும்’’ என்கிறார்.
இந்த விழியானது உபாசகர்கள் பல லட்சக்கணக்கான ஆவர்தி ஜபம் செய்த பிறகு ஊனக்கண் இல்லாமல் புருவ நடுவே இருக்கும் ஞானக்கண்ணில் தோன்றும். இது யோக அப்யாசத்தினாலும் பிற ஆன்மிக செயல்பாடுகளாலும் தோன்றும். இந்த விழிகளை திறந்து வைப்பதற்கு ``சந்தியாவந்தனம்’’ என்ற ஒன்றை அந்தணர்கள் தினசரி செய்வதற்கு பெரும் தகுதியை அளிக்கும் சடங்கான உபநயனத்திற்கு துணை விழி என்பது பொருள்.
இது மானுடர்க்கு அமைந்த இரு விழிகளையும் குறிப்பிடும் சொல் இல்லை. இதை ஒரு உதாரணத்தால் விளக்கலாம். ஒரு சாதாரண மனிதன் கருங்கல்லை பார்ப்பதற்கும், ஒரு சிற்பி சிலையை செதுக்கும் நோக்கில் கருங்கல்லை பார்ப்பதற்கும் உள்ள வேறுபாட்டை சூட்டும் வகையிலேயே ``எந்தன் விழிக்கும்” என்கிறார். அந்த வகையிலே ``என்தன்’’ என்பதற்கு ஆன்மிக முன்னேற்ற சாதனங்களையும், ``விழிக்கே’’ என்பதற்கு அந்த அப்யாசத்தின் [பயிற்சியின்] வழி தோன்றும் அறிவு அனுபவத்தையே குறிப்பிடுகிறார்.
``வினைக்கும்’’ என்பதனால் அபிராமிபட்டர் அபிராமி அம்மையின் ஆலயத்தில் செய்த ஜப, பூஜா, தியானம் போன்ற ஆலய சேவைகளையும், கோயிலில் பணியாற்றுபவர்கள் வீட்டில் செய்ய வேண்டிய செயல்களையும் சாமானியர்களுக்கு அல்லாத ஆலயப் பணியாளர்கள் மட்டும் செய்யும், ஆத்மார்த்த பூஜை, மந்திரதீட்சை, ஜப யக்ஞம் போன்ற சிறப்புச் செயலையே ``வினைக்கும்’’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார்.
உலகில் உள்ளோருக்கு தோன்றும் அர்ச்சாவதார மூர்த்தி போல் அல்லாமலும் மனதிற்குள் தியானிக்கும் உமையம்மையை போல் அல்லாமலும், கோயிலில் வெளி நின்று நம்முள் ஒருவரை காண்பது போலவே தெய்வத்தை பார்க்க முடிந்த பண்பை அவள் அருளாலேயே பெற்றவர் பட்டர். அதையே “வெளி நின்றதால்’’ என்கிறார். பட்டரது விழி, அவரது வினை, அவருக்கு உமையம்மை தோன்றும் விதம் எல்லாவற்றையும் நம் பொருட்டு பதிவு செய்யும் நோக்கிலேயே ``எந்தன் விழிக்கும் வினைக்கும் வெளி நின்றதால்’’ என்கிறார். ``விழியால் மதனை அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை”என்பதனால் ஒரு தலவரலாற்றுக் குறிப்பை குறிப்பிடுகிறார்.
சூரபத்மன் என்ற அசுரனால் துன்பமடைந்த தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் அபயம் வேண்டி நின்றனர். அதற்கு விஷ்ணு, சிவபெருமானுக்கும், உமைக்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே அவனை அழிக்க முடியும் என்று தேவர்களுக்கு ஆலோசனை கூறினார். தாட்சாயணி தேவியானவள் தட்சனின் யாகத்தில் கணவனாகிய சிவனை மதிக்காமல் அவமதித்ததால் அந்த யாகத்தை அழித்தாள், அந்த யாகத்தீயிலேயே அவன் வளர்த்த தாட்சாயணி உடலை விட்டால்.
அதில் வருத்தமுற்ற சிவபெருமான் துறவு கோலம் பூண்டு சன்னியாசியாகி தவம் செய்ய துவங்கி விட்டார். தட்சனின் மகளாய் இருந்த தாட்சாயணி தன் உடலை விட்ட பின்பு பார்வதியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று தவம் புரிந்த இமவானுக்கு மகளாகப் பிறந்து வளர்ந்து வந்தாள்.
சிவபெருமான் தவத்தைக் கலைத்து பார்வதியை மணப்பதால் அவ்வாறு புதல்வன் தோன்றுவான் என எண்ணி சிவபெருமான் துறவையும், தவத்தையும் கலைக்க காமத்தை தூண்டும் மன்மதனை ஏவினார். அவனோ அவர்மீது புஷ்பபாணம் போட்டு தவத்தைக் கலைக்க முயன்றான். அதில் சினந்த சிவபெருமான் அவனை தன் நெற்றிக்கண்ணால் சாம்பலாக்கினார் என்பதையே ``விழியால் மதனை அளிக்கும் தலைவர் அழியா விரதத்தை’’ என்கிறார்.
``அண்டமெல்லாம் பழிக்கும்படி’’ என்ற வார்த்தையால் திருச்செங்கோடு தல புராணத்தை குறிப்பிடுகிறார். சிவபெருமானை மட்டுமே வழிபாடு செய்யும் ப்ருங்கி என்ற ஒரு ரிஷி இருந்தார். அவர் உமையம்மையை நீக்கி சிவபெருமானை மட்டுமே வழிபாடு செய்தார். ஒருமுறை உமையம்மை அவள் தன் கணவனோடு நெருங்கி நின்று ப்ருங்கி ரிஷி சிவபெருமானை மட்டும் வலம் வந்து தொழுவதை தடுத்தாள்.
அந்த முனிவர் தவ வலிமையால் வண்டு வடிவம் எடுத்து சிவபெருமானை மட்டும் வணங்கிவிட்டு சென்றார். அதைக் கண்டு சினந்த உமையம்மை சிவத்திடம் வேண்ட, அவனைப் போல் தவம் செய்ய பணிந்தார். அவளும் பல ஆண்டுகள் தவம் செய்து, அதன் பலனாக சிவன் தோன்ற, உங்களையும், என்னையும் பிரித்துவிட இயலாத வண்ணம் தங்களது உடலில் பாதி வேண்டும் என்று கேட்டாள். அவரோ, அவள் கேட்ட வரத்தை அருளினார். அதன்படி சிவபெருமான் உடலில் பாதியை உமையம்மைக்கு தந்தருளினார். அபிராமிபட்டர் இந்த தகவலை தனது கோணத்தில் சிவபெருமான் மீது அவள் கொண்ட அன்பையும், அவள் செய்த தவத்தையும், கண்டு மகிழ்ந்து சிவபெருமான் மன்மதனை எரித்த தவத்தை தன் தவத்தால் குறைத்து அவரையும், தாண்டி தவம் செய்து முன்னர் மன்மதனை வெற்றி கொண்டான் என்ற புகழை தன் அன்பினாலும், தவத்தினாலும், உண்மையினாலும் உயர்ந்த பண்பைப் பெற்று சிவபெருமானின் துறவு தன்மையை குறைக்கும்படி செய்த பண்பையே ``அண்டமெல்லாம் பழிக்கும்படி” என்கிறார்.
``ஒரு பாகம் கொண்டாளும் பராபரையே’’ என்பதனால் அர்த்தநாரீஸ்வரர் வழிபாட்டின் ரகசியத்தை விளக்குகிறார். ``ஒரு பாகம் கொண்ட’’ என்பதனால் சக்தியானவள் சிவபெருமானின் ஒடுங்காமல் அவரையே ஆளும் பண்புடையவளாய் திகழ்கிறாள் என்பதை ``ஆளும்’’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். ``பராபரை’’ என்பதை உமையம்மையானவள் ஒரே நேரத்தில் ``பரா’’ என்ற உயர்ந்த பண்பையும், ``அபரா’’ என்ற நேர்மாறான ஒரே பண்பை பெற்றவள்.
``பரா’’வாக இருக்கும் போது ஆன்ம நலனையும் ``அபரா’’வாக இருக்கும் போது உயிருக்கு நேர் எதிர் பண்பை கொண்ட சரீர நலத்தையும், இரண்டையும் சமமாக வழிபட்டால் ஆன்மாவைப் பற்றியும் உடல் பற்றிய ஞானத்தையும் ஒருசேர வழங்க வல்லவள் என்பதையே ``பராபரையே’’ என்கிறார். இது ஒரு வடசொல்லின் தமிழ் திரிபாகும். இதற்கு உயர்வு தாழ்வு என்ற ஒரு முரணான பண்புகளை ஒருங்கே பெற்றவள் என்பது பொருள். இதையே ``ஒரு பாகம் கொண்டாளும் பராபரையே’’ என்கிறார்.
மேலும், சித்தாந்த நோக்கில் இப்பாடலை புரிந்து கொள்வதால் ஆத்மஞானம் வளரும். சக்தியானவள் சிவனுடன் சம்பந்தம் உடையவள் அந்த சம்பந்தமானது மூன்று வகையில் உள்ளது. உடன்பாட்டு சம்பந்தம். முரண்பாட்டு சம்பந்தம். இரண்டும் கலந்த சம்பந்தம். திருக்கடையூரை பொறுத்தவரை அபிராமி சிவனுடன் உடன்பாட்டு சம்பந்தம் கொண்டவள் முரண்பாட்டு சம்பந்தம் என்பது திருவெண்காட்டில் எழுந்தருளி இருக்கும் அகோர மூர்த்தி காளியை குறிக்கும்.
அட்ட வீரட்டங்களிலும் எழுந்தருளியிருக்கும் சம்ஹார மூர்த்திகளான கஜசம்ஹார மூர்த்தி, காலசம்ஹார மூர்த்தி, காமசம்ஹார மூர்த்தி, ஜலாந்தர சம்ஹார மூர்த்தி, திரிபுர சம்ஹார மூர்த்தி, அந்தகாசுர சம்ஹார மூர்த்தி, தட்ச சம்ஹார மூர்த்தி, ப்ரம்ம சிரஸ் சேதமூர்த்தி இந்த எட்டு ஊரில் உள்ள சம்ஹார மூர்த்தியின் சக்தி சிவனுடன் முரண்பட்ட சம்பந்தத்தை கொண்டது.
அப்படி முரண்பட்டாலும் சிவன் எப்பொழுதும் அழித்தல் தொழிலில் ஈடுபடாமல் தடுத்து உலக மக்களுக்கு நல்லருள் புரிபவள் உமையம்மையே. உடன்பாடு, முரண்பாடு என்ற இரண்டு வித சம்பந்தம் உள்ள சக்திகள் ஒன்பது பேர்கள் ஆவார். இவர்கள் சிவபெருமானுடன் இணைந்து பக்தர்களின் ஆன்ம நலனுக்காக அருள்கின்றனர்.
துர்க்கை, சப்த மாதா என்ற பிராமி, மாகேஸ்வரி, ரௌத்திரி, காளி, சண்டி, கௌமாரி, வாராகி, ஸ்ரீவித்யா என்ற இந்த மூன்று சம்பந்தத்தில் உள்ள சக்திகளுள் மனோன்மணி போகத்தையும் அஷ்ட விரட்ட சம்கார மூர்த்தி தலங்களில் எழுந்தருளியுள்ள பூரணி, திரிபுரசுந்தரி, ராத்ரி, பாலாம்பிகா, தட்சாயணி, திரிபுரா, பைரவி, அகோரேசி போன்ற சக்திகள் மோட்சத்தை வழங்குபவர்கள். துர்க்கை, சப்தமாதா, ஸ்ரீவித்யா இவர்கள் ஞானம், யோகம், மோட்சம் மூன்றையும் வழங்கவல்ல சக்திகளாகும். இந்த மூன்று சக்திகளையும் இப்பாடலில் குறிப்பிடுகிறார். அபிராமி பட்டர் இந்த ஒரு பாட்டிலேயே சக்தி வழிபாட்டில் சிவ சம்பந்தமான சக்தியை குறிப்பிட்டு சைவத்தை விட சாத்தமே சிறந்தது என்று இந்த உமையம்மையின் முக்கிய திருஉருவங்களை வழிபட்டு நலம் பெறலாம் என்பதை பதிவு செய்திருக்கின்றார். இதை ‘சக்தி தழைக்கும் சிவம்’ (29) என்கிறது சித்தாந்தம். வணங்கி பயன் பெறுவோம்.
“அந்தமாக”``மொழிக்கும் நினைவிற்கும் எட்டாத நின் திரு மூர்த்தி’’ என்பதால் உமையம்மையின் உண்மை வடிவம் மனதாலும், மொழியாலும் அறிய முடியாதது என்றும், ``எந்தன் விழிக்கும் வினைக்கும் வெளி நின்றதால்” என்று கூறுவதால் ஞானக்கண்ணிற்கும் ஜபம், பூஜை தியானத்திற்கு வெளியில் தோன்றி காட்சியளிப்பாள் என்றும்
``விழியால் மதனை அழிக்கும் தலைவர்’’ என்பதனால் காமதகன மூர்த்தியாகிற சிவபெருமானையும் ``அழியா விரதத்தை அண்டமெல்லாம் பழிக்கும்படி ஒரு பாகம் கொண்டாளும்’’ என்பதனால் அர்த்தநாரீஸ்வரரையும் ``பராபரையே’’ என்பதனால் இரண்டு முரண்பாட்டின் சமன்பாடே உமையம்மை என்றும் கூறுகின்றார்.
இதை உணர்த்துவதே அர்த்தநாரீஸ்வரரின் தத்துவம் அதை உணர்ந்தால் அனைத்துத் தெய்வத்தையும் உணர்ந்ததாகும். அதையே உணர்ந்து அனைத்துத் தெய்வத்தின் அருளையும் ஒருசேர பெறுவோம்.
முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்
|