சீதா கல்யாண வைபோகமே...
பகுதி 2
சீதாவிடம் நீலமாலை பேசத்தொடங்கினாள் “சீதா! நீ பெண்ணின் ஜோதி! பூவின் நறுமணம்! குளிர்ச்சியின் எல்லை! கவியின் இன்பம்! இவை எல்லாமுமே ஒன்றிணைந்தவள் நீ! அமுதத்தில் தோய்த்த தூரிகை எடுத்து ஓவியமாக உன்னை வரைய மன்மதனே முற்பட்டாலும், தோற்றுத்தான் போவான். எல்லோரும் ஒரு பெண்ணை வர்ணிக்கையில், இவள் மகாலட்சுமி போல் இருக்கிறாள் என்று சொல்வார்கள்.
ஆனால், மகாலட்சுமியே நீயாக இருக்கும்போது, என்ன உவமையை சொல்வது!” தோழி சொல்லி முடிக்கையில் சீதை எறிந்த பந்து கன்னி மாடத்தின் உச்சியிலிருந்து ராஜ வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த ராமனின் காலடியில் விழுந்தது. பந்து சென்ற திசையில் நோக்க, சீதைக்கு ராமன் தென்பட்டான். பந்து வந்த திசையை நோக்க, ராமனுக்கு சீதை தென்பட்டாள். ஒருவரின் கண்கள் மற்றவரின் கண்களை கவ்விக்கொண்டன.
``அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’’ நான்கு விழிகளும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டன. கண்கள் ஒன்றை ஒன்று உண்டன; அவர்கள் உணர்வும்
ஒன்றின.இருவரின் பார்வையில் இதயங்கள் இடம் மாறின. கோதண்டம் எனும் வில்லுடன் ராமன் சீதையை நோக்கினான்.
கண் என்னும் வாள் கொண்டு சீதையும் ராமனை நோக்கினாள். குறை இல்லாத ராமனும் இடையில்லாத சீதையும் ஒருவரை ஒருவர் விரும்பத் துவங்கினர். வானிலிருந்து வானவர்கள் பூத்தூவினார்கள். தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். ‘‘பாற்கடலில் நாராயணனும் இலக்குமியும் இருந்தார்கள். இன்று அவர்கள் ராம் சீதையாக அவதரித்திருக்கிறார்கள்.
நீரில் இருந்து பிரிந்த நாராயணன், தசரதனின் யாகத்தின் தீயிலிருந்து ராமனாக அவதரித்தான். அதே நீரில் இருந்து பிரிந்த இலக்குமி, ஜனகனின் யாகசாலை நிலத்திலிருந்து சீதையாக அவதரித்தாள். பிரிந்தவர்கள் இருவரும் இப்பொழுது சேர்க்கையில் பேசுவதற்கு ஒன்றுமே இல்லாமல் போயிற்று!” தேவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டவற்றை ராமனும் சீதாவும் உணர்ந்ததைப் போல ஒருவரைப் பார்த்து ஒருவர் புன்னகைத்துக் கொண்டார்கள்.
உத்தமியான சீதை, நிலம் பார்த்து நடப்பவள் என்பதால் கன்னி மாடத்தில் இருந்து ராஜ வீதியில் நடந்து வந்த ராமனைப் பார்க்க முடிந்தது. வானம் பார்த்து கம்பீரமாக நடப்பவன் ராமன் என்பதால், ராஜ வீதியில் இருந்து கன்னி மாடத்தில் இருந்த சீதையைப் பார்க்க முடிந்தது. ராமன் மாடத்திலும், சீதை வீதியிலும் நின்றிருந்தால், இடம் மாறி இருந்தால், அவர்கள் இதயம் இடம் மாறி இருக்காது!!
இத்தனை நிகழ்வும் விஸ்வாமித்திரர் முன் செல்ல, இலக்குவன் பின் தொடர, யாருக்கும் தெரியாமல் ராமனுக்கும் சீதைக்கும் இடையே நடந்தேறியது. ராமன் அந்த இடத்தைக் கடந்து, நடந்து சென்று கொண்டிருந்தான். சீதை பார்வையால் அவனைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். அவள் பார்வையில் இருந்து அவன் மறைந்ததும், அவளுக்கு மனதில் பல கேள்விகள் தோன்றின.
‘இப்போது நான் பார்த்த இந்த ஆண் மகனிடம் எது என்னை மயக்கியது? இந்திர நீலக்கல் போன்ற அவனுடைய குழல் கற்றையா? இல்லை., சந்திரன் போன்ற அவனது
முகமா? இல்லை.., முழங்கால் வரை நீண்ட அவனுடைய கைகளா? இல்லை.., மரகத வண்ணத்தில் இருந்த அவனது தோள்களா? இல்லை.., இவை எதுவுமே இல்லை.., அவன் என்னைப் பார்த்து ஒரு மெல்லிய புன்முறுவல் பூத்தானே! அதுதான் என்னைமயக்கிவிட்டது.
நான் இன்னமும் அதிலிருந்து மீளவே இல்லை.’ சீதா தனக்குள் பேசிக் கொண்டாள். ராமனின் நினைவாகவே அந்தப்புரம் சென்றாள். சந்திரோதயம் உண்டான அந்தப் பொழுதில் ராமன், இலக்குவன், விஸ்வாமித்திரர் என மூவரும் ஜனகரின் அரண்மனையை அடைந்தார்கள். சதானந்தன் அவர்களை வரவேற்று உபசரித்தான். விஸ்வாமித்திரர் அவனிடம், “உன்னுடைய தாய் அகலிகை சாபம் நீங்கினாள். உன் தந்தை கௌதம முனிவரும் தாயும் நலமாக உள்ளார்கள்” என்றார். சதானந்தன் நன்றியுடன் அவர்களை நமஸ்கரித்தான். மூவரும் உணவு முடித்து சயனித்தார்கள்.
ராமனுக்கு சீதையின் முகமே மனதில் இருந்து கொண்டு அவனைத் தூங்கவிடாமல் செய்தது. மனதிற்குள் பேசத் துவங்கினான், ‘இதுவரையில் எந்தப் பெண்ணையும் நான் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. நீ என்ன, ஒரு கோடி மின்னல் செய்த பெண்ணா! உன்னை நான் பார்த்ததிலிருந்து என் வசத்தில் நானே இல்லை. நீ என் மனம் எனும் தாமரையில் வசிக்கத் துவங்கிவிட்டாய்.
ஆகையால் நீ அந்த மகாலட்சுமியாகத்தான் இருக்க வேண்டும். நான் ஏன் ஒரு பெண்ணைப் பற்றி இவ்வளவு நினைக்கிறேன். அவள் யாருடைய மனைவியாகவாவது இருக்கக் கூடுமோ? இருக்கவே முடியாது. ஏனெனில் நான் ராமன். ஒரு பொழுதும் பிறன்மனை நோக்க மாட்டேன். என் உள் மனம் சொல்கிறது, கண்டிப்பாக அவள் ஜனகரின் மகளாகக்தான் இருக்க வேண்டும்’ என்று எண்ணி, ராமனின் மனது சமாதானம் ஆகி உறக்கம் வந்தது.
சுயம்வரம் நடக்கும் நாளன்று மூவரும் மண்டபம் வந்தடைந்தார்கள். விஸ்வாமித்திரரை கண்டவுடன் ஜனகர் ஓடோடி வந்து நமஸ்கரித்தார். உடனிருந்த இருவரையும் பார்த்து, ``யார் இவர்கள்?’’ என்றார். விஸ்வாமித்திரர், ``இதோ நிற்கும் ராமன் யார் தெரியுமா? சூரிய வம்சவழித்தோன்றல் தசரதனின் மூத்த குமாரன்.
பிரம்ம ரிஷி வசிஷ்டர் இவனுடைய குல குரு’’ என்றார். அருகில் நின்றிருந்த சதானந்தன், சிவதனுசைப் பற்றியும், சீதா தேவியைப் பற்றியும், சுயம்வரத்திற்கான போட்டியைக் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினான்.
விஸ்வாமித்திரர், ராமனை ஒரு முறை பார்த்தார். சிவதனுசை ஒரு முறை பார்த்தார். ராமனை நோக்கி ``ஆகட்டும்’’ என ஆசி கூறும் விதமாக தலையசைத்தார். ராமன் குனிந்து விஸ்வாமித்திரரின் பாதம் தொட்டான். மனதில் வசிஷ்டரை வணங்கினான். வானம் பார்த்து சூரியனைத் தொழுதான். ஜனகர் ``இறையருள் எல்லாம் இறையருள்’’ என உரக்கக் கூறினார். ராமன், சிவதனுசை மணமாலையைக் கையில் எடுப்பது போல மிக எளிதாக எடுத்தான். ஒரு முனையை காலில் கட்டை விரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடையில் பிடித்தபடி வைத்தான். இன்னொரு முனையை நிமிர்த்தி நாண் ஏற்ற முற்பட்டான். ராமன் நாணேற்றுவதை சபையோர் கண்டனர். அக்கணமே, வில் இற்றுப் போய் உடைந்த சப்தத்தைக் கேட்டனர். அரங்கமே எழுந்து நின்று கைதட்டி ஆர்ப்பரித்தது. ‘அற்புதம் அற்புதம்’ வாழ்த்தொலி எங்கும் பரவியது. விஸ்வாமித்திரர், ராமனை ஆரத்தழுவிக் கொண்டார்.
ஜனகர், ராமனின் கைகளைப் பற்றி ஆனந்தம் கொண்டார். நீலமாலை சீதா தேவியைப் பார்க்க, அந்தப் புரத்திற்கு விரைந்து சென்றாள். மூச்சிரைக்க வந்த நீலமாலையைப் பார்த்து ``சுயம்வரத்தில் யாரடி வென்றது? என சீதா கேட்டாள். நீலமாலைக்கு மூச்சுதான் வந்தது, பேச்சே வரவில்லை. சீதையினால் அந்தத் தாமதத்தைப் பொறுக்க இயலவில்லை. “யார் என்று சொல்லிவிட்டு மூச்சைவிடேன்’’
``நீ பார்த்தவர்தான்’’ ``முனிவர் ஒருவரோடு வந்தவரா?’’ ``ஆமாம்’’ ``முனிவரோடு இருவர் வந்தார்களே அதில் யார்?’’
``கவலையை விடு. கார்மேக வண்ணன்தான். உன் உள்ளம் கவர் கள்வன்தான்’’ சீதாவிற்கு அந்தக் கணமே ராமனைப் பார்க்க பேராவல் வந்தது. அலங்கரிக்கப்பட்ட சீதா தோழிகள் புடை சூழ சுயம்வர மண்டபத்திற்கு வந்தாள். குனிந்த தலை நிமிராத சீதாவை ராமன் பார்த்தான். “ஆஹா! நேற்று நான் மனதைக் கொடுத்தது இவளிடம்தான். உடைந்த சிவதனுசைப் பார்த்து மனதில் நன்றி சொன்னான். சீதா தன் கைவளையல்களை ஓசைப் படுத்தி யாரும் பார்க்காத கணத்தில் ராமனைப் பார்த்து மகிழ்ந்தாள்.
பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் பௌர்ணமி கூடிய சுப தினத்தில் திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டது. விஸ்வாமித்திரர், வசிஷ்டர், ஜனகர் மற்றும் தசரதர் என அனைவரும் கலந்து ஆலோசித்து, சீதாவின் சகோதரிஊர்மிளையை இலக்குவனுக்கும், சீதையின் ஒன்றுவிட்ட சகோதரிகளான மாண்டவியை பரதனுக்கும் ச்ருத கீர்த்தியை சத்ருக்னனுக்கும் மணம் முடிப்பதாகத் தீர்மானித்தார்கள். சீதா கல்யாண வைபவ நாள் அன்று விண்ணோர்களும் மண்ணோர்களும் குழுமியிருந்தார்கள்.
திருமண மேடையில் நடு நாயகமாக ஹோம குண்டத்தின் அருகில் சிவதனுசு வீற்றிருந்தது. வசிஷ்டர் சப்தபதி மந்திரத்தை ஓதத் துவங்கினார். ராமன் சீதாவின் வலது கரத்தைப் பற்றியவாறே சப்தபதி மந்திரத்தை உச்சரித்தபடி ஏழு அடிகள் எடுத்து வைத்துச் சுற்றி வந்தார். எங்கும் பரவசம். எங்கும் ஆனந்தம். எல்லார் முகத்திலும் சந்தோஷம். நறுமணப் பூக்களும் மங்கள அட்சதையும் தூவப்பெற்றன.
ராமனும் சீதாவும் சிவதனுசின் ஆசியைப் பெற அருகில் வந்தார்கள். சிவதனுசுவின் இதயத்துடிப்பை ராமனும், சீதாவும் உணர்ந்தார்கள். ராமன் கணையாழி அணிந்த விரலால் வில்லைத் தொட்டு நெஞ்சில் ஒற்றிக் கொண்டார். சீதா தன் நெற்றியில் சூடியிருந்த சூடாமணி சிவ தனுசின் மேல் பட குனிந்து வணங்கினாள்.“சிவலா நீ இற்றுப் போய் விழுந்ததில் வருத்தமா” மெல்லிய குரலில் சீதா கேட்டாள்.
“இல்லை... இல்லவே இல்லை. நான் ராமன் கைவிரல் பட்டதும் குளிர்ந்தேன்! கனிந்தேன்! நெகிழ்ந்தேன்!”“யாருக்குக் கிடைக்கும் இந்தப் பாக்கியம். ராமனும் சீதாவுமாகிய நீங்கள் எனக்கு மகாவிஷ்ணு மகாலட்சுமியாகத்தான் தெரிகிறீர்கள். என் வாழ்த்துகள்” சிவலா மெல்லிய குரலில் பாடத் துவங்கியது.
``சீதா கல்யாண வைபோகமே! ராமா கல்யாண வைபோகமே! பக்த ஜன பரிபால, பரித சர ஜால புக்தி முக்திதலீல, பூதேவ பால தாழாதே சர மழையால் அன்பர்களைக் காக்கும்! இம்மைக்கும் மறுமைக்கும், எங்களையும் சேர்க்கும்! சீதா கல்யாண வைபோகமே!’’
கோதண்டராமன்
|