உள்ள(த்)தைச் சொல்கிறோம்



ஆன்மிகம் வழங்கிய ஆடி அம்மன் சிறப்பிதழில், அம்மனைப் பற்றிய ஆலயங்கள்,  அங்கு நிகழும் திருவிழாக்கள், மகிமைகள் என நிறைய இருந்த போதிலும், அனைத்திற்கும் முத்தாய்ப்பாக இணைப்பு இதழாக வழங்கிய ‘‘அம்பிகை சிறப்பிதழ்’’, ஆறு அம்மன்களின் வண்ணப் படங்கள், அதற்கேற்ற ஸ்தோத்திரப் பாடல்கள் என உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டது.
 - வெ. லட்சுமிநாராயணன், வடலூர்.

``சொக்க வைக் கும் சொக்கீஸ் வரர்’’ படித்தேன். நான் பலமுறை காஞ்சிபுரம்  அம்மன் கோயிலுக்கு சென்று வந்திருக்கிறேன். ஆனால், சொக்கீஸ்வரரை காண முடியவில்லையே  என்ற ஆதங்கம். அதனை ஆன்மிக பலன் பூர்த்தி செய்திருக்கிறது.  சொக்கீஸ்வரரை கண்டதும் என்னையே அறியாமல் மெய்மறந்து போனேன். சிற்பங்கள் என்  கண்களை சிதறடித்தன. பிரமாண்டத்தை வழிபட முடியவில்லைேய என்று கவலை வேண்டாம்  என்று கூறி அதற்கு மாற்று வடிவம் கொடுத்த தலையங்கம் அருமை.
 - வண்ணை கணேசன், சென்னை.

திருக்குறளில் இத்தனை விஷயங்கள் உள்ளனவா! என்று ஆச்சரியமூட்டும் வகையில், திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் எழுதி வருகின்றார். இவை அனைத்தையும் நான் மறக்காது பாதுகாத்து வருகிறேன்.
 - ஆர்.கே.லிங்கேசன், கன்னியாகுமரி.

அருள்மிகுந்த ஆற்றல் நிறைந்த ஆடி மாதத்தில் நாம் தரிசிக்க வேண்டிய அற்புத அம்மன் திருத்தலங்களைப் பற்றிய தொகுப்பு கட்டுரையை வெளியிட்டு  ஆடியில் எளிமையாக அம்மன் தரிசனம் செய்ய வைத்துவிட்டீர்கள். சமயபுரம்  தொடங்கி திருவக்கரை வரை ஒருநாள் சுற்றுலா சென்று வந்தது போன்ற மகிழ்வை  அளித்து விட்டீர்கள் மேலும், அருளும் பொருளும் தருகின்ற அன்னையாய் ஆடிப் பூரத்தில் அவதரித்து ஸ்ரீஅரங்கனோடு இணைந்த சூடிக்கொடுத்த சுடர்க் கொடி ஸ்ரீ ஆண்டாளின் மகத்துவங்களை முப்பது முத்துக்களாகத் தொகுத்த  எஸ்.கோகுலாச்சாரின் கட்டுரையை படித்து ஆனந்தப் பரவசமடைந்தேன்.
 - த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘ஆச்சரியமூட்டும் ஆடி மாதம்’ தொகுப்பில் 14 டிப்ஸ்களுமே ஆன்மிகவாதிகள்  தெரிய வேண்டியதும் பெற வேண்டியதுமான கிப்ட்ஸ்தான்! அயன் புரத்தாரின் அணுகுமுறை அபாரம்!
 - ஆர்.ஆர்.உமா, நெல்லை.

ஆன்மிக பலன் புத்தகத்தை நான் தொடர்ந்து வாங்கி படித்து வருகிறேன்.  ஆனால், இந்த ஆடி அம்மன் பக்தி ஸ்பெஷல் அட்டைப்படமும் சரி.. உள்ளே  இருக்கின்ற கட்டுரைகளும் சரி.. என்னை பெரிதும் கவர்ந்தது. தொடர்ந்து இதுபோல் அருமையான கட்டுரைகளை தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் வாழ்த்துகள்.
 - சாருமதி, கோவை.

அன்னை சக்தியை உணர்ந்தால் + அதுவும் அகமும் புறமுமான சக்தியைப்  புரிந்தால் ஆடி மாதம் ரகசியம் தெரியும் என்பதை ‘சக்தி மாதம்’ தலையங்கம் தத்துவ மழையாகப் பொழிந்து மகிழ்வித்தது!
 - எஸ்.எல்.ஜார்ஜ் அருண், தூத்துக்குடி.

‘விரதங்களின் மாதம்’ என்ற தலைப்பில் ஆடி மாத விசேஷங்களை அடுக்கிய மிடுக்கை  கண்டு அடித்தேன் சொடுக்கு! ஆடி செவ்வாய் + ஆடி கிருத்திகை + ஆடி பூரம் +  ஆடி அமாவாசை + ஆடிப்பெருக்கு என்று பெருகிய விவரத்தை கண்டு உருகியது மனம்!  உவகை பெற்றது உள்ளம்!
 - ஆர்.ஜே.கல்யாணி, நெல்லை.

மிக வித்தியாசமான கட்டுரையாக இருந்தது முனைவர் ஸ்ரீராம் எழுதிய ``ஆண்டாள் கேட்கும் முத்துகுறி’’ ஆஹா.. என்ன அருமையான வரிகள்.. பாராட்டுக்கள்.
 - பாலா, சிதம்பரம்.