பத்தையும் பெற்றவனான உத்தரன்



மகாபாரதத்தில் விரிவாக, அடிக்கடி வரும் நாயகர்கள் உண்டு. மின்னல் மின்னி மறைவதைப்போல, சிறிதளவே வரும் நாயகர்களும் உண்டு. சிறிதளவே வரும் நாயகர்கள், ஏராளமாக இடம் பெற்றிருக்கிறார்கள் மகாபாரதத்தில். அப்படிப்பட்ட நாயகர்களில் ஒருவன் தான் உத்தரன். விராட மன்னரின் மகனான உத்தரனைப் பற்றிய தகவல்கள், அவனாலேயே அந்தப்புரத்தில் பெண்கள் மத்தியில் வெளியிடப்படத் தொடங்குகின்றன. பஞ்ச பாண்டவர்களும் திரௌபதியும் வனவாசம் முடித்து, அக்ஞாத வாசம் எனும் மறைந்திருந்து வாழவேண்டிய ஒரு வருட காலத்தை, விராட மன்னரின் அரண்மனையில், பெயர்களையும் வடிவங்களையும் மாற்றிக்கொண்டு, பல்வேறு விதமான பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள்.

அப்போது அவர்கள் அங்கே தங்கி இருப்பதைச் சந்தேகித்த துரியோதனன், திரிகர்த்த தேசாதிபதியான சுசர்மா என்பவர் மூலமாக, விராட நகரத்தில் இருந்து பசுக்குலங்களைக் கவரச் செய்தான். அதை அறிந்த விராட மன்னர், யுத்தத்திற்குப் புறப்பட்டார். பிருகன்னளை எனும் பேடி வடிவில் இருந்த அர்ஜுனனைத் தவிர, தர்மர் முதலான சகோதரர்களும் விராட மன்னருக்கு உதவியாகப் போருக்குச் சென்றார்கள்.

அவர்கள் எல்லோரும் அங்கே போர்க் களத்தில் ஈடுபட்டிருந்த அந்த வேளையில், விராட நாட்டின் மற்றொரு பக்கத்தில் உள்ள பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வரத் திட்டமிட்டான் துரியோதனன். பீஷ்மர் - துரோணர் - கர்ணன் முதலான மாபெரும் வீரர்களுடன் புறப்பட்டுப் சென்று, விராட நகரத்தின் மற்றொரு பக்கமாக நுழைந்து, அங்கிருந்த பசுக்கூட்டங்களைக் கவர்ந்தான். அங்கிருந்த கோபாலர்கள் மற்றும் பசுக்கூட்டங்களைக் காப்பவர்கள், தகவல் தெரிவிப்பதற்காக அரண்மனை நோக்கி ஓடி வந்தார்கள். அவர்கள் வந்த நேரத்தில், மன்னர் மகனான உத்தரன், அரண்மனை அந்தப்புரத்தில் பெண்கள் நடுவே இருந்தான்.

கோபாலர்கள் வந்து, ‘‘இளவரசே! நாட்டின் ஒரு பக்கத்தில் இருந்த பசுக்கூட்டங்களைக் கவர்ந்தவர்களுடன் போரிட, உங்கள் தந்தையும் படைகளும் சென்று விட்டார்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, இப்போது மற்றொரு பக்கத்தில் இருக்கும் பசுக்கூட்டங்களைப் பகைவர்கள் கவர்ந்து கொண்டு போகிறார்கள். நீங்கள்தான் வந்து காப்பாற்ற வேண்டும். எழுந்திருங்கள்! பசுக்கூட்டங்களைக் காப்பாற்றுங்கள்!’’ என வேண்டினார்கள். அந்தப்புரத்தில் பெண்கள் நடுவில் இருந்த உத்தரன், பெருமை பாராட்டித் தற்பெருமை பேசத் தொடங்கினான்.

‘‘ஹும்! இது என்ன பெரிய விந்தை! எனக்கு மட்டும் ஒரு நல்ல தேரோட்டி இருந்தால் போதும். எவ்...வளவு பெரிய வீரர்களாக இருந்தாலும், அவர்களை நான் வென்று விடுவேன். ‘‘அப்படியிருக்க இந்தப் பீஷ்மர், துரோணர், கர்ணன் முதலானவர்கள் எல்லாம் எம்மாத்திரம்? ஓடஓட அவர்களை விரட்டிவிடுவேன். இவன் தேரில் வந்திருக்கும் அர்ஜுனனோ?’’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு, திறமையாகப் போர்புரிந்து பகைவர்களை வென்று, பசுக்கூட்டங்களை மீட்டு வருவேன். ‘‘என்ன செய்ய? திறமைசாலியான தகுந்த தேரோட்டி ஒருவன் இல்லையே!’’ என்று தற்பெருமை பாராட்டிப் பேசினான் உத்தரன்.

அப்போது அங்கு அதைக் கேட்டுக் கொண்டிருந்த, பணிப் பெண்ணாக வடிவம் தாங்கியிருந்த திரௌபதி, நேரே மன்னர் மகளான உத்தரையிடம் போனாள். நடந்தவற்றையெல்லாம் சொன்னாள். அம்மா! உங்கள் சகோதரருக்கு நல்ல தேரோட்டி வேண்டுமாம். நம்மிடம் பிருகன்னளை என்ற பெயரில் இருப்பவள், அற்புதமாகத் தேர் ஓட்டுவாள்.

‘‘அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக இருந்தவள் இவள். காண்டவ வனத்தை அர்ஜுனன் எரித்தபோது, இவள்தான், அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக இருந்தாள். இவளைத் தேரோட்டியாகக் கொண்டு, உடனே புறப்பட்டுச் சென்று பசுக்குலங்களை மீட்கச்சொல்லி, உங்கள் சகோதரரிடம் சொல்லுங்கள்!’’ என்றாள் திரௌபதி.

உத்தரையும் திரௌபதியுடன் சென்று, சகோதரனைப் பார்த்தாள். ‘‘சகோதரா! இந்தப் பிருகன்னளை என்பவள், அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக இருந்தவளாம். இவள் துணையோடுதான், அர்ஜுனன் காண்டவ வனத்தை எரித்தபோது வெற்றி பெற்றானாம். ஆகையால், இவளை உனக்குத் தேரோட்டியாக ஏற்றுக்கொள்!  தேரில் இருந்து தேரைஓட்டுமாறு செய்!’’ என்றாள்.

உத்தரன் மறுத்தான். நேரடையாகத் திரௌபதியிடமேபேசத் தொடங்கினான் ‘‘சைரந்திரி! என் விரதத்தைப் பற்றி உனக்குத் தெரியாதா? பேடியாக இருப்பவளிடம் நான் பேசமாட்டேன். அப்படியிருக்கும் போது, நான் போய் எப்படி, பேடியான பிருகன்னளையிடம், ‘என் தேரை ஓட்டு!’ என்று சொல்ல முடியும்? நான் மாட்டேன்’’ என்றான் உத்தரன்.

திரௌபதி சொன்னாள். ‘‘அப்பா! ராஜகுமாரா! பயம் நேர்ந்திருக்கும் காலத்தில், விரதம் என்பதெல்லாம் கிடையாது. ஆகையால், பிருகன்னளையை அழைத்துப்பேசு! கௌரவர்களை வென்று பசுக்கூட்டங்களை மீட்கலாம்’’ என்று அழுத்தமாகச் சொன்னாள்.ஒரு வழியாக உத்தரன் ஒப்புக்கொள்ள, பிருகன்னளை தேரில் ஏறி அமர்ந்தாள். உத்தரன் தேரில் ஏறி அமர்ந்ததும் தேர்புறப்பட்டது. ‘‘பிருகன்னளையே! நம்மை வெல்வதற்காக வந்திருக்கும் கௌரவர்கள் அனைவரையும் வென்று, சீக்கிரமாகப் பசுக் கூட்டங்களை மீட்டுக்கொண்டு திரும்புவேன்.

அவர்கள் இருக்கும் இடத்திற்குத் தேரை விடு!’’ என்று உத்தரவிட்டான் உத்தரன். நம் கதையும் இதுதான். ‘‘அதைச்செய்! இதைச்செய்!’’ என்று கூட இருப்பவர்களை ஏவுவோம். செயல் என்று வரும்போது... என்ன செய்கிறோம் என்பதை உத்தரன் மூலமாகப் பாடம் நடத்துகிறார் வியாசர். உத்தரனின் உத்தரவுப்படி, பிருகன்னளை தேரை ஓட்டிக் கொண்டுபோனாள். வேகமாகப்போய், கௌரவ சேனைகளைக் கண்டார்கள். பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன் என மாபெரும் வீரர்களுடன் குவிந்திருந்த சேனைகளைக் கண்டதும், உத்தரனுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது; பயம் உண்டானது.

கண்களை மூடிக்கொண்டு, பிருகன்னளையிடம் பேசத்தொடங்கினான் உத்தரன். ‘‘பிருகன்னளையே! கௌரவர்களோடு போர் புரிய எனக்கு சக்தி கிடையாது. தேவர்களால் கூட நெருங்க முடியாத இந்த கௌரவ சேனையை எதிர்த்துப் போர் புரிய எனக்கு சக்தி கிடையாது. ‘‘மாபெரும் வீரர்களான துரோணர், பீஷ்மர், கிருபர், கர்ணன் முதலான இவர்களுடன் சண்டை செய்வதற்காக, நான் அறிவில்லாமல் வந்து விட்டேன்’’ என்று புலம்பினான்.

தொடர்ந்து தன் இயலாமையை வெளிப்படுத்தினான். அதே சமயம், சுய கௌரவம் வந்து தடுத்ததைப் போல, பழியைத்தூக்கி அடுத்தவர் மேல் போடுகிறான். இதுதான் உலக இயல்பு. உத்தரன் தொடர்ந்தான். ‘‘பிருகன்னளையே! என் தந்தை மனிதர்கள் இல்லாத ஊரில் என்னை விட்டுவிட்டு, படைகளைக் கூட்டிக்கொண்டு சென்று விட்டார். இங்கே எனக்குப் படை உதவி இல்லை. நானோ சிறுவன். மேலும் போரில் எல்லாம், எனக்குப் பரிச்சயம் கிடையாது. தேரைத் திருப்பு!’’ என்று வேண்டினான் உத்தரன்.

உத்தரனை, பிருகன்னளை பார்த்தாள். அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. ‘‘அரசகுமாரா! என்ன பேசுகிறாய் நீ? தேரைக் கௌரவர்கள் பக்கம் ஓட்டு என்று நீ தானே சொன்னாய்? அதைத்தான் நான் செய்தேன். அரண்மனையில் அந்தப்புரத்தில் பெண்கள் நடுவில் வீரமாகப் பேசிவிட்டு, இப்போது யுத்தக் களத்திலிருந்து ஓடினால், என்ன ஆகும்? அத்தனை நபர்களும், உங்களைப் பரிகாசம் செய்வார்கள். தேர் ஓட்ட வந்துவிட்டு, யுத்தம் செய்யாமல் போவதில் எனக்கு சம்மதம் இல்லை. பசுக்குலங்களை மீட்க வேண்டும்” என்றாள் பிருகன்னளை.

உத்தரனோ தன் நிலையில் இருந்து கீழே, பேச்சில் மட்டுமல்ல; செயலிலும்தான்; ‘‘பிருகன்னளையே! கௌரவர்கள் எதை வேண்டுமானாலும் இங்கிருந்து கொண்டு போகட்டும். எல்லோரும் என்னை எப்படி வேண்டுமானாலும் பரிகாசம் செய்யட்டும். இதோ! இப்போதே நான் அரண்மனைக்குப் போகிறேன்’’ என்ற உத்தரன் ஆயுதங்களை எறிந்துவிட்டு, பயத்துடன் தேரிலிருந்து கீழே குதித்து, அரண்மனை நோக்கி ஓடத்தொடங்கினான்.

உத்தரன் ஓடியதைப் பார்த்து, பிருகன்னளையும் கடிவாளங்களை விட்டுவிட்டுக் கீழே குதித்து ஓடிப்போய், உத்தரனின் தலை முடியைப் பிடித்து இழுத்து அவனை நிறுத்தினாள்.
உத்தரன் உடல் முழுதும் நடுங்க உருக்கமாகப் புலம்பினான். ‘‘பிருகன்னளையே! என்னை விட்டுவிடு! நான் உனக்கு அடிமையாக இருக்கிறேன். ரத்தினங்கள், முத்துக்கள், தங்க நாணயங்கள் வைடூரியங்கள், யானைகள் என, உனக்கு என்னென்ன வேண்டுமோ, ஏராளமாகத் தருகிறேன்.

என்னை விட்டு விடு! ‘‘எனக்கு என் தாயாரைப் பார்க்க வேண்டும். அரசனின் செல்லப்பிள்ளை நான்; சிறுவன்; தாயின் அரவணைப்பிலேயே இருப்பவன். இப்படிப்பட்ட நான் எங்கே? கௌரவர்கள் எங்கே? என்னை விட்டுவிடு! அந்தப்புரத்தில் பெண்கள் மத்தியில், அறிவில்லாமல் பேசிவிட்டேன். விடு என்னை’’ என வேண்டினான்.

பார்த்தான் அர்ஜுனன்; (பிருகன்னளை என்ற பெயரில் மாற்று வடிவத்தோடு அங்கு இருக்கும் அர்ஜுனன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் தீர்மானித்து விட்டான். ஆகையால் இனி அர்ஜுனன் என்றே பார்க்கலாம்) பயந்து நடுங்கிப் பரிதாபப் புலம்பல் புலம்பிய உத்தரனுக்குத் தைரியம் சொல்லத் தொடங்கினான் அர்ஜுனன்.

‘‘உத்தரா! பயப்படாதே! நான் உனக்கு உதவி செய்கிறேன். நீ தேரை ஓட்டு! பகைவர்களோடு நான் போர்புரிகிறேன். பசுக் கூட்டங்களை எல்லாம் மீட்டுக்கொண்டு வருகிறேன்’’ என்றான் கம்பீரமாக. சொன்னதோடு மட்டுமல்ல! உத்தரனைத் தூக்கி அப்படியே தேர்த்தட்டில் உட்கார வைத்து, தங்கள் ஆயுதங்களை எல்லாம் மறைத்து வைத்திருந்த வன்னிமரத்தை நோக்கித் தேரை ஓட்டவும் சொன்னான் அர்ஜுனன்.

வன்னி மரத்தை நெருங்கியதும், இருவரும் கீழே இறங்கினார்கள். ‘‘உத்தரா! ம்! இதோ இந்த வன்னிமரத்தின் மீது ஏறு! அங்கே காண்டீபம் எனும் வில் மற்றும் ஆயுதங்கள் எல்லாம் இருக்கும். அவைகளைக் கீழே இறக்கு! உன் ஆயுதங்கள் இந்தப் போரில் உதவாது’’ என்று உத்தரவிட்டான் அர்ஜுனன்.

சற்றுநேரம் வாதாடிப்பார்த்த உத்தரன், வேறு வழியின்றி மரத்தின் மீது ஏறி, இலைகளின் நடுவே சுற்றி மறைத்து வைக்கப் பட்டிருந்த ஆயுதமூட்டையைக் கீழே இறக்கினான். பிரித்தான்; பிரித்தவன் பிரமித்தான்! ‘‘இந்த ஆயுதங்கள் எல்லாம் மிகுந்த ஔியோடு இருக்கின்றனவே! பார்த்தாலே பயத்தை உண்டாக்கும் இந்த ஆயுதங்கள் எல்லாம் யாருடையவை?’’ எனக்கேட்டான். அர்ஜுனன் உண்மையைச் சொன்னான். மாறுவேடங்களில் பாண்டவர்களும் திரௌபதியும், அரண்மனையில் பணியாளர்களாக இருப்பதை விவரித்தான். ‘‘நான் தான் அர்ஜுனன்’’ என்று சொல்லி முடித்தான்.

 அர்ஜுனன் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த உத்தரனுக்கு, ஆச்சரியத்தால் கண்கள் விரிந்தன. இமை கொட்டாமல் அர்ஜுனனைப் பார்த்தபடியே, ‘‘அர்ஜுனனுக்குப் பத்து பெயர்கள் உண்டு என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவற்றை எல்லாம் நீ, சொல் பார்க்கலாம் என்றான். அப்போதுதான் நான் உன்னை நம்புவேன்’’ என்றான் உத்தரன்.

இதுதான் மனித புத்தி. ஆண்டவனே வந்து நேருக்கு நேராகக் காட்சி கொடுத்தாலும், ஆண்டவனிடமே ‘ஆதார் கார்டு’ கேட்கும். அதற்காக ஆண்டவனுக்குக் கோபம் வராது. தன் தெய்வத் தன் மையைக் காண்பித்து நிரூபிக்கும். அர்ஜுனனும் அதைத்தான் செய்தான். ‘‘பாண்டவர்களில்நான் தனஞ்ஜயனாக, அர்ஜுனனாக இருக்கிறேன்’’ பகவத்கீதையில் பகவானாலேயே சொல்லப்பட்ட அர்ஜுனன், கோபப்பட வில்லை. உத்தரன் கேட்ட அந்தப் பத்துப் பெயர்களையும் சொல்லி, அவற்றிற்கு உண்டான விளக்கத்தையும் சொன்னான்.

‘‘உத்தரா! நீ கேட்ட அந்தப் பத்து பெயர்களையும் சொல்கிறேன். கேள்! இந்தப் பத்து பெயர்களையும் தேவேந்திரன்தான், எனக்குச் சூட்டினார். பகைவர்களை வென்று தனங்களைக் கொண்டு வருவதால் `தனஞ்சயன்’. போரில் வெற்றி கொண்டு திரும்புவதால் `விஜயன்’. என் ரதத்தில் தங்கமயமான கவசமுள்ள வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்டிருப்பதால் `சுவேதவாகனன்’. தேவேந்திரன் அளித்த அற்புதமான கிரீடத்தை அணிந்திருப்பதால் `கிரீடி’.

 ‘‘அருவருக்கத் தக்க செயல்களைச் செய்யாததால் `பீபத்சு’. இரண்டு கைகளாலும் ஆயுதங்களை ஏவிப்போர்புரிவதால், வலதுகையை விட இடது கை சக்தி மிகுந்திருப்பதால் `சவ்யசாசி’. மிகவும் தூய்மையாகவும், சிறந்த உருவம் கொண்டவனாகவும் இருப்பதால் `அர்ஜுனன்’. உத்தர பல்குனி, பூர்வ பல்குனி நட்சத்திரங்களின் சந்தியில் பிறந்ததால் `பல்குனன்’. என் அண்ணாவின் உடம்பில் ரத்த காயத்தை உண்டாக்குபவனை முழுவதுமாக ஒழித்து விடுவேன் என்பதால் `ஜிஷ்ணு’. ப்ருதை(குந்தி)யின் மகன் என்பதால் `பார்த்தன்’. எனக்குண்டான பத்துப் பெயர்களையும் சொல்லி விட்டேன்.

‘‘இவற்றைத் தவிர, எனக்கு `கிருஷ்ணன்’ என்று பதினோராவது பெயரும் உண்டு’’ என்று விரிவாகவே சொல்லி, காரணங்களையும் விவரித்தான் அர்ஜுனன். தன் முன்னால் இருப்பது அர்ஜுனன் என்பதை உணர்ந்ததும், உத்தரனுக்கு எல்லையில்லாத தைரியம் பிறந்தது. அவனைப் பிடித்திருந்த பயமும் குழப்பமும் தாமாகவே விலகின. பிறகென்ன? உத்தரன் தேரோட்ட, அர்ஜுனன் போரில் ஈடுபட்டுப் பசுக்குலங்களை மீட்டான். உண்மை உணராமல், தன்னுடன் இருப்பது பேடி எனத் தவறாக எண்ணிக் கொண்டிருந்த உத்தரனுக்குப் பயம் உண்டானது. அதே சமயம், தன்னுடன் இருப்பது அர்ஜுனன் என்ற உண்மையை உணர்ந்ததும் தெளிவு பிறந்தது. தைரியம் உண்டானது. உண்மையை உணர்வதன் வெளிப்பாட்டை உணர்த்தும் கதாபாத்திரம் ‘உத்தரன்’.

பி.என். பரசுராமன்