வந்தாள் மகாலட்சுமியே...



ஒருவருடைய வாழ்வு எல்லா விதத்திலும் சிறக்க வேண்டும் என்று சொன்னால், அதற்கு அவசியமானது செல்வம். “பொருளாதாரம்” என்றால், வாழ்வின் ஆதாரமாக பொருள் இருக்கிறது   என்று பொருள். அந்தப் பொருளுக்கு ஆதாரசக்தியாக விளங்குவதால் மகாலஷ்மியை எல்லோரும் வணங்குகிறார்கள். “வந்தாள் மகாலஷ்மியே” என்று இருகரம் கூப்பி வரவேற்கிறார்கள். அந்த மகாலட்சுமியின் பெருமையை 30 முத்துக்களாக காண்போம்.

1) வேதத்தில் மகாலட்சுமி

மகாலட்சுமியை அழகான தமிழில் “திரு” என்று அழைப்பார்கள். மகாலட்சுமியை தன் மார்பில் கொண்ட பெருமாளை  `திருவாழ்மார்பன்’ என்று அழைப்பார்கள். ``திரு’’ என்பதற்கு இணையான சொல் ``ஸ்ரீ’’ என்கின்ற சொல். பெருமாளை ஸ்ரீநிவாசன் என்ற திருநாமம் இட்டு அழைக்கிறோம். ஆழ்வார்கள் கூட திருமகளோடு இல்லாத தனிப்பெருமாளை   ஏற்பதில்லை. திருவில்லாத தேவர் என்றுகூடச் சொல்லுவார்கள். அந்த “திரு” என்கிற ஒலிக்கும், “ஸ்ரீ” என்கிற ஒலிக்கும் பலப்பல அர்த்தங்கள் உண்டு.

2) தைத்திரீய உபநிடதம்

தைத்திரீய உபநிடதம் மகாலட்சுமியை குறித்து அற்புதமாகப் பேசுகிறது. மஹாலஷ்மி  பகவானை விட்டுப் பிரியாமல், அவனுக்கு ஆனந்தத்தைக்  கொடுப்பவள். திருமாலின் துணைவி. சாந்த சொரூபி. ஒருவருக்கு வேண்டிய அத்தனை செல்வங்களையும் கொடுப்பவள். அதனாலே எல்லோராலும் பூஜிக்கப்பட்டவள். தேவர்கள் கூட இவளை பூஜித்துதான்  தங்கள் பதவிகளை அடைகிறார்கள். நாட்டிலுள்ள அத்தனை வளங்களும் இவளால்தான் மலர்ச்சி பெறுகின்றன. பூமி, சொர்க்கம் போன்ற உலகங்களை இவள்தான் தாங்குகிறாள். எல்லா உலகங்களுக்கும் இவளே தலைவி. மங்களகரமான இவள், தம்மைச்  சரணடைந்தவர்க்கு   சகல மங்கலங்களும் செய்கிறாள். உலகத்தில் உள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும் தாயைப்போல தயைபுரிகின்றாள்.

3) ஸ்ரீ சூக்தம்

வேதத்தில் மகாலட்சுமியின் பெருமையை நேரடியாகச் சொல்லும் பகுதிகள் குறைவு. வழி பாடுகளிலும், ஹோமங்களிலும் வேத பாகங்களான சூக்த மந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் ச்ரத்தா சூக்தம், மேதா ஸூக்தம், அதிதி சூக்தம், ஸ்ரீ சூக்தம், பூ சூக்தம் முதலிய சூக்த மந்திரங்கள் உண்டு. அதில் மகாலட்சுமிக்கு உரியது ஸ்ரீ சூக்தம். திருமால் ஆலயங்களில் திருமஞ்சனம் முதலிய வைபவங்கள் நடக்கின்ற பொழுதும், ஹோமங்களின் பொழுதும் இந்த ஸ்ரீசூக்த மந்திரங்களை ஓதுவார்கள்.  ஸ்ரீ சூக்தம்  15 மந்திரங்களைக்  கொண்டது. மகாலட்சுமியை அழகாக வர்ணிக்கின்றது.

1. பொன்  மயமானவள் (ஹிரண்யவர்ணாம்),

2. மான்விழிகளைக்  கொண்டவள்.(ஹரிணீம்)

3. பொன்மாலைகளையும் வெள்ளி மாலைகளையும் அணிந்தவள்.(ஸ்வர்ண ரஜதஸ்ரஜாம்)

4. சந்திரனைப் போல ஆனந்தமானவள் (சந்த்ராம்)

என்று அந்த அழகான மந்திரம் மகாலட்சுமியை வர்ணிக்கிறது.

இந்த 15 மந்திரங்களையும் (ரிக்) தினசரி பாராயணம் செய்பவர்களுக்கு மகாலட்சுமியின்  பேரருள் நிச்சயமாக கிடைக்கும். அதில் பன்னிரண்டாவது மந்திரத்தின் அர்த்தம் அற்புதமானது. “மகாலட்சுமி! எப்பொழுதுமே நீ என்னுடைய வீட்டில் நிலையாக வசிக்க வேண்டும். என் குலத்தில் நித்திய வாசம் செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்கிறது.செல்வத்தை விரும்புகிறவர்கள் தினந்தோறும் ஸ்ரீ சூக்தத்தை ஜெபிக்க வேண்டும். தாமரை அல்லது வில்வ மலர்களை கொண்டு மகாலட்சுமியை நினைத்து அக்னியில் ஹோமம் செய்ய வேண்டும்.

ய:  சூக்தம் ஜபேந்  நித்யம்  ரிக்பிஸ்தாம்  அர்ச்சயேத் ச்ரியம்:    
காமோ ஜுஹூயாத்   அக்நௌ  பத்மைர் பில்வைஸ் ததாபலை

4) மகாலட்சுமிக்கு விரதநாட்கள்

மகாலட்சுமிக்கு பற்பல விரதநாட்கள் உண்டு. அநேகமாக, அது எல்லா மாதமும்  வரும். குறிப்பாக, ஆவணி மாதத்தில், வருகின்ற 4.9.2022 ஞாயிறு முதல் 18.9.2022 ஞாயிறு வரை வரும் மகாலஷ்மி விரதம் மிகவும் சிறப்பானது. பதினைந்து நாட்கள் தொடர்ச்சியாக இந்த மகாலட்சுமி விரதத்தை இருக்க வேண்டும். பகலில், நிவேதனம் செய்யும் பொழுது, அவசியம், ஒரு இனிப்பு பலகாரத்தை படைக்க வேண்டும். தினசரி குறைந்தது, ஒரு சுமங்கலிக்கு, மஞ்சள், குங்குமம், வளையல், புஷ்பம், மஞ்சள் கயிறு, சந்தனம் முதலிய மங்கலப் பொருட்களைத் தந்து ஆசிபெற வேண்டும். இந்த சுமங்கலிப்  பூஜையால், மகாலட்சுமியினுடைய பேரருள் கிடைக்கும்.

வறுமை நீங்குவதற்காகவும், வீட்டில் மங்கலம்  பெருகுவதற்காகவும் உள்ள சிறப்பான விரதம், மகாலட்சுமி விரதம். கார்த்திகை மாதத்தில், லஷ்மி விரதம் என்று பதினோரு நாட்கள் இருப்பார்கள். (இவ்வாண்டு 24.11.2022 முதல் 4.12.2022 வரை). அன்றைக்கும் இதே போல் மஹாலட்சுமியை  நினைத்து,  ஸ்தோத்திரங்களைப் பாடி காலையிலும், மாலையிலும் விளக்கேற்றி வைத்து, பூஜை செய்தால், மகாலட்சுமியினுடைய பேரருளைப்  பெறலாம்.

ஐப்பசி மாதத்தில், மகாலட்சுமியை நினைத்து, அகண்ட தீப பூஜை செய்வதும் உண்டு. இந்த அணையாத தீபத்தை, வீட்டில் ஏற்ற வேண்டும். தினசரி காலையும், மாலையும் மகாலட்சுமிக்கு, 29 நாள்கள் (26.10.2022 முதல் 23.11.2022 வரை) வழிபாடு நடத்த வேண்டும். இதன்  மூலமாக, குலம் விருத்தி அடையும். பல்வகை செல்வ நலன்கள் பெருகும். செய்யும் தொழில் வளர்ச்சி பெறும்.

5) துளசியும் மஹாலட்சுமியும்

மதன துவாதசி விரதம் என்று சொல்லுவார்கள். 31 நாட்கள் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும். இவ்வாண்டு (6.10.2022 முதல் 5.11.2022 வரை) வீட்டில், துளசிமாடம் இருப்பவர்கள் தவறாது செய்ய வேண்டும். துளசி மாடத்தை அலங்கரித்து மஞ்சள், குங்குமம் பூசி, விளக்கேற்றி தினமும்  வணங்க வேண்டும். அப்போது, கிருஷ்ணபகவானையும் சேர்த்து வணங்க வேண்டும். இந்த பூஜை செய்வதன் மூலமாக பாவங்கள் நீங்கும். திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். தீர்க்க சுமங்கலித்துவம் கிடைக்கும்.

6) மாத விரதங்கள்

மகாலட்சுமிக்கு உரிய இதர விரத நாட்களும் உண்டு. ஆனி மாதத்தில், அமிர்த லட்சுமி விரதம் இருப்பார்கள். இந்த விரதத்தால், நோய் நொடிகள் நீங்கி தீர்க்காயுளோடு, சகல செல்வங்களும் பெற்று வாழலாம். ஆடி மாதத்தில், ஆண்டாளின் திரு நட்சத்திரமான ஆடிப்பூரம் வருகிறது. மகாலட்சுமியின் அம்சமான ஆண்டாளின் ஆடிப்பூரத்தை சிறப்பாகக்  கொண்டாடுவார்கள்.  திருமணமாகாத பெண்களுக்கு திருமண பாக்கியம் கிடைப்பதற்காக, இந்த விரதத்தை இருப்பார்கள்.

7) வரலட்சுமி விரதம்

எல்லோரும் அனுஷ்டிக்கும் பிரசித்தி பெற்ற விரதம் வரலட்சுமி விரதம். பெண்கள் சகல சௌபாக்கியங்களுடன் இருக்கவும், தீர்க்க சுமங்கலிகளாக வாழ்வதற்காகவும் கடைப்பிடிக்கப்படும் விரதம். ஆவணி மாதத்தில் கஜலட்சுமி விரதம் இருப்பார்கள். இந்த விரதத்தால் அரசாங்கத்தினுடைய ஆதரவும், சகல செல்வங்களும், வெற்றியும்  கிடைக்கும். புரட்டாசி மாதம் பௌர்ணமி முழுவதும், லட்சுமி பூஜை செய்ய, `கௌமதி ஜாகர விரதம்’ என்ற விரதத்தை, கடைப்பிடிப்பார்கள். இந்த விரதம் இருந்தால் மகாலட்சுமி வீடு தேடி வருவாள் என்பது ஐதீகம். ஐப்பசி மாதத்தில், வட நாட்டிலே ராதா ஜெயந்தி என்று, ஒரு விழாவைக் கொண்டாடுவார்கள். இதன் மூலமாக கிருஷ்ணபக்தி ஏற்படும். வீட்டில் சகல விதமானசெல்வம் சேர, ஐப்பசி மாதத்தில், தீபாவளியைக்  கொண்டாடும் பொழுது, லட்சுமி குபேர பூஜை செய்வார்கள்.

8) பங்குனி உத்திரம்

திருமணத் தடைகள் நீங்கி, பெண்களுக்கு விரைவில், திருமணப் பாக்கியம் ஏற்படவும், சகல மங்களங்கள் பெருகவும், ஐப்பசி மாதத்தில், விரதமிருந்து துளசி பூஜை செய்யும் வழக்கம் சில குடும்பங்களில் உண்டு, செல்வம் சேரவும் கொடுத்த கடன்கள், தடையின்றி வசூலாகவும், கார்த்திகை மாதத்தில், செய்யும் மகாலட்சுமி பூஜைக்கு, லட்சுமி பிரபோதன தினம் என்று பெயர். தை மாதத்தில் மகாலட்சுமிக்கென்றே, வசந்த பஞ்சமி உற்சவ விரதத்தை கடைபிடிப்பார்கள். பங்குனி மாதத்தில், பெரும்பாலான பெருமாள் கோயில்களில், பங்குனி உத்திரம் கொண்டாடுவார்கள். தாயாருக்கும், பெருமாளுக்கும் திருக்கல்யாண வைபவம் அப்பொழுது நடைபெறும். மிக அருமையாக, அதே பங்குனி மாதத்தில் பஞ்சமி திதி அன்று `லட்சுமிபஞ்சமி’ என்று கொண்டாடுவார்கள். இதற்கான பிரத்யேகமான பூஜை செய்வதுண்டு.

9) அஞ்சலி ஹஸ்தம்

பொதுவாகவே, வைதிகமாக சாஸ்திரத்தில் சொல்லியபடி  மகாலட்சுமி விரதம் கடைப்பிடிக்க  முடியாவிட்டாலும், அந்தந்த  மாதத்தில் வரும் நாட்களைக்  குறித்து வைத்துக் கொண்டு, எளிமையாகச்  செய்யலாம். அன்றைய தினம் மகாலட்சுமி படத்திற்கு பூமாலைகள் சூட்டி, ஏதேனும் நிவேதனம் வைத்து, காலை, மாலை விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் மகாலட்சுமியின் பேரருளைப் பெறலாம். நாம் சிரத்தையின்றி, சாதாரணமாக கைகூப்பினால் கூட  மகாலட்சுமி தாயார் மகிழ்ந்து சகல செல்வங்களையும் வாரி வழங்குவாள். இரண்டு கைகளையும் கூப்புவதற்கு `அஞ்சலி ஹஸ்தம்’ என்று பெயர். மகாலட்சுமி, தாயார் சந்நதியில் இந்த அஞ்சலி ஹஸ்தம் செய்துவிட்டால், அவள் ஆனந்தப்படுகிறாள்.

10) எல்லாவற்றிலும் மஹாலட்சுமி

எம்பெருமானையே போற்றும் புருஷ சூக்த மந்திரங்களை எடுத்துக் கொண்டாலும்கூட, நிறைவாக, “ஹிரீச்சதே ச லஷ்மீ பத்நௌ” என்று இருக்கிறது. அதாவது பகவான் அத்தனைச்  சிறப்புகளும்,  திருமகளால் அடைகிறான் என்று பொருள். ஸ்ரீ நரசிம்மரைச்  சொன்னாலும், ஸ்ரீவராகப் பெருமானைச் சொன்னாலும், ஸ்ரீநாராயணனைச் சொன்னாலும், லட்சுமி நரசிம்மன், லட்சுமி ஹயக்ரீவன், லட்சுமி வராகர், லட்சுமி நாராயணன், என்று மஹாலஷ்மியோடு பெருமாளை இணைத்து, பேசும் மரபு, வைண வத்தில், உள்ளது. பெருமாளை “ஸ்ரீ: பதி” என்று கொண்டாடுவார்கள்.

11) தாயார் சந்நதி

தாயார் சந்நதியை, அதாவது லட்சுமித்  தாயாரை தரிசித்துவிட்டுத்தான், பெருமாளை தரிசிக்க வேண்டும் என்ற நியதியும், வைணவ கோயில்களில் உண்டு. அது எந்த கோயிலாக இருந்தாலும், அந்த கோயிலில், மகாலட்சுமியினுடைய பேரருள் சிறக்கும் என்பதால், மகாலட்சுமித்  தலமாகவே சொல்வார்கள். திருத்தலம் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றபோது, அதிலுள்ள திரு என்ற சொல் மஹாலட்சுமியைத் தானே குறிக்கிறது. திரு இல்லாவிட்டால் தலம் ஏது? மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்கின்ற பெயர்களும் உண்டு.

12) சைவத்திலும் மஹாலட்சுமி

சைவக் கோயில்களிலும்கூட, பிராகாரத்தில் மகாலட்சுமிக்கு, தனிச்  சந்நதி இருக்கும். மஹாலக்ஷ்மியினுடைய எந்திரமுமோ, மகாலட்சுமியினுடைய பிரதி பிம்பமோ வைக்கப்பட்டிருக்கும். அப்படி இருந்தால்தான் அந்தக் கோயில், மிகச் சிறப்பான நிலையை அடையும் என்கின்ற நம்பிக்கை இந்து சமயத்தில் உண்டு. வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன் வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர். தீபாவளியன்று, அதிகாலையில் மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணெயில் வாசம் செய்கிறாள்.

13) திருப்பதி பொருள் என்ன?

திருப்பதி என்று சொல்லுவோம். அதில், பதி என்பது பெருமாளையும்  திரு என்பது, மகாலட்சுமித்  தாயாரையும்  குறிக்கும். திருவாகிய மஹா லஷ்மிப்பதி என்பதுதான் பெருமாளுக்குச் சிறப்பு. திருவும் பதியும் சேர்ந்தால்தான் ஒரு தலம், அதுவே திருப்பதி ஆகும். மகாலட்சுமியின் அருள் வேண்டும் என்பதால்தான், வைணவத்தில் எல்லாவற்றிலும் திரு என்ற முன்னொட்டை சேர்த்துக் கொள்வார்கள்.

திரு ஆராதனம், திருமாளிகை, திருப்பணியாரம், திருமஞ்சனம், திருமாலை. திருப்பரி  வட்டம் (ஆடைகள்), திரு ஆபரணம், திருக்கண்ணமுது, திருக்காப்பு, திருமொழி, திருப்பல்லாண்டு, திருவிழா, திருத்தேர், இப்படி ‘‘திரு” சேர்ந்து  வரும். எல்லா திவ்ய தேசங்களின் பெயரோடு ``திரு’’ என்கிற பெயரும் இணைந்தே இருக்கும். கண்ணபுரம் என்று சொல்லும் பழக்கம் கிடையாது. திருக்கண்ணபுரம் என்று சொல்வர். திருமாலிருஞ்சோலை, திருவரங்கம், திருவல்லிக்கேணி, திருத்தங்கல், திருமதுரை, திருவாய்ப்பாடி, திருவண்பரிசாரம், திருவனந்தபுரம் என்று 108 திவ்ய தேசங்களிலும் திரு என்கின்ற அடைமொழி இருக்கும். இதன்மூலம் மகாலட்சுமி இல்லாவிட்டால் எதுவுமே இல்லை என்பது தெரியவரும்.

14) லோகமாதா

ஒரு குழந்தை, தந்தையிடம் வேண்டுகோளை (விருப்பத்தை) வைத்தாலும்கூட, தாயாரிடம் அந்த வேண்டுகோளைச் சொல்லுகின்ற பொழுது,  சீக்கிரமாக நிறைவேறிவிடும். என்கின்ற நம்பிக்கை, நம்முடைய வழிபாட்டு முறைகளிலும் உண்டு. சரியான சமயத்தில், பெருமானுக்கு, ஜீவன்களாகிய குழந்தையின், வேண்டுதலை, ஒரு தாயின் உள்ளத்தோடு, பரிவோடு சொல்லி  செய்யக்கூடியவள் என்பதால் அவளை தாயார் என்று அழைக்கிறார்கள். தந்தை என்று தனிச்சொல்லால் பெருமாளைக் கூப்பிடுவது மரபு இல்லை என்றாலும்கூட, வைணவத்தில் பிராட்டியை தாயார், தாயார் சந்நதி, தாயார் கோயில் என்கின்ற சொல்லால் குறிப்பிடும் வழக்கம் உண்டு, லோக மாதா அல்லவா அவள்.

15) ஆழ்வார்களின் பாசுரங்கள் சான்று

தாயார் சந்நதிக்குப் போய்விட்டுத்தான், பெருமாள் சந்நதிக்கு, வழிபாடு செய்யச் செல்ல வேண்டும் என்பதற்கு ஏதேனும் சான்று இருக்கிறதா? என்றுகூட கேட்கலாம். ஆழ்வார்களின் பாசுரங்கள்தான், இதற்கு, மிகப்பெரிய சான்று. இதற்கு நிறைய பாசுரங்கள் உண்டு என்று சொன்னாலும் கூட, ஒரு சான்று பார்ப்போம்.

நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தின், முதல் மூன்று அந்தாதிகளைப் பாடியவர்கள், முதல் ஆழ்வார்கள். அவர்கள் திருக்கோவலூரில், இடைக்கழியில் ஒரு மழை நாளில் அந்தாதி பாடுகிறார்கள். தமிழால் விளக்கேற்றி, அந்த வெளிச்சத்தில், இறைவனைக் காண, விழைகிறார்கள். அதில் முதன்மையானவர்கள் ஆழ்வார், இந்த உலகத்தை அகல் விளக்காகக் கொண்டு, விளக்கேற்றுகின்றார். அடுத்த ஆழ்வார், அன்பையே அகலாகக் கொண்டு, விளக்கேற்றுகின்றார். இந்த இரண்டு விளக்கால், புற இருள் விலகுகிறது. அக இருளும் அகல்கிறது. பெருமாளினுடைய தரிசனம், நேரடியாகக் கிடைக்கிறது. அப்பொழுது, பெருமாள் தரிசனம் முதலில் கிடைத்ததா? இல்லை, மகாலட்சுமியினுடைய தரிசனம் முதலில் கிடைக்கிறதா? என்பதை  பின்வரும் அவருடைய பாசுரம் தெரிவிக்கும்.

திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன்; திகழும்
அருக்கன்  அணி நிறமும் கண்டேன் செருக்கிளறும்
பொன்னாழி கண்டேன்; புரிசங்கம், கைக்கண்டேன்;
என் ஆழி  வண்ணன்பால் இன்று.

- என்பது, அவருடைய பாசுரவரிகள். இதில், முதன்முதலில், திருக்கண்டேன் என்று மகாலட்சுமித் தாயாரை கண்டதைத்தான் சொல்லுகின்றார். எனவே, பெருமாளைக் காண்பதற்கு  முன்னாலே, மகாலட்சுமித் தாயாரைக் கண்டு, அவருடைய பேரருளைப் பெற வேண்டும்.

16) பகவானும் தாயாரும்

வேதம் பெரும்பாலும் பகவானைப்பற்றி சொல்லுகின்ற பொழுது மகா லட்சுமித்  தாயாரையும் இணைத்தே பேசுகின்றது. குறிப்பாக பாஞ்சராத்திர சாஸ்திரம், தத் ஏதத் ஸூஷ்ம  மிதுனம் என்கிறது. அதாவது  பகவானும் தாயாரும் எனும் இரண்டு தத்துவங்களும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாது எப்பொழுதும் இருக்கிறது. தாயாரின்  பெருமை சொல்லப்படும் இடங்களில் பகவானின் பெருமையும், பகவானின்  பெருமை சொல்லப்படும் இடங்களில் தாயாரின் பெருமையும் இணைத்தே சொல்லப்படுகிறது. இதை நம்மாழ்வார் கீழ்வரும் சரணாகதி பாசுரத்தால் பதிவு செய்கிறார்.

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா;
நிகர் இல் புகழாய்; உலகம் மூன்று உடையாய்! என்னை ஆள்வானே,
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே,
புகல் ஒன்று இல்லா அடியேன்  உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.

17) மகாலட்சுமி அவதாரம்

பூலோகத்தில் பல்வேறு காரணங்களுக்காக பகவான் அவதரிக்கிறான். ஆனால் அவன் தனியாக அவதரிப்பதில்லை. அவன் அவதாரம் செய்யும் பொழுது மகாலட்சுமியும் அவதாரம் செய்வதாக விஷ்ணு புராணம் கூறுகிறது.ராகவத்வே பவத் ஸீதா, ருக்மிணி கிருஷ்ண ஜன்மநிஎன்பது விஷ்ணு புராணம். வாமனனாக சிறிய உருவத்தில் மகாபலியின் யாக சாலைக்கு பகவான் வந்தபோது கூட அவன் மார்பிலே மகாலட்சுமி இருந்தாள். அதை மான் தோலால் மறைத்துக்கொண்டு பகவான் வந்தான். பகவானுடைய அவதாரத்துக்கு, மகாலட்சுமி துணை புரிவதாக மகரிஷிகள் காட்டியுள்ளனர். அதனால் பகவானை  பூஜை செய்யும்போது முழுமையான பலனை அடைய மகாலட்சுமியையும்  நாராயணனையும்  சேர்ந்தே பூஜிக்க வேண்டும்.

18) ஸ்ரீ: என்கிற சப்தம்

அவளுக்குரிய திருநாமம் ஸ்ரீ. தமிழில் திரு. என்றால் செல்வம். என்று பொருள். செல்வம் நிறைந்தவர்களை  திருவாளர் என்று தமிழிலும், ஸ்ரீமாந் என்று வடமொழியிலும் சொல்லுகின்றோம். பகவானையும் திருவாழ்மார்பன் என்று தமிழிலும் ஸ்ரீனிவாசன் என்று வடமொழியிலும் சொல்லுகின்றோம். ஸ்ரீ என்கிற சப்தம் மகாலட்சுமியையும் மகாலட்சுமி தருகின்ற செல்வத்தையும் குறிக்கும். அவள் பேரருளாகிய நிலையான செல்வத்தைக்  குறிக்கும் இதை “நீங்காத செல்வம் நிறைந்து,” ``எங்கும் திருவருள் பெற்று” போன்ற மங்கலச் சொற்களால் ஆண்டாள் குறிப்பிடுகிறாள்.

19) நீகூட உன் பெருமையை அறியமாட்டாய்

கூரத்தாழ்வான் தன்னுடைய ``ஸ்ரீ ஸ்தவம்’’ என்கின்ற நூலில் மகாலட்சுமியைப் பார்த்துச்  சொல்லுகின்றார்; “அம்மா! லோகமாதா! நீ எப்பேர்ப்பட்ட பெருமை படைத்தவள் என்பது  தெரியுமா? எல்லாவற்றையும் அறியும் சக்தி படைத்த நாராயணனும் உன்னுடைய மகிமையை  அறியமாட்டான். ஏன், நீகூட உன் பெருமையை அறியமாட்டாய் ஆனால், உன்னை வழிபடும் அன்பர்களுக்கு உன் பெருமை தெரியும். எந்த ஒரு பொருளானது இல்லவே இல்லை என்பதை உணர்ந்து, அதனை அறிந்து கொள்ள முயலாமல் இருப்பதையே அனைத்தும் அறிந்த தன்மையாக சான்றோர்கள் அறிகிறார்கள். ‘ஆகாயத் தாமரை’, ‘முயல்கொம்பு’ ஆகியவற்றை உள்ளதாக அறிபவன் ‘பைத்தியக்காரன்’ என்றே உலகத்தினரால் கூறப்படுகிறான்”
என்று பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்!
அந்த அற்புதச் ஸ்லோகம் இது.

தேவி தவந்மஹிமாதிர்ந ஹரிணா
நாபி த்வயா ஜ்ஞாயதேயத்யப்யேவமதாபி நைவ யுவயோ:
ஸர்வஜ்ஞதா ஹீயதே|
யந்நாஸ்த்யேவ ததஜ்ஞதாமநுகுணாம்
ஸர்வஜ்ஞதாயா விது: வ்யோமாம்போஜமிதந்தயா கில விதந்
ப்ராந்தோயமித்யுச்யதே ||

20) நம் பிரார்த்தனையை கேட்பவள்

இந்த ஸ்ரீ என்கின்ற மகாலட்சுமியை குறிப்பிடும் ஓரெழுத்துச் சொல்லுக்கு ஆறு அர்த்தங்கள் உண்டு.

1.ஸ்ரீயதே:

நம் எல்லோராலும் ஆஸ்ரயிக்கப்படுபவள் என்று பொருள். அவள் திருவடியைப் பற்றினால் உத்தமமான பலன் கிடைக்கும். அவளுக்கு தண்டிக்கவே தெரியாது. பற்றுவதற்கு எளிமையானவள்.

2. ச்ரயதே:

மகாலட்சுமி, தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். அந்த தாமரை மலரோ, பகவானின் திருவடிகளின் மென்மையோடு போட்டி போடுகின்றனவாம். மகாலட்சுமியின் மென்மையான கைகள் பட்டாலே அவன் திருவடிகள் கன்றிப் போய் விடுகிறதாம். அப்படிப்பட்ட பகவானின் திருவடிகளை,  மகாலட்சுமி தன்னுடைய மென்மையான திருக்கைகளால் பற்றி வருடுகிறாள். பகவானின் திருவடிகளை சார்ந்து இருக்கிறாள். அவளை நாம் சார்ந்து இருக்கிறோம். ``ச்ரயதே’’ என்றால் பகவானை ஆஸ்ரயித்திருப்பவள் என்று பொருள்.

3. ச்ருனோதி:

நம் கஷ்டங்களைக் கேட்கின்றாள். ராமானுஜர் அகில ஜெகன் மாதரம் அஸ்மின் மாதரம் என்றும் உலகத்துக்கும் தனக்கும் தாயாக பிராட்டியை சொல்லியிருக்கிறார். தாய் தன் குழந்தையின் துன்பத்தை எப்படிப் பொறுமையாக கேட்பாரோ, அப்படி மகாலட்சுமி கேட்பதால், அவரிடம் மன ஈடுபாட்டோடும், இயல்பாகவாவும், பிராத்தனை செய்கின்றோம். ``ச்ருனோதி’’ என்பதற்கு தன்னைத் தேடி வரும் அன்பர்களின் பிரார்த்தனையை முதலில் காது கொடுத்துக்  கேட்கிறாள் என்று பொருள்.

4. ச்ராவயதி:

தான் கேட்பதைபோலவே  பகவானை  கேட்கச்  செய்கிறாள். நம்முடைய பாவங்களையெல்லாம் போக்கி,  சரியான சந்தர்ப்பம்பார்த்து பகவானிடம் நம்மை பற்றிச் சொல்லிக் காப்பாற்றுகிறாள். ``ச்ராவயதி’’ என்பதற்கு பகவானிடம் கேட்கச்  செய்பவள் என்பது பொருள்.

5. ச்ருணாதி:

பாபங்களை நீக்குபவள் என்று பொருள்.  நமக்கு நன்மைகள் கிடைக்காமல் இருப்பதற்கு காரணம் நாம் செய்த பாவங்கள் அல்லவா. கண்ணாடியில் அழுக்கு படிந்திருந்தால், அந்த அழுக்கை நீக்கினால் போதும், கண்ணாடி பளிச்சென்று ஆகிவிடும். அதனுடைய உபயோகம் மேம்படும். அதைப்போலவே ஒருவருடைய பாவங்களைத் துடைத்துவிட்டால் அவருக்கு கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் உதயமாகிவிடும். கண்ணாடியின் அழுக்கைத் துடைத்துச்  சுத்தப் படுத்துவது போல, தன்னை வணங்குபவர்களின் பாவங்களைத்  தீர்த்து அருள்புரிகின்றாள்  என்பது இதற்குப் பொருள்.

6. ச்ரீணாதி:

ஒரு மனிதனுக்கு பக்குவம் இருந்தால்தான் அவன் தன்னை உணர்வான். தன்னைச்சுற்றி உள்ளவர்களையும் உணர்வான். தான் எதற் காகப்  படைக்கப்பட்டோம் என்பதையும் உணர்வான். தனக்கும் மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருப்பான். இப்படி தன்னை அண்டி நிற்பவர் களை பலவகையிலும் பக்குவப்படுத்தி அவர்கள் மற்றவர்களுக்கும் எம்பெருமானுக்கும் தொண்டு புரியும்படியாக நியமிப்பவள்.

 21)ஸ்ரீ சூக்தம்

கந்தத்வாராம் தூராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம் ஈஸ்வரீம்  ஸர்வ பூதாநாம் த்வாமிஹோ பஹ்வயே ச்ரியம் நம்மிடத்தில் இருக்கக்கூடிய துர்வாசனைகளை நீக்கிவிட்டு, ஞானமாகிய நறுமணத்தைத்  தருபவள். அந்த ஞானத்தின் இருப்பிடமாக இருப்பவள் மகாலட்சுமித் தாயார். மகாலட்சுமியை தரிசிக்கும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடுவது சிறந்ததாகும்.

22) பதினாறு பேறும் தருபவள்

பொதுவாகவே நாம் செல்வத்துக்கு அதி பதியாக மட்டும் மகாலட்சுமியை கருதுகிறோம். ஆனால், அவள்தான் எல்லாவற்றையும் தருபவள். புகழ், கல்வி, வீரம், வெற்றி, புத்திரப்பேறு, தைரியம், தனம், தானியம், சுகம், இன்பம், அறிவு, அழகு, கௌரவம், ஆரோக்கியம், நீண்ட ஆயுள் என அனைத்தையும் அவள்தான் தருகின்றாள்.யஸ்யாம் யஸ்யாம் திஶி விஹரதே தேவி த்ருஷ்டிஸ்த்வதீயாதஸ்யாம் தஸ்யாமஹமஹமிகாம் தன்வதே ஸம்பதோகா:

என்று  ஒரு ஸ்லோகத்தை  சுவாமி தேசிகன் பாடுகிறார். அந்தச் ஸ்லோகத்தின் பொருள் இதுதான்.அவள் பார்வை எங்கே விழுகிறதோ  அந்த இடம் வளர்ச்சி பெறுகிறது. விருத்தி பெறுகிறது. அதனால்தான் மகாலட்சுமியை வித்தையை தரும் வித்யா லட்சுமியாகவும், சந்தானத்தை தரும் சந்தான லட்சுமி ஆகவும், வெற்றியைத் தரும் விஜயலட்சுமியாகவும், தானியத்தை தரும் தானிய லட்சுமியாகவும், தைரியத்தை தரும் தைரிய லட்சுமியாகவும் பல வடிவங்களில் கொண்டாடுகின்றோம். அவளிடம் கிடைக்காத செல்வம் எதுவுமே இல்லை என்பதால், ஒரு ஹோமமும், யாகமும் அல்லது பிரார்த்தனை செய்யும்பொழுது சங்கல்ப மந்திரத்தின், மகாலட்சுமியின் பேரருளை வேண்டி சங்கல்பம் செய்வது வழக்கமாக இருக்கும்.

23) கோ பூஜையும் மகாலட்சுமியும்

மகாலட்சுமியின் பூஜைகளில் ஒன்று கோ பூஜை. பசுவின் பின்பகுதியில் மகாலட்சுமியின் சாந்நித்யம் இருக்கிறது. வேத மந்திரங்களில் உலகம் செழிக்க வேண்டும் என்று சொன்னால், பசுக்கள் செழிக்க வேண்டும். கோ ப்ராமணேப்ய சுபம் பவது: வாழ்க ஆனினம் என்பது தமிழ் வாழ்த்து கூட. தமிழிலும் பசு என்றாலே செல்வம் என்ற ஒரு பொருள் உண்டு. மகாலட்சுமியும் செல்வம்தான். பசுமாடும் செல்வம்தான். எனவே பசுவை வணங்குவது மகாலட்சுமியை வணங்குவது போல். அதனால்தான் பசு தேவராலும், மூவராலும், முத்தேவியராலும் வணங்கப்படுகிறது. முப்பத்துமுக்கோடி தேவர்களும் பசுவில் அடக்கம்.

காலையில் எழுந்ததும் காணத்தக்கவற்றுள் பசுவின் பின்பக்கமும் ஒன்று. மகாலட்சுமியின் பேரருளைப்  பெற வேண்டும் என்று சொன்னால், பசுவைக்  காப்பாற்ற வேண்டும். பசுவை வணங்க வேண்டும். மகாலட்சுமிக்கு உரிய பூஜைகளில் ஒன்று கோமாதா பூஜை. பசுவைப் போலவே யானையின் மத்தகம் பிரணவம் போன்றது (ஓங்காரம் போன்றது). அங்கே திருமகள் வீற்றிருக்கிறாள்.

24) தாமரை

மலர்களில் சிறந்தது தாமரை. ‘பூவெனப் படுவது பொறிவாழ் பூவே’ என்றும், ‘பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை’ என்றும் கூறுவர். தாமரை செல்வத்தைக் கொடுக்கும். பொன்னின் அளவைப் பத்மநிதி, சங்கநிதி என்பர். பத்மம் என்றால் தாமரை. எல்லாத் தெய்வங்களுமே பத்மத்தில்தான் அமர்ந்துள்ளனர். பத்மாசனத்தில் அமர்வதே சிறப்பு. திருமகளுக்குரிய இடம் தாமரை.
க்ஷீர சமுத்பவ மங்கள ரூபிணி
மந்த்ர நிவாஸினி மந்த்ரநுதே
மங்கள தாயிணி அம்புஜ வாஷினி

என்று மந்திரமுண்டு. ஆதலின் அவளை மலர் மகள் என்பர். பாற்கடலில் தோன்றியதால் அலைமகள் என்றும் அழைப்பார்கள். தாமரை மலரில் அமர்ந்த அவளுக்கு இரண்டு யானைகள் அபிஷேகம் செய்வது போன்ற காட்சி இருக்கும். இந்த கஜலட்சுமி திருவுருவ அமைப்பு மிகமிகச் சிறப்பானது. இந்த உருவத்தை வணங்குவதன் மூலம் ஒருவருக்கு சகல செல்வங்களும் நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

25) திருவிளக்கு

விளக்கின்றி பூஜையில்லை.  எல்லாத் தெய்வங்களும் விளக்கில் இருப்பினும், விளக்கை மகாலட்சுமியாகக் கருதுவது நம் மரபு. எந்தப்  பூஜையும் மகாலட்சுமி பூஜையிலிருந்து தான் தொடங்கும். விழாவில்  முதலில்  ஏற்றுவது திருவிளக்கு. வெறும் விளக்கு என்று சொல்வதில்லை. திருவிளக்கு என்றுதான் சொல்லுகிறோம். ``திரு’’ என்றால் செல்வம் என்பது தெரியும்.

எனவே மகாலட்சுமிக்கு உரியது விளக்கு. விளக்கு ஏற்றி விட்டாலே மங்களகரமான மகாலட்சுமி அந்த இடத்தில் தோன்றிவிட்டாள் என்று பொருள். திருவிளக்கு பூஜை என்பது ஒரு வகையில் மகா லட்சுமி பூஜைதான். அந்தியும் சந்தியும்  சந்திக்கும் காலை மாலை வேளைகளில்  விளக்கு ஏற்றி தீபத்தை  வழிபடுவது சகல புண்ணியங்களையும் தரும் என்று விரத சூடாமணி கூறுகிறது.

26) தீபத்தில் மகா லட்சுமி

தீபத்தில் மகாலட்சுமி நித்யவாசம் செய்கிறாள்
என்று `பாகதேய  பூஷணம்’ என்னும் நூல் குறிப்பிடுகிறது.
தீபஜ்யோதி: பரப்ரம்ஹ  
தீப ஜ்யோதிர்  ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம்
தீபஜ்ஜோதி நமோஸ்துதே
என்பது திருவிளக்கு மந்திரம். ஆகையால் காலை, மாலை என இருவேளைகளிலும் விளக்கேற்றுவது நன்மைபயக்கும்.

27) சந்தனமும் தாம்பூலமும்

மங்கலப்பொருளான சந்தனத்தில் மகாலட்சுமி உறைகிறாள். தெய்வங்களுக்குரிய சோடச உபசரணையில் சந்தனம் அணிவிப்பதும் ஒன்று. சுபகாரியங்களில் சந்தனம் அவசியம். தாம்பூலம் மங்களகரமானது. சுபகாரியங்களுக்கும், பூஜைக்கும் தேவையானது. தாம்பூலத்தை மாற்றிக் கொண்டால், சம்மதம் தெரிவித்தாயிற்று என்றே பொருள். இதிலும் மஹா லஷ்மி சொரூபம் உண்டு. பசுவைப்போலவே பசுவிடமிருந்து பெறப்படும் கோஜலம், கோமயம் (சாணம்) பால், தயிர், நெய் ஆகிய ஐந்தும் இறைவனுக்கு உகந்தவை. இதனைப் பஞ்சகவ்யம் என்பர். பஞ்சகவ்யம் பருகினால் நோய் வராது. பஞ்சகவ்யம் பரம ஒளஷதம் என்பர்.

28) உள்ளங்கைகளில் மஹாலட்சுமி

திருமணமாகும் பெண்களை மகாலட்சுமியாக பாவிப்பது வழக்கம். மந்திரங்களிலும் சாட்சாத் மகாலட்சுமி சொரூபிணீ என்றுதான் வரும். பொதுவாகவே, ஒவ்வொரு பெண்ணையும் மகாலட்சுமியாக நினைக்க வேண்டும். வழக்கிலும் பெண்களைச்  சொல்லுகின்ற பொழுது ‘‘மகா லட்சுமி போலவே இருக்கிறாய்” என்று சொல்வதுண்டு. எனவே சாஸ்திரம், கன்னிப் பெண்களிடம் மகாலட்சுமி குடியிருக்கிறாள் என்று சுட்டிக் காட்டுகிறது. அதைப்போலவே வேள்விப் புகை, உள்ளங்கைகள், பசு மாட்டின் கால் தூசு, சங்கு  போன்றவை மகாலட்சுமியின்  இடங்களாக  சொல்லப்படுகின்றன. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளைப்  பார்ப்பது என்பது மகாலட்சுமி தரிசனம்தான். அதன் மூலம் அந்த நாள்  நல்ல படியாக இருக்கும் என்கின்ற நம்பிக்கை உண்டு.

29) வில்வமரம்

வில்வ மரத்தடியில், ரைவத மன்வந்திரத்தில் மகாலட்சுமி தோன்றினாள். வைணவத்தலமான ஸ்ரீரங்கத்தின் தல விருட்சம் வில்வம். திருநகரிக்கு வில்வாரண்யம் என்று பெயர். திருவஹிந்திரபுரத்தில் மகாலட்சுமிக்கு வில்வத்தால்தான் அர்ச்சனை. வில்வ மரத்தடியில் செல்வம் தரும் நாயகி வசிக்கிறாள். மகாலட்சுமி, வில்வமரத்தில் இருப்பதால் மாதப்பிறப்பு, அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கக் கூடாது. அதைப்போலவே நெல்லி மரம்; அதனடியில் மகாலட்சுமி உறைகிறாள். நெல்லி, திருமாலின் அருள் பெற்றது. ஹரிபலம் என்று இதற்கு பெயர். நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் லட்சுமி இருப்பாள். துவாதசியன்று நெல்லிக்காய் சேர்த்தால்தான் ஏகாதசி விரத பலன் உண்டு. ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு, அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.

30) இரக்கமே மகாலட்சுமியின் குணம்

மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்களையும், பொருட்களையும் சாஸ்திரம் விவரிக்கிறது. கடுக்காய், பவளமல்லி, மாதுளை, திருநீற்றுபச்சை, அத்திக் கட்டை, அறுகம்புல், விளா மிச்சுவேர், நன்னாரிவேர், களாக்காய், விளாம்பழம், வரகு, நெற்கதிர், மாவடு, புற்றுத்தேன், எலுமிச்சை, பாகற்காய், அகத்திக்கீரை, மலைத்தேன், வெள்ளி, தங்கம், வைரம், உப்பு, மூங்கில், குளவிக் கூட்டு மண், நண்டுவளை மண், ஆலஅடி மண், வில்வ அடி மண், வெள்ளரிப் பழம், மோதகம், அவல், காதோலை, கடல்நுரை, கண்ணாடி, பட்டு, தையல் இல்லாத புதுத்துணி,

பெண்ணின் கழுத்து, ஆணின் நெற்றி, கோவில் நிலை மண், வெயிலுடன் கூடிய மழைநீர், நுனிமுடிந்த கூந்தல், படிகாரம், அரச சமித்து, நாயுருவி, வாசல் நிலை, கொப்பரைக்காய், பாக்கு, பச்சைக் கற்பூரம், கலசம், கமண்டலநீர், தர்மசிந்தனை உடையாரின் உள்ளம், வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடம், கலகமில்லாத மகளிர் வாழும் இடம், தானியக் குவியல், கல்லும் உமியும் இல்லாத அரிசிக் குவியல், பணிவுடைமையும் இன்சொல்லும் உடையவர், பகிர்ந்துண்டு வாழும் மனிதர், நாவடக்கம் உள்ளவர், இனிமையாக பேசுபவர், பிறருக்கு உதவுபவர். மிதமாக உண்பவர், பெரியோர்களின் ஆசி பெற்றவர், பெண்களைத் தெய்வமாக மதிப்பவர், அழுக்கில்லாத தூய்மையான ஆடை அணிகிறவர் ஆகிய இடங்களில் மகாலட்சுமி எப்போதும் இருக்கிறாள்.
மகாலட்சுமி உறையும் இன்னும் சில இடங்கள்;

நிறைகுடம், காய்ச்சிய பால், காராம்பசு நெய், குங்கிலியப்புகை, கஸ்தூரி, புனுகு, பூணூல், சாளக்கிராமம், திருமாங்கல்யம், கிரீடம், பூலாங்கிழங்கு, மஞ்சள், அட்சதை, பூரணகும்பம், தாமரை, ஜெபமாலை, வலம்புரிச்சங்கு, மாவிலை, தர்ப்பை, குலைவாழை, துளசி, தாழம்பூ, ருத்ராட்சம், சந்தனம், தேவதாரு, அகில், பஞ்ச பாத்திரம், ஆகியவையில் மகாலட்சுமி பரிபூரணமாய் இருக்கிறாள். இப்படி மகாலட்சுமியினுடைய பெருமையை விவரித்துக் கொண்டே போகலாம். இந்த “முப்பது முத்துக்கள்” அளவற்ற அவள் பெருமையில் ஒரு துளிதான். இப்படிப்  பெருமை மிக்க மஹாலஷ்மியின் பேரருளை தினம்தினம் சிந்தித்து வழிபட்டு வளமான  வாழ்வு பெறுவோம்.

மகாட்சுமி காயத்ரி மந்திரம்
ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே!!
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி!!
தன்னோ லக்ஷ்மீஹ்: ப்ரசோதயாத்!
அஷ்டலட்சுமிக்கு உகந்த இந்த
மந்திரத்தை தினமும் அல்லது செவ்வாய்,
வெள்ளிக்கிழமைகளில் சொல்லிவந்தால்,
வாழ்வில் அனைத்து வளத்தையும் பெறலாம்!

எஸ். கோகுலாச்சாரி