வேளாண் மரபினரின் விஷத் திருநாள்



வேளாண் தொழில் செய்வோருக்குப் பாம்புகள் பலவகையிலும் உதவியாக இருக்கின்றன. பயிரியல் உயிரியல் அறிஞர்கள் பாம்பின் இருப்பு அவசியம் என்றும், அதனைக் கொல்வதால் இயற்கை சமநிலை குளறுபடியாகிவிடும் என்றும் கூறுகின்றனர். இக்கருத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உணர்ந்திருந்த வேளாண் குடிமக்கள் பாம்புகளைப் போற்றி பூஜித்தனர். அவ்வாறு பூஜித்த ஒரு நன்னாள் ஆடி, ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி ஆகும். இதனை நாகசதுர்த்தி என்பர்.
 
நாகசதுர்த்தியும் நாகபஞ்சமியும்

நாகசதுர்த்தி அன்று நாகத்துக்கு பூஜை செய்தால் ஏழு ஜென்ம பாவம் தொலையும் என்பதால், ஊரெங்கும் உள்ள நாகதேவதை கோயிகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மறுநாள் நாகபஞ்சமியாக அனுஷ்டிக்கப்பட்டதை, பின் வந்தவர்கள் கருட பஞ்சமி என்றும் கருட ஜெயந்தி என்றும் அழைத்தனர்.ஆடி மாத விதைப்புக் காலத்திலும், ஆவணியில் நாற்றுகிளை விடும் நாட்களிலும் எலிகள் தொந்தரவு கூடாது என்பதால் நாகங்களை இக்காலத்தில் போற்றி வழிபட்டனர். நாகம் உழவர்களின் நண்பனாக மதிக்கப்பட்டது.

இலவச பூச்சிக்கொல்லி

உழவர்களின் நண்பனான நாகங்கள் இயல்பான இலவசமான பூச்சிக் கொல்லிகளாகும். இவை நெற்பயிர்களை வேரில் கடித்து அழிக்கும் எலிகளைக் கொன்று தின்றுவிடும். இதனால், பயிர்ப் பாதுகாப்பு உறுதி ஆகின்றது. மேலும், பாம்புகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு பேருதவி புரிகிறது. பெரிய ராஜ நாகமானது மற்ற பாம்புகளை மட்டுமே விழுங்கும். தன் இனத்தையே தின்று வாழும் பிராணி அது ஒன்றேயாகும். இதனால், பாம்புகளின் எண்ணிக்கையும் கட்டுப்படும். பாம்புகள், தவளை போன்ற உயிரினங்களைத் தின்பதால் இயற்கையின் சமநிலை பாதுகாக்கப்படும். இவற்றை அறிவியல் அறிஞர்கள் தொடர்ந்து வற்புறுத்துகின்றனர். பாம்புகளைக் கொல்லக் கூடாது என்று பாம்பு பிடிக்க ஆட்களுக்குப் பயிற்சி அளிக்கின்றனர்.

சிவன் ஆலகாலம் உண்ட நாள்

பாம்புகள் நமக்கு துன்பம் தருபவை என்று நம்பி அவற்றிடமிருந்து நம்மை காப்பாற்றவே பாம்புகளுக்கு அன்று விசேஷ பூஜை செய்கின்றனர். சிவபெருமான் ஆலகாலம் என்ற விஷத்தை உண்ட நாள் என்று இதற்கொரு புரானக் கதையும் வழங்கப்படுகின்றது. ஒரு பழக்கத்தைத் தொடர வேண்டும் என்றால் அதற்கென்று தனியாக ஒரு புராணக் கதை தேவைப்படுகிறது. இதுவே சமய நடைமுறை. விஷப்பாம்பை கொண்டாடும், அதற்கு நன்றி செலுத்தும் நன்னாளாகவும் சில இடங்களில் கொண்டாடுகின்றனர்.

திருமணத்தடை, பிள்ளைப்பேறு

நாகசதுர்த்தி அன்று புற்றுக்குப் பால் ஊற்றுதல், நாகர்களுக்குப் பாலபிஷேகம் செய்து புதுத்துணி உடுத்தி ஆராதித்தல் போன்றவற்றைச் செய்தால், ஜாதகத்தில் [ராகு - கேது தோஷம்] நாகதோஷத்தால் திருமணத்தடை உள்ளவருக்குத் திருமணம் நடக்கும். குழந்தைபேறு இல்லாதவருக்குக் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இப்பூஜைகளைச் செய்கின்றனர். நாகர் என்பது ஆண் பெண் சேர்க்கையைக் குறிக்கும் சிலைகளாகவே பெரிதும் வடிக்கப்படுகின்றன. நாகரை வணங்கி வருவோரின் ஆழ்மனதில் திருமணம் பற்றிய அச்சத்தை மற்றும் தடைகளை நீக்கி திருமண ஆசையை உண்டாக்குவது காலங்காலமாக நடந்துவருகிறது.

இது ஓர் உளவியல் அணுகுமுறை ஆகும். ஃபிராய்டு முதலான உளவியல் அறிஞர்கள், பாம்பைப் பாலியல் குறியீடாகவே கருதுகின்றனர். ஆதிமனிதன் தோன்றிய காலத்திலிருந்து இந்த எண்ணம் அவனது ஆழ் மனதில் உறைந்துவிட்டது. நாகம் தீண்டி இறந்த தனது சகோதரர்கள் இருவரையும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று மன்றாடிய ஒரு பெண்ணுக்கு, அவள் வேண்டுதலைக் கேட்டு நாகராஜன் அவர்களை உயிர்ப்பித்துக் கொடுத்ததால் நாகசதுர்த்தி கொண்டாடப்படுவதாக புராணங்களில் உள்ளது.

நாகம் காட்டும் முன்னோர்

நாக வழிபாடு மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிக காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது. நாகங்கள் மண்ணுக்குள் சென்று வெளியே வருவதால் அல்லது புற்றுக்குள் சென்று மீண்டும் வெளியே வருவதால் ஆதி மனிதன், இறந்து போன பாம்பை மண்ணுக்குள் புதைத்து தனது முன்னோர்களாகக் கருதினான். பாம்பை நேரில் கண்டால் அதனை இறந்துபோன ஏதோ ஒரு முன்னோராகக் கருதி, இறந்தவர்களுக்கு ஏதோ குற்றம் வைத்திருக்கிறோம் அதனைத் தீர்க்க வேண்டும் இல்லையென்றால் குடும்பத்தில் பல துன்ப நிகழ்ச்சிகள் ஏற்படும் என்று, இன்றும் பலர் நம்புகின்றனர். அதற்குப் பரிகாரம் செய்கின்றனர்.

விவசாயிகளின் நண்பன் நாகம்

பொதுவாக மக்களுக்கு நாகபயம் அதிகமாக இருந்த காரணத்தினால், நாகத்தை கண்ணில் பார்க்கவே அஞ்சினர். ஆனால், விவசாயிகள் வீட்டில் பார்த்தால் மட்டுமே நாகத்தை அடித்துக் கொல்வர். விளைநிலங்களில் ஊர்ந்து செல்வதைக் கண்டால் விட்டுவிடுவர். அதை தனது நண்பனாகக் கருதி மகிழ்ச்சி அடைவர். வைதிக சமயங்கள் வேரூன்றிய காலத்தில் முன்னோர் வழிபாடாக விளங்கிய நாகவழிபாட்டை தம்முடையதாக்கிக்கொண்டனர். சைவசமயக் கடவுளான சிவனின் ஆபரணமாகத் திருமாலின் அரவணையாக நாகம் சேர்த்துக் கொள்ளப்பட்டது. நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயில், பரமக்குடியிலும், கும்பகோணத்திலும் உள்ள நாகநாதர் கோயில்கள், ஆதியில் நாகத்துக்குரிய கோயில்களாக இருந்ததாகவும் கருத்து உண்டு.

நாகர்கள் யார்?

நாகத்தை தம் குல முதுவராகக் கொண்டு வணங்கியோர், பாரத தேசத்தின் பூர்வ குடிகள் ஆவர். நாக வழிபாடு இந்தியா, லங்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில், அன்றும் இன்றும் ஆழமாக வேருன்றி உள்ளது. ஏ.கே.மஜும்தார் திபெத் மற்றும் பர்மாவில் நாக வழிபாடு இருந்தது. கி.மு நான்காயிரத்தில், அங்கிருந்து வட இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தோர் இங்கு நாக வணக்கத்தை அறிமுகம் செய்தனர் என்றார். நாகர்கள் என்போர் நாகத்தை வழிபடும் இனத்தவர். தமது குல முதுவரான நாகத்தின் பெயரால் தம்மை அழைத்தனர். அவர்கள் இந்தியா முழுக்க பரவியிருந்தனர். பின்னர், காலப்போக்கில் இவர்கள் தனித்தனிப் பிரிவுகளாகி கிளை மொழியைத் தனி மொழியாக்கி தனிமாநிலங்களில் தங்கிவிட்டனர்.

நாகரி எழுத்து வடிவம்

நாகர்களில் தமிழகத்திலேயே தங்கியவர்களும், எங்கும் இடம்பெயர்ந்து செல்லாதவர்களும், பின்னர் தம்மைத் தமது மொழியின் பெயரால் தமிழர் என்று அழைத்துக் கொண்டனர். இவர்கள் பயன்படுத்திய எழுத்து `நாகரி’ எனப்பட்டது. ஆரியர்கள் தம் வேதங்களை வாய்மொழியாகவே சொல்லி வந்ததால், அவர்களுக்கு எழுத்துரு கிடையாது. அவர்கள் நாகர்கள் பயன்படுத்திய நாகரி எழுத்துக்களில், தமது ஒலிகளுக்கு ஏற்ப சில மாற்றங்களைப் புகுத்தி தமது தேவநாகரி என்று பெயரிட்டு தமது படைப்புகளைத் தேவநாகரியில் எழுதிவைத்தனர்.

புராணங்களில் நாகங்கள்

நாகங்கள் வைதீக சமயத்தில் மட்டுமல்ல, பவுத்த சமயத்திலும் முக்கியத்துவம் பெற்றன. போதி தர்மருக்கு புத்தர் உபதேசம் செய்த போது, அங்கு அஷ்ட நாகங்களும் வந்து அமர்ந்திருந்ததாக கதைகள் உள்ளன. ஆதிசேஷன் என்ற நாகம் திருமாலின் பாம்பணை ஆயிற்று. மானசா என்ற நாகம் வாசுகியின் தங்கை எனப்படுகிறாள். வங்காளம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் குலதெய்வம் ஆவாள்.