குங்குமமும் ஆக்ஞா சக்கரமும்



குங்குமம் பெண்களின் சௌபாக்கிய சின்னமாகும். தலைமுடியின் முன் வகுட்டில் (சீமந்தம்) லட்சுமி உறைவதாகக் கூறுவர். ஆகவே மணமான பெண்மணிகள் நெற்றியிலும், வகுட்டிலும் குங்குமம் இட்டுக்கொள்வர். அக்காலத்தில் புருஷர்கள் தீரர்களாகவும், பலசாலிகளாகவும் இருந்ததால் தங்கள் வீரத்தைக் காட்டும் வகையில் திருமணத்தில் ரத்தத் திலகத்தை தன் மனைவிக்கு இடுவார்கள்.

நாளடைவில் ரத்தத் திலகம் சென்றுவிட, குங்குமத் திலகமாக மாறிவிட்டது. குங்குமத்தின் மூலப்பொருள் ‘புண்ட்’ என்பது. அதாவது துவாரகையின் கோபி சந்தனம் எனப்படும் சுத்தமான மண். ஆனால், இக்காலத்தில் குங்குமக்கல் உபயோகத்திற்கு வந்துவிட்டது. நெற்றியில் சந்தனப் பொட்டு இடுவதை ‘புண்ட்ரம்’ என்பார்கள். மஞ்சள் நிறமுள்ள சந்தனக் கலவை இது. மஞ்சள் பொடி, கேசரி, கஸ்தூரி இவைகளைப் பிற்காலத்தில் கலந்ததால், சிவப்பு நிறமாயிற்று.

ஆனால் குங்குமத் திலகம், ஆதி காலத்தில் சிவப்புநிறமாக இருந்ததென்று சொல்வதற்கில்லை.வாத்ஸ்யாயனர், 64 கலைகளுள் திலகம் இட்டுக் கொள்வதும் ஒன்று என்று குறிப்பிட்டிருக்கிறார். சௌபாக்கியத்திற்காக மட்டுமின்றி தர்மத்திற்காக இட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். நெற்றியில் ஏதாவது ஒரு சின்னத்தை இட்டுக்கொள்வது யோக சாதனம் என்பது பலருக்குத் தெரிந்திராது. யோகத்தில் பலவகை உண்டு. அதில் ‘ராஜ யோகம்’ என்பது ஒன்று. இந்த ராஜயோகத்திலிருந்து திலகம் பிறந்தது.

இந்த யோக தத்துவ ஞானத்தை ஆதாரமாகக் கொண்ட ஆத்ம சிந்தனை முறையின் ஓர் அம்சமே திலகம். ராஜயோகம் பயிலும் யோகி, தம் கண் எதிரே ஏதாவது ஒரு பிம்பத்தை அல்லது சின்னத்தை நிறுத்தி, அதிலிருந்து மூன்று அடிகள் நகர்ந்து அந்தப் பொருள் ஒன்றையே குறிப்பாகப் பார்த்துக் கொண்டிருப்பார். சரீரத்திலுள்ள ஆறு ஆதாரங்களும் யோகியின் நிஷ்டையினால் ஐக்கியமாகி விடுகின்றன. இந்த ஆறில், ஆக்ஞா என்ற ஆதாரத்திலுள்ள சக்கரம் நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் இருப்பது.

இச்சக்கரத்தில் யோகியின் ஆத்ம சக்தி, பிராணத் தத்துவம் இரண்டும் கலந்து சிரத்திலுள்ள பிரம்மமந்திரத்தை எட்டுகின்றன. இதன் பிறகுதான் அவருக்குப் பூரண ஞானம் கிட்டுகிறது. இந்த நிஷ்டையும் வித்தையும் மிகக் கடினமானவை.இந்தச் சாதனையில் ‘ஆக்ஞா சக்கரம்’ சீக்கிரம் நிஷ்டையில் கலக்க வேண்டும் என்பதற்காக யோகிகள் நெற்றியில் சந்தனப் பொட்டு வைக்கும் வழக்கத்தை மேற்கொண்டார்கள். தங்கள் எண்ணம் அனைத்தையும் ஒரே நோக்கில், ஒரே குறியில் திருப்பி ‘ஆக்ஞா சக்கரம்’ நிஷ்டையில் கலக்கச் செய்வது, இதன் மூலம் அவர்களுக்குச் சுலபமாயிற்று.

 - பரிமளா