இலக்கியத்தில் மங்கலம்!



ஒரு பொருள் அழகாக இருந்தால் எவ்வளவு லட்சுமிகரமாக இருக்கிறது என்கிறோம். சுபமானதை ‘மங்கலம்’ என்றும், ‘மங்களம்’ என்றும் குறிப்பிடுவதுண்டு. வாழ்த்துப்பாட்டை மங்கள ஸ்லோகமென்று கூறுகிறார்கள். இப்பாட்டைப் பாடுவோர் மங்கலப் பாடகர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். மங்களம் பாடுவது நல்ல காரிய முடிவில் பாடப்படுவது. மணமக்களுக்கு ஆசிகூறுவதை மங்கல வாழ்த்து என்கிறது சிலப்பதிகாரம். மங்கள வாரம் என்று செவ்வாய்க்கு ஒரு பெயர். ‘மங்கலன்’ என்று செவ்வாய்க்கு ஒரு பெயர்.

அதனால் இப்பெயர் வந்தது.மங்களரேகை என்று உங்கள் கையிலுள்ள ரேகை ஒன்றைக் குறிப்பிடுவதுண்டு. சுபகாரியம் செய்யும்போது முதலில் ஸ்நானம் செய்வதை `மங்கள ஸ்நானம்’ என்கிறோம். மஞ்சள் கலந்த அட்சதையை மங்களாட்சதை என்று சொல்வதுண்டு. மங்கள ஆரத்தி என்பது தெய்வத்திற்குரிய கற்பூரஆரத்தியைக் குறிக்கும். மஞ்சள்நீர் ஆரத்தியையும் குறிக்கும். திருமணங்களில் மணமக்களை ஆசீர்வதித்து வேத மந்திரம் கூறுவதுண்டு. அதற்கு மங்களாஷ்டகம் என்று பெயர்.

இந்த வேதமந்திரம் எட்டு வாக்கியங்களையுடையது. தாலியை மங்கலநாண் என்பார்கள். சிலப்பதிகாரம் மங்கலஅணி என்கிறது. சுபகாலங்களில் முழங்கும் முரசு, மங்கலப் பேரிகை, புனிதமான நாளைக் குறிக்க மங்கலத் திருநாள் என்பார்கள். ‘‘மதிநாள் முற்றிய மங்கலத் திருநாள்’’ என்று மணிமேகலையில் வருகிறது. சுமங்கலிகளை மங்கள மடந்தையர் என்றும், மங்கள மங்கையர் என்றும் கூறுவர். சுருக்கமாகச் சுமங்கலிகளை ‘மங்கலி’ என்றும் கூறுவதுண்டு.

தமிழ் இலக்கியத்தில் சில மங்கலக் காட்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன அவைகளை பார்ப்போமா!

பொலிவு மங்கலம்

குறுகுறு விழித்து சிறு கைநீட்டி விளையாடுகிறது குழந்தை. இக்குழந்தையைப் பார்த்து பெற்றோர்கள் மகிழ்வது பொலிவு மங்கலம்.

குடை மங்கலம்

நாற்றிசையும் புகழ் பெருக வீற்றிருக்கும் அரசனின் குடை நிழல் செம்மையாயிருந்து புகழ் பெற ஆள்வதை குடை மங்கலம் என்பார்கள்.

வாள் மங்கலம்

அரசனுடைய நல்லாட்சிக்கு எப்படி அவனது வெண்கொற்றக்குடை அடையாளமாகக் கூறப்படுகிறதோ, அப்படியே அவனுடைய வீரத்துக்கு வாள் அடையாளமாகிறது. வீரவாளைப் புகழ்ந்து கூறுவதற்கு வாள் அடையாளமாகிறது. வீரவாளைப் புகழ்ந்து கூறுவதற்கு வாள்மங்கலம் என்று பெயர்.

நீராடல் மங்கலம்

அரசன் நீராடுகின்ற கோலாகலமான காட்சியைச் சித்தரிப்பதற்கு நீராடல் மங்கலம் என்று பெயர். ‘மண்ணுமங்கலம்’ (மண்ணுதல்-நீராடுதல்) என்ற பெயர் உண்டு.

நாள் மங்கலம்

ராஜதர்பார் நடைபெறுகிறது. அன்று அரசனின் பிறந்த நாள். பாணர் பாடிக்கொண்டிருக்கிறார். ஆடல் மகளிர் ஆடிக்கொண்டிருக்கின்றனர். மன்னன் பரிசுகளை வாரி வழங்குகிறான். இப்பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நாள் மங்கலம் என்று பெயர்.

மண மங்கலம்

அரசனின் திருமணத்திற்கு மண மங்கலம் என்று பெயர். (புறப் பொருள் வெண்பாமாலையில் இம்மங்கலக் காட்சிகள் வருணிக்கப்படுகின்றன)

மாங்கல்ய சூத்திரம்

தாலிக்குத்தான் இந்தப் பெயர். மிகவும் பவித்திரமானது. ‘தாலி பெண்களுக்கு வேலி’ என்பது பழமொழி. மங்கலப் பொருளில் முதலிடம் பெறுவது தாலிதான்.

பூரண கும்பம்

உலகமும், அதிலுள்ள தாவர ஜங்கமப் பொருள்களும், சகல ஆத்மாக்களும் ஜலத்திலிருந்தே உண்டாகிறது. மறுபடியும் பிரளய காலத்தில் ஜலத்திலேயே லயமாகி விடுகிறது என்று வேதம் கூறுகிறது. ஆகவே, இறைவனை நீரின்மூலம் வழிபடுவதே பூர்ண கும்பத்தின் மகிமையாகும். அந்தப் பூரண கும்பத்தை மனிதஉடலாகப் பாவித்து அதில் கடவுளை தியான ஜப பிரார்த்தனை மூலம் ஆவிர்பவிக்கச் செய்வதே பூரணகும்ப பூஜையின் தத்துவம். மிகப் பெரியவர்களுக்கும், ஞானிகளுக்கும், யோகிகளுக்குமே பூரண கும்பம் கொடுத்து மரியாதை செய்ய வேண்டும். பூர்ண கும்பம் என்றாலே அதில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்று அர்த்தம்.

அனந்த பத்மநாபன்