நலம்தரும் நாகசதுர்த்தி, நாகபஞ்சமி-(1.8.2022 - 2.8.2022)



ஆடி மாதத்தில் வருகின்ற வளர்பிறை நான்காவது நாளாகிய சதுர்த்தி நாளுக்கு ஒரு சிறப்புண்டு. இந்த நாளுக்கு, நாகசதுர்த்தி என்று பெயர். அதற்கு அடுத்த நாள் (2.8.2022) பஞ்சமி திதி வருவதால் நாகபஞ்சமி தினமாகக் கொண்டாடுவார்கள். இதே நாள் கருடனுக்கும் உரிய நாள் என்பதால் கருட பஞ்சமி தினமாகவும் கோயில்களில் அனுஷ்டிப்பார்கள்.
நாகமும் கருடனும் ஒன்றுக்கொன்று பகை என்றாலும், இருவரையும் கொண்டாடும் நாளாக நாகபஞ்சமி நாளும், கருட பஞ்சமி நாளும் இணைந்து இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பகையை மறந்தால்தான் ஒருவர் வளர்ச்சி பெற முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த இரண்டு விழாக்களும் இணைந்துவருவது.

இனி நாகசதுர்த்தியைப் பற்றி சில விஷயங்களைப் பார்ப்போம்.நாகசதுர்த்தி, நாகங்களை வழிபடுவதற்கான நாள். நமது சமய மரபிலே, விஷமுள்ள நாகங்களைக் கூட, தெய்வமாக வணங்கினார்கள்.

நாகங்கள் தெய்வங்களின் ஆபரணமாகவும், வாகனங்களாகவும், படுக்கையாகவும், இருக்கும் காட்சிகளை நாம் திருக்கோயில்களிலே பார்த்திருக்கிறோம். ஒரு தெய்வத்துக்காவது, நாகம் இல்லாமல்  இருக்கிறதா? பாருங்கள். பெருமாளை எடுத்துக்கொண்டால், அவர் நாகங்களின் மீதுதான் படுத்திருக்கிறார். பாம்பணை இல்லாமல் அவர் இல்லை.

ஏஷ நாராயண ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந:|
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்||
என்கிறது ஸ்ரீவிஷ்ணு புராணம்.
இதை ஆழ்வார்கள் இன்னும் அழகாகப் பாடுகிறார்கள்.

சென்றால் குடையாம்
இருந்தால் சிங்காசனமாம்,
நின்றால் மரவடியாம்
நீள்கடலுள், என்றும்
புணையாம் மணி விளக்காம்
பூம்பட்டாம் புல்கும்
அணையாம், திருமாற்கு அரவு

ஒரு நிமிடம்கூட இறைவனை விட்டு நாகங்கள் பிரிவதில்லை. உலகங்களில் நாகங்களுக்கென்று தனி உலகமே உண்டு. அது ``நாகலோகம்’’ என்று நம்முடைய புராணங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்படுகிறது. ஆதிபராசக்தியை எடுத்துக் கொள்ளுங்கள். தேவி கருமாரியை எடுத்துக் கொள்ளுங்கள்.

நாகத்தின் மீதுதான் உட்கார்ந்து இருப்பாள் அன்னை. நாகதேவதை, நாகாத்தம்மன் என்று எத்தனையோ வழிபாடுகள் கோயில்கள் நம்முடைய ஊர்களில் இருக்கின்றன. வட நாட்டில் நாக பூஜை இன்னும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. நாகங்களை நாம், இன்று நேற்று அல்ல. பல காலமாகவே பூஜித்துவருகிறோம். பெண்கள், வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் புற்றுக்குச் சென்று பால்வைத்து வணங்குவதும், பூக்களைக் கொண்டு பூஜித்தும், பக்கத்தில் அம்மன் கோயில் இருந்தால் வணங்குவதும் இயல்பாகவே செய்வார்கள்.

நாகங்களை வணங்குவதன் மூலமாக, நாம் விஷமுள்ள உயிரினங்களையும், உயர்ந்த நிலையில் மதிக்கிறோம், காப்பாற்றுகிறோம். ஒவ்வொரு உயிரினத்தாலும் மனித குலத்துக்கு நன்மை உண்டு. விவசாயியின் விளைநிலங்களை காப்பாற்றுவதில் நாகங் களின் பங்குண்டு. அந்த உதவிக்காகவே ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, அதை நாகசதுர்த்தி என்று கொண்டாடுகின்றார்கள். சதுர்த்தி என்பது, விநாயகருக்கு உரிய நாள். நாகசதுர்த்தி அன்று ஒரு விநாயகர் கோயிலுக்கும் சென்று, வணங்கினால் நாகசதுர்த்தி விரதம் பூரணத்துவம் பெற்றுவிடும்.

இவ்வாண்டு சந்திரனுக்குரிய திங்கட்கிழமையில், மகாலட்சுமிக்கு உரிய பூரநட்சத்திரத்தில், நாகசதுர்த்தி வருகிறது. மேலும், ஆண்டாளின் திருவாடிப்பூரம் நாளும் இன்று.
விநாயகருக்காக தூர்வா கணபதி விரதம் இருந்ததும் இன்றைய தினம்தான் என்பதை மறக்கவேகூடாது. மங்கலங்கள் நிறைந்த பூரண சுபத்துவம் உள்ள நாளிலே, சதுர்த்தி விரதம் வருவதால் அவசியம் கொண்டாட வேண்டும். பாலை எடுத்துக்கொண்டு சென்று, அம்மன் கோயிலுக்கு அபிஷேகத்துக்குக் கொடுக்கலாம். பாம்புப் புற்றுக்கு பால்சொரிந்து வரலாம். மஞ்சள் குங்குமம் வைத்து வாசனையுள்ள புஷ்பங்களால் அர்ச்சனை செய்யலாம்.

மிக எளிமையான பூஜை இது. மஞ்சள் பொடியும், குங்குமமும், இரண்டு வாழைப்பழமும் போதும்.இதை வைத்து பிரார்த்தனை செய்தால், நாகதோஷங்கள் எல்லாம் விலகிவிடும். ஜாதகத்தில் நாகதோஷங்கள் என்பது, ரொம்ப தீவிரமானது. ஜாதகத்தில், சர்ப்ப கிரகங்கள் என்று சொல்லக்கூடிய (ராகு,கேது) கிரகங்கள் லக்கினம், குடும்பஸ்தானம், முதலிய இடங்களில் உட்கார்ந்துவிட்டால், படாத பாடுபடுத்தும். திருமணத் தடைகளைக்   கொடுக்கும். முப்பத்தஞ்சு, முப்பத்தாறு வயசு ஆனாலும் கூட திருமணம் தள்ளிப் போகும்.

இந்நிலையில் ஒரு நல்ல மணமகன் அல்லது மணமகளைத் தேடித்தந்து திருமணத்தை நல்லவிதமாக நடத்தி வைக்கக்கூடிய ஆற்றல் இந்த நாகதேவதைக்கு உண்டு என்பதால், இந்த நாகதேவதையை பிரார்த்தனை செய்ய வேண்டும். அதே போல், தீவிரமான நோய்கள் சில நபர்களுக்கு இருக்கும். அந்த நோய்கள் எல்லாம் நாக வழிபாடு மூலம் நீங்கும்.

ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 1,5,9 இந்த ஸ்தானங்களில் ராகு, கேது, போன்ற கிரகங்கள் இருக்கும் பொழுது அது நாகதோஷம் உடைய ஜாதகமாகிறது. நாகதோஷங்கள் எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால், முன்ஜென்மத்தில் ஆண்நாகமும், பெண் நாகமும் ஒன்றாக இணைந்து இருக்கும் பொழுது, அதை துன்புறுத்தி இருந்தாலும், மனைவியை சித்ரவதை போன்ற கொடிய செயலைச் செய்திருந்தாலும், பெற்றவர்களை பேணி காக்க மறுத்து இருந்தாலும், இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடத்தில் ராகு என்ற கருநாகம் நின்று தோஷத்தை ஏற்படுத்தும்.

பாம்பு தன்னுடைய பசிக்காக இரையை தேடிச்செல்லும்பொழுது அதை துன்புறுத்தி இருந்தாலும், அதர்ம வழியில் பிறரை ஏமாற்றி தொழில் செய்து இருந்தாலும் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான லக்னத்துக்கு பத்தாம் இடத்தில் ராகுவோ, கேதுவோ நின்று, தொழில் ஸ்தானத்துக்கு தோஷத்தை உருவாக்கும்.

பாம்பு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலத்திலும், அல்லது தனது குட்டிகளுடன் ஒன்றாக இருக்கும் பொழுது அதை துன்புறுத்தி இருந்தாலும், பெரியவர்களை அலட்சியப்படுத்தி தீயவழிகளில் பாவங்களை சேர்த்து இருந்தாலும் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானத்தில், ராகு நின்று நாகதோஷத்தை ஏற்படுத்தும்.

ராகு, தோஷம் ஏற்பட்டு பருவமடைந்தும் நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அரச மரமும், வேப்ப மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாகசிலைக்கு பால் விட்டு, அபிஷேகம் செய்து வர வேண்டும். செவ்வாய்க்கிழமையில் செய்வதே நல்லது. இவ்வாறு 48 நாட்கள் செய்ய வேண்டும். அதுக்கு, இந்த பிரார்த்தனை எளிய பரிகார வழி. எளிமையான பூஜையாக இருந்தாலும் பலமான செய்கைகளை செய்யும்.

இதே நாளில் சதுர்த்தி விரதம் இருந்து, சதுர்த்தி திதி தேவதையான விநாயகரை வணங்கினால் மிகவும் சிறப்பு. கேது பகவானுக்கு தேவதையாக விநாயகர் இருக்கிறார். கேதுவினால் ஏற்படக்கூடிய, எல்லாவிதமான தோஷங்களும் விநாயகரை சதுர்த்தியில் வணங்கினால் விலகிவிடும். கேது பகவான் உயர்ந்த செல்வத்தை தருகின்றவர். சில கஷ்டங்களைத் தந்தாலும்கூட, ஞானத்தையும், பக்குவத்தையும் தந்து நம்மை நல்ல முறையில் திடப்படுத்தி அதற்குப் பிறகு, இன்பங்களை வாரிவாரி வழங்குவார்.

காலையில் எழுந்து குளித்து குலதெய்வத்துக்கு பூஜைசெய்து, விநாயகர் படத்தை அலங் கரித்து பூஜை செய்து, சாதாரணமாக நீங்கள் எப்படி எல்லாம் பூஜை செய்வீர்களோ, அதன் அடிப்படையில், பூஜைசெய்தால் போதும்.எல்லா கோயில்களிலும், பெரும்பாலும் அரச மரத்தடியில் நாக பிரதிஷ்டைகள் இருக்கும். நாகப் பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும், பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.

அந்த நாக பிரதிஷ்டையை மஞ்சள், குங்குமம் சாத்தி வணங்க வேண்டும். காலையில் சாப்பிடாமல், விரதமிருந்து, நாகதேவதையை வணங்கிவிட்டு வீட்டிற்கு வந்த பின்னர், நீங்கள் உங்களுடைய உணவை உட்கொள்வது என்பது, இந்த விரதத்தினுடைய ஒரு அடிப்படையான விஷயம்.

அதேபோல் மஞ்சள் சரடு, நாக தேவதை பிம்பம் மீது வைத்து பூஜை செய்த பிறகு அதை கழுத்தில் அணிந்து கொள்வார்கள். கையிலே கட்டிக் கொள்வார்கள். இப்படி பல விதமான முறைகள் எல்லாம் இருக்கின்றன. இந்த முறைகளை விட, நாளைக்கு இந்த நாக தேவதையை வணங்குவதுதான் முக்கியம். இதனால், நம் வாழ்வில் பல நன்மைகள்  நடக்கும். சௌபாக்கியங்கள் பெருகும்.

கல்யாணராமன்