ஆன்மிக அமுதத் துளி - 4



திருமகளின் அருள் பெற்றவர்களுக்குத்தான் செல்வம் பல வகைகளிலும் வந்து சேர்கிறது. கடின உழைப்பு இருப்பினும் அதற்கு ஏற்ற வெகுமதி கிடைப்பது இல்லை. பல வழிகளிலே செல்வம் வந்து சேரினும் வேறு வழியே தனியே போகிறது. ஆடம்பரங்களிலும் சொகுசு வாழ்விலும் சொத்துக்கள் கரைகின்றன.
முதல் தலைமுறை தனது அசாத்திய உழைப்பு மூலம் குவித்தவைகளை அடுத்து வரும் தலைமுறையினர் அனுபவிக்கிறார்கள். இவ்வாறு, செல்வம் குறித்து கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆயினும், தாயினைச் சேர்ந்திடும் கன்றுபோல் இறைவனை அடைய மனம் லகுவாகிச் செல்ல செல்வம் பிரதானமல்ல என்பதை ஞானிகள் பலரும் சுட்டிக்காட்டிச் சென்றுள்ளனர்.

சிவபெருமானின் எடுத்த திருவடியையும், திருமாலின் நின்ற திருவடிகளையும் காண்பதற்குத் தேவைப்படுவது “போதும்” என்ற ஒற்றைச் சொல்லில் மனம் நிறைவாகும் பக்குவமே.
ஏழை என்றாலும் ஞானச் செல்வந்தன்செல்வத்தின் தேவை அதிகமாகும்போது பனிப்போர்வையாக குசேலனும், குபேரனும் சொல்லிக்கொள்ளாமலே நினைவில் வந்து செல்வர். குபேரனைக் காட்டிலும் குசேலன் பரம செல்வந்தன். சக்ரவர்த்திகளுக்கு நிகர் செல்வம் வந்தபோதும் வேண்டாம் என்று தவிர்த்தவன்.

தமிழ்த் தாத்தா, உ.வே.சா அவர்களின் கூற்றுப்படி மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதியது குசேல உபாக்கியானம் என்கின்ற குசேல பாக்கியானம். தனது சீடன் வல்லூர் தேவராசபிள்ளை அமர்ந்து எழுத மகாவித்துவான் அவர்கள் சொன்ன கதை குசேலர் கதை. கிட்டத்தட்ட 200 வருடங்கள் பழமையானது. குசேலரின் வாழ்க்கையே நமக்கு தெளிவான எடுத்துக் காட்டாக விளங்கி, அழியும் செல்வத்திற்கு அடிமையாதல் கூடாது. செல்வத்தின் மீதான அடிமைத்தன்மையும், மோகமும் தீர்ந்திட குசேலர் அன்பைப் புரிந்தாலே போதும். நட்பிற்கும், நண்பனே பகவானாக இருந்தும் பேராசை கொள்ளா பேரன்பினை இந்த காப்பியம் விளக்குகிறது.

பெருந்தவத்தினன்: அகம், புறம் என்னும் வேறுபாடுயில்லாது உள்ளும் வெளியும் என்ற நிலை கடந்து, மூவுலகும் ஒன்றே என்று வேதங்கள் கூறுவதற்கு இணங்க வாழ்கின்றவர்கள் தவமுனிவர்கள். அவர்களைப் போன்றே பொறாமை என்கின்ற ஔவியத்தை விட்டு ஒழித்து வீடு, காடு என்ற பகுப்பு இல்லாது வாழ்ந்த பெருந்தவமுனி குசேலர்.

“ஔவியம் அவித்த பெருந்தவத்தினன்” என்பது குசேலருக்கு அடைமொழி. பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் இறைவனைப் பற்றி நினைப்பதும், பூசலார் போன்று மனத்தினுள் நாராயணனை இருத்தி திருக்கோவில் எழுப்புவதுமாக வாழ்ந்த குசேலருக்கு வேதங்களே மூச்சு, திருமாலுக்கு கைங்கரியம் செய்வதே உணவு, திருமாலின் நினைவே வாழ்க்கை ஆகும்.

தன் உடல் மேல் இருக்கும் துணிக்கும் ஏழ்மையையே அடையாளம் காட்டினார். எவ்வாறு எனில் பற்பல கந்தைத் துணிகளை மெல்லிய சரட்டினால் தைத்து அதுவே நல்லாடையாக போட்டுக் கொண்டார். ஞானிகள் புறத்தோற்றத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு குசேலரே.

“மெத்திய பற்பல் கிழிதுண் இயைத்து
மெல்லிழைச் சரட்டினாற் பொல்லம்
பொத்திய சிதரே நல்லுடையாகப்
புனைந்திட்டவர்”
கந்தைத் துணிகளையே உடுத்தியதால் குசேலர் என்றே அறியப்பட்டார்.
நாம் உடுத்தும் ஆடம்பர உடைகளைப் பற்றி சிந்திக்கலாம் இனியவர்களே!!

மணவாழ்க்கை மனம் வருத்தும் வாழ்வானதுபெற்றவர்கள், தங்கள் கடமை எனக் கருதி உண்மை ஒன்றே பேசுகின்ற இயல்புடைய சுசீலை என்ற அன்புத் திருமகளைத் திருமணம் செய்து வைத்தனர். நட்சத்திரங்களின் சுழற்சிக்கு ஒன்றாக 27 குழந்தைகள் பிறந்தன. பகவானையே நினைத்தவர்க்கு இவ்வளவு குழந்தைகளா என்று அசட்டுத்தனமாக நினைப்பவர் சிலருக்கு ஒன்று சொல்ல விழைகிறேன்.

இறை பிரேமையில் இருப்பவருக்குச் சிற்றின்பங்கள் தேவைப்படாது. வினை வழியே இட்டுச் சென்று பின், தன்னுடன் இணைத்துக் கொள்ளவே முடிவு பிறரிடம் யாசகம் கேட்காத மனோபாவனை கொண்டவர்க்கும் வீனாபிட் பொழுதும் மனம் பிரியா பிரியத்துடன் இறைக்காதலில் இருப்பவர்களும் செல்வமும், உணவும் வரும். வழிதான் என்ன? எறும்பு எடுத்துச் செல்லக் கூட தானியம் இல்லா தரித்திரர் குசேலர் என்றே சொல்லலாம்.

நெல் மணிகளை வாயில் தேடாமல், காடுகளில் தேடுவார் குசேலன். ஏனெனில் வயல் வெளிகளில் சிதறிக்கிடக்கும் நெல்மணிகளை பறவைகள் வந்து கொத்தி உண்ணப்படும் என விட்டுச் சென்று காடுகளில் முளைத்துள்ள ‘நீவாரம்’ என்னும் புல்லின் தானியத்தைக் கொண்டு வந்து மனைவியிடம் தருவார். அந்த கற்புக்கரசியோ, அந்த தானியங்களில் நல்லது பொறுக்கி, அல்லது அகற்றி, மிக நல்லவைகளைக் குத்திப் புடைத்து ஒரு பாகம் அதிதிகளுக்கும், ஒரு பாகம் பறவைகளுக்கும் இட்டு மீந்ததை சமைத்துக் கஞ்சியாக்கி குழந்தைகளுக்குத் தருவாள். கணவனும் மனைவியும் பெரும்பாலும் பட்டினி. கிடைத்த கஞ்சியே குழந்தைகளுக்குப் போதாமல் ஒன்றின் மேல் ஒன்று விழுந்து எனக்கு எனக்கு என கைநீட்டும் அவலத்தைச் சகித்துக் கொள்ளுதல் எத்தகைய கொடுமை என்பதை இப்பாடல் தெளிவாகச் சொல்கிறது.

“ஒரு மகவு களித்திடும்போது ஒரு மகவுகை நீட்டும் உந்திமேல் வீழ்ந்து
இரு மகவும் கை நீட்டும் மும்பகவும் கை நீட்டும் என செய்வாளால்
பொருமியொரு மகவு அழுங்கண் பிசைந்தழும்
மற்றொரு மகவு புரண்டு வீராப்
பெருநிலத்திற் கிடந்தழும் மற்றொரு மகவு
எங்ஙனம் சகிப்பாள்? பெரிதும் பாவம்”

கணவனின் பக்திக்குத் துணைநிற்க சுசீலையைத் தவிர வேறு எவர் பொருந்தக்கூடும்?! இங்கு பக்தியில் சிறந்தவள் சுசீலையைத் தவிர வேறு யார் இருக்க இயலும்?
வளநிதி வேண்டும்வயிற்றுப்பாட்டுக்குகுழந்தைகளைப் பெற்றவர்களே, குழந்தைகளுக்கு வளமான வாழ்க்கை தர வேண்டும். அது தவறுவார்களே ஆயின், தங்கள் கடமையைச் செய்யத் தவறியவர் ஆவர். விதையாதவனுக்கு விளைச்சல் இல்லை. அது போன்றே, முயலாதவர்க்குச் செல்வமும் இல்லை. ஆகவே செல்வம் தேவை வாழ்க்கைக்கு தாங்கள் சாத்தீபினி முனிவரிடம் வேதம் கற்கும்போது கண்ணனும் உங்களுடன் பயின்றதைச் சொல்லியிருக்கிறீர்கள்.

துவாரகையின் மன்னனாக இருக்கும் கண்ணபிரானிடம் உதவி கேட்கச் சொல்கிறாள். சுசீலையும் இந்த கண்ணபிரானிடம் உதவி கேட்கச் சொல்கிறாள். சுசீலையின் இந்த விண்ணப்பத்தை முற்றிலும் மறுக்கிறார் குசேலர். குழந்தைகளின் முகங்களைப் பார்த்தாவது பரிதாபப்படுங்கள் என்று மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்கிறாள் சுசீலை. பெற்ற தாயின் வருத்தம் அறியாமல் குசேலரின் மறுமொழி அமைந்தது. “செல்வம் எவ்வளவு பெற்றிருப்பினும் யமன் செல்வந்தரையும் கொண்டு செல்வான்.

பறவைகளும், மற்றவைகளும் நிலையான வைப்பு சேர்க்கவில்லை (Fixed Deposit). பாற்கடலில் வாழ்கின்ற மீன் பாலைப் பருகாது. பாசியை உண்பது போன்று திருப்பாற்கடலில் சயனத்திருக்கும் பரந்தாமனையே நினைக்கும் நான் செல்வத்தை விரும்பும் தன்மை பெற்றவனானால் அந்த மீனுக்கும் எனக்கும் வேறுபாடு இல்லை. எனவே செல்வம் தேவையில்லை. சுசீலையின் கனத்த வேதனையால் எழுந்த கெஞ்சலுக்குப் பின் சம்மதித்து ‘கண்ணனுக்குத் தர கையுறை ஏதாகினும் வேண்டுமே’ என்கிறார்.

இந்த நிகழ்ச்சி மூன்று விஷயங்களை நமக்குச் சொல்கிறது. யாசகம் பெற்றாகிலும் பெற்ற குழந்தைகளின் பசியாற்றுதல் தந்தையின் கடன். குழந்தைகளின் பசி போக்கும் வழியைச் சுட்டுபவள் தாய். அதுவே அவளது தர்மம், நண்பனே ஆயினும் வெறுங்கையுடன் சென்று பார்த்தல் கூடாது. ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டையுடனாவது செல்வது தர்மநெறி.

அமிர்தத்தை ஏத்த அவல்பொரி

குசேலரின் அவல்பொரி சக்தி வாய்ந்தது ஆகும். ‘அவல் பொரி ஈந்தேனோ குசேலரைப் போல்’ என்று திருக்கோளூர் பெண்பிள்ளை ராமானுஜரிடம் வியந்த பொரியல்லவா? அந்த அற்புதத்திற்குக் காரணம் சுசீலையே! கணவன் கண்ணனைக் காணச் செல்கின்றேன் என்ற வுடன் பலன் எதிர்பார்த்து ஏதோ ஒரு கையுறை (பரிசு) தர வேண்டும் எனும் சுய நலவாதியாக இல்லாமல் பேரன்பு பொங்க பெரும் பக்தியுடன் தயாரித்தது ஆகும்.

கணவன் தந்த நீவாரம் புல்லின் தானியங்களின் நெல்மணிகளைச் சேர்த்தாள். உபவாசம் இருந்தாள். தனக்கான பங்கை கண்ணனுக்கு எனச் சேர்த்தாள். தூய்மையான தன் எண்ணங்களால் ஒருமித்து செய்த அந்த அவல் பொரியை தன் கணவனின் கிழிசல் இல்லாத கந்தைத் துணியின் ஒரு பக்கத்தில் முடித்துப்போட்டு கட்டிக் கொடுத்தாளாம். நடக்கின்றதெல்லாம் நவரச காட்டும் கண்ணனுக்குத் தெரியாமலா இருக்கும்? சுசீலைதான் ஒப்பற்ற விரதத்தினாலே அவல்பொரி கண்ணன் கைப்படும் முன்பே கண்பட்டு அமிர்தமானது. அந்த அமிர்தமே செல்வத்தைத் தரப் போகிறது எனச் சொல்ல வேண்டுமா?

இல்லாளின் அகத்தில் அன்பு இருக்க வேறு என்ன வேண்டும் குசேலருக்கு!நட்பே நற்கதியானதுகாடு மேடுகள், மலைகள் என வெற்றுக் கால்கள் முள்தைக்க மிக்க இன்னல்களுக்கிடையில் துவாரகை வந்தடைந்த குசேலரைக் கண்டு எள்ளி நகையாடினர் பலர். கந்தலாடை தரித்திரன் வந்த காரணம் அறிந்து இன்னமும் கேலிகள் அதிகமாயின.

ஒரே ஒரு வீரனுக்கு மட்டும் குசேலனின் தவம் பொதித்த முகம் புரிந்து கண்ணபிரானிடம் சென்று சொன்னான். மன்னர்கள் எல்லாம் வரிசையாகக் காத்துக் கிடக்க குசேலர் பெயரைக் கேட்டவுடன், மகிழ்ந்ததை மகாவித்துவான் அவர்களின் பாடல் வழியே சொல்லிவிடலாம். விளக்கம் தேவைப் படாது. ஊன்றிப் படித்தாலே போதும் உள்புகும் உணர்ச்சி வரிகள்.

“கண்ணன் உவகை விம்ம எழின் முகமலர்ச்சி காட்ட
கருணை பொழி தர வாய் மலர்ந்தருளினன்”
“தாயது வருகை கேட்ட தனி இளங்குழவி போன்று
போய் அழைத்திடுமின் இன்னே” என்று பல முறை சொன்னான்.

அரண்மனைக்குள் நுழைந்த குசேலரோ, பேச ஒன்றும் தோன்றாது கண்களில் நீர்வழிய அனுமனின் பரிவன்பு ஒத்து நின்றார். கண்ணனோ எதிர் கொண்டழைத்தான். நெற்றித் திலகம் மண்ணில் பட உடல் அங்கம் பூமியில் தொட குசேலரின் திருவடி வணங்கி நிரம்புறத் தழுவிக்கொண்ட காட்சி நட்பின் உயர் கோபுரத்தைக் காட்டி விடுகிறது. நட்பிற்கான இலக்கணத்தை கீதை தந்த கண்ணனைத் தவிர வேறு எவரால் காட்ட இயலும்.

“நல்லார் சொல் விரும்புவதும் நல்லாரைக் காண்பதுவும்
நல்லார்க்கு ஒன்று உதவுவதும் நல்லாரைப் புகழ்வதுவும்
நல்லார் ஞவின்று என்று உரைப்ப நவிற்றிய இவ்வளவும் அடங்க
நல்லார் நட்பென்றும் உறல் நன்றனறோ நான் மறையோய்”

இது கண்ணபிரான் தன் நண்பன் குசேலருக்குக் கூறுவதாக அமைகிறது. நல்லவர்களின் சொல், நல்லவர்களைக் காணுதல், உதவுதல், புகழுதல் என பலவற்றை நல்லறிஞர்கள் நல்லது என்று சொல்கின்றனர். அதோடு மட்டுமல்லாது நல்லவர்களின் நட்பே முக்கியம் என்பது குசேல கண்ணன் நட்பு காட்டுகிறது.

விருந்தோம்பல் முடிந்த பின்பு எனக்கென்ன கொண்டு வந்தாய் என வெண்ணெய் உண்ட கண்ணன் கேட்க, ஒன்றும் தோன்றாது குசேலர் இருந்தார். ஆனால், அனைத்தும் மறிந்த கண்ணனோ கந்தலாடையில் முடித்து வைத்திருந்த பல நாள் கட்டிவைத்த முடை நாற்றம் வீசும் அவலின் ஒரு பிடியை அன்பினால் எடுத்து வாயில் இட்டுக்கொண்டான்.

அதன் பின் மற்றுமொரு பிடி வாயில் இடுமுன், ருக்மணி தடுத்தாண்ட கதை நமக்குத் தெரியும். திருமகளின் அன்பையும், திருமகளையும் தன்னுள்ளே வைத்துள்ள கண்ணபிரான் வாழ்த்தினாலே செல்வம் பொங்க நைவேத்தியம் செய்தாலோ பல் மடங்கு செல்வம் வரும். முழுமையாக உண்ட திருமகளின் முழுக் கருணையும் இட்டிவிடும்.

அதன் பின் துவாரகை வாழ் மக்கள் என் செய்வர்? குசேலர் அல்லவா திருமகள் அருளால் சங்க நிதி, பதுமநிதி குபேர நிதி என அனைத்தும் பெற்று விடுவாரே. எனவேதான் ருக்குமணி தடுத்தாள் சம்பவம் நடந்தது. ஒரு பிடி அவலிலே குசேலர் பெற்றது செல்வமா? நற்கதியா? இப்படி ஒரு கேள்வி எழுமாயின் அதற்கான பதில் நற்கதியே என்பதுதான்.

தாமரை இலை தண்ணீராக குசேலர்

குசேலர் கண்ணனைப் பார்த்த பின்பு தனது ஊர் திரும்பியதும், ஊரே செல்வச் செழிப்பு பெற்றதும்; தனது இல்லம் முழுவதும் அரண்மனையாக தோற்றம் பெற்று செல்வம் பொங்கி வழிந்ததும், தன் குழந்தைகள் செல்வச் செழிப்பின் அடையாளமாக மாறியிருப்பதும், சுசீலை மகாராணி போன்று அலங்காரத்துடன் காணப்பட்டதைக் கண்டு கண்கலங்கினார் குசேலர். ஒன்றும் கேட்காமல்தானே வந்தேன்.

கண்ணன் ஏன் இந்த மாயவேலை செய்தான். உடல் அழுக்குப் போக வேண்டும் என நினைத்து நீருக்குப் பதிலாக சேற்றை அள்ளி பூசியது போன்று மாறிவிட்டதே. நான் என்ன செய்வேன்? உன்னைப் பார்த்த நிறைவு மட்டும்தானே நான் விரும்பியது இது தகுமா? அழியும் செல்வத்தைத் தந்து என்னை துன்பத்தில் தள்ளி விட்டாயே! என மனம் வெதும்பி தனிமையில் இருக்கிறார் குசேலர்.

மீண்டும் தன் கந்தல் ஆடையே வேண்டும். தனது வீடு குடிசை ஆக வேண்டும் என்றும் விரும்பி கண்ணனை நினைத்து அழுவதும் விசும்புவதும் ஆக இருக்க, துவாரகை கண்ணன் இமைக்கும் பொழுதில் வந்து முன் நின்றான். அமிர்தம் உண்ட அளப்பரிய மகிழ்ச்சியில் குசேலர் “செல்வம் வேண்டாம்! எனக்குப் பழைய வாழ்க்கை போதும் எனக் கூறுகிறார்.

“நண்பரே! இது உனக்கு அல்ல. உன்னையே நம்பி இருக்கும் உன் மனைவிக்கும், குழந்தைகளுக்கும்தான். தாமரை இலையின் மேல் இருக்கும் ஒட்டா நீராக நீயும் செல்வத்தில் கிடைத்த வாழ்க்கையில் இருந்திடு. நீ என்னை விரும்புபவன்! பொய்ப்பொருள் விரும்பாதவர். பிறர்க்கு தான தருமம் செய்து வைகுந்தம் வந்து சேர்” ஆன்மிகம் காட்டும் வழியும் இதுதானே.

“மெய்ப் பொருள் உணர்ந்த தூயோர் மேவிளங்கும் குறைவரேனும் பொய்ப் பொருள் பற்றுவரோ?”பகவான் கண்ணபிரான் கூறிய இவையே நமது வாழ்க்கையின் பிடிப்பு ஆகும். ஒவ்வொருவருக்குள்ளும் குசேலரும் உண்டு. கண்ணனும் உண்டு. செல்வம் வந்தாலும் பற்றில்லாது வாழ்ந்திடுவோம்! குசேலராக நட்பின் பரிமாணத்தைக் காட்டுவதற்கு முயற்சிப்போம்!

(தொடரும்)

மகேஸ்வரி சற்குரு