காற்றைப் பிடிக்கும் கணக்கு!



இறைச்சுவை இனிக்கும் இலக்கியத்தேன் -81

திருமணவிழா, பிறந்த நாள் கொண்டாட்டம், கிரகப் பிரவேசம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், விழாவிற்கு வந்திருக்கும் வயதான முதியவர்களின் காலில் விழுந்து வாழ்த்துக்கள் பெறுவதையும், அட்சதை மலர்கள் தந்து ஆசிர்வாதம் வாங்குவதையும் தான் மேலான ஒரு சடங்காகக் குறிப்பிடுகின்றது நம் கலாசார மரபு.

‘நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடியில்லாமல் வளர்க! என்றும்
‘மன்னான முகம் பெறுவர் அன்னம் ஏறப் பெறுவர்
வாணி தழுவப் பெறுவரால்
மகராலயம் பெறுவர்! ஆயிரம் பிறை தொழுவர்!
சீர் பெறுவர்! பேர்பெறுவர்

என்றும் திருவடி தொழும் தம்பதியரை மூத்த குடிமக்கள் வாழ்த்தி மகிழ்கின்றனர். சகல வசதிகளும் பெற்று சந்தோஷமாக சாபிஷேகம், நூறாண்டு விழா காண வேண்டும் என்பது தான் பலரின் உள்ளக் கிடக்கையாக உள்ளது. ‘நூற்றிருபது ஆண்டுகள் ஒருவன் வாழ்வதுதான் சிறப்பான வாழ்க்கை! என்கின்ற நம் சாத்திரங்கள். ‘கலையாத கல்வியும் குறையாத வயதும்’ என்னும் பதிகத்தில் அபிராமிபட்டர் நூற்றிருபது ஆண்டு வாழும் நிறை வாழ்வில் பங்கம் எற்பட்டுவிட முடியாதபடி அம்பிகையின் அருள் காக்கும் என உத்தரவாதம் வழங்குகின்றார். அந்த பேற்றினையே ‘குறையாத வயது’ என்று குறிப்பிடுகின்றார்.

குறைந்த வயதில் மறைந்துவிட எவர் விரும்புவார்?
கனக்கும் செல்வம்! நூறுவயது!
இவையும் தர நீ தடவாயே!
விசையுறு பந்தினைப் போல் உள்ளம்!

வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்!
என்று பாடினார் பாரதியார்! ஆனால், நம்மவர்களின் தவக்குறைவு நாற்பது வயதிற்குள்ளே அவரை நாடு இழந்து விட்டது.
மனித வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மரணம் எப்போது வரும் என்பதை எவராலும் முன் கூட்டி அறிய முடியாது.
தூங்கையிலே வாங்குகிற மூச்சு!- கொங்சம்
சுழிமாறிப் போனாலும் போச்சு!
வசிட்ட மகாமுனிவரிடம் ஒருவர் கீழ்க்கண்ட  வாறு விண்ணப்பித்தார்.

முனி சிரேஷ்டரே!
நான் முகனாகிய பிரமதேவருக்கு தங்களிடம் பிரியமும், மதிப்பும் அதிகம் அல்லவா!

எனக்கு ஒரு தீராத ஆசை உள்ளது. அதை தயைகூர்ந்து தாங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும். ‘பிறக்கும் போதே மரணம் வருவருக்கு என்று’ என முடிவு செய்யப்பட்டு விட்டாலும் யாராலும் அந்த நாள் என்று அமைந்துள்ளது என அறிய முடியவில்லை.

என் மரணத்தேதியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்காக இந்த உதவியைச் செய்யுங்களேன். வந்தவரின் புதுமையான கோரிக்கையை மறுக்க மனமில்லாமல், ‘ஆகட்டும்! பிரம்ம தேவரிடம் சென்று பேசிப் பார்க்கிறேன்’ என்றார். சத்தியலோகம் சென்று பிரம்மனைச் சந்தித்தார்.

‘வசிஷ்டமுனிவரே! உங்கள் பாதார விந்தங்களில் பணிந்து தொழுகின்றேன். ஒருவரின் தலை எழுத்தை எழுதிய பின்பு நானே கூட மீண்டும் அந்த ஏட்டைப் பார்ப்பதில்லை. படிப்பதில்லை. விதி ஏடுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்தைக் காட்டுகிறேன். தாங்களே வேண்டும் ஏட்டை கண்டெடுத்து ரகசியத்தை அறிந்து கொள்ளுங்கள்.

 அதற்கான அனுமதியை உங்களுக்கு அளிக்கின்றேன்’ என்றார்.ஒரு சேர பலரின் விதி ஏடுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்தை, வசிஷ்டர் அடைந்து தன்னிடம் வேண்டுகோள் விடுத்தவரின் மரண ரகசியத்தை அறிய, படாத பாடுபட்டார். அவ்வளவு எளிதில் பிரம்மன் எழுதிய ரகசியத்தை அறிந்து கொண்டு விடமுடியுமா என்ன? ஏடுகளை சலித்து சலித்து பார்த்து சலித்து போன முனிவருக்கு கடைசியாகக் கண்ணில்பட்டது அவர் தேடிய ஏடு. ஆனால், அதில் எழுதியிருந்த வாசகம் அவரைத் திடுக்கிட வைத்தது. ‘இந்த வித ஏட்டை எப்போது வசிட்டமகாமுனிவர் படிக்கின்றாரோ அப்போது இதற்கு உரிய நபரின் ஆவி பிரிந்து விடும்’.

வீரத்துறவி விவேகானந்தர் சொல்கின்றார்:
‘மனிதர்களே!  மரணத்தைப் பற்றி நினைத்துக் கலங்காதீர்கள்!
ஏனென்றால் நீங்கள் பூவுலகில் வாழும் வரை உங்களுக்கு மரணம் வரப்போவதில்லை.
உங்களுக்கு மரணம் சம்பவிக்கும் பொழுது நீங்கள் இருக்கப் போவதில்லை.
‘‘அச்சத்தை, வேட்கைதானை அழித்து விட்டால்
அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்!

என்று மகாகவி பாரதியார் பாடுகின்றார்.
இறப்பு ஒருவருக்கு உறுதி என்றாலும்
வழக்கப்பட்ட உயிர் மூச்சை ஒழுங்கான முறையில் உபயோகித்து வாழ் நாளை நீட்டித்துக் கொள்ள வழியிருக்கிறது
என்கின்றார்கள் திருமூலரும், திருவள்ளுவரும்!
அது என்ன தெரியுமா?
அதுதான் ‘காற்றைப் பிடிக்கும் கணக்கு’.

நம் அனைவர் வீட்டிலும் தினசரி சமையல் நடக்கிறது. எரிவாயு உருளை (Gas Cylinders) மூலம் சமைக்கும் பணியைச் செய்கின்றோம். ஒரே அளவு சிலிண்டர்தான் எல்லா வீட்டிற்கும் வழங்கப்படுகிறது. ஆனால், சிலர் வீட்டில் அதன் மூலம் 20 நாட்கள் சமைக்க முடிகின்றது. சிலர் வீட்டில் 30 நாட்கள் வருகின்றது. இன்னும் சிலருக்கோ பத்து நாட்களிலேயே முழு சிலிண்டரும் காலியாகி விடுகின்றது. காரணம் பலருக்கு சமையல் செய்து எரிவாயு விரைவில் தீர்ந்து விட்டது. இதே போலத்தான் வழங்கப்பட்டுள்ள உயிர்க் காற்றை சீரான முறையில் செலவு செய்தால் நெடுநாட்கள் வாழ் முடியும்.

அதிக கோபத்திலும், சிற்றின்ப போகத்திலும், தேவையற்ற படபடப்புகளிலும், தவறான தீய பழக்கங்களிலும் மூச்சுக்காற்றை முறையற்ற வழியில் செலவழித்தால் குறைந்த ஆயுளிலேயே மறைந்து விட நேர்கிறது. காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிந்தால் காலன் வரும் தேதியைத் தள்ளிப் போடலாம் என்கின்றது திருமந்திரமும், திருக்குறளும்!
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்காற்றைப் பிடிக்கும் தனக்கறிவார் இல்லை!

காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவார்க்கு
கூற்றை உதைக்கும் குறி அதுவாமே!
(திரு மூலவரின் திருமந்திரம்)
கூற்றங் குதித்தலும் கை கூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு!
(வள்ளுவரின் குறள்)

விடியற்காலையில் விழித்தெழுந்து மூலப் பரம்பொருளை தியானிப்பது, ஆக்க பூர்வமான நேர்மறைச் சிந்தனைகளில் திளைப்பதும், அளவான உடற் பயிற்சிகளை மேற்கொள்வதும், அடுத்தவர்களின் நலம் காப்பதில் அக்கறையும், ஏற்றுக் கொண்ட செயல்களில் இதய பூர்வமான ஈடுபாடும், உழைப்புமே நம்மை வாழ்வாங்கு வாழவைக்கும். உயிர்க் காற்றை ஒழுங்குபடுத்தும்!
காயமே இது பொய்யடா! - வெறும்
காற்றடைத்த பையடா!

- என்ற வரிகள் நிலையாமையை உணர்த்தும் நிஜம் என்றாலும் வாழும் வரை இவ்வுடம்பை நாம் போற்றி வளர்க்க வேண்டியது அவசியம் அல்லவா!
எனவே, இன்றைய கவிக்குரல் கீழ்க் கண்டவாறு எழுகிறது!
காயமே இது மெய்யடா! - இதில்கண்ணும் கருத்தும் வையடா!

(தொடரும்)

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்