தெளிவு பெறுஓம்



?பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன?
-  சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

விடியலுக்கு முன்பான அதிகாலை நேரத்தினை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வதை நாம் வழக்கத்தில் கொண்டிருக்கிறோம். சூரிய உதயத்திற்கு முன் வருகின்ற மூன்றே முக்கால் நாழிகை அதாவது அதிகாலை நான்கரை மணி முதல் ஆறு மணி வரையிலான ஒன்றரை மணி நேரத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவதில் எந்த விதமான தோஷமும் அண்டாது, இதுவே பிரம்ம முகூர்த்தம் என்று செவிவழியாக ஒரு தகவல் பரப்பப்பட்டுள்ளது. பிரம்மா தன் படைப்புத்தொழிலைச் செய்யும் நேரமிது என்பதால் இந்த நேரத்தில் எந்தவித குற்றமும் காண இயலாது, அதனாலேயே இது பிரம்ம முகூர்த்தம் என்று பெயர் பெற்றது என்று சொல்வோரும் உண்டு. ஆனால், இந்த செய்திகளுக்கு ஜோதிட அறிவியலில் எந்தவிதமான ஆதாரமும் கிடையாது. வாழ்வினில் தாங்கள் கண்ட அனுபவத்தினை வைத்து நம் முன்னோர்கள் அவ்வாறு சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம்.

அதிகாலையில், ஊரில் இருக்கும் மாடுகள் அனைத்தும் மேய்ச்சலுக்குச் செல்லும். அவ்வாறு மேய்ச்சலுக்காக நூற்றுக்கணக்கான மாடுகள் செல்லும்போது அவைகளின் கால் குளம்பு பட்டு ஊரெங்கும் புழுதி பறக்கும். இந்த நேரத்தினை ‘கோதூளி லக்னம்’ என்று ஜோதிடர்கள் குறிப்பிடுவார்கள். ஊரெங்கும் பசுக்களின் கால் மண்ணில் பட்டு புழுதி மண்டலமாகக் காட்சியளிக்கும்போது நவகிரஹங்களின் கதிர்வீச்சு அந்தபகுதியினைத் தாக்காது. நாம் தெய்வமாக வணங்கும் பசுவின் கால் பட்ட தூசியில் இருந்து வெளிப்படும் புகை தீயக்கோள்களின் கதிர்வீச்சிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.

 எனவே, இந்த கோதூளி லக்னத்தின் போது, அதாவது பசுமாடு மேய்ச்சலுக்கு செல்லும் நேரத்தில் செய்யும் சுபநிகழ்ச்சிகளில் எந்த விதமான குறையும் உண்டாகாது என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்தது. நூற்றுக்கணக்கான பசுமாடுகள் மேய்ச்சலுக்குச் செல்வதெல்லாம் தற்காலத்தில், கிராமப்புறத்தில் கூட சாத்தியமில்லாதபோது கோதூளி லக்னத்தினை கணக்கிட முடிவதில்லை. ஆக, தற்போது பிரம்ம முகூர்த்தம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் அதிகாலைப் பொழுது கூட குறையுள்ளதாக அமைய வாய்ப்பு உள்ளது. சுபநிகழ்ச்சிகளுக்கான நேரத்தினைக் கணக்கிடும்போது பிரம்ம முகூர்த்தம் சிறப்பான பலனைத் தரும் என்று பொதுவாக கணக்கில் கொள்ளாமல், கிரஹங்களின் சஞ்சாரத்தைக் கொண்டு லக்னத்தைக் கணக்கிட்டு சுபநிகழ்ச்சிகளைத் துவக்குவதே சாலச்சிறந்தது.

?பரிகாரத் தலங்களுக்குச் சென்று பரிகாரம் செய்ய இயலாது போய்விட்டால் அதற்கான பரிகாரம் என்ன?
- அயன்புரம் த.சத்தியநாராயணன்.

முதலில் பரிகாரம் என்றால் என்ன என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆன்மிக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் இந்தக் கேள்விக்கான பதிலைக் காண்போம். இன்றைய சூழலில் அவரவர் ஜாதகங்கள் ஆராயப்பட்டு, நவகிரகங்களின் சஞ்சார நிலையை வைத்துத்தான் பெரும்பாலான பரிகாரங்கள் சொல்லப்படுகின்றன. நவகிரகங்களுக்கு பரிகாரம் செய்வதற்காக, அந்தந்த கிரஹங்களுக்குரிய திருத்தலங்களை நாடி சென்று கொண்டிருக்கிறோம்.

உண்மையில், அக்காலத்தில் ஆலயங்களை எழுப்பும்போது நவகிரஹங்களுக்கு என உருவ வழிபாடோ, சந்நதிகளோ அமைக்கப்படவில்லை. கடந்த 200 ஆண்டு களாகத்தான் சிவாலயங்களில் நவகிரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்துகொண்டிருக்கிறது. இறைவன் இட்ட பணிகளைச் செய்யும் பணியாட்களே நவகிரஹங்கள், பலன்களை மாற்றும் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

உதாரணத்திற்குச் சொல்லவேண்டும் என்றால், நியாய அநியாயங்களை அறிந்து தீர்ப்பு வழங்கும் நீதிபதி எம்பெருமான், அதை நிறைவேற்றும் அதிகாரிகள் மற்றும் காவலர்களே நவகிரஹங்கள். ஒருவன் சிறைச்சாலைக்கு செல்ல வேண்டும் என்பது தீர்ப்பு ஆயின் செவ்வாய், சனி, ராகு முதலான கிரஹங்கள் அப்பணியைச் செய்பவர்கள். அவனது ஜாதகத்தில் இந்தக் கோள்கள் கெடுபலனைத் தரக்கூடிய இடங்களில் வலிமையாக அமர்ந்திருந்தால் அம்மனிதனை அடித்து, கைகளில் விலங்கிட்டு தெருவில் இழுத்துச் செல்வார்கள். அவமானப்பட வேண்டிய நிலை உண்டாகும்.

எந்தக் கோளின் தாக்கம் அதிகமாக உள்ளதோ அதற்குரிய பரிகாரத்தைச் செய்வதன் மூலம் அந்நிலை உண்டாகாது, சப்தமில்லாமல் யாருக்கும் தெரியாமல் வாகனத்தில் அழைத்துச்சென்று ‘ஏ’ கிளாஸ் சிறைச்சாலையில் அடைப்பார்கள் அவ்வளவுதான். ஆகமொத்தம் சிறைக்குச் செல்வது செல்வதுதான். நீதிபதியின் ஆணையை மாற்ற அவர்களால் இயலாது. அதாவது, விதிப்பயனை மாற்ற இயலாது. ஆனால், தீர்ப்பினை மாற்றும் அதிகாரம் நீதிபதியாகிய எம்பெருமானுக்கு மட்டுமே உண்டு.

நமது தவறினை உணர்ந்து மானசீகமாக இறைவனைச் சரணடைபவர்களே நற்பலன்களை அடையமுடியும். ஜனன ஜாதகத்தில் பூர்வ புண்ய ஸ்தானம் வலுவாக இருந்துவிட்டால் அம்மனிதன் செய்யும் பரிகாரங்கள் நிச்சயம் பலிக்கும். கெடுபலன்கள் மறைந்து நிச்சயம் நற்பலன்கள் கிடைக்கும். மாறாக பூர்வ புண்ய ஸ்தானம் வலுவற்று இருந்தால் அவன் அனுபவிக்க வேண்டியதை நிச்சயமாக அனுபவித்தே ஆக வேண்டும்.

 இறைவன் நமக்கு அளித்த வரப்பிரசாதமான இந்த மானுட ஜென்மத்தில் ஒருவருக்கொருவர் துரோகம் இழைக்காமல், தன்னலம் கருதாது வாழ்ந்தாலே போதும். பரிகாரம் என்பது ஒரு குறிப்பிட்ட தலத்திற்குச் சென்றுதான் செய்ய வேண்டும் என்ற எந்த ஒரு விதியும் ஜோதிடத்தில் கிடையாது. உதாரணமாக ராகு-கேது பரிகாரத்திற்கு காளஹஸ்திக்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. உள்ளூரில் இருக்கின்ற அரசமரத்தடி நாகருக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கினாலும் பலன் பெற முடியும்.

இது எல்லாவற்றையும் விட நம்மால் இயன்றவரை ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்வோம். அதுவே மிகச்சிறந்த பரிகாரம்தான். ஒரு ஜீவனுக்கு ஒருவேளை வயிறார உணவளித்தாலே அவன் அறியாமல் செய்த பாபம் அகலுகிறது என்கிறது தர்மசாஸ்திரம். மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிப்போம். இல்லாதவர்களுக்கு, இருப்பவர்கள் உதவி செய்வோம். பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, படிப்பறிவு உள்ளவர்கள் பாமரனுக்கு படிக்கக் கற்றுக்கொடுக்கலாம். அதுவும் ஒருவகையில் பரிகாரமே. பரிகாரம் என்பது செய்த தவறுக்கான பிராயச்சித்தம் அல்ல. விதிப்பயனை மாற்றி அமைக்கும் வழிமுறையும் அல்ல. பரிகாரம் செய்வதால் விதிப்பயனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கிறது. மனம் பக்குவம் அடைந்தாலே பிரச்னைக்கான தீர்வு என்பது கிடைத்துவிடுகிறது.

?வேதங்களின் அங்கங்கள் ஆக சிட்சை, கல்பம், வியாகரணம், ஜோதிஷம், சந்தஸ், நிருக்தம் என ஆறினைக் கூறுகிறார்கள். அதன் பொருள் என்ன?
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

சீக்ஷா அல்லது சிட்சை என்பது வேதத்தின் உச்சரிப்பு முறைகளை விளக்குவதாகும். உச்சரிக்கும் முறையிலும் ஸ்வரத்திலும் உண்டாகும் மாற்றம், தவறான பொருளைத் தந்துவிடும். வேதத்தை உச்சரிக்கும் முறையைக் கற்றுத் தருவது சிட்சை ஆகும். வியாகரணம் என்ற வார்த்தைக்கு ‘இலக்கணம்' என்று பொருள். சந்தஸ் என்பது செய்யுள் இலக்கணத்தையும் நிருக்தம் என்பது சொல் இலக்கணத்தையும் குறிக்கும்.

‘ஜோதிஷம்' என்ற வார்த்தைக்கு ஒளி அறிவியல் என்று பொருள். இது வானசாஸ்திரம் பற்றி உரைப்பதாகும். ‘கல்பம்'என்பது செயல்முறையைப் பற்றச் சொல்வதாகும். ப்ராக்டிகல் பாடம் என்று நீங்கள் புரிந்துகொள்ளலாம். அதாவது, கிரியைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று வேதத்தில் சொல்லபட்ட பாடங்களை நடைமுறைப் படுத்த உதவுவது கல்பம் ஆகும். இந்த ஆறும் வேதத்தின் மிக முக்கியமான உறுப்புகள் ஆகும்.

?எல்லாக் கோவில்களிலும் தெய்வத் திருமேனிகள் பிரதிஷ்டை செய்வதை அஷ்டபந்தனம் என்கிறோம். ஆனால், திருவண்ணாமலை கோயிலில் மட்டும் சுவர்ணபந்தனம் என்று சொல்லப்படுவதேன்?
- மல்லிகா அன்பழகன், சென்னை-78.

மூலவர் விக்கிரகத்திற்கு அஷ்டபந்தனம் சாற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆலயங்களில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வார்கள். அஷ்டபந்தன மருந்து ஆனது 12 ஆண்டுகளில் தனது சக்தியை இழந்துவிடும் என்பதால் அதனை எடுத்துவிட்டு புதிதாக அஷ்டபந்தனம் சாற்றி கும்பாபிஷேகம் செய்வார்கள். இதற்கு ‘ஜீர்ணோத்தாரணம்' என்று பெயர். பெரிய ஆலயங்களில் வெள்ளியை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.

இதற்கு ‘ரஜதபந்தனம்' என்று பெயர். இந்த ஆலயங்களில் 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடக்கும். மிகப்பெரிய ஆலயங்களில் தங்கத்தை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ‘ஸ்வர்ணபந்தனம்' என்று பெயர்.

இந்த ஆலயங்களில் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்கும். 50 ஆண்டுகள் நிறைவடைவதை பொன்விழா ஆண்டு என்று சொல்வதையும் நாம் இங்கே நினைவில் கொள்ளலாம். திருவண்ணாமலை ஆலயமும் இந்த வகையைச் சார்ந்ததே. ஸ்வர்ணம் என்றால் தங்கம் என்று பொருள். மூலவருக்கு தங்கத்தை உருக்கி பந்தனம் செய்திருப்பதால்
ஸ்வர்ணபந்தனம் என்று சொல்கிறார்கள்.

திருக்கோவிலூர் K.B. ஹரிபிரசாத் சர்மா