ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 17 (பகவத் கீதை உரை)



கிணற்று நீரே போதும்!

ஓர் உபன்யாசகர் தமது சொற்பொழிவின் நடுவே, பார்வையாளர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்; ‘‘நான் ராமாயண உபன்யாசம் செய்கிறேன். நீங்கள் வெகு உற்சாகமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய ராமபக்தி எனக்குப் புரிகிறது. சரி, என்னிடம் மரத்தால் ஆன ராமர் சிற்பங்கள் உள்ளன. உங்களில் எத்தனை பேருக்கு வேண்டும்?’’ உடனே அனைத்துக் கைகளும் உயர்ந்தன. தனக்கு அந்த சிற்பம் கிடைத்தால் அதை பூஜையறையில் எங்கே வைப்பது, எப்படி வழிபடுவது என்றெல்லாமும் பார்வையாளர்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள்!

அவர்களுடைய சிந்தனைக்குத் தடை போடும் வகையில், சரி, என்று உபன்யாசகர் தொடர்ந்தார்; ‘‘என்னிடம் ராவணன் சிற்பங்களும் இருக்கின்றன, அது எத்தனை பேருக்கு
வேண்டும்? ஒரு கரமும் உயரவில்லை. மெல்ல சிரித்தபடி உபன்யாசகர் சொன்னார்; ‘‘ராமர் சிலை மரத்தால் ஆனது; ராவணன் சிலை வெள்ளியால் ஆனது... உடனே பார்வையாளர்களின் மனம் அலைபாய்ந்தது. அது கண்களில் ஏக்கமாக வெளிப்பட்டது.

‘‘எனக்குத் தெரியும், நீங்கள் அனைவருமே ராவணன் சிற்பத்தைத்தான் விரும்புவீர்கள். ஏனென்றால் அது வெள்ளியால் ஆனது. இது நாள் வரை நான் சொன்ன ராம பண்புகளோ, ராமன் மீது நீங்கள் கொண்டிருக்கும் பக்தியோ இப்போது அப்படியே காற்றில் பறந்துவிட்டது. ராவணன் சிலையானால்தான் என்ன, அது வெள்ளியால் ஆனதாயிற்றே என்றுதானே யோசிக்கிறீர்கள்? ஏன், அதை உங்கள் பூஜையறையில் வைத்து வழிபடவும் தயாராக இருக்கிறீர்கள், சரிதானா’’? என்று அவர் கேட்க, பார்வையாளர்கள் அனைவரும் தலைகுனிந்து கொண்டார்கள். ஆக, பலனை எதிர்பார்க்கும்போது பவித்ரம் ஒளிந்துகொண்டு விடுகிறது!

யாவானர்த்த உதபானே ஸர்வத ஸம்ப்லுதோதகே
தாவான்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜானத (2.46)
‘‘எங்கும் நீர் பரந்திருக்கிறது. அது பல நிலைகளில் நிறைந்திருக்கிறது.

இவற்றில் ஒரு கிணற்றில் இருக்கும் நீரே நம் பயன்பாட்டுக்குப் போதுமானதாக இருக்கிறது. இதேபோலதான் ஞானம் பெற்ற ஒருவன் வேதங்களிலிருந்து தனக்குத் தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக்கொள்கிறான்.’’ வேதங்கள் கூறும் மூன்று குணங்களையும் வென்றவனாக அர்ஜுனன் திகழ வேண்டும் என்று கிருஷ்ணன் எதிர்பார்க்கிறார். ஒருவனுக்கு தாகம் எடுக்கிறது.

அவன் சுற்றுமுற்றும் பார்க்கிறான். சற்றுத் தொலைவில் ஆறு ஓடுகிறது. இந்தப் பக்கம் அருவி வீழ்கிறது. இன்னும் சற்றுத் தொலைவில் ஏரி அல்லது குளம் அவன் கண்களுக்குத் தென்படுகிறது. ஏதேனும் ஒரு நீர்நிலையை அவன் தேர்ந்தெடுத்து அவன் அதிலிருந்து நீரெடுத்துத் தன் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளவேண்டும். மாறாக அவன் எல்லா நீர்நிலைத் தண்ணீரையும் அருந்த முயற்சிக்கலாமா? அப்படிச் செய்ய என்ன அவசியம் இருக்கிறது?

கையருகே கிடைக்கும் நீரை எடுத்துக் கொள்வதோடு அவனுடைய தாகம் தீர்ந்து விடுகிறது. அதாவது, தேவை பூர்த்தியாகி விடுகிறது. பிற நிலைகளில் கிடைக்கும் நீர் அவனைப் பொறுத்தவரை இப்போது அனாவசியம்தானே? கிணறு சிறு நீர்நிலையாக இருக்கலாம், ஏரி பெரிய நீர்நிலையாக இருக்கலாம். ஆனால், கிணற்றின் நீரே போதுமானதாக இருக்கும்போது, ஏரியைத் தேடி அவன் ஏன் போக வேண்டும்? ஒரு குறிப்பிட்ட அளவு நீரை மட்டும்தானே அவன் உடல் ஏற்கும்?

அதுபோல, வேதத்திலிருந்தும் தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்ளச் சொல்லி கிருஷ்ணன் அறிவுறுத்துகிறார். அதாவது வேதம், கர்மாவைச் செய்யச் சொல்கிறது. அதே சமயம், சொந்த பந்தங்களைப் பற்றியும் அது விளக்குகிறது. இவற்றில், செயலாற்றத் தக்க அறிவுரை அல்லது வழிமுறையை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு முழு மனதோடு அதில் ஈடுபடவேண்டும். இந்தச் செயலுக்குச் சற்றும் தொடர்பில்லாத, (சொந்த பந்தம் சார்ந்த) பிற உணர்வுகளுக்கு, முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்கிறார் கிருஷ்ணன்.

ஞானம் அனுபவபூர்வமானது. அதாவது, அவரவருடைய அனுபவம், அவரவருக்கான ஞானம். சாத்திரம் அப்படியல்ல; அது பொதுவானது, அனைவராலும் பின்பற்றப்படுவது. ஆதியில் உருவான சாத்திரம் அவரவர் மனோநிலைக்கேற்ப, அவரவருடைய அப்போதைய வசதிக்கேற்ப அனுசரிக்கப்படக் கூடியது. ஆகவே சாத்திரம் நிரந்தரமானதல்ல, மாறுதலுக்குரியது. ஆனால் ஞானம் அப்படியல்ல, அது தனி ஒருவரின் அனுபவமாக இருப்பதால் அது அவரைப் பொறுத்தவரை நிரந்தரமானது.

கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன
மா கர்மபலஹேதுர்பூர்மா தே சங்கோஸ்த்வகர்மணி (2.47)

‘‘அர்ஜுனா நீ வினையாற்றக் கடமைப்பட்டவன். அதே சமயம், அந்த வினையின் பயன்கள் என்ன என்று ஆராய்ந்துகொண்டிருக்காதே. பின்விளைவுகள் என்னவாக இருக்குமோ, ஏதாக இருக்குமோ என்ற கற்பனையிலும், சிந்தனையிலும் ஈடுபடாதே. அந்தப் பின்விளைவுகளை உத்தேசித்து வினையாற்றாமல் சோம்பி அமர்ந்திருக்காதே. உன் கடமையை நிறைவேற்று. அதன் பலாபலன்கள் எப்படியிருந்தாலும், பின்னால் நிகழப்போகும் அவற்றுக்காக ஆனந்தப்பட்டு அல்லது ஆதங்கப்பட்டு இப்போது உன் கடமையிலிருந்து வழுவாதே.’’

இங்கே கிருஷ்ணன், ‘பின்விளைவுகள் எப்படியிருக்குமோ என்ற உணர்வில் இப்போதே அதில் புத்தியைச் செலுத்தாதே’ என்று அர்ஜுனனுக்கு அறிவுறுத்துகிறார். அப்படி செலுத்துவதால், இப்போது முழு முனைப்புடன் செயலில் இறங்க முடியாமல் போய்விடும் என்றும் எச்சரிக்கிறார். இன்னது நிகழும் என்று எதிர்பார்த்துதான், பொதுவாக எல்லோருமே ஒரு செயலில் இறங்குவார்கள். அப்படியிருக்க எந்த எதிர்பார்த்தலுமின்றி செயல் புரிவது சாத்தியமா என்ன? பொதுவாக இன்ன வினையாற்றினால், இன்ன நடக்கும் என்று எதிர்பார்த்தல் மனித மனதைப் பொறுத்தவரை நிச்சயம் இருக்கும்.

அதிலும் பெரும்பாலும் நல்விளைவுகளாகவே இருக்கும் என்றே அந்த எதிர்பார்ப்பு அமையும். தான் மிகச் சரியாக சிந்தித்து, மிகச் சரியாக செயலில் ஈடுபட்டும், பின்விளைவுகள் தான். எதிர்பார்த்ததுபோல நன்மையாக இல்லாமல், தீமையாக அமையுமானால், உடனே மனம் குமைந்து போகிறது. அல்லது எதிர்பார்த்ததுபோலவே நன்மையாகவே நடந்தால், உடனே தலை கால் புரியாமல் துள்ள ஆரம்பித்து விடுகிறது. அதனால் இந்த இரு உணர்வுகளுக்கும் ஆளாகி உள்ளம் உடைவதோ அல்லது கர்வம் கொள்வதோ இல்லாமல் தீமையையும், நன்மையையும் ஒன்றேபோல பாவிக்கும் மனப்பக்குவம் பெறும் பயிற்சியைத்தான் கிருஷ்ணன் அளிக்கிறார்.

அதனாலேயே, ‘கர்மாவைச் செய், பலனை எதிர்பாராதே’ என்று திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார். துரதிருஷ்டவசமாக நாம் பலனை முதலில் தீர்மானித்துக் கொண்டு, பிறகே செயலில் இறங்குகிறோம்! இதில் வேடிக்கை என்னவென்றால் பலனை நாம் உருவாக்குவதில்லை. அது பின்னால் வரப்போகிறது. அதாவது, நம் செயலின் விளைவு. இடது பக்கம் திரும்பி, வலது தெருவுக்குள் நுழைந்தால் குறிப்பிட்ட இடம் வந்துவிடும் என்ற பலனை எதிர்பார்த்து நாம் செல்கிறோம். ஆனால் சாலை பழுது பார்த்தல் காரணமாக நாம் குறிப்பிட்ட தெருவுக்குள் நுழையவே முடியாதபடி ஆகிவிடுகிறது!

‘அடடா, இதை நான் எதிர்பார்க்கவில்லையே!’ என்று சொல்லி வருத்தப்பட்டுக் கொள்கிறோம். நம் திட்டமெல்லாம் சரிதான், செயலும் சரிதான், ஆனால் முடிவு நாம் எதிர்பார்த்ததுபோல இல்லையே! அல்லது நாம் போக வேண்டிய தெருவுக்குள் போக இயலாது போய்விட, சற்றே வருத்தத்துடன் திரும்பும்போது, நாம் யாரைப் பார்க்க நினைத்தோமோ அவரே நம் பின் தொடர்ந்து வந்து, ‘‘சார், நில்லுங்க.

இந்தத் தெருவை இன்னிக்குதான், ஏதோ ரிப்பேருக்காக திடீர்னு அடைச்சாங்க. நீங்க வருவீங்களேன்னு நானே இந்தத் தெருவை விட்டு வந்து உங்களுக்காகக் காத்திருக்கிறேன். உங்களுக்கு நான் ஆவன செய்து தருகிறேன், வாங்க...’’ என்று சொல்லி நம்மை அழைத்துச் சென்று நாம் மேற்கொண்ட செயலை முழுமை பெற வைக்கவும் செய்யலாம், இல்லையா?

அர்ஜுனனைப் பொறுத்தவரை இந்தப் போர்ச் செயலில் நன்மை என்பது ராஜ்ஜியத்தை அடைவது; தீமை என்பது சகோதரர்களும், ஆசார்யர்களும் மாண்டுபோவது!
புத்தியுடன் செய்யப்படும் எந்தச் செயலும் சிறப்பானதுதான். ஆனால், சிந்திக்காமல், உணர்வுகளால் மட்டுமே ஆட்கொள்ளப்பட்டு, மேற்கொள்ளப்படும் செயல்களால் துன்பம்தான் மிஞ்சும். அந்த உணர்வுகள் பலன்களை எதிர்பார்க்கச் சொல்லும். குறிப்பிட்ட ஒரு செயலின் பின்விளைவுகள் என்னென்ன நற்பலன்களை அல்லது தீயபலன்களைத் தரும் என்று எதிர்பார்ப்பதால் அந்தச் செயலுக்கே, அந்தச் செயலை ஊக்குவித்த சிந்தனைக்கே மதிப்பில்லாமல் போய்விடுகிறது.

புத்திமான் என்று சொல்லப்படுபவன் எதையுமே சிந்தித்துச் செயலாற்றக்கூடியவனாகத்தான் இருப்பான்.அவ்வாறு சிந்திக்கும்போது, செயலாற்றுவதா, வேண்டாமா என்று தீர்மானிப்பான். செயலாற்றுவது என்று முடிவு செய்துவிட்டால், தன் முயற்சிகள் அனைத்தையும் திரட்டி செயலை முடிப்பான். எடுத்துக்கொண்ட அந்தப் பணியை நிறைவேற்றும்போது இடையூறு செய்யக்கூடிய எந்தக் குறுக்கீட்டையும் அவன் அனுமதிப்பதில்லை, பொருட்படுத்துவதில்லை.

ஏனென்றால், இந்தக் குறுக்கீடுகள் அவனைத் திசை திருப்பலாம், அவனை உணர்வுபூர்வமாக மிரட்டலாம், அல்லது கவர்ந்து இழுக்கலாம். ஆனால், புத்திமான் இதற்கெல்லாம் அஞ்சுபவனே அல்ல. ஏனென்றால், அவன்தான் தன் புத்தியை வைத்து எந்தச் செயலை எப்படிச் நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறானே! அந்தச் செயலின் பலாபலன்களைப் பற்றி அவன் கவலைப்படுவதே யில்லையே! அந்தப் பணி முடிந்ததும், அது முடிந்ததாகிய, பற்றில்லாத நிறைவில், அடுத்த பணிக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டுவிடுகிறானே!

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஓர் உதாரணத்தின் மூலம் இந்தத் தத்துவத்தை விளக்குகிறார். அதாவது, படகு நதியில் செல்லலாம். அது அதன் செயல். நதியின் ஓட்டத்துக்கேற்ப அது செல்லவேண்டும். சில சமயம் அந்த ஓட்டத்தை எதிர்த்தும் செல்லவேண்டியிருக்கும். எப்படியானாலும், நதியில் பயணிப்பதாகிய செயலை அந்தப் படகு உறுதியாகச் செய்ய வேண்டும். அத்தகைய படகுக்குள் நீர் நுழையுமானால் என்ன ஆகும்? எந்த நீர் உள்ளே நுழைந்ததோ அந்த நீர் படகுக்குள் மேன்மேலும் பெருகி, அந்தப் படகையே மூழ்கடித்துவிடுமல்லவா? அதற்கு அந்தப் படகு இடம் கொடுக்கலாமா?

இந்தப் படகைப்போல இருக்கவேண்டியவன்தான் மனிதனும். அவன் இந்த உலகில் வாழலாம்; ஆனால், உலகியல் ஆசைகளை உள்ளிழுத்துக்கொண்டு வேதனைப்படக்கூடாது; மூழ்கிவிடக்கூடாது. அர்ஜுனன் மேற்கொண்டிருப்பது ஒரு தர்மப்போர். அவன், இந்தப் போரில் வென்றானானால் தர்மமே வென்றதாகத்தான் அர்த்தம்.

அதாவது, அநீதிகள் வீழ்வதாக அர்த்தம். இப்படி அநீதிகளையும், அதர்மங்களையும் அழிக்கும் இந்தப் போரில் அவன் ஆத்மார்த்தமாக ஈடுபட வேண்டும். சொந்த பலாபலன்களைப் பற்றி யோசிக்காமல், சொந்த உணர்வு பேதலிப்புகளுக்கு இடம் கொடுக்காமல், தர்மம் வெல்ல வேண்டும் என்ற ஒரே செயல் நோக்கில் அவன் கணைகளைத் தொடுக்க வேண்டும்.அதைத்தான் கிருஷ்ணர் அவனுக்கு முழுமையாக உணர்த்த விரும்புகிறார்.

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்