சமயமும் தொன்மமும்



திங்கள்

ஆதி குடிமக்கள் ஞாயிறு போலத் திங்களுக்கும் ஆற்றல் இருப்பதாக நம்பினர். திங்கள் வழிபாடு தனக்கென்று தனித்த சடங்கு முறைகளோடு நடைபெறுகிறது. வேளாண்மை சமூகத்தில் திங்கள் வழிக் காலக்கணிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. வானக் கடவுளுக்கும் ஞாயிற்றுக்கும் அடுத்தநிலையில் திங்களை ஓர் உயர் கடவுளாகப் போற்றி வந்தனர். வானத்தையும் நிலத்தையும் தம்பதிக் கடவுளராகக் கருதியது போலவே ஞாயிற்றையும், திங்களையும் தம்பதி கடவுளராக ஏற்றனர்.

இதனால் நிலத்திற்குரிய பண்புகளைத் திங்களுக்கும் ஏற்றினர். தொன்மக் கதைகளில் (குறிப்பாகத் தென் அமெரிக்காவில்) ஞாயிறும் திங்களும் தம்பதியராக இடம் பெறுகின்றனர். கடக, மகர ரேகைகளுக்கு இடையே உள்ள நாடுகளில் திங்களைப் பெண்ணாக உருவகித்தனர். வேட்டைச் சமூகத்தினைச் சேர்ந்த சிலர் மட்டும் திங்களை ஆணாகக் கருதி வருகின்றனர். எடுத்துக்காட்டாக, ஆப்பிரிக்காவைச்  சேர்ந்த புஷ்மென் (Bushmen) இனத்தவர், செமாஸ், அந்தமான், சாக்கே நாடுகளில் வாழ்பவர்களிடையே இந்நம்பிக்கை காணப்படுகிறது. எகிப்து, இந்தியா, பாபிலோனியா பகுதிகளிலும் திங்களை ஆணாகக் கருதுவதும் உண்டு.

கிரேக்க, உரோம நாகரிகங்களில் திங்களைப் பெண்ணாக உருவகித்து செலீன் (selene) லூனா (Luna) என்ற பெயர்களில் வழங்குகின்றனர். திங்களை ஆணாகக் கருதுவோர் முழு நிலவை, நன்றாக உண்டு களித்திருக்கும் நபராகக் கொள்வர். தேய்பிறைக் காலத்தைத் திங்களின் இரு மனைவியரான வீனஸ் (Venus) ஜுபிடர் (Jupiter) ஆகியவர்களால் உணவூட்டப்படாமல் மெலிந்திருக்கும் நிலையாகக் கருதுவர்.

திங்களைப் பெண்ணாக உருவகிப்பவர்கள் பிறை வளர்வதையும், தேய்வதையும், கருவுறுதலாகவும், கருவுயிர்த்தலாகவும் கொள்கின்றனர். மேலும் பிறப்பு, பருவமடைதல், இறத்தல் போன்றவையாகவும் பிறையின் வளர்ச்சியைக் கருதுகின்றனர். இதனடிப்படையில்தான் மூன்றாம் பிறையை இறந்தபின் பிறந்த மறுபிறப்பாகக் கருதும் வழக்கம் தோன்றியது.

முழு நிலவு நாளில் விழாவெடுக்கும் மரபு பண்டைய மக்களிடம் இருந்து வந்தது. வேறு சில மந்திரச் சடங்குகளும் நிலவின் வளர்பிறை, தேய்பிறை நாட்களில் நடைபெற்றன. சித்ரா பௌர்ணமி, திருக்கார்த்திகை, தைப்பூசம், மாசி மகம், வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம் போன்ற இந்து சமய விழாக்கள் முழுநிலவு நாளில் நடைபெறுவது இங்குக் கவனிக்கத்தக்கது. சந்திரனும், கார்த்திகை நட்சத்திரமும் நெருங்கியிருக்கும் நாளைக் கார்த்திகைத் திருநாள் என்று கொண்டாடுகின்றனர்.

சந்திரனுடைய திதிகள், கிரகணங்கள், விஷூக்கள், அயனங்கள் போன்றவை பருவகால மாறுதல்களுடன் சேர்ந்தவை. அந்தக் காலங்களில் இனத்தவர் அனைவரையும் ஒருங்குகூடச் செய்யும் தைப்பூசம் போன்ற விழாக்கள் நடைபெறுகின்றன. தைப்பூச நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக இருக்கும். அந்நாளில் புண்ணிய நதியில் நீராடினால் மிகுந்த புண்ணியம் உண்டாகும் என்று நம்புகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூரில் தைப்பூச விழா மிகச் சிறப்பாக நடைபெறும். மேலும், இந்நாளை தைப்பொங்கல் என்று கூறி உழவர்கள் கொண்டாடி வருவதனைக் காணலாம்.

நிலவின் தேய்பிறை நாட்களில், பகைவருக்குத் துன்பம் விளைவிக்கக் கருதி மாந்திரீகச் சடங்குகளை மாந்திரீகர்கள் செய்து வந்தனர். நிலவு தேய்வது போன்று பகைவனின் செல்வமும் ஆரோக்கியமும் படிப்படியாகக் குறைந்து போய் வறுமையும் நோயும் அடைவர் என்பது நம்பிக்கை.

அதுபோலவே உடலில் கட்டி, சிலந்தி போன்றவை கரைய வேண்டுமென நினைப்பவர்கள் தேய்பிறை ஒளியில் சில சடங்குகளைச் செய்தால் அவை கரைந்து குணமாகிவிடும் என்று நம்புகின்றனர். பிறந்த குழந்தையை வீட்டை விட்டு முதன் முதலில் வளர்பிறை நாட்களில் தான் வெளியே கொண்டு வர வேண்டுமென்ற நம்பிக்கை காணப்படுகிறது.

இந்த வளர்பிறை நாளில் குழந்தைக்கு நிலவைக் காட்டுவதும் உண்டு. இதனால், வளர்பிறை போன்று குழந்தையும் நோய் நொடியின்றி வளரும் என்பது நம்பிக்கை. அமாவாசை நாட்களில் எந்த நல்ல நல்ல காரியத்தையும் தொடங்குவதில்லை. பழங்குடி மக்கள் அமாவாசை நாளை அசுரர்களுடன் ஏற்பட்ட போரில் திங்கள் தோற்ற நாள் என்று நம்பினர். இதனால் உண்டான அச்சம் இவர்களை எந்த முயற்சியிலும் ஈடுபட விடாமல் தடுத்தது.

பேரா.முனைவர் தே.ஞானசேகரன்