அருணகிரி உலா-109 எம்புதல்வா வாழி வாழி...க்ஷேத்ரக் கோவைப் பாடலில் அடுத்தபடியாகஅருணகிரியார் குறிப்பிடுவது ஆற்றுப் படைத்தலங்களுள் ஒன்றாகிய திருச்செந்தூரையே, ‘இன்புறு செந்தில்’ என்று பாடுகிறார். ‘‘தண்டாயுதமும் திரிசூலமும் விழத்தாக்கி உன்னைத் திண்டாட வெட்டி விழ விடுவேன், செந்தில் வேலனுக்குத் தொண்டாகிய என் அவிரோத ஞானச் சுடர் வடிவாய் கண்டாயடா அந்தகா, வந்துபார்.

சற்று என் கைக்கொட்டே என்று எமனுக்கே அறைகூவல் விடுமளவுக்கு அருணகிரிநாதர் செந்திலாண்டவனிடம் ஆழ்ந்த பக்தி வைத்திருந்தார் என்றால் அது மிகையல்ல. திருச்செந்தூரில் 83 திருப்புகழ்ப் பாக்களும், திருச்செந்தில் வகுப்பு என்ற ஒரு தனி வகுப்பும் பாடியுள்ளார். கந்தர் அந்தாதிச் செய்யுட்களிலும், கந்தர் அலங்கார பாக்களிலும் செந்தூர் பற்றிய குறிப்புகள் வருகின்றன.

செந்திலாண்டவன் திருக்கோயிலின் வெளிப்புறம் வலமாக வருகையில்கருவறைக்கு நேர் எதிரேயுள்ள கிழக்குக் கடற் கரையைக் காணலாம். இவ்விடம் வதனாரம்ப தீர்த்தம் எனப்படுகிறது. இறுமாப்பினால் ஒரு சிரம் இழந்த பிரம்மா, தன் இழந்த தலையைப் பெறுவதற்கு சிவாக்ஞைப்படி கோயில் விமானமாக நின்று தவம் புரிவதாக ஐதீகம். ஹயக்ரீவ முனிவரின் சாபத்தால் குதிரை முகத்துடன் பிறந்த அங்கசுந்தரி எனும் அரசிளங்குமரி இங்கு நீராடி அழகிய முகத்தைப் பெற்றாள். இக்காரணங்களினால் இது வதனாரம்ப தீர்த்தம் எனப்படுகிறது.

 கந்தர் அந்தாதியில் அருணகிரியார்  இந்நிகழ்ச்சியைப் பாடியுள்ளார். ‘வெஞ்செருமகள் வாசி கைத்தோ’ [ வெவ்விய போரில் சிறந்து பாண்டியனுடைய குதிரை முகமுடைய மகளுக்கு அம்முகத்தை மாற்றி அமைத்தவனே!]செந்திலாண்டவன் கிழக்கு நோக்கி நின்று அருள் பாலிக்கிறான். கிழக்குப்புறம் கடற்கரை ஆதலால் கோபுர வாயில் அமைக்கப்படவில்லை. கனமான பாறை அடித்தளமாக அமைந்துள்ள மேற்குப்புறத்தில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து 27 படிகள் இறங்கினால் கருவறையில் பின்பகுதியை சென்றடையலாம்.

மேலும், ஆடிப்பாடித் தன்னை மறந்த நிலையில் காவடி எடுத்து வரும் பக்தர் நிலை குலைந்து விழவும் வாய்ப்பு உண்டு. இக்காரணங்களிைால், ஷண்முகர் சந்நதிக்கு நேர் எதிரே அமைந்துள்ள ஷண்முக விலாசத்தை ஒட்டியுள்ளன. தெற்கு வாயில் வழியாகவே பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஷண்முக விலாசம் என்பது 120 அடி நீளமும் 80 அடி அகலமும் கொண்ட கல்மண்டபம்.

ஷண்முக விலாசத்திலிருந்து சரிவான கற்பாதையில் கீழே இறங்கிச்சென்றால் கடல் மட்டத்தில் அமைந்திருக்கும் மூலவர் பாலசுப்ரமணியர், ஷண்முகர் சந்நதிகளை அடையலாம். கருவறை அமைந்திருக்கும் மண்டபத்தினுள் நுழைந்து தடுப்புகள் வழியே இடப்புறமாக வலம் வரும்போது பார்வதி தேவியாரைக் கண்டு வணங்கலாம். இத்தேவியே ‘எம்புதல்வா வாழி வாழி என வாழ்த்தி முருகனுக்கு வேலை அளித்ததாக அருணகிரியார் பாடுகின்றார்.

‘‘பம்பர மேபோல ஆடிய
சங்கரி வேதாள நாயகி
பங்கய சீபாத நூபுரி ...... கரசூலி
பங்கமி லாநீலி மோடிப
யங்கரி மாகாளி யோகினி
பண்டுசு ராபான சூரனொ ......
டெதிர்போர்கண்
டெம்புதல் வாவாழி வாழியெ
னும்படி வீறான வேல்தர
என்றுமு ளானேம நோகர ...... வயலூரா’’
- என்று கூறுகிறார்.
‘‘உன்புக ழேபாடி நானினி
அன்புட னாசார பூசைசெய்
துய்ந்திட வீணாள்ப டாதருள்புரிவாயே
இன்சொல்வி சாகாக்ரு பாகர
செந்திலில் வாழ்வாகி யேயடி
யென்றனை யீடேற வாழ்வருள்பெருமாளே.’’

அம்பிகையை அடுத்து வீற்றிருப்பவர் கரிய மாணிக்க விநாயகர், பெயர்க் காரணம் தெரியவில்லை. [உள்ளே இருப்பவர் சிவந்த மாணிக்கம் முழுதும் செய்யோய் - கந்தர் அனுபூதி); இவர் {கரியமாணிக்கம்] மணியடி எனப்படும் இந்த இடத்தில் வீரபாகுவும் வீரமகேந்திரரும் இருபுறமும் நிற்கின்றார்கள். பாலசுப்ரமணியன், ‘என்று வந்தாய்?’ எனும் குறிப்போடு நம்மைப் பார்க்கிறார்.

தவக்கோலத்தில் இருப்பதால் தேவியர் இல்லை. சிங்கமுகனை வென்ற குலிசப்படை கொண்டு விளங்குகிறார். பின்புறமுள்ள சுவரில் மூலவருக்கு இடப்புறமுள்ள மாடக்குழியில் லிங்கம் உள்ளது. இவர் ஜெகந்நாதர் என்றும் சூரிய லிங்கம் என்றும் அழைக்கப்படுகின்றார். வலப்புறச் சுவரில் கஜலட்சுமி உள்ளார். கருவறையில் சிவலிங்கம் உள்ளதால் மூலவருக்கெதிரே மயிலும் நந்தியும் உள்ளன.

1648-ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த மூலவர் சிலையை உலாந்தர்கள் எனும் டச்சுக் கொள்ளைக்காரர்கள் உடைத்து விட்டனர். 1648 - 1653 இடைப்பட்ட காலத்தில் மற்றொரு சிலை உருவாக்கப்பட்டது. இதுவும் 1909 ஆண்டு தன் வயிற்று வலி தீராத கோபத்தில் பக்தர் ஒருவர் கட்டிப்பிடித்து இழுத்ததால் சேதமடைந்தது. இப்போது நாம் வழிபடும் திருவுருவம் அதன் பின்னால் வடிவமைக்கப்பட்டதுவே; கருவறைச் சுவரை ஒட்டியவாறு மூலவருக்குப் பின்னாலுள்ள பஞ்சலிங்க சந்நதிக்குச் செல்லும் குகைப்பாதை ஒன்று உள்ளது.

முருகனே இங்கு சிவபூஜை செய்வதால், மானுட  பூஜை கிடையாது.மணியடியிலுள்ள மற்றொரு சந்நதி ஜெயந்திநாதர். தேவி உடன் இருக்கிறார். கோயில் விழாக்களில் இவரே எழுந்தருள்கிறார். மூலவரின் பிரதிநிதியாக வருகிறார்; போர்க்கோலம் கொள்ளும்போது தேவி உடன் செல்லுவதில்லை. அருகிலுள்ள சந்நதியில் தோழன் சாமி எனப்படும் அலைவாயுகந்த பெருமாள் உள்ளார். அருணகிரியார் இவர் பெயரைவைத்துப் பாடியுள்ளார்.

‘‘விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து ...... வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் ...... வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப ...... மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து ...... குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த ...... மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த ...... அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் ...... களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த ...... பெருமாளே.’’

அடுத்ததாக நாம் ஆறுமுகப் பெருமானைக் கண்டு மகிழ்கிறோம். இவர் பஞ்சலோகத் திருமேனி; தேவியருடன் வீற்றிருக்கிறார். இவர்மீது கடல் உப்பு அரித்த அடையாளங்கள் உள்ளன. காரணத்தை ஆராய்கிறோம்.1649ம் ஆண்டு ஷண்முகரைத் தங்கத் திருமேனி என்றெண்ணி எடுத்துச் சென்ற டச்சுக் கொள்ளைக்காரர்கள், வழியில் கடல் கொந்தளிப்பு ஏற்படக் காரணம் இவரே என்றெண்ணிக் கடலில் வீசி விட்டனர். இரண்டாண்டுகள் கோயிலில் எந்த விழாவும் நடக்கவில்லை.

முருகன், 1651 ஆம் ஆண்டு, வடமலையப்ப பிள்ளை என்ற பக்தரின் கனவில் தோன்றித் தன் இருப்பிடத்தை அறியச் செய்தான். பிள்ளையவர்கள் ஒரு சில ஆட்களுடன் தாமே படகில் சென்று இறைவன் குறிப்பிட்ட இடத்திலிருந்து சிலையை மீட்டெடுத்து வந்தார். இன்று நாம் காணும் ஷண்முகரின் திருவுருவம் இதுவே. நெடுங்காலம் கடலினுள் கிடந்ததற்கு அடையாளமாக அவரது திருமேனியில் உப்புநீர் அரித்ததற்கான அடையாளங்கள் உள்ளன.
‘‘பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
 தித்தித்து இருக்கும் அமுது கண்டேன் செயல் மாண்டு அடங்கப்
புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம் எற்றித்
 தத்திக் கரைபுரளும் பரம ஆனந்த சாகரத்தே.’’

- என்று கந்தர் அலங்காரச் செய்யுளை ஆறுமுகனுக்கு அர்ப்பணிக்கிறோம்.ஷண்முகருக்குப் பின்புறத்தில் ஆத்மலிங்கம் ஒன்றும், வள்ளியம்மையின் பள்ளியறைக்கு எடுத்துச் செல்லப்படும் முருகன் திருவடிகள் பொறிக்கப்பட்ட வெள்ளிப் பீடமும் உள்ளன. இவருக்கு உற்சவமூர்த்தியாக விளங்குபவர் குமரவிடங்கன் எனும் பெருமான்; இவரை வில்லேந்திய வேலன் என்றும் கூறுவர். வள்ளி தெய்வயானை திருமணங்களுக்கு இவர் எழுந்தருளுவதால் இவரை மாப்பிள்ளைச் சாமி என்றும் அழைப்பார்.

இவர் வெளிப்பிராகாரத்தில் உள்ளார். இவரையும் திருடிச்சென்ற கொள்ளைக்காரர்கள், பூம்புகார்ப்பட்டினத்துக் கடற்கரையில் வீசிவிட்டுச் சென்று விட்டனர். சாய்க்காடு என்ற ஊரில் ‘செந்திலாண்டவன்’ எனும் பெயரில் இச்சிலை உள்ளது. அவ்வூர்க்காரர்கள் சிலையைத் திருப்பித் தர மறுத்து விட்டதால் புதிய குமரவிடங்கர் திருவுருவம் வடிக்கப்பட்டது.

ஆவணி, மாசி மாதத் திருவிழாக்களில், 7, 8 ஆகிய நாட்களில் ஷண்முகர் தேவியருடன் எழுந்தருளி ஊரில் வீதிவலம் வருகிறார். மிகவும் கனமாக இருக்கும் இவரைச் சந்நதியிலிருந்து வெளியே கொண்டுவர அவர் இருக்கும் பீடத்திற்கும், அவர் எழுந்தருளும் சப்பரத்திற்கும் நடுவே சாய்வுப் பலகை வைக்கப்படுகிறது. மூலவருக்கு நேரே சற்று தொலைவில் அவரை நிறுத்தி ஒரே நேரத்தில் இருவருக்கும் தீபாராதனை செய்விக்கும் காட்சியைக் காண ‘நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான் முகனே’  என்று தான் பாடத் தோன்றுகிறது.

இந்நாட்களில்தான் வண்ணப் பூக்கள் சாத்து விழா நடைபெறுகிறது. ஏழாம்நாள் மாலை ‘சிவப்பு சாத்தி’ எனப்படுகிறது. ஷண்முகரும் தேவியரும் அபிஷேகத்திற்குப் பின்பு முற்றிலும் சிவப்புப் பூக்களாலும் சிவந்த பட்டாடைகளாலும் அலங்கரிக்கப்படுகின்றனர். ஷண்முகரின் பின்புறமுள்ள ஒரு முகத்தை மையமாக வைத்து நடராஜராக அலங்காரம் செய்கின்றனர். முருகன் அன்று ருத்ரனாகவே விளங்குவதாலும், அருணகிரியாருக்கு அந்த நாளில் நடராஜராகத் தரிசனம் தந்தார் என்பதாலும் இவ்வாறு அலங்கரிக்கப்படுகிறது.

ஏழாம் நாள் இரவு ‘வெள்ளை சாத்தி’ விழாவில் வெண்பட்டாடையுடன் வெண்மைப் பூக்களால் மட்டுமே அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம் வருகிறார். எட்டாம் நாளன்று முழுவதுமாகப் பச்சைநிற அலங்காரத்தில் வீதி ஊர்வலம் வந்து அன்பர்களின் உபசாரங்களை ஏற்றுக் கொள்ளுகிறார். வீதி முழுவதும் பன்னீராக காணப்படும் அதிசயத்தைக் காணலாம்.

கோயிலுள் பெருமாள் சந்நதியும் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. மருமகன் போர்க் களத்தில் விசுவரூப தரிசனம் தரவிருக்கிறான் என்று நாரதர் கூற, இருவருமாகச் செந்தூர் வந்தடைந்தனர் என்பது புராணம். நின்ற கோலத்தில் காட்சி தரும்  நிவாஸப் பெருமாளுக்கு எதிரே கருடாழ்வார் காட்சி தருகிறார். தில்லைக் கோவிந்தர் போலவே இங்கு செந்தூர் கோவிந்தரும் சயன நிலையில் காட்சி தருகிறார்.  தேவி, பூதேவி, கொப்பூழ் கொடியிலிருக்கும் தாமரைமேல் விளங்கும் பிரம்மன் குடைபிடித்துள்ள நாகத்தின் கீழே சந்தான கிருஷ்ணன் ஆகியோர் காட்சி அளிக்கின்றனர்.

வெளிப் பிராகாரத்தில் உள்ள சூரசம்ஹார மூர்த்தியின் கம்பீரத்தைக் கண்டு மெய்மறக்கிறோம். மயில் அவருக்கும் மேல் கம்பீரமாகத் திகழ்வதாகத் தோன்றுகிறது. (முருகனைச் சுமந்து கொண்டு போர்க்களத்திற்குச் செல்லும் பெருமையினாலோ? என்று எண்ணத் தோன்று கிறது) சூரன் மேல் செலுத்தும் கோலத்தில் ஐயன் கையில் பிடித்திருக்கும் வேலாயுதத்தைக் கண்டு சந்நதியில் அருணகிரிநாதர் பாடிய வேல் விருத்தத்தை சமர்ப்பிக்கிறோம்.
‘‘வெங்காள கண்டர்கைச் சூலமுந்
திருமாயன் வெற்றிபெறு சுடர் ஆழியும்
விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங் கல்லி
வெல்லா எனக்கருதியே
சங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ்
சதுர்முகனும் நின்றிரப்பச்
சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
தனிஆண்மை கொண்ட நெடுவேல்
கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
கெளமாரி கமலாசனக்
கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவி அமலை
கெளரிகா மாஷிசைவ
சிங்காரி யாமளை பவாநிகார்த் திகை கொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வச்
சிறுவன்அறு முகன்முருகன் நிருதர்கள்
குலாந்தகன் செம்பொற் றிருக்கை வேலே.’’

(உலா தொடரும்)

சித்ரா மூர்த்தி