தீபமே பிரம்மம்!உலகம் ஒளிமயமாக உள்ளது. ஒளியைவிட வேறு தெய்வம் என்ன இருக்கிறது? அதனால்தான் ‘தேவ’ என்ற சொல்லுக்கு ‘பிரகாச சொரூபம்’ என்று பொருள் கூறுகின்றன சாத்திரங்கள். வெளிச்சம் சக்தியமாகவும் வழிபடும் சம்பிரதாயத்தை நம் ரிஷிகள் வேத காலம் முதல் அனுசரித்து வந்துள்ளனர்.
பூமியிலுள்ள தாவரங்கள், உயிரினங்கள் அனைத்திற்கும் பிராண சக்தியை அளிக்கும் வெளிச்சத்தின் பொக்கிஷம் சூரியபகவான் என்பதை தியான திருஷ்டியால் கண்டறிந்து வேத யோகிகள் பல ரகசியங்களைக் கண்டுபிடித்து மந்திர ரூபங்களாக வேத விஞ்ஞானத்தை நிலை நாட்டியுள்ளனர்.
சூரியனில் உள்ள அக்னிக்கு அடையாளமாக அக்னி ஹோத்திரத்தை வழிபடும் யக்ஞ விஞ்ஞானத்தை ரிஷிகள் நமக்கு அளித்துள்ளார்கள். யக்ஞ அக்னியின் வழியாக விஸ்வத்தை நிர்வகிப்பவர்களானதேவதைகளோடு தொடர்பினை சாதித்துள்ளார்கள்.

‘அக்னி சாட்சி’ என்பது ஒரு முக்கியமான வழிமுறையாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் அனுசரிக்கும் வழக்கமாக உள்ளது. ‘அக்னி முகாவை தேவா: ’ என்பது வேத வாக்கியம். தேவதைகள் அக்னியை முகமாகக் கொண்டவர்கள். முன்னிறுத்தியவர்கள். அவர்களிடம் நாம் விண்ணப்பிக்க வேண்டுமென்றாலும் அவர்கள் நம்மை அனுக்ரகிக்க வேண்டுமென்றாலும் அக்னியே நடுவில் இருப்பது. எனவேதான் ‘அக்னி தூதம் வ்ருணீமஹே’ என்றது ஸ்ருதி.

சிறிது சிறிதாக நம் சம்பிரதாயத்தில் சைவம், வைணவம், சாக்தம் போன்ற பிரிவுகள் ஏற்பட்டாலும், ஒவ்வொரு பிரிவினரும் பாரம்பரியமாக அக்னி ஹோத்திர வழிபாட்டினை கடைபிடித்து வருவது சகஜமாக உள்ளது. (இதனைக் கொண்டு வேறுபட்ட பிரிவினரிடம் இருக்கும் ஒன்றுபட்ட சித்தாந்தங்களை கவனிக்கவும், சமரசமான ஒற்றுமையை சாதிக்கவும் இயலும்).

தேவதைகளின் உடல்கள் ஒளிமயமானவை. எனவேதான் ஒளி சொரூபங்களாலேயே அவர்களைப் போற்றுகிறோம், வழிபடுகிறோம். அதுமட்டுமின்றி தேவதைகளை வர்ணிக்கும் மந்திரங்களிலுள்ள சூட்சும் சைதன்யம் கூட ஒளிமயமாகவே இருக்கிறதென்பது ரிஷிகள் கண்ட தரிசனம். அந்தந்த தேவதைகளின் தத்துவங்களைக் கொண்டு அவற்றின் ஒளிவடிவங்கள் கூட வெவ்வேறு வர்ணங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன.

சரஸ்வதி வெண்மை, காளி நீலம், லட்சுமி தங்கம் நிறம், லலிதா சிவப்பு, இந்த வர்ணங்களெல்லாம் ஒளியின் விளையாட்டுகளே! நிறங்களெல்லாம் ஒளியின் உருவங்களேஅல்லவா! உண்மையில் எந்த வெளிச்சமும் இல்லாத சுத்தஒளி சில பரிணாமங்களால் வெவ்வேறு நிறங்களாக கண்ணில்படுகிறது என்ற விஞ்ஞான சாஸ்திரம்கூட நம் நாட்டு வேத வேதாந்தம் கண்ட தரிசனத்திற்கு அருகாமையிலேயே உள்ளது.

எந்த நிறமுமில்லாத நிரஞ்சன. நிர்குண, பரம தத்துவமே உலகைப் படைப்பதற்காக வெவ்வேறு வடிவங்களோடு சகுண உருவமாக சாட்சாத்தாக வெளிப்படுகிறதென்று நம் வேத கலாசாரத்தின் கருத்து. இறுதியில் ஒளியை வழிபடும் தத்துவமே ‘பா’ ரதமாக விஸ்தரித்துள்ளது. ஜோதியை ஞானத்திற்கு அடையாளமாக பாவிப்பது விஞ்ஞான சுபாவம். அஞ்ஞானத்தை இருளோடும் ஞானத்தை ஒளியோடும் உருவகப்படுத்துவது அனைத்து கலாசாரங்களிலும் காணப்படுகிறது.

அசதோமா சத்கமய
தமசோமா  ஜ்யோதிர் கமய
- என்ற வேதத்திலுள்ள பிரார்த்தனை மிகப் பிரபலம்.

துக்கம், அறியாமை, தரித்திரம், பயம் போன்ற விபரீத குணங்களையெல்லாம். இருட்டு சக்திகளோடு ஒப்பிட்டார்கள். அவற்றுக்கு மாறுபட்ட ஞானம், ஐஸ்வர்யம்,. ஆனந்த சக்திகளை தெய்வகுணங்களாக அன்பு காட்டினார்கள்.ஆனால், தத்துவப் பார்வை இன்னும் விரிவு பெற்று ஆன்ம ஒளியை வெளிப்படுத்திக் கொள்ளும் உள்முகப் பார்வையை ‘காளராத்ரி’ யாகக் கருதிய ஒரு அற்புத கண்ணோட்டம் கூட நம் கலாசாரத்தில் உள்ளது.

‘அத்ரி சூக்தம்’, ‘காளி தத்துவம்’ போன்ற நூல்கள் ‘அறிவுக்குப் புலப்படாத, முடிவில்லாத தத்துவத்தை’ தெய்வமாக தரிசித்த வைபவத்திற்கு உதாரணங்கள். ஐப்பசி கிருஷண பட்ச சதுர்தசியை ‘காளராத்ரி’ என்று ஆகமங்கள் போற்றுகின்றன. அன்று காளிதேவியை நம் நாட்டின் பல இடங்களில் பூஜிக்கின்றனர். கிருஷ்ண பட்ச சதுர்தசி நடு இரவு வெளிப்பார்வைக்கு இருட்டாகத் தெரிந்தாலும் உள்ளிருக்கும் பரஞ்ஜோதியை தெளிவாகப் பார்க்கக்கூடிய உள்பார்வைக்கு நல்ல சந்தர்ப்பம் என்ற தத்துவ கோணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மகாசிவராத்திரி, மாத சிவராத்திரி - இவை இந்த தத்துவ கருத்துக்களுக்கு ஆதாரங்கள். அமாவாசை இரவை ஒளிப் பண்டிகையாக மாற்றிக் கொண்ட பாரத நாட்டு மக்களாகிய நாம் கண்ணை மூடிக் கொண்டாலும் தியான இருட்டில் உள்ளேயுள்ள வெளிச்சத்தைப் பார்க்க இயலும் என்ற கருத்தை பளிச்சென்று தெளிவாகச் சொல்கிறோம் என்றே தோன்றுகிறது.

இருட்டு, வெளிச்சம் என்ற இரண்டு அத்தியாவசியத் தேவைகளை சமமாக கௌரவிக்கும் தத்துவ விஞ்ஞானம் நம் சம்பிரதாயங்களில் உள்ளது. ஆனால், சந்தோஷமாகக் கொண்டாடும் சாமானிய மனிதர்கள் அனைவரும் இவற்றை அறிந்திராமல் இருக்கலாம்.

சிறிது சிறிதாக இந்தக் கொண்டாட்டங்கள் ஆழ்ந்த தத்துவ முதிர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. சூட்சுமமான சைதன்ய ஒளியை இதய குகையில் தரிசிக்க வேண்டும் என்ற தியான அறிவியல் ‘விளக்கேற்றுதல்’ என்ற  சம்பிரதாயத்தில் பொதிந்துள்ளது.

தேவதைகளை வரவேற்பதற்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பது பெரியோர்கள் கண்டறிந்த உண்மை, அதுவே நம் வீட்டு வழக்கங்களாக வளர்ந்துள்ளன. இரண்டு சந்தியா சமயங்களிலும் சுத்தம் செய்யப்பட்ட வீட்டில் விளக்கேற்றுவது லட்சுமிகரமானது என்று சாமானியமானவர்களுக்குக் கூட நம் நாட்டில் தெரிந்த விஷயம். தெய்வத்தின் முன்பாக, துளசி மாடத்தின் முன்பாக, கோலத்தின் நடுவில், வீட்டுவாசற் கதவினருகில் தீபங்கள் ஏற்றி வைப்பது, அசுர சக்திகளை விலக்கி, மங்களத்தை வெளிப்படுத்தும் என்பதற்கு தீபமே ஆதாரம்.

ஏதேனும் ஒரு சங்கல்பம் எடுத்துக்கொண்டு தீபம் ஏற்றி, அந்த அக்னிக்கு ஏதாவது ஒரு பழமாவது நைவேத்யம் செய்து வேண்டிக் கொண்டால் அந்த சங்கல்பம் கட்டாயம் நிறைவேறும் என்பது சம்பிரதாயம்.

வீட்டில் மாலை சந்தியா நேரத்தில் ஏற்றி வைத்த தீபம் மீண்டும் மறுநாள் காலை வரை எரிந்தால் அந்த வீட்டில் அலட்சுமி அமங்களம், துஷ்ட சக்திகள் விலகி விடும் என்பது சாஸ்திர வசனம்.  பர்த்ருஹரி தீப ஜோதியை சிவ லிங்கமாக, சிவரூபமாக வர்ணித்தார். ‘தீபாங்குரா’ வை மூன்று தேவியர்களுக்கும் முன்னுள்ள ஆதிதேவியாக ராமகிருஷ்ண பரமஹம்சர் தியானித்தார். நற்கதியைப் பெறுவதற்கு தீபம் ஒரு காரணம் (ஹேது).

இறந்தவர்கள் நரகம் போன்ற இருள் கிணறுகளைச் சென்றடையாமல் திவ்ய (திவ் = பிரகாசம்) உலகங்களாகிய நற்கதிகள் கிடைக்க வேண்டுமென்ற வேண்டுதலோடு ஆத்ம சாந்திக்காக தீபம் ஏற்றுவது, தீபத்தை சமர்பிப்பது என்ற வழக்கம் உள்ளது. கேரளா போன்ற மாநிலங்களில் தீபமே திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகளுக்கு சாட்சி. அக்னி ஹோத்திர விஞ்ஞானமே தீபம் ஏற்றுவதில் மறைந்துள்ளது. சம்பூர்ணமான, சுபமயமான பரம்பரைகளுக்கு, காரியசித்திக்கு, தீட்சை பலன் அளிப்பதற்கு ‘அகண்ட தீபம்’ ஏற்றுதல் என்ற முறைஉள்ளது.

ஆகம சாஸ்திரத்தில் ஐப்பசி அமாவாசைக்கு ‘மகாராணி’ என்ற பெயர் உள்ளது. சக்தி வழிபாட்டிற்குப் புகழ் பெற்ற ஐப்பசி மாத ஆரம்பம். முடிவு இரண்டுமே சக்தி பூஜை மயமானது. நிறைந்த நாளாக கூறப்படும். அமாவாசையை தீப ஒளிமயமாக்கியுள்ளனர் நம் பெரியோர். ஐஸ்வர்யங்களை வரவேற்று ‘லோகைக தீபாங்குரா’வான ஜகதம்பாளை வழிபடும் பண்டிகையாக நாடெங்கும் பல்வேறு முறைகளில் ஒரே இதயத்துடன் கொண்டாடுகிறார்கள்.

ஒளியை ஐஸ்வர்யமாகக் கருதுவதால் விளக்கினை லட்சுமியாக பூஜை செய்யும் ‘லட்சுமி பண்டிகை’ என்பது ‘தனபூஜை’ யாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்த பண்டிகை, மறுநாள் முதல் தொடங்கும் கார்த்திகை மாதம் முழுவதும் விளக்கேற்றும் மாதமாக விளங்குகிறது. (சாந்திரமான முறைப்படி).
ஜோதிர்லிங்க சொரூபனான சிவனுக்கு ஜோதி தகுந்த பாத்திரமாகியது. சின்னச் சின்ன தீபங்கள் இறைவனின் ரூபங்களாக நம்முள்ளும், சமுதாயத்திலும் உள்ள அசுர  சக்திகளை அடித்துத் துரத்திவிட  வேண்டுமென்று தீபலட்சுமியை பிரார்த்திப்போம்.

நாட்டு நலனுக்காக தீபங்களை ஏற்றுவோம். எண்ணெய் அல்லது நெய், மண் அகல் விளக்குகள், அதில் ஒரு பஞ்சுத் திரி இவற்றால் ஒரு சின்னஞ் சிறிய ஒளி மொட்டு. எத்தனை அழகான வெளிப்பாடு! பழக்கமாகிப் போய் விட்டதால் இந்த அற்புதங்களை நாம் கவனிக்கத் தவறுகிறோம் என்றே தோன்றுகிறது. கவனிக்க முடிந்தால், ஒளியை கையெடுத்துக் கும்பிடாமல் இருக்க முடியுமா : ‘தீபம்’ ஜ்யோதி : பரபிரம்மா.