குறளின் குரல்: 135 நாடு! அதை நாடு!ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார் திருவள்ளுவர். அவர் சொல்லும் இலக்கணப்படி இருந்துவிட்டால், நாடு எல்லா வகையிலும் வளம் பெற்றுத் திகழும்.
குடிமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.பொருட்பாலில் `நாடு’ என்ற தலைப்பிலேயே ஓர் அதிகாரத்தைப் படைக்கிறார். (அதிகாரம் 74). இந்த அதிகாரத்தில் மட்டும் ஒரு வித்தியாசமான தன்மையைக் காணலாம். இதில் இடம்பெறும் பத்துக் குறட்பாக்களிலும் அதிகாரத் தலைப்பான `நாடு’ என்ற சொல் இடம்பெறுகிறது! வள்ளுவரின் `நாட்டுப்’ பற்று அத்தகையது!

`தள்ளா விளையுளும் தக்காரும்
 தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.’
(குறள் எண் 731)

குறைவில்லாத விளைபொருளைத் தரும் விவசாயிகளும் தகுதி வாய்ந்த அறிஞர் பெருமக்களும் கேடில்லாத வழியில் பெற்ற பெருஞ்செல்வத்தை உடையவரும் சேர்ந்து வாழ்வதே சிறந்த நாடு.  `பெரும்பொருளால் பெட்டகத் தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு.’

(குறள் எண் 732)

மிகுந்த பொருள்வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத் தக்கதாய், கேடு இல்லாததாய் மிகுதியாகப் பயிர்கள் விளைவதே நாடாகும்.
`பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு.’
(குறள் எண் 733)

மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால் சேரும் மக்கள் சுமையையும் தாங்கி அரசனுக்குச் சேரவேண்டிய வரியைத் தவறாமல் செலுத்துகின்ற தன்மை கொண்டதுதான் நாடு.
`உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.’
(குறள் எண் 734)

மிக்க பசியும் ஓயாத நோயும் அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடத்தப்படுவதே நாடு.
`பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு.’
(குறள் எண் 735)

பல்வகையான மாறுபாடுள்ள கூட்டங்களும் உடனிருந்தே அழிவு செய்யும் உட்பகையும் அரசனை வருத்துகின்ற கொலைத்தொழில் புரியும் குறுநில மன்னரும் இல்லாதது நாடு.
`கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்ற
நாடென்ப நாட்டில் தலை.’
(குறள் எண் 736)

பகைவரால் கெடுக்கப்படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் ஒருநாளும் வளம் குன்றாததாய், உள்ள நாடு எதுவோ அதுவே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமை வாய்ந்தது என்பர்.
`இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு.’
(குறள் எண் 737)

ஊற்றுநீர், மழைநீர் என்ற இருவகை நீர்வளமும், இயற்கையாய் அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீரும் வலிமையான அரணும் நாட்டில் இருக்க வேண்டிய உறுப்புகளாகும்.மலையும் ஆறும் ஒரு நாட்டின் உறுப்புகள் என்று சொன்ன வள்ளுவர் கருத்தை உணர்ந்தோ என்னவோ, அவை நம் நாட்டில் உள்ளன எனப் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார் மகாகவிபாரதியார்.

`மன்னும் இமயமலை எங்கள் மலையே!
மாநில மீததுபோல் பிறிதிலையே!
இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே!
இங்கிதன் மாண்பிற்கு எதிரெது வேறே?’
என்பன மகாகவியின் புகழ்பெற்ற கவிதை வரிகள்.
`பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.’
(குறள் எண் 738)

நோயில்லாதிருப்பது, செல்வம் கொண்டிருப்பது, விளைபொருள் அதிகமாய் இருத்தல், மக்கள் மகிழ்ச்சியாயிருத்தல், புறத்தே அமைந்த நல்ல பாதுகாப்பு இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு என்பார்கள்.
`நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.’
(குறள் எண் 739)

முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுதான் சிறந்த நாடு. தேடி முயன்றால் வளம் தரும் நாடு சிறந்த நாடல்ல.
`ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.’
(குறள் எண் 740)

மேலே சொல்லப்பட்ட அனைத்துத் தன்மை
களும் இருந்தாலும் நல்ல அரசன் வாய்க்கவில்லை என்றால் அந்த நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை.
நல்ல அரசன் யார் என்பதற்குப் பெரிய
புராணம் ஒரு பாடலில் இலக்கணம் வகுக்கிறது.

`மாநிலம் காவலன் ஆவான்
மன்னுயிர் காக்கும் காலை
தானதனுக்கு இடையூறு
தன்னால் தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத் திறத்தால்
கள்வரால் உயிர் தம்மால்
ஆனபயம் ஐந்தும் தீர்த்து
அறங்காப்பான் அல்லனோ’
அரசன் தன் நாட்டில் உள்ள உயிரினங்களைக் காப்பாற்ற வேண்டும். அப்படிக் காப்பாற்றும்போது, தான், தன் படைவீரர்கள், பகைவர்கள், கள்வர்கள், வனவிலங்குகள் என்னும் ஐந்து வகைப்பட்ட தன்மையிலும் தன் நாட்டுக் குடிமக்களுக்கு அச்சம் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் சேக்கிழார்.

உண்மையில் நாடு என்பது நாட்டு மக்களையே குறித்தது. அவர்களின் நல்வாழ்வையே உள்ளடக்கியது. நாட்டுப்பற்று என்பது நாட்டில் உள்ள மக்களிடம் கொண்ட பற்று என்றே பொருள்படும். நாடு நன்றாக இருக்கிறது என்றால் நாட்டு மக்கள் நன்றாக இருக்கிறார்கள் என்றுதான் பொருள்.
`நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லை ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!’ (புறநானூறு பாடல் எண் 187)

என்கிறார் அவ்வையார். நாடாய் இருந்தால் என்ன, காடாய் இருந்தால் என்ன, பள்ளமாய் இருந்தால் என்ன, மேடாய் இருந்தால் என்ன? எங்கே ஆடவர் நல்லவர்களாக இருக்கிறார்களோ அந்த நிலம் வாழ்வதற்குரிய நல்ல இடம் என்பது அவ்வையின் கருத்து.நாட்டுப்பற்று என்கிற உணர்வு வெறும் மண்ணின்மேல் உள்ள பற்று என்பதல்ல. நாட்டு மக்களை உள்ளடக்கிய உருவகம்தான் மண். மண்ணின் மூலம் அதன் மக்களையேகாண்கிறோம் நாம்.

ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடந்து முடிந்தது. அதில் கலந்துகொள்ள வந்திருந்தவர்களில் இலங்கை மன்னன் விபீஷணனும் ஒருவன். அவன்தான் இலங்கையின் புஷ்பக விமானத்தில் ராமனையும் சீதையையும் லட்சுமணனையும் இன்னும் சுக்கிரீவன் அங்கதன் உள்ளிட்ட அனைவரையும் அழைத்து வந்தான்.புஷ்பக விமானத்திலிருந்து ராமன் இறங்கியதும் அயோத்தி மக்களின் முகத்தில் தென்பட்ட பரவசத்தைப் பார்த்தான் விபீஷணன். அவர்கள் தங்கள் மன்னன் ராமன்மேல் வைத்திருந்த நேசத்தைப் பார்த்தான். விபீஷணன் நெஞ்சம் நெக்குருகியது. மக்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் என எண்ணியெண்ணிவியந்தது அவன் உள்ளம்.

பட்டாபிஷேக வைபவம் முடிந்ததும் இலங்கை செல்லப் புறப்பட்டான். ராமன் சீதை உள்ளிட்டோர் அவனை வழியனுப்ப வந்தார்கள்.
`நான் இந்த அயோத்தியின் ஒரு பிடி மண்ணை பூஜை செய்வதன் பொருட்டு என் உத்தரீயத்தில் முடிந்து எடுத்துச் செல்ல விரும்புகிறேன். இந்த மண் அல்லவா இத்தகைய உன்னத மக்களைக் கொண்டு விளங்குகிறது!’ எனச் சொல்லி அயோத்தியின் ஒரு பிடி மண்ணை விபீஷணன் பக்தியோடு எடுத்துச் சென்றதாகச் சொல்கிறது ஓர் அபூர்வ ராமாயணக் கதை. மண் என்பது அதில் வாழும் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது.

பாரதியார் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகப் போராடினார். தீண்டாமை ஒழிப்பு, பெண்விடுதலை உள்ளிட்ட உன்னதக் குறிக்கோள்களுக்காகத் தம் கவிதைகளில் குரல்கொடுத்தார். அவர் தமிழ் மண்ணை, அதாவது தமிழ்நாட்டில் வாழும் மக்களைப் பெரிதும் நேசித்தார்.

ஒருமுறை கீழே விழுந்து புரண்டு தமிழக மண்ணை அவர் நெற்றியில் திருநீறு போலப் பூசிக்கொண்டார் என்று அவர் வரலாற்றில் வருகிறது. அவர் தமிழக மண்ணை நெற்றியில் அணிந்தார் என்றால் தமிழக மக்களின் நல்வாழ்வையே தலையாய நோக்கமாகக் கொண்டிருந்தார் என்பதே பொருள். மண் என்பது நாட்டுப் பற்று என்ற நல்லுணர்வின் அடையாளம்.  

எப்படி நெல்லுக்குப் பாய்ச்சிய நீரானது வாய்க்கால் வழியே பாய்ந்தோடும்போது புல் வளர்வதற்கும் பயன்படுகிறதோ அதைப் போல் நல்லவர் ஒருவருக்காகப் பெய்த மழையால் நாடே பயனடைகிறது என்கிறார் மூதுரை என்ற நூலில் அவ்வையார்.`நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை!’

இந்தக் கருத்துக்கு ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் சான்றுகள் இருக்கின்றன. மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் பாஞ்சாலியோடு ஓராண்டு அஞ்ஞாதவாசம் மேற்கொள்கிறார்கள். தாங்கள் இருக்குமிடம் தெரியாமல் அவர்கள் மறைந்து வாழவேண்டும் என்பது துரியோதனன் விதித்த நிபந்தனை. அந்த ஓராண்டுக்குள் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மீண்டும் அவர்கள் பதின்மூன்று ஆண்டுகள் வனவாசம் செல்லவேண்டும்.
எனவே அவர்கள் இருக்குமிடத்தைக் கண்டறிய துரியோதனன் படாத பாடு படுகிறான். ஆனால் கண்டுபிடிக்க இயலவில்லை. பீஷ்மரிடம் அவர்கள் இருக்குமிடத்தைக் கண்டறிய இனி என்னதான் வழி என வினவுகிறான். பீஷ்மர் நகைத்தவாறே சொல்கிறார்:

யுதிஷ்டிரர் உண்மையிலேயே தர்மபுத்திரர். அதர்மமான எந்தச் செயலையும் செய்ய மாட்டார். அவரளவு நல்லவர்கள் புவியில் இப்போது யாருமில்லை. அப்படியொரு நல்லவர் இருக்கும் நாட்டில் கட்டாயம் நல்ல மழை பொழியும். அதனால் அந்த நாடு வளத்தோடு திகழும். சுற்றியுள்ள நாடுகளை ஆராய்ந்து பார். எந்த நாடு மழை பெய்வதால் அதிகச் செழிப்போடு இருக்கிறது எனக் கண்டுபிடி. அப்படியானால் அங்கேதான் யுதிஷ்டிரரும் மற்ற பாண்டவர்களும் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்!’

துரியோதனன் அந்த வகையிலேயே ஆராய்ந்து விராட நாடு செழிப்போடு திகழ்வதைக் கண்டறிகிறான் என மகாபாரதம் சொல்கிறது. எனவே நாடு என்பதும் நாட்டின் வளம் என்பதும் அந்த நாட்டில் வாழும் நல்லவர்களைப்பொறுத்ததே என்பதை அறியலாம்.ஒரு நாட்டின் பெருமை என்பது அதன் அரசனோ அவன் செலுத்தும் அதிகாரமோ அல்ல. அந்த நாட்டின் ஆன்மிகம்தான் எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது. அந்த ஆன்மிகமே மக்களை நெறிப்படுத்துகிறது என்பதைப் பழைய அரசர்கள் அறிந்திருந்தார்கள்.

அதனால் ஒரு நாட்டின் மேல் படையெடுத்து அந்த நாட்டை வென்றாலும், வென்ற நாட்டு மன்னனின் அரண்மனையைத்தான் அவர்கள் தகர்த்தார்கள். அதே மன்னன் அந்த நாட்டில் கட்டியிருந்த கோயில்களை அவர்கள் சேதப்படுத்தவில்லை. தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் ஆன்மிகத்திற்கும் ஆலயங்களுக்கும் எத்தனை மதிப்புக் கொடுத்தார்கள் என்பதை இந்தச்செய்தியால் அறிந்துகொள்ளலாம்.

 நாட்டிற்குரிய இலக்கணங்களாக வள்ளுவர் எதையெல்லாம் கூறுகிறாரோ அதையெல்லாம் நம் நாட்டில் தோற்றுவித்துவிட்டால் நாம் நாடு எல்லா வகையிலும் முன்னேற்றமடைய எந்தத் தடையும் இல்லை.

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்